Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
காவல் துறையைக் கேள்வி கேட்கும் படம்?
அன்பன்

‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் உதவி ஆணையாளராக விக்ரம் நடித்த ‘சாமி’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்கள் முதன்முறையாக காவல் அதிகாரி வேடத்தில் நடித்தால் அப்படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்கிற (மூட) நம்பிக்கையும் உண்டு. அதனால் வளரும் நடிகர்களும் காவலதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு எதிர்பார்ப்பார்கள்.

கதாநாயகன் காவலதிகாரியாக இருந்தால், நாடு நன்றாக இருக்கும். அவர் தப்பு செய்கிறவர்களைப் புரட்டி எடுப்பார், ஓட ஓட விரட்டுவார். அரசியல்வாதிகளும் ரவுடிகளும் அடங்கி ஒடுங்கிவிடுவார்கள் மக்கள் நிம்மதியாக நடமாட முடியும். இது தமிழத்திரைப்படம் வகுத்து வைத்திருக்கும் பொதுவிதி. இதன் விளைவு? ஒரு பொது இடத்தில் ஒரு காவலர் ஒருவரை அடித்தால், அடிவாங்குகிறவன் தப்பானவன் என்கிற எண்ணம் பார்க்கிற அனைவருக்கும் ஏற்படும். அதேபோல் காவலர் ஒருவரைத் துரத்தினால் மக்களே அவர்களுக்கு உதவி செய்து ஓடுகிறவரைப் பிடித்துத் தருவார்கள்.

இவை எல்லாம் காவலர் நம் காவலர் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடு. அதே காவலர்களைப் பற்றி தவறான சித்தரிப்புகளைத் திரைத்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் காவல்துறைத் தலைவர் முகர்ஜி பேசியிருக்கிறார். அவர்கள் வருத்தப்படுகிற அளவு காவலர்களை மோசமானவர்களாகக் காட்டிய படங்களும் உண்டு. இவ்விரண்டு வகைகளில் மேலோங்கி நிற்பது காவல்துறையின் பெருமை பேசும் படங்கள்தாம். இதனால் காவல்துறை, பொது மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள், அப்பட்டமான மீறல்கள் ஆகியன மறைந்து போயிருக்கின்றன.

காவல்துறையினரின் சட்டமீறல் மற்றும் மனிதஉரிமை மீறல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுட்டிக் காட்டியதோடு நின்றிருந்த திரைத்துறையிலிருந்து வெளியாகியிருக்கும் ‘கேள்விக்குறி’ படம், ஒரு சாமானியனின் வாழ்வில் காவல்துறையின் அத்துமீறலை விளக்கமாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறது. ஜெய்லானி எனும் புதியவர் முதன் முறையாக எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘?’ (கேள்விக்குறி) இப்படத்தின் முதல் பாதியில் காவல்துறை ஆணையர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளும் ஒரு இளைஞர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி குடும்பத்தைப் பணயமாக்குகிறார். அதன்பின் ஆணையரையும் வரவழைத்து அவரையும் கட்டிப்போட்டுவிடுகிறார்.

பிறகு, குறிப்பிட்ட ஒரு காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளர் உட்பட ஒவ்வொருத்தராக ஆணையர் வீட்டுக்கு வரவழைத்து அவர்களைச் சித்திரவதை செய்கிறார். ‘இந்த இடத்தில் இப்படி அடிச்சா நரம்பு சுருண்டுக்கும்’ என்று தலைமைக்காவலர் சொல்லித்தர அதுமாதிரியே அடித்து உதவி ஆய்வாளரைத் துன்புறுத்துவார் இளைஞர். அடித்துவிட்டு, ‘வலிக்குதா?’ எனக் கேட்க, ஆமாம் என்பார் உதவி ஆய்வாளர். ‘என்னை இப்படிக் கட்டிப் போட்டு அடிச்சுட்டு சிரிச்சிகிட்டு இருந்தே?’ என்ற இளைஞரின் கேள்வியில் பல அர்த்தங்கள்.

