Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
போர்க்களமாகி இருக்கும் நந்தி கிராமம்
பொதுவுடைமைக் கொள்கையில் சறுக்கலா?
பைந்தமிழ்

யானைக்கு அடி சறுக்குவது இயல்புதான்... ஆனால் சறுக்கிய யானை சாமானியர்கள் மீது விழுந்தால் அடிபடுவது அவர்களுக்குத்தானே... அதேபோலத்தான் மேற்கு வங்கத்திலும் பொதுவுடைமைக் கொள்கையில் யானை பலத்துடன் விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஓர் அடி சறுக்கியதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

யானைக்கு அடிசறுக்கியது எப்படி என்பதைப் பார்ப்பதற்குமுன், அடிசறுக்க காரணம் என்ன என்பதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். உலகமே தாராளமயமாகி வரும் காலத்தில் அதற்கேற்றவாறு நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்று புதிய சித்தாந்தம் பேசி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மேற்கு வங்கத்தில் தொழில் வளத்தைப் பெருக்கவும், அதிக வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தவும் இருதிட்டங்களைக் கொண்டு வந்தார்.

ஒன்று சிங்கூரில் டாட்டா நிறுவனத்தின் சிறிய மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது, இரண்டாவது நந்திகிராமில் இந்தோனேசிய நாட்டின் சலீம் குழும நிறுவனத்துடன் இணைந்து இரசாயனத் தொழிற்சாலைகள் அடங்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது. மற்ற மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதை மார்க்சிஸ்ட் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் எப்படி எதிர்க்கின்றனவோ, அதேபோல் இந்த இரு திட்டங்களுக்கும் மேற்குவங்கத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிலும் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 14 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் எடுக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் மேற்குவங்க அரசு அறிவித்ததும் அதனால் பாதிக்கப்படும் 40 ஆயிரம் மக்கள் அரசுக்கு எதிராக எழுந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் காலம் காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து அரசியல் காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தூண்டிவிட நந்திகிராமில் பதற்றம் தொற்றிக்கொண்டுவிட்டது.

சிறப்பு: பொருளாதார மண்டலத்துக்கு நிலம் எடுப்பதை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்த அப்பகுதி மக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் நிலம் எடுப்பு எதிர்ப்புக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்தப் பகுதியையே தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். நந்திகிராம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.

சிங்கம் அதன் குகையிலிருந்தே விரட்டப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிரடித் திட்டம் ஒன்றைத் தீட்டினர். காவல்துறையினரின் உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நந்திகிராம் மீது படையெடுத்து அங்கு தங்கியுள்ள நிலஎடுப்பு எதிர்ப்பு இயக்கத்தினரை விரட்டியடிப்பது தான் அந்தத்திட்டம். அதன்படி கடந்த மார்ச் 14ஆம் தேதி 3000 காவலர்கள் புடைசூழ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காவல்துறையினரின் சீருடையில் நந்தி கிராமம் ‘மீட்க’ படை எடுத்தனர்.

ஆனால் இந்த விவரம் நில எடுப்பு எதிர்ப்புக் குழுவினருக்கு முன்பே தெரிந்துவிட, நந்தி கிராமுக்குச் செல்லும் வழியில் 2000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படையினரைத் தடுத்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்புக் கேடயமாக முன்னால் நிறுத்தி பின்னாலிருந்து கற்களையும், ஆயுதங்களையும் வீசி மார்க்சிஸ்ட் படையினரை அவர்கள் தாக்க, ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் தாங்களே காவலராக மாறி துப்பாக்கிச் சூடு நடத்த 14 அப்பாவிகளின் உயிர் பறிபோனதுதான் மிச்சம். மார்க்சிஸ்ட் கட்சியினரால் நந்திகிராமுக்குள் நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர்.

அதன்பின் நந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நில எடுப்பு எதிர்ப்பு இயக்கத்தினர் வைத்ததுதான் சட்டமாகிவிட்டது. அவர்களுக்கு உதவியாக மாவோயிஸ்டுகளும் அங்கு குடியேற, அது பதற்ற பூமியாகிவிட்டது. அங்கிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்டோர் அரசு அமைத்துத் தந்த முகாம்களில் அகதிகளாக வாழ்ந்தனர். நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படாது என்றும், அங்குள்ள மக்களுக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தைக் கூட அரசு கையகப்படுத்தாது என்றும் மேற்கு வங்க அரசு அறிவித்தது.

ஆனாலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. நந்தி கிராம் பகுதி அரசுக்கும், ஆளும் கட்சியினருக்கும் தொடர்ந்து ‘நந்தி’யாகவே இருந்தது. இப்படியே எட்டு மாதங்கள் கடந்த நிலையில், இதே நிலை நீடித்தால் நாம் ஆட்சியிலிருப்பதே அர்த்தமற்றதாகிவிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதியது. அதன் விளைவுதான் இரண்டாம் நந்திகிராம் போர் தொடுக்கும் திட்டம் உருவானது. ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுதான் யானைக்கு அடிசறுக்கக் காரணமாக அமைந்தது.

