Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
காதுகளுக்குக் கதவு வேண்டும்
பொ.ஜங்கரநேசன்


ஒன்றையன்று முந்தித் தள்ளியவாறு விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் உறுமல்கள், இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலை இயந்திரங்களின் கர்ண கடூர இரைச்சல்கள், ஒலிபெருக்கிகளின் கதறல்கள் என்று வீதிகளை நிரப்பிக் கொண்டு பாயும் சத்த வெள்ளம் - இப்போது உச்ச ஸ்தாயியில் அலறித் தீர்க்கும் வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், சமையல் அறையில் அரவை இயந்திரங்கள் மூலம் வீடுகளினுள்ளும் நுழைந்துவிட்டது.

எம்மை அறியாமலேயே இந்த ஒலி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நாம் இரைச்சல்களை வெறும் தொந்தரவு மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒலிச்சூழல் சீர்கேடுகள் தொடர்பான அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளோ செவிப்பறையில் ஓங்கி அறைவதைப் போன்ற உக்கிரத்துடனேயே வெளியாகியுள்ளன. எதிர்பார்ப்பதற்கும் மேலாக இரைச்சல்களால் எமது மனமும் உடலும் மோசமாகப் பாதிக்கப்படுவது பற்றி இப்போது தெரியவந்துள்ளது.

டாக்டர் ஜோன்சன் என்பவர் லக்சம்பர்க்கில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பல்வேறு ஒலிச்சூழல்களில் பணிபுரிய வைத்து ஆராய்ந்து பார்த்தார். முடிவுகள் திடுக்கிட வைத்தன. ஒலி அதிகமான சூழலில் பணி புரிந்தவர்கள் கொடுமை நிறைந்தவர்களாகவும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகவும் பீதி உணர்வைக் கொண்டவர்களாகவும் மாறி விடுவதை அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின.

டாக்டர் மாகெரி என்பவர் இத்தாலியில் பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் எண்பது பேரைத் தேர்ந்தெடுத்து தொழிற்சாலை ஒன்றின் சந்தடிமிக்க சூழலில் வினாக்களுக்கு விடையளிக்க வைத்தார். எண்பது பேருமே படிப்பில் ஜாம்பவான்கள்தான். ஆனால் இரைச்சலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இவர்கள் செய்யும் தவறுகளும்
அதிகமாகிக் கொண்டே சென்றன.

அதிக ஒலிகளுக்கு இடையில் மனிதர்கள் வாழ நேரிடும் போது அவர்கள் நிறக்குருடர்களாகி விடுவார்கள் என்பதைப் பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனை வெளிப்படுத்தியுள்ளது. பதினைந்து நிமிடங்களுக்கு உரத்த ஒலி உள்ள சூழலில் நிற்கும் ஒருவர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நிறக்குருடால் அவதிப்பட நேரிடுமாம்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஒலியளவால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு இரத்தக்குழாய்கள் சுருங்கி இரத்தம் பாய்வது தடுக்கப்படவும், மாரடைப்பு ஏற்படவும் உண்டு எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கழகமும் தன் பங்குக்கு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தினமும் உரத்த ஓசைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம், எதற்கெடுத்தாலும் படபடப்பு, எதிலுமே மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, களைப்பு, உணவுக்குழாயில் அல்சர்... என்று பலவும் வரும் எனப் பயமுறுத்தியுள்ளது. கூடவே இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது. இன்னமும் இரண்டு வருடங்களில் இந்திய மாநகரங்களில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோனோர் ஏதோ ஒரு வகையில் செவிப்புலன் பாதிப்புக்கு ஆளாகியிருப்பர் என்பதுதான் அது.


இந்திய மருத்துவக்கழகத்தின் இந்த அபாய அறிவிப்பை அலட்சியப்படுத்துவதற்கு இல்லை. சென்னைக் கிறித்துவக் கல்லு£ரியின் சமூகப் பணித்துறை அண்மையில் சென்னை மாநகரின் வணிகக் கேந்திர மையங்கள், தொழிற்பேட்டைகள், குடியிருப்புப் பகுதிகள், அமைதி வலையங்கள் என்று வெவ்வேறு பகுதிகளிலும் ஒலியின் அளவுகளைப் பதிவு செய்ததில் எல்லா இடங்களிலுமே அனுமதிக்கப்பட்ட எல்லையையும் தாண்டி ஒலியின் அளவு ஏகத்துக்கும் எகிறியிருப்பது தெரிய வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவிலும் பார்க்க சென்னை நகரின் ஒலியின் அளவு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதால் விரைவில் சென்னை நகர வாசிகள் அரைச் செவிடர்களாகும் ஆபத்து அதிகம் இருப்பதாக இன்னுமொரு ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சீனித் தொழிற்சாலையொன்றின் தொழிலாளர்களிடையே வாய்ப்புகள் அதிகம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அதிக இரைச்சல் காரணமாக அவர்களில் 59 விழுக்காட்டினர் கேட்கும் திறன் குறைந்து போயிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக அதிக போக்குவரத்து நெரிசல், சந்தடி காரணமாக ரினைற்றல் (Tinnitus) எனப்படும் வேறு ஒரு விநோத நோயும் உருவாகி வருகிறது. இதில் உட்காதில் ஒலியை வாங்கும் மயிர்க்கலங்கள் அதிக சத்தத்தைத் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போவதால் சத்தமே இல்லாத அமைதியான நேரத்தில் கூட காதில் சில்வண்டின் சத்தம் போல இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்படி ‘ரினைற்றஸ்’ ஆல் பாதிக்கப்படுபவர்கள் கடைசியில் செவிட்டுத் தன்மைக்கு ஆளாகவும் நேரிடலாமாம். குண்டுவீச்சு விமானங்களின் முழக்கங்களும், குண்டுவெடிப்புச் சத்தங்களும் அன்றாட நிகழச்சிகளாகிவிட்ட ஈழத்தமிழர்களிடையே முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஒலிமாசின் மகா பயங்கரம் பற்றி மேலும் தெரிய வரும்.

