Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
சரியா?
தொகுப்பு: க.மயில்வாகனன்


கவிதை எழுதுவது பயங்கரவாதம் என்கிறார்களே சரியா?

கவிஞர் தணிகைச்செல்வன்:

கவிதை எழுதுவது பயங்கரவாதம் என்று ஒப்புக்கொண்டால், தமிழின் முதல் பயங்கரவாதியாகத் தெரிபவர் திருவள்ளுவரே ஆவார். “உழைத்த செல்வத்தைப் பறித்த கயவனிடமிருந்து அதைப் பறிமுதல் செய்ய வேண்டுமெனில் அவன் பல்லை உடைக்க வேண்டும். உதைக்காவிடில் அவன் உதவமாட்டான்” என்று ஜெர்மானியக் கோட்பாட்டைத் தமிழில் நிர்மாணம் செய்தவரே குறளாசான்தான் (குறள் 1077)

பல்லுடைபட்டான் என்றாலும் பணியவில்லை எனில், கொன்றால்தான் பயன்படுவான் - ‘கரும்பு போல் கொல்லப்பயன்படும் கீழ்’ – என்று மற்றகருணை பேசுகிறார் வள்ளுவர் (குறள்-1078) இது புரட்சியா? பயங்கரவாதமா?

அம்பானிகளுக்கும், அத்வானிகளுக்கும் இது பயங்கரவாதம். நமது அடித்தளமக்களுக்கு இது புரட்சிவாதம். சிலி நாட்டுச் செந்தணல் கவிஞன் பாப்லோ நெருடா கூறினான். “நான் நியூயார்க் கேளிக்கைக் கூடங்களில் காதல் கவிதைகளை வாசித்தபோது ஆரவாரித்துப் போற்றிய அமெரிக்கர்கள்தாம், இன்று நான் செப்புச் சுரங்கத் தொழிலாளரின் சேற்றுக் கைகளைப் பாடும் போது என்னைத் தீவிரவாதி என்கிறார்கள்.” நெருடாவின் வர்க்கக் கவிதைகள், சீமான்களுக்குத் தீவிரவாதம், சேரிகளுக்குச் சிவப்புக் கீதம்.

மீரத் சதி வழக்கில் குற்றக்கூண்டிலிருந்து முழங்கினார் மூத்த பொதுவுடைமைவாதி தோழர் முசாபர் அகமது 1929இல் “என்னைப் பயங்கரவாதி என்கிறீர்கள், இல்லை. நான் அவனில்லை. நான் புரட்சிக்காரன். புரட்சி வேறு, பயங்கரவாதம் வேறு.”

ஆங்கிலேயர்களுக்கு அவன் பயங்கரவாதி அடிமை மக்களுக்கு அவன் விடுதலைவாதி. கவிதைப் பூங்கொத்தால் வணங்கி அஞ்சலி செலுத்துவது கவிதாஞ்சலியாகும். பூங்கொத்தை ஏந்திய கரம் பூங்கரமே. ஆனால் அதைப் பயங்கரம் என்கிறார்கள்

காவிப் பரிவாரமும் ‘தேவிப்’பரிவாரமும்! அதோடு நிற்கவில்லை. “கவிதாஞ்சலி மிகப் பெரிய குற்றம் - எனவே நீடிக்கலாமா இன்னும் உன் கொற்றம்?”

என்று உச்சமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

“உன் சிரசைக் கொடு” என்று கேட்டது வேதாந்தி ஆரியம் நேற்று, “உன் அரசைக் கொடு” எனக் கேட்கிறது ‘வேதா’வின் ஆரியம் இன்று. ஒரு தமிழனைத் தமிழன் அஞ்சலிக்கும்

கவிதையைப் பங்கரவாதம் என்கிறது பார்ப்பனவாதம் இன்று.

‘தமிழே பயங்கரவாதம்’ என்றது பாசிச வாதம் நேற்று. எனவேதான் தமிழியக் குடியைப் பொடாச் சிறையில் பூட்டியது பார்ப்பனப் பாசிசம். பாசிசத்துக்கும் பயங்கரத்துக்கும் வேர் பார்ப்பனியமே... அதைக் களைவதற்குத் தேவை இன்று போர்க்குணமே.