இரண்டாம் நந்திகிராம் போர்த் திட்டம் பற்றிய தகவல்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்டோபர் மாத இறுதியிலிருந்தே நந்திகிராமில் உள்ள நிலஎடுப்பு எதிர்ப்பு இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். காயம் பட்டவர்களைக் காணச்சென்ற திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜியின் மகிழுந்து துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் நந்திகிராம் கொந்தளிக்கத் தொடங்கிய நிலையில் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியபடியே உள்ளே நுழைந்தனர். அதன்பின் அங்கிருந்த அனைவருக்கும் அடி உதைதான். முதல் போரில் தோற்ற மன்னன், இரண்டாவது போரில் வென்றால் என்னன்னவெல்லாம் நடக்குமோ எல்லாம் அங்கு நடந்தன.

நிலஎடுப்பு எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் வீட்டுப் பெண்களில் பலர் கற்பழிக்கப்பட்டனர். குஜராத்தில் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு சம்பவத்துக்குப் பின் எப்படி இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்களோ அதேபோல் இங்கும் இஸ்லாமியர்கள் தேடித் தேடித் தாக்கப்பட்டனர். இந்த வன்முறைகளில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட, ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின் ஓரளவு அமைதி திரும்ப பலர் மீண்டும் நந்திகிராமில் குடியேறினர்.

ஆனால் இன்னும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு அகதிகள் முகாமில் தான் தங்கியுள்ளனர். இந்த மோதல்களெல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இப்போது யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இரு தரப்பினர் மீதுமே தவறு இருக்கிறது என்பதை அனைவருமே மனதளவில் ஒப்புக்கொள்வர். ஆனால், உடைமையை இழந்த ஒருவன் ஆத்திரத்தில் செய்த அதே தவறை அரசும் செய்ய வேண்டுமா என்பதே அனைவரும் எழுப்பும் கேள்வி. 40 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக விளங்கும் விளைநிலங்கள் பறிபோகிறதே என்ற ஆத்திரத்தில் அங்குள்ள மக்கள், நிலம் எடுப்பு எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் ஏதோ கொஞ்சம் நியாயம் இருக்கிறது. அதே நேரத்தில் அங்குள்ள அப்பாவி மார்க்சிஸ்ட் கட்சியினரை அவர்கள் அடித்து விரட்டியது தவறுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்படி பொருளாதார மண்டலம் அமைக்கப்படாது என அரசு உறுதியளித்த பிறகும், ஏன் பிடியை விடலாம் என்று கேள்வி எழுப்பலாம் அவ்வாறு அவர்கள் தங்களது பிடியை விடாததற்கு காரணம் அரசின்மீது அவர்கள் நம்பிக்கையை இழந்திருந்தது தான் காரணம்.

சிங்கூரில் டாட்டா ஆலை அமைவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய போதும், இதேபோல்தான் அங்குள்ள நிலம் கையகப்படுத்தப்படாது என முதல்வர் புத்ததேவ் பட்டசார்யா உறுதியளித்தார். ஆனால், அதன்பின் அங்கு நடந்தது வேறு என்பதும், உழவர்களின் நிலம் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு, டாட்டா மகிழுந்து தொழிற்சாலை அமைக்கும் பணி அங்கு தீவிரமாக நடந்து வருகிறது என்பதும் இப்போது ஊரறிந்த உண்மை.

அதேபோல் நந்திகிராமிலும் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நந்திகிராமை மீட்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை சரியா? நவம்பர் 3ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் 8ஆம் தேதி வரை நீடித்தன. இதை மேற்கு வங்க காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த ‘மீட்பு’ முயற்சியின் போது அரங்கேறிய அட்டூழியங்களை நாம் சொல்வதை விட மேற்கு வங்க ஆளுனரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தியின் வார்த்தைகளில் சொல்வதே சரியாக இருக்கும். நந்தி கிராம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைக் மீட்க மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சட்டத்திற்கு எதிரானது. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நந்தி கிராமில் நிகழும் வன்முறை பற்றிக் குறிப்பிட மேற்கு வங்க உள்துறை செயலாளர் பயன்படுத்திய வார்த்தை ‘நந்திகிராம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது’ என்பது தான். மாநிலத்தின் ஒரு பகுதி போர்க்களம் போலக் காட்சியளிக்கும் போது, எந்த ஓர் அரசும், சமூகமும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இந்த அறிக்கையை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது கூட நந்தி கிராமில் பல வீடுகள் துவைத்து எரிக்கப்படுவதாகவும், அங்குள்ள மக்களில் பலர் உணவும், பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளூர் பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் எனக்கு தொலைபேசியில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நந்திகிராம் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர் என்பதையும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.

