Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
ஓய்வை விரும்பிய மரங்களை அசைத்துக் கொண்டிருக்கும் காற்று
- இன்குலாப்


1990இல் கடவுச் சீட்டுக்காக நான் விண்ணப்பித்ததே யாழ்ப்பாணம் சென்றுவரத்தான். ஆனால் யாழ் பயணம் சாத்தியப்பட்டது 2002 அக்டோபரில்தான். போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட காலம். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஓவியர் ட்ராஸ்கி மருது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோருடன் இணைந்த பயணம் அது.

போர் நிகழ்ந்த மண்ணின் சிதைவுகளைத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தது யாழ்மண்ணில்தான். இது பற்றிக் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் குறித்துள்ளேன்.

பனையும் தென்னையும்
பச்சை உச்சங்களை இழந்து
கனத்த நெடுங்குச்சிகளாய்...

எல்லாக் கட்டடங்களிலும்
ஏதாவது ஒரு காயம்,

‘ஷெல்’ அடியில் ஜன்னல் தொலைத்தவை,
தோட்டாக்களால் அம்மைக்குழிகள்,
உரிந்த தோலுக்கடியில்
சிவந்த சதையைப் போலத்தான்
மனிதர்கள்கவ
லைகிழித்த முகங்களுடன்

புல்வெளியின் மௌனத்தில்
புதைந்து கிடக்கும்
உயிர் அச்சம்

குளிர்தருவின் நிழல்பிளந்து
பீறிடக் காத்திருக்கும்
தீயின் கொழுந்துகள்...

“கண்ணிவெடி
கவனம்”

வெளிகளின் நீட்சியில்
வீழ்ந்து கிடக்கும்
கவசவாகனங்களின் மீது
ஊர்ந்து செல்லும் பறவைகளின் நிழல்கள்,
யுத்தம் நாளும்
புகைமூட்டங்களுக்கெல்லாம்
தத்தம் மொழிகளில்
சாட்சியம் சொல்லி...

இலங்கையை ‘இந்துமாக்கடலின் மரகதக்கல்’ என்று யாரோ ஒரு கவிஞன் பாராட்டியதாகச் சொல்வார்கள். அந்த மரகதக் கல்லில் இரத்தம் ஊறிப்போய் இருந்தது. ஒரு பயணத்தின் மகிழ்ச்சி எனக்கு வாய்க்கவில்லை. எனது கரையிலிருந்து அவர்களின் ஓலத்தை மட்டுந்தான் கேட்டேன். என் தாய் மொழியில் அது ஒலித்ததால், என் நெஞ்சத்தைப் பிசைந்தது. ஆனால் நான் கண்ட ஈழம், குருதி உறைந்து போய்க் கிடந்தது. எந்தக் காயமும் ஆறவில்லை. ஆறும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய அறிகுறி எதனையும் பயணத்தின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை பார்க்க முடியவில்லை. இப்பொழுது என் ஐயம் சரியாகிவிட்டது. அமைதிக்கான தீர்வு தொலைந்துபோய் விட்டது. சுப.தமிழ்ச்செல்வனைக் கொன்றுவிட்டார்கள்.

மண்ணும், பசுமையும், கட்டடங்களும் மட்டும் சிதைந்து நிற்கவில்லை, மனிதர்களுந்தான். ஒரு கண் இழந்த வீராங்கனை ஒருத்தியின் குரலில் நம்பிக்கை கணீரென்று ஒலித்தது. இடுப்பு முறிந்து தள்ளுவண்டியில் ஊர்ந்து வந்த இளம் பெண்களின் வாயிலிருந்து சொற்கள் மான்குட்டிகளைப் போலக் குதித்து வந்தன. கை, கால்கள் ஊனப்பட்ட எல்லா முகங்களிலும் விடுதலையை உயர்த்திப்பிடிக்கும் நம்பிக்கை சுடர்ந்து கொண்டிருந்தது.