நந்தி கிராமம் விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மக்கள் செல்வாக்கை இழந்துக் கொண்டிருக்கிறது என்பது சரியா?

சு.பொ.அகத்தியலிங்கம், பொறுப்பாசிரியர், தீக்கதிர்:

‘கம்யூனிஸ்டுகள் வீழ்ச்சிக்கு நந்திகிராமமே தொடக்கமாக இருக்கும்’ என அத்வானி மனப்பால் குடிக்கிறார். மக்கள் ஆதரவோடு தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மேற்கு வங்க இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட மம்தாவும் சீர்குலைவு சக்திகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியல் விழிப்பு பெற்ற மேற்கு வங்க மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த சதிகார கும்பலுக்குத் தக்க பாடம் புகட்டியே வந்துள்ளனர். இனியும் அதுதான் தொடரும்.

நந்திகிராமம் பிரச்சினை மீண்டும் மீண்டும் ஊடகங்களாலும், முதலாளித்துவ கருத்துப் பிரச்சாரகர்களாலும் திரித்தே கூறப்படுகிறது. நந்திகிராமம் இராசாயண தொழில் வளாகத் திட்டம் மேற்கு வங்க அரசின் திட்டமா? இல்லை. மத்திய அரசு-காங்கிரஸ் அரசு பரிந்துரைத்த திட்டம்.

இது சிறப்பு பொருளாதார மண்டலமா? இல்லை. வழக்கமான தொழில் வளாக உருவாக்கமே. இதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டதா? இல்லவே இல்லை முறையான அரசு அறிவிக்கை கூட வெளியிடப்படும் முன்பே மம்தா வகையறாக்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு! மவோயிஸ்டுகள் துணையோடு சீர்குலைவு முயற்சிகள் தொடங்கிவிட்டன. முதல்வர¢ புத்ததேவ் மக்கள் விரும்பாவிடில் அங்கு தொழில்வளாகம் வராது என கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்துவிட்ட பின்பும் தொடர்ந்து அங்கு பொய்யை மூலதனமாக்கி பதட்டத்தை உருவாக்கியது யார்? 3500 மார்க்சிஸ்ட் கட்சி குடும்பத்தினர் கடந்த பல மாதங்களாக அகதிகளாக விரட்டப்பட்ட போது அது குறித்து ஊடகங்கள் பேசாதது ஏன்? மாவோயிஸ்டுகள் கூட்டத்தில் அத்வானி கலந்து கொண்டு ஆதரவு தந்தது ஏன்? நவீன ஆயுதங்களுடன் வெளிமாநில நக்சலைட்டுகள் அந்தப்பகுதியை ஆக்கிரமித்ததை மம்தா கூட்டம் மூடிமறைப்பது ஏன்? “காரணம் கிடைக்கவில்லையா? அதை உருவாக்கு” என்கிற ஏகாதிபத்திய பாணியில் மம்தாயும் சீர்குலைவாளர்களும் அரங்கேற்றிய ஒவ்வொரு நாடகக் காட்சியையும் மேற்கு வங்க மக்கள் நன்கு அறிவர்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் போது எலும்புகளை பொறுக்கிக்கொண்டு ஊர் ஊராய் கடை விரித்து மார்க்சிஸ்டுகளால் எரிக்கப்பட்டவர்களின் எலும்புகள் என மம்தா அழுது புலம்பியதை மேற்கு வங்க மக்கள் பார்த்தனர். சிரித்தனர். பாடம் புகட்டினர். தேர்தலோடு அந்த எலும்பு நாடகம் முடிந்து போனது.

மேற்கு வங்கம் நில உச்ச வரம்பை சிறப்பாக அமல் படுத்திய மாநிலம். அதன் மூலம் கிராமப்புற வருமானம் உயர்ந்தது வரலாறு. அங்கு தரிசு நிலம் என்பது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் அங்கு தொழில் வளர்ச்சி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேற்கு வங்க இளைஞர்கள் மாணவர்களின் கனவும் எதிர்பார்ப்பும் அதுவே. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் வாக்குறுதியும் அதுதான்.