நந்திகிராமில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற சமூகசேவகி மேதாபட்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது “நாகரீகமான அரசியல் நடைமுறைகளுக்கு எதிரானது” என்று மேற்கு வங்க ஆளுனர் கோபாலகிருஷ்ணகாந்தி கூறியிருப்பதிலிருந்தே நந்திகிராமில் நடந்தது என்ன என்பதை நாட்டுமக்கள் உணரமுடியும்.

இந்தக் கலவரங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்த கருத்தை சமூக அக்கறை கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. “நில எடுப்பு எதிர்ப்புக் குழுவினர் மார்க்சிஸ்ட் கட்சியினரை எப்படி அடித்தார்களோ, அதே வழியில் அவர்களை நாங்கள் திருப்பி அடித்து விரட்டியடித்தோம்” என்பதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் சமாதானமாகும். தம் மாநில மக்கள் மீதே நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி ஒரு முதலமைச்சரே இப்படிக் கூறுவதைவிட எல்லா அரசியல் கட்சியினரும் ஊடகங்களும் கண்டித்திருப்பதுதான் சற்று ஆறுதலான விஷயம்.

நந்திகிராமை ஆளுங்கட்சி ஆதரவுப் படைகள் மீட்டெடுத்த பிறகும் அங்கு பதற்றம்தான் தொடர்ந்து குடிகொண்டிருக்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கொடியை தலையில் கட்டிக்கொண்டு, இருசக்கர ஊர்தியில் வலம் வந்த இளைஞர் பட்டாளம், கண்ணில் படும் நில எடுப்பு எதிர்ப்புக் குழுவினர் அனைவரையும் ஆத்திரம் தீரும்வரை அடித்துத் துவைத்தது. அது மட்டுமின்றி எல்லோரின் வீடுகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி கொடியை ஏற்றிய இளைஞர்கள் ‘இது எங்க பூமி’ என்று பறைசாற்றினர். ஆளுங்கட்சியினரின் தாக்குதலுக்கு பயந்து வெளியேறிய மக்கள் தாராளமாக வீடு திரும்பலாம் என அரசு அறிவித்தப் போதிலும், பாதிக்கப்பட்ட மக்களால் அவ்வளவு எளிதாக வீடு திரும்ப முடியவில்லை.

நந்திகிராம் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், வெளியேறிய மக்கள் மீண்டும் வீடு திரும்ப வேண்டுமானால் தங்களுக்கு ‘வரி’ கட்டியாக வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். ஒவ்வொருவரும் வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் பொறுத்து குறைந்தபட்சம் 2000 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டது. அவ்வாறு வரிதர முடியாத மக்கள் இன்னும் அகதிகளாகவே அரசு முகாம்களில் வாடுகின்றனர்.

அதே நேரத்தில் விரட்டியடிக்கப்பட்ட நில எடுப்பு எதிர்ப்பு இயக்கத்தினரும் ஒடுங்கிப் போய்விடவில்லை. மீண்டும் நந்திகிராம் மீது படையெடுத்து அதைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தயாராகி வருகின்றனர். “பயங்கர ஆயுதங்களின் உதவியுடன் புலிகளைக் காட்டிலிருந்து விரட்டியடிப்பது எளிதானதுதான். ஆனால் புலிகளின் மனதிலிருந்து காடுகளை விரட்டியடிக்க முடியாது. ஏனெனில் காடுதான் புலிகளின் வீடு. அதேபோல் எங்களின் மனதிலிருந்தும் நந்திகிராமை விரட்டியடிக்க முடியாது” என்று வீராவேசமாகப் பேசி வருகிறார்கள். இவர்களுக்கு மாவோயிஸ்டுகள் ஆதரவும் இருக்கிறது. இந்தச் சூழலில் நந்திகிராமில் மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டால் அது மிகவும் மோசமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே. அப்படி ஒரு மோதல் ஏற்படுவதைத் தவிர்த்து, இரு தரப்பினரின் மனக்காயத்திற்கும் மருந்து போடுவதே மேற்கு வங்க அரசின் முதல் கடமையாக இருக்கவேண்டும். பூர்ஷ்வாக்கள்... பாசிஸ்டுகள்... இந்த இரு வார்த்தைகள்தான் எல்லா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வாயிலிருந்து சரளமாகவும் அதிகமாகவும் வருபவை. ஆனால், நந்திகிராமில் இந்தோனேஷிய முதலாளிகளுக்கு ஆதரவாக, ஏழை மக்களின் நிலங்களைப் பிடுங்க முயன்றதுடன், அவர்களை அடக்குமுறைக்கும் ஆளாக்கியதன் விளைவாக மார்க்சிஸ்ட் கட்சியினரையே பூர்ஷ்வாக்கள் என்றும் பாசிஸ்டுகள் என்றும் பலரும் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானதுதான். இதற்குக் காரணம் பொதுவுடைமைக் கொள்கையின் யானைக்கு அடிசறுக்கியதுதான்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com