அப்படித்தான் சுப.தமிழ்ச்செல்வனை நான் பார்த்தேன். எங்களை வரவேற்க நின்று கொண்டிருந்தார். தம்மைத் தாங்கும் ஒரு கோலுடன். சிறுது தாங்கித் தாங்கித்தான் நடந்தார். அந்த ஒருகால் ஊனத்தினால் தாம் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதை எங்களுக்கு உணர்த்துவதுபோல் இருந்தது அந்த நடை அனைத்துக்கும் மேல் அவர் முகத்திலிருந்த நீங்காத சிரிப்பு. விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதையே தமது குறிக்கோளாகக் கொண்டு எழுதிவரும் ஒரு பெண் எழுத்தாளர் ஒருவர் அந்தச் சிரிப்பைப் பற்றி இப்படிச் சொன்னார்:

“சுடுவதாய் இருந்தாலும் சிரித்துக் கொண்டே சுடுவார் போலும்” சுப.தமிழச் செல்வனின் இறப்பை அந்த எழுத்தாளர் பார்த்திருக்க வேண்டும்! நானும் பார்க்கவில்லை எனினும் சாவையும் அப்படி ஒரு புன்னகையோடுதான் அவர் எதிர்கொண்டிருப்பார். நினைவுபடுத்திப் பார்த்தால் நான் சுப.-தமிழ்ச்செல்வனோடு இரண்டொரு சொற்கள் மட்டுந்தான் பேசியதுபோல இருக்கிறது. அந்த மனிதர் சிரித்தபடியே அமர்ந்திருந்தது மட்டுந்தான் என் மனசில் இருக்கிறது. ஆனால் அவரைப் பற்றி நான் அறிந்தவை. தொடக்கத்திலிருந்தே விடுதலைப்புலிகளுடன் இணைந்து நின்றவர் சுப.தமிழ்ச்செல்வன்.

சென்னையில் தலைவர் பிரபாகரன் வசித்தபோது அவரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராய் இருந்துள்ளார். இயக்கத்தின் படைத்தளபதிகளில் ஒருவராய் இருந்து களமாடி பல வெற்றிகளை ஈட்டித்தந்துள்ளார். ‘இந்திய அமைதிகாக்கும் படை’யின் கொலைத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துப் போராடிய மாவீரன் அவர். இந்தப் போராளிகள் எல்லாம் இப்படி ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவர்கள் போலும், தளபதி கிட்டு சென்னையில் இருந்த நாட்களில் அளவளாவும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கிட்டு தளர்ந்திருந்த நொடிகளை நான் கண்டதில்லை!

வெறும் அரசின் படையில் ஒரு வீரனாகவோ, அதிகாரியாகவோ பணி செய்யும் ஒருவன், களத்தில் மட்டுமே தனது வீரத்தைக் காட்டக் கூடும். உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் விடுதலை வேட்கை கொண்ட ஒருவன் போராளியாகப் பரிணமிக்கும் பொழுது களத்திலும் சளைக்காது போராடுகிறான். அரசியலிலும் மதிநுட்பத்துடன் செயல்படுகிறான். தோழர் மாசேதுங், காஸ்ட்ரோ, சேகுவாரா போன்றவர்கள் களத்தில் ஆடியவர்கள் மட்டுமல்ல; அரசியல் கலையிலும் துறைபோகியவர்கள். ஈழ விடுதலைப்போர் நமக்கு இந்த வரலாற்றை விரித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தம்பியாக வளர்ந்தவர் சுப.தமிழ்ச்செல்வன். தலைவரைச் சந்திக்கச் செல்லும்போதும் ஆயுதம் தரித்த கோலத்துடன் செல்லும் உரிமை தமிழ்ச்செல்வனுக்கு இருந்தது என்று சொல்லப்படுகிறது.