கதைப்படி, ஒரு தொழிலதிபர் பெரும் தொகையை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிறார். அவரிடம் கணக்காளராகப் பணிபுரிந்த பெண்ணையும், அவர் கணவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கிறார்கள். மூன்று நாட்கள் அலைக்கழித்து, அடித்து உதைத்த பிறகு கணவனை மட்டும் விடுவிக்கிறார்கள். மனைவி எங்கே என்று அவர் கேட்கும்போது, ‘உங்கிட்ட சொல்றதுக்கே கஷ்டமா இருக்குய்யா, உம் பொண்டாட்டிக்கும் அந்தாளுக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருக்குய்யா, அதை அவளே ஒத்துகிட்டா, என்னை வெளியில விட்ட அந்தத் தொழிலதிபரைப் பிடிச்சுத் தர்றேன்னு சொல்லிட்டு வெளியில போனா, போனவ எங்க கண்μலயே மண்ணத் தூவிட்டு தப்பிச்சிப் போயிட்டா’ என்று சொல்கின்றனர்.

உண்மையில் காவல்துறையின் சித்திரவதையில் அப்பெண் இறந்து போய்விடுகிறார். இதை அறிந்து வெகுண்டெழுந்த இளைஞர், காவல்துறைக்கு எதிராகத் தனியாளாக இறங்கி மாநகர ஆணையர் குடும்பத்தைப் பிணைக் கைதியாக்குகிறார். அதன்பின் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்களையும் பிடித்து வதைக்கிறார். இறுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கிறார். நடைமுறையில் ஒரு தனியாள், அதுவும் காவல்துறையினரிடம் அடிபட்டு உடலெங்கும் ரத்தக் காயங்களோடு இருப்பவர், அவ்வளவு காவலர்களை ஒரு சேர அடக்கி வைக்க முடியுமா என்கிற கேள்விகள் படம் பார்ப்போருக்கு எழலாம். ஆனால் அவருடைய கதை தெரிகிறபோது அந்தக் குறை மறையும்.

ஒரு கட்டத்தில், ஆணையர் குடும்பம் மற்றும் காவல்துறையினரை விடுவிக்க காவல்துறை அமைச்சர் பேச்சு நடத்துவார். அவரிடம் இளைஞர் வைக்கும் கோரிக்கை, ‘தமிழகத்தின் எல்லாக் காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்த வேண்டும். அவை காவல்துறைக்குச் சம்பந்தமில்லாத வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும். வழக்குகள் வரும்போது அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்பதுதான்.

காவல்துறையினரின் அத்துமீறல்களைத் தடுக்க இப்படி ஒரு வழிமுறையைச் சொல்லும் இயக்குநர், ஒரு இடத்தில் பேசும் வசனம், ‘விசாரணை என்பது புத்தி சம்பந்தப்பட்டது. ஒன்றுக்குப் பலரிடம் பேசி, புலனாய்ந்து சிந்தித்து முடிவெடுக்கக் கூடியது. ஆனால் இவர்களோ கசாப்புக்கடை நடத்துகிறார்கள்’.

இவ்விரண்டு கருத்துகளும் சிந்தித்துச் செயல்படுத்தப்பட வேண்டியவை. ஒரு புதிய இயக்குநருக்கு இப்படிப்பட்ட எண்ணம் வந்தது போற்றப்பட வேண்டியதாகும். இப்படத்தைப் பதினெட்டே நாட்களில் படமாக்கிவிட்டு அதை வெளியிட ஒன்றரை ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். இரண்டு உதவி ஆணையாளர்கள் படத்தைப் பார்த்திருக்கிறார்கள், தணிக்கைக் குழுவினர் மும்முறை இதற்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இயக்குநர் தந்த பதில், ஒரு மாதத்தின் செய்தித்தாள்தானாம். அவற்றில் இடம் பெற்ற காவல்துறையினரின் அத்துமீறல்கள், காவல்நிலைய மரணங்கள் ஆகியவை பற்றிய செய்தித் தொகுப்புகளைக் காட்டி, இவ்வளவு நடக்கிறது இவற்றில் ஒரு துளியைத்தான் நான் எடுத்திருக்கிறேன் என்று சொன்னாராம்.

கலைப்படைப்புகள் சமுதாய அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப்படம் இருக்கிறதென்பதோடு, இதுவரை காவல்துறையினரின் அலட்சியத்தை, அத்துமீறல்களை முழுமையாக வெளிப்படுத்த இதுபோல் ஒரு படம் வரவில்லையன்று சொல்லலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com