ஒலியின் முக்கிய இயல்புகளில் ஒன்றான ஒலியின் உரப்பு (Loudness) ‘டெசிபல்’ என்கிற அளவு முறையாலேயே அளவிடப்படுகிறது. இங்கு டெசிபெல் (Decibal) எனப்படுவது ‘பெல்’ இன்பத்தில் ஒரு பாகம் (கிரஹம் பெல்லின் நினைவாகவே ஒலியளவுக்கு இந்தப் பெயர்) நமது மூச்சுக்காற்று 10 டெசிபல்கள் என்பதில் இருந்து மரங்களின் சலசலப்பு 20 டெசிபல்கள், மெதுவான உரையாடல் 30 டெசிபெல்கள், வானொலி இசை 50 டெசிபெல்கள் உரத்த பேச்சு 60 டெசிபெல்கள் என்று அத்தனை சத்தங்களையும் அளவிட்டு பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

50 டெசிபெல்களுக்கும் அதிகமான ஓசை நிரம்பிய அறையில் சாதாரணமாக உரையாடினால் கூட தெளிவாகக் கேட்க முடியாது. அதுவும் 70 டெசிபெல்களை எட்டிவிட்டால் எதுவுமே கேட்க முடியாது. இதன் அளவு 120 டெசிபெல்களுக்குப் (ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு) போய்விட்டால் காதுகளுக்குத் துன்பம்தான். 130 டெசிபெல்களுக்கும் மேல் போவது அதிகம் ஆபத்தானது.

இயந்திரக் கோளாறுடைய மோட்டர் சைக்கிள் எழுப்பும் ஒலி 105 டெசிபெல்கள் இது சிலரது செவிப்புலனை ஒரு மணிநேரத்தில் பாதித்து விடும். பேருந்துகளில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறிப் பயன்படுத்தும் ஒலியெழுப்பிகள் (Air Horn) கதறும் சத்தத்தின் அளவு 135 டெசிபெல்கள். இரண்டே நிமிடங்களில் மயிர்க்கலங்களில் சிலவற்றை சேதமாக்க இது போதும். ராக் இசை, ஸ்டிரியோ கருவிகள் சிலவற்றின் ஒலி அளவுகளும் 135 டெசிபெல்கள்தான். இயந்திர ஓசைகளும், வாகனங்களின் இரைச்சல்களும்தான் காதைக் கெடுக்கக் கூடியவை என்பதல்ல. இசையுமே அது சங்கீதமாக இருந்தால் கூட பெரும் ஓசையாகும் போது நாசத்தையே விளைவிக்கின்றது.

இத்தனை நஞ்சுகளையும் சுமந்து கொண்டு வரும் சத்தங்களின் மத்தியிலேயே பகலில் மட்டுமல்ல, இரவிலும் கூட பொழுதைக் கழிக்க வேண்டியதாய் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அமைதியான ஆழ்ந்த தூக்கத்துக்கு 35 டெசிபெல்கள் அளவுடைய ஒலிச்சூழலை பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி கடிகாரம் ஒன்றின் டிக்.. டிக் ஓசையே தூக்கத்தை கெடுக்காத எல்லையாக இருக்கும். ஆனால் உலகில் மிகப் பெரும்பான்மையோர் 50 டெசிபெல்கள் சூழலிலேயே நித்திரை என்ற பெயரில் புரண்டு கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

50 டெசிபெல்கள் உள்ள சூழலில் நீண்டகாலமாக இருந்தால் போதும் செவிப்புலன் பாதிக்கப்பட்டு விடும் என்று அறிவித்துள்ள இந்திய மருத்துவக்கழகம் கூடவே பரிந்துரை ஒன்றையும் செய்திருக்கிறது. வருங்காலங்களில் சந்தடிமிக்க வீதிகள், புகைவண்டிப் பாதைகள் விமான ஓடு தளங்களுக்கு அருகில் வீடுகளையோ, பாடசாலைகளையோ அமைக்க வேண்டாம் என்பதுதான் அந்த அறிவுரை. ஆனால் நகரமயமாக்கலில் தீவிரங்காட்டப்படும் இந்த நேரத்தில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

சத்தத்தை உறிஞ்சும் சக்தியை இயற்கை மரங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. மற்ற மரங்களை விட வேம்பு, சவுக்கு, வாழை போன்ற மரங்களுக்கு இந்த ஆற்றல் அதிகம் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கலில் கட்டிடக் காடுகளிடையே இந்த மரங்கள் ஒவ்வொன்றாகத் தொலைந்து கொண்டிருக்க எங்குமே பேரிரைச்சலின் பிரவாகம்தான்.

இந்நிலையில் பெருகி வரும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க நம் முன்னால் உள்ள ஒரே வழி காதுகளுக்குக் கதவுகளை இடுவதுதான். (சுட்டு விரல்களை இரண்டு காதுத் துவாரங்களினுள்ளும் செருகினாலே அது 20 டெசிபெல்கள் ஒலியைத் தடுத்து நிறுத்திவிடும்) வாகனப்புகைகளை வடிகட்ட அணியும் முகமூடிகளைப்போல, இந்த இரைச்சல்களை வடிகட்டவும் வீதிகளில் இறங்கும் முன்னர் காதுச் செருகிகளை மாட்டிக் கொள்வது வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com