வளர்ச்சிப்பாதையில் பீடு நடைபோடவே மேற்கு வங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். எனவேதான் நந்திகிராமம் பிரச்சனையை மாநிலந் தழுவிய பிரச்சினையாக்க மம்தா கூட்டத்தால் முடியவில்லை. கொல்கத்தா நகரத்தில் பீதியூட்டி சில போராட்டங்களை நடத்திக் காட்டுவதைத் தவிர ஊடகங்களைப் பயன்படுத்தி பூதாகரமாக்கிக் காட்டுவதைத் தவிர அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது. சமீபத்தில் அவர்கள் அறிவித்த பந்த் போராட்டத்திற்கு கூட மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஆதரவு கிட்டாமல் போனது. அதன் விளைவு ‘காலவரையற்ற பந்த்’ என உணர்ச்சி கொப்பளிக்க கூச்சலிட்ட மம்தா மறுநாளே ‘பல்டி’ யடித்து முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

அவர்கள் எவ்வளவு மூடி மறைத்தாலும்! சாதுரியமாக பொய் சொன்னாலும் நந்திகிராமம் வன்முறைக்கு பின்னால் இருப்பவர்கள் ‘வெளியாட்கள்’ ‘நக்சலைட்டுகள்’ ‘மக்கள் நலனில் அக்கறை இல்லாதோர்’ ‘அந்நிய சதியின் கையாட்கள்’ என்கிற உண்மைகளை மறைக்க முடியவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை தன் கைப்பாவையாக மாற்றத் தடையாக இருப்பது இடது சாரிகளே, மேற்கு வங்க அரசை வீழ்த்துவதுவதன் மூலம் அந்த நிலையை மாற்ற ஏகாதிபத்தியம் பகல் கனவு காண்கிறது. பணமும் ஆசிர்வாதமும் தாராளம் வழங்குகிறது. இது போன்ற அடிப்படை உண்மைகளை மேற்கு வங்க மக்கள் நன்கு அறிவர்.

கேரளத்தில் இஎம்எஸ் ஆட்சியை கவிழ்த்த பின்புலமாக அந்நியக் கை இருந்தது. பின்பு அம்பலமானது. அந்த கவிழ்ப்பின் மூலம் கேரளாவில் மார்க்சிஸ்டுகளை ஒழித்துவிட முடியவில்லை. மக்கள் உணர்ந்து கொண்டனர். வரலாறு மீண்டும் மீண்டும் ஒரே தவற்றைச் செய்யாது. மக்கள் அதிலும் மேற்கு வங்க மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். மார்க்சிஸ்ட் கட்சி மக்களிடம் எப்போதும் உண்மையை நேரடியாகப் பேசும். எனவே, சூழ்ச்சிவலைகளாலும், பொய்ப் பிரச்சாரங்களாலும், சின்னப் பிரச்சனைகளைக் கொண்டு மேற்கு வங்க இடதுசாரிகளை வீழ்த்தி விட முடியாது. அதே நேரம் நந்திகிராமம் மூலம் நெடிய பயணத்தில் சற்றே கண்ணயர்ந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டு விடும் என்கிற எச்சரிக்கையை அங்குள்ள மார்க்சிஸ்டுகள் பெற்றுவிட்டனர். ‘தூக்கம் நமக்கு இல்லை தோழர்களே!’ என விழிப்புற்ற கட்சி மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். மக்களை அரவணைத்து தலைமையேற்று கம்பீரமாய் முன்னேறும். சந்தேகம் இல்லை.

திரைஉலகில் பெற்ற புகழை அரசியல் தளத்தில் பயன்படுத்த முயல்வது சரியா?

இராவணன் ஆ.இர. இராமசாமி, மாவட்டச் செயலாளர் (காஞ்சி கிழக்கு மாவட்டம்), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி :

திரைஉலகில் பெற்ற புகழை அரசியலில் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? கலைத்துறையில் இருந்த என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் மக்களுக்காக தொண்டு செய்யவில்லையா? மக்கள் எங்களின் தொண்டினை விரும்புகிறார்கள். எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் மக்கள் தொண்டாற்றுகிறோம்.

இஸ்லாமியருக்கு ஏன் தனி இடஒதுக்கீடு கூடாது?

