Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

தமிழுக்குத் தடை வாங்கியது குற்றம்! தமிழுணர்வாளர்கள் சீற்றம்!
இரா.உமா


கடவுள் வழிபாட்டில் இல்லச் சடங்குகளில் தேவாரம், திருவாசகம் பாடியோ, தமிழ் மந்திரங்கள் சொல்லியோ சடங்குகளை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் 30.5.2007 அன்று இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. இதன் பின்னணியில், தூண்டுதலாக இருந்து செயல்பட்ட, திருப்பனந்தாள் மடாதிபதியைக் கண்டித்து, தமிழ்வழிபாட்டுமைப் போராட்டக் குழுவின் சார்பாக 18.7.07 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தப்பட்டன.

பேரணியைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கிளைச் செயலர் உ. அலெக்சாண்டர் வரவேற்புரையாற்றினார். கார்த்திகேயன் தனது தலைமை உரையில், "1719ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட திருப்பனந்தாள் சைவ மடமும் அதன் முந்தைய மடாதிபதிகளும், தமிழைப் போற்றியே வந்துள்ளனர்.

ஆனால், 21ஆம் மடாதிபதியான இன்றைய மடாதிபதி தமிழுக்குத் தடை வாங்கியுள்ளார். மடத்தின் நிலக் குத்தகைதாரர்கள், மடத்திற்கு நெல் அளக்க மாட்டோம் என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்க அரசை வலியுறுத்த வேண்டும். இனிமேலும், இந்த மடாதிபதியின் சுரண்டலுக்கு இடமளிக்கக் கூடாது. மடத்தினால் நடத்தப்படும் பள்ளிக் கூடம் மற்றும் மருத்துவமனையின் கழிவுகள் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் கொட்டப்படுகின்றன. அதனை உடனே நிறுத்த வேண்டும்.

தமிழுக்குத் தடை வாங்கிய குற்றத்திற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். வழக்கையும் திரும்பப் பெறவேண்டும். அப்படி இல்லையெனில், அதன் விளைவுகளைச் சந்திக்க தயாராக இருங்கள்'' என்று மடாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்தவர், திருப்பனந்தாள் காசிமடத்தின் 21ஆம் மடாதிபதி முத்துக்குமார சுவாமி தம்பிரானுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்ற புதிய சர்ச்சைக்கான தகவலையும் தந்துவிட்டு அமர்ந்தார்.

சோழபுரம் பகுதியைச் சேர்ந்த, ஆன்மிகச் சொற்பொழிவாளர், இறைநெறி இமயவன் பேசுகையில், "தமிழ் இளைஞர்கள் வரலாற்றைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது அடையாளங்கள் எவ்வாறெல்லாம் திரிக்கப் பட்டுள்ளன, மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

திருப்பனந்தாளின் செஞ்சடையார், அருணாஜடேசுவரராக்கப்பட்டதும் இப்படிப்பட்ட வரலாற்றுத் திரிபுதான். ஞான சம்பந்தர் தமிழைப் போற்றினார், தமிழில் பாடினார் என்பதற்காக அவருடைய கல்வெட்டுகள் ஆயர்களால் இடிக்கப்பட்டன. இன்று தமிழைக் காக்க ஆத்திகமும் நாத்திகமும் இணைந்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

குடந்தைத் தமிழ்க் கழகத் தலைவர் சா. பேகன், “திருப்பனந்தாள் மடம் தமிழ்க்காப்பு முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறது. தயானந்த சரசுவதியின் அடிவருடிதான் இந்த எஜமான் சுவாமிகள் (திருப்பனந்தாள் மடாதிபதியை அப்பகுதி மக்கள் அப்படித்தான் அழைக்கின்றனர்) இந்த மடத்தின் கூட்டாளியாகச் செயல்படும் தருமபுரம் மடத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கும். இவர்களின் நிகழ்ச்சிகளில் கருப்புக் கொடிகாட்டி, ஆர்ப்பாட்டம் செய்வோம்!” என்று குறிப்பிட்டார்.

திருப்பனந்தாளைச் சேர்ந்த இரா. சிவராசு பேசும்போது, “மடத்துக்குச் சொந்தமான கடைகள் தலித்துகளுக்கு வாடகைக்கு விடப்படுவதில்லை. அன்பே சிவம் என்ற தத்துவத்தில் உருவான சைவ சமயத்தின் மடாதிபதி தீண்டாமையின் மொத்த உருவமாக இருக்கிறார். தன்னை எஜமான் சுவாமிகள் என்று அழைத்துக் கொண்டு, பூண்டி வாண்டையாரைப் போல, கவித்தலம் மூப்பனாரைப் போல ஒரு பண்ணையாராக நடந்து கொள்கிறார். திருப்பனந்தாள், திருவாடுதுறை, தருமபுரம் ஆதினங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நெற்களஞ்சியங்களைச் சுரண்டிக் கொழுக்கின்றன” என்பன போன்ற பல குற்றச் சாட்டுகளை முன்வைத்தார்.

கரூர், சபரீசன் சித்தாசிரம நிறுவனர். கருவை பொன். பாண்டுரங்க சுவாமிகள், தனது வாழ்த்துரையில், “இந்துக் கோயில்களில்தான் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இஸ்லாத்திலோ, கிறித்துவத்திலோ ஆண்டி முதல் அரசன் வரை ஒரே மாதிரியான வழிபாட்டு முறைதான். இந்துக் கோயில்களிலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப் பட வேண்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் புரட்சிகரமான சட்டம் பாராட்டுக்குரியது. தமிழில் தெய்வ வழிபாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தமிழுணர்வாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சைவப் பெரியோர்களால் வளர்க்கப் பெற்ற தமிழுக்கு ஒரே சைவ மடத்தின் மடாதிபதியே துரோகியாக மாறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்று குறிப்பிட்டார்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் தனது கண்டன உரையில், “தீ வளர்த்து செய்யப்படும் வேள்வியில் சமற்கிருத மந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகமப்படி அதுதான் சரி என்ற வாதத்