Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
சாதிய அமைப்பும் பெண்ணடிமைத்தனமும்
- அருள்மொழி


பெண்ணுரிமை என்பது ஆணின் உரிமையையும் சேர்த்ததுதான். ஆண்களின் ஆதிக்கக் கருவியாக வைக்கப்பட்டிருக்கும் சாதி அமைப்பு ஆணையும் சுதந்திரமாக வாழ அனுமதிப்பது இல்லை. தன்னுடைய சாதிப் பெருமை என்று நம்பும் ஒரு போலி மதிப்புக்காக ஆண்களும் பல்வேறு தொல்லைகளைச் சுமக்கிறார்கள் என்பதே உண்மை. பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் வாழ்க்கையில் தலைகுனிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை எதற்காக அனுபவிக்க வேண்டும். M.Sc படித்த தன்னுடைய மகளுக்கு MCA படித்த ஒரு நல்ல பையனை பிடித்து இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மகிழ்வதற்குப் பதிலாக அந்த பையன் என்ன சாதி என்ற கேள்வியில் தான் பெற்ற பெண்ணின் காதலை முறித்துப் போட்டு அந்த இடத்தில் தன் சாதிக் கொடியை நட்டு வைத்து காப்பாற்றுகிற தந்தை அதற்கு கொடுக்கும் விலை என்ன? தனது சேமிப்புக்கு மீறிய செலவு, திருப்பிக் கொடுப்பதற்கு மூச்சுதிணறவைக்கும் சுமையாக கடன் 50 பவுன் என்று தங்கள் ஆசைக்கு தொடங்கி அது 80 பவுனாக முடியும்.

நிபந்தனைகள் இவற்றோடு வீணாகக் குப்பையில் கொட்டப்படும் உணவு வகைகளோடு, ஒரு இலைக்கு ரூ. 1 5 0 / - மதிப்புக்கு சாப்பாடு இத்தனையும் சேர்ந்து அப்பாவின் சாதியை காப்பாற்றி வருகிறது. மகளுடைய மகிழ்ச்சியை அழித்து வருகிறது. இந்த நெருக்கடியில் பெண்களின் மனப்போக்கு மட்டும் நேர்மையாகச் செயல்படுமா? இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கும் தான் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்கும் ஏற்படும் பிரச்சனையை பெண்கள் வேறுவிதமாக கையாளத் தொடங்குகிறார்கள். அதனால் காரணம் இல்லாமல் இன்னொரு
ஆணின் வாழ்க்கை இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக இந்நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். மனோகரன் என்கிற இளைஞன் அவரது குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி, அதுவும் கம்ப்யூட்டர் படிப்பு அமெரிக்காவில் வேலை. கணினி வளர்ச்சி பற்றி அதிகமாக

விளம்பரம் ஆவதற்கு முன்பே அந்தத் துறையை தேர்ந்தெடுத்து படித்தவர். தனது குடும்பத்திற்கே ஆதரவாக இருந்தவர். அவருக்கு பெண்பார்க்கும் படலம் தொடங்கும்போது திடீரென்று தூரத்து சொந்தமான மாமா ஒருவர் தேடிவந்து உறவை புதுப்பித்துக் கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டார். மனோகரனின் பெற்றோர்க்கு ஏற்கனவே உறவுகளை மதிக்காத அந்த மனிதர் வலியவந்து பெண் கொடுக்க முன்வந்தது பற்றி வியப்புதான் ஏற்பட்டதே தவிர சந்தேகம் வரவில்லை. தங்களது வசதிக்கு மீறிய வாழ்க்கை வாழ்ந்துவரும் அந்த மாமாவின் மகள் மனோகரனின் திட்டமிட்ட வாழ்க்கைக்கு ஒத்து வருவாரா என்பதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. மிகப்பெரிய மண்டபத்தில் ஊரே வியக்கும்படியாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததற்குப் பிறகு கணவன் மனைவிக்கும் எவ்வித மகிழ்ச்சியான பேச்சுவார்த்தையும் நிகழவே இல்லை. அந்த மணப்பெண் மனோகரனிடம் முகம் கொடுத்து பேசவே மறுத்தார். புதுப்பெண் அப்படித்தான் இருப்பாள். நீ கொஞ்சம் அனுசரித்துக் கொள் என்றும் இப்போதே அவள் போக்கிற்கு இடம் கொடுத்துவிடாதே, அடக்கி வை என்றும் இரண்டு விதமான அறிவுரைகள். ஆனால் மனோகரனால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு அவன் மனைவியின் நடவடிக்கைகள் இருந்தன. எப்படியாவது அவரை சமாதானப்படுத்தி அமெரிக்கா அழைத்துச் சென்றுவிடலாம் அங்கு சென்றபிறகு அவர் இயல்பான வாழ்க்கைக்கு வந்துவிடுவார் என்று நம்பிய மனோகரன் சென்னைக்கு தன் மனைவியை அழைத்து வந்து விசா பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் மனோகரனுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் மனைவி நஞ்சு அருந்திவிட்டார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றவும் காவல்துறையில் வழக்கு பதிவாகாமல் தவிர்க்கவும் தன்மீது பழி வந்து விடாமல் இருக்கவும் மனோகரன் அடைந்த வேதனை சொல்ல முடியாதது. அப்படிப்பட்ட நிலையிலும் நிதானம் இழக்காமல் பிரச்சினைகளைக் கையாண்ட மனோகரனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது அவரது மாமனாரின் நடவடிக்கை.

தன்னுடைய மகளை மனோகரன் மனம் புண்படும்படி பேசிவிட்டார் என்றும் அதனால்தான் தன் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார் என்றும் உறவினர்கள் முன்னிலையிலேயே குற்றம்சாட்டி பேச ஆரம்பித்து மனோகரனிடம் அவரது மனைவியை அழைத்து வரச்செய்து பேசியபிறகு நாங்கள் தெரிந்துகொண்ட உண்மை என்னவெனில் அந்த பெண் தன்னோடு படித்த வேற்று சாதி இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார். அவரது குடும்பமும் வசதி படைத்த குடும்பம்தான் என்றாலும் வேறு சாதியில் பெண் கொடுத்தால் தனது மான, மரியாதை என்ன ஆவது என்று கவலைப்பட்ட அவர்தான் தற்கொலை செய்து கொள்ளுவேன் என்று மகளை மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லாததால் மனோகரனை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் சம்மதித்துவிட்டார். ஆனாலும் அவரால் தான் விரும்பியவரை மறந்து மனோகரனோடு உடல்ரீதியாகப் பழக இயலவில்லை. இந்த மனப்போராட்டத்தால் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டார்.

கடைசியாக பெண்ணின் தந்தையை அழைத்துபேசியபோது அவர் பேசிய பேச்சுதான் மிக விநோதமானது. தன் மகளுடைய கற்பொழுக்கம்பற்றிதான் பெருமைப்படுவதாகவும் அப்படி ஒரு நல்ல பெண்ணோடு வாழ்வதற்கு மனோகரன் எந்த தியாகமும் செய்யலாம் என்றும் பேசினார் எப்படியோ கடைசியில் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ஆனால் அதற்கு மனோகரன் கொடுத்த விலையும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல, சாதிய அமைப்பின் தாக்குதலும், அத்துடன் இணைக்கப்பட்ட பெண் அடிமைத்தனமும்.

- தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com