மருத்துவர். தமிழிசை சௌந்தர ராசன், மாநில பொதுச் செயலாளர்.பா.ஜ.க

*நமது நாட்டை மதசார்பற்ற நாடு என்று சொல்லும்பொழுது மதம் சார்ந்த இடஒதுக்கீடு எப்படி சரியாகும்?

‘ நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் தலைவர்கள் இன்றைய அரசியல்வாதிகளை விட நாட்டு மக்கள் மீது அப்பழுக்கற்ற அன்பு கொண்டவர்கள், அவர்களே மதம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என்று எண்ணித்தான் அதற்கேற்ப அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுத்திருந்தார்கள். பின்பு எப்படி மதம் சார்ந்த ஒடஒதுக்கீடு சரியாகும்?

* இன்றைய அரசியல்வாதிகளின் உள்நோக்கம் உண்மையாக இஸ்லாமியரை முன்னேற்றுவதற்காக அல்ல. அவர்களின் வாக்குகளை வாங்குவதற்கு, அவர்களை தாஜா செய்து வாக்குகளை வாங்குவதற்கானத் திட்டம்தான் இந்த இடஒதுக்கீடு நாடகம். எப்படி?

இன்னும் மதம் சார்ந்த இடஒதுக்கீட்டிற்கு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் இல்லாத நிலையில்-நீதிமன்றங்கள் மதம் சார்ந்த இடஒதுக்கீடு நம் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்த நிலையில்

- பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு பிரச்சினை இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த இடஒதுக்கீட்டு அறிவிப்பு – சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றுவதற்காகத்தானே அன்றி வேறென்ன?

அது மட்டுமல்ல எப்போது மதம் சார்ந்த இடஒதுக்கீடு என்ற பேச்சு வருகிறதோ, அது மக்களின் இடங்களை மட்டும் பிரிக்காது, மனங்களையும் பிரிக்கும் அதனால்தான் ஆந்திராவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு என்று அறிவித்த உடன் அந்த மதத்தையே சார்ந்த சமூக சேவகியும், ஐதராபாத்தில் பள்ளி நடத்துபவருமான டாக்டர் ரெகனா சுல்தானா சொன்னார்.

இஸ்லாமியர்களிலேயே இன்னும் பின்தங்கியிருப்போரை அடையாளம் கண்டு அந்தப் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால் அதன்மூலம் பயனடையச் செய்வதுதான் இஸ்லாமியருக்குச் செய்யும் உண்மையான உதவியாக இருக்கும் என்றும் அப்படி இல்லாமல் பொத்தாம்
பொதுவாக இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு என்ற ஏற்படுத்துவது ஒரு பிரிவினை மனப்போக்கை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல பொத்தாம் பொதுவாக இஸ்லாமியர் என்று வரும் போது உள்பிரிவுகளாகிய சன்னி முஸலீம், சையாஸ், மெடாலிஸ் போன்ற உட்பிரிவுகள் இன்னும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே இஸ்லாமியர்களின் பிரிவுகள் பல பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள் பின்பு எதற்கு மறுபடியும் மதம் சார்ந்த இடஒதுக்கீடு? அதுமட்டுமல்ல - இந்த இஸ்லாமியருக்கு 3.5% சதவீதம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவீதம் ஆக 7% சதவீதம் யாரிடம் இருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது என்றார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான 30% சதவீதத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் போது அவர்களின் சதவீதம் 23% ஆக குறைகிறதே என்பதைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா? அதை குறிப்பிட்டுச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுவதும், இஸ்லாமிய அமைப்பினரே சில பேர் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் சமமான வாய்ப்புகளை கொடுங்கள் என்று கேட்டிருப்பதும், - ஹஜ் பயணத்திற்கு கூட மானியம் வாங்குவது இஸ்லாத்திற்கு எதிரானது என்ற எண்ணம் இருப்பது போலவே ஒடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கக்கூடும் என்பதும், - இந்த இடஒதுக்கீடு பிற்காலத்தில் அரசியல் ஒதுக்கீடாகத் தலையெடுத்தால் அது நம் நம்நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்நாட்டு மக்கள் அனைவரும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமமாக முன்னுக்கு வரவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அது அரசியல்வாதிகளின் ஓட்டுவங்கி அரசியலினால், பிரித்தாளும் மனப்போக்கினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதும் முக்கியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com