பதுங்குழியிலிருந்து தப்பிக்க முடியாத வகையில் அவர் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் தாக்குதலுக்குள்ளான பதுங்குகுழியில் ஏற்பட்ட அதிர்வுகளால் அவர் மரணமடைந்திருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈக வரலாற்றில் சுப.தமிழ்ச்செல்வனின் மறைவு பாரியமானதுதான். எனினும் புலிகளின் இயக்கம், இத்தகைய இழப்புகளுக்கு ஈடு கொடுத்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. குமரப்பா, புலேந்திரன், கிட்டு, சங்கர் என்ற ஈடு இணையற்ற தலைவர்கள் வஞ்சகத் தாக்குதல்களால் தியாகிகள் ஆனவர்கள்தாம். எனினும் இந்தச் செழுங்கிளைகள் முறிந்ததால் இந்த மரம் சாய்ந்து விடவில்லை. இதனுடைய வேர்கள் சருகாகிடவில்லை. “எதிரிகளுக்காகச் சாவது என்பது ஒரு இறகின் உதிர்வைப்போல் இலேசானது. ஆனால் மக்களுக்காகப் போராடிச் சாவது ஒரு மலையின் தாக்கம்போல் கனமானது” என்றார் மாசேதுங். தமிழச்செல்வனின் மரணம் கனமானது என்பதை இந்த மரணம் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி அலைகளால் உணரமுடியும். இம்மரணம் குறித்து “பிரித்தானியாவில் பாராளுமன்றம் வலிமையான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.

தமிழ்ச்செல்வனை சமாதானத்தின் தூதுவன்’’ எனவும் வர்ணித்திருக்கிறது. வியத்நாம் போராளிகளை அமெரிக்க வல்லரசு ‘சிவப்புக் கொள்ளையர்கள்’ என்று அவதூறு செய்த காலகட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸ்ஸல் “சமாதானத்தின் போர்வீரர்கள்” என்று வருணித்ததற்குச் சமமானது மேற்கண்ட வருணனை!

தமிழ்ச்செல்வனின் இறப்பு, தமிழகத்தில் எழுச்சியலைகளை மீண்டும் உருவாக்கியுள்ளது. மக்கள் மனங்களில் உறங்கிய புலி மீண்டும் எழுந்து முழங்கத் தொடங்கிவிட்டது. ‘ஓய்வை விரும்பிய மரங்களைக் காற்று அசைத்துக் கொண்டிருக்கிறது’ தமிழகக் கூட்டணிகளில் ஒரு மாபெரும் நெருக்கடியை இக்களச்சாவு உருவாக்கிவிட்டது. தமிழன் என்ற உணர்வில் தமிழக முதல்வர் ஓர் இரங்கற்பாப்பாட, அதை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா வகையறாக்கள் மட்டுமல்லாது ஜக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்த காங்கிரசும் கண்டனம் செய்துள்ளது.

‘ராஜீவின் மரணம் ஆறாத வடுவாய் உள்ளது’ என்று காங்கிரஸ் கட்சி புலம்பும் போது, “ஆயிரம் ஆயிரம் ஈழத்தமிழர்களை இந்திய அமைதிப் படை பலி கொண்டது ஆறிவிடக்கூடியதா?” என்று திமுகவினர் மட்டுமல்ல - பெருவாரியான உணர்வு- பெற்ற தமிழர்கள் திரும்பிக் கேட்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் இரங்கற்குரியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஐயா நெடுமாறன் அவர்களுடன் தடையை மீறிக் கைதானபோது, எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, தடை செய்யப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாய்ச் செயல்படுவது “தேசவிரோதம்” என்று வைகோவையும் சாடத் தயங்கவில்லை. செல்வி ஜெயலலிதா தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்ததே இல்லையா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் போன்ற இயக்கங்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. ஆனால் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கோவையில் அகில இந்திய மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளித்தவர்தானே அன்றைய முதல்வர் ஜெயலலிதா என்று ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘22.11.07) அம்பலப்படுத்துகிறது.

தமிழகத்தின் இந்த அரசியல் கூட்டணிகள் தேர்தல் களத்தில் இன்னும் எதிர் எதிராக நிற்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுத் தளத்தில், தமிழ் உணர்வால் அருகருகே நிற்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயத்தைத் தமிழ்ச்செல்வனின் மலை போன்ற களச்சாவு வற்புறுத்துகிறது.

அரசியல்தளத்தில் நின்று செயல்பட்டவரும், அமைதிப்பேச்சினை உலக அளவில் நடத்தியவ ருமான தமிழ்ச்செல்வனைக் கொலை செய்தது மூலம், உலக அரங்கில் தலைநிமிர முடியாமல் இலங்கை அரசு நிற்கிறது. வரலாற்றினை நுட்பமாக நினைவுகூர்ந்தால், இது போர் முகாம் எதுவுமில்லாத, படை நடமாட்டமில்லாத ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அμகுண்டு வீசியதற்குச் சமமான ஒரு கொடுஞ்செயல். ஏனெனில் “விமானத்தாக்குதல் நடந்த கிளிநொச்சி நகர்ப்பிரதேசம் புலிகளின் இராணுவப் பிரதேசமல்ல, அங்கு அவர்களின் இராணுவ முகாம் எதுவும் கிடையாது. அரசியல் அலுவலகங்களும் நிர்வாக அலுவலகங்களும் மட்டுமே உள்ளன. ஐ.நா. நிறுவனங்கள் உட்பட சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும், கண்காணிப்புக் குழுவின் அலுவலகமும் அங்கு உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதால் ஸ்ரீலங்கா அரசின் அரச திணைக்களங்கள், அரச அதிபர் அலுவலகம், வைத்தியசாலை, பாடசாலை என்பனவும் அங்கு உள்ளன” என்று தினக்குரல் நாளேடு (18 நவம்பர் 2007) குறிப்பிடுகிறது. தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தக் கூடியவர்களை இராμவத்தின் அச்சுறுத்தலோ தடையோ ஒன்றும் செய்துவிட முடியவில்லை.

சிலியின் கவிஞர் பாப்லோ நெருடோ வீட்டுச் சிறையில் இருந்தபோதே இறந்தபோது, அவருடைய சவ ஊர்வலத்தை சிலியின் சர்வதிகாரி பினோசெட் அரசு தடை செய்ய முயன்றது. “தோழர்” என்ற சொல்லுக்கே தடை விதித்தது ஆயினும் உணர்வு பெற்ற சிலி மக்கள் தங்கள் தோள்களில் நெருடோவின் உடலைச் சுமந்து சென்றார்கள். “தோழர் நெருடா எம்முடன் வாழ்கிறார்” என்று முழங்கினார்கள். தமிழ்ச்செல்வனின் அஞ்சலிக் கூட்டமும் ஈழ மண்ணில் இந்த அச்சுறுத்தல்களை மீறித்தான் நடந்தது. அங்கு இயக்கத்தின் தளபதிகள் அனைவரும் வருகை தந்திருந்தார்கள். சிங்கள வான்படையால் “கல்லைக்கூடப் போடமுடியவில்லை”.

களமாடி மடிந்தவர்களின் உடல்களைப் புலிகள் இயக்கம் வித்துடல் என்று போற்றுகிறது. அவர்களைப் புதைப்பதில்லை, விதைக்கிறோம் என்று கூறு கிறது. சுப.தமிழ்ச்செல்வனும விதைக்கப்பட்டவர்தாம். சில வித்துக்கள் விதைக்கப்படுமுன்பே முளைவிடுவதுபோல், தமிழ்ச்செல்வன் விதைக்கப்படும் முன்னரே நெருப்பு முளைவிட்டவர் என்பதைத்தான் அந்த மாவீரனின் இறப்பும் சொல்லிக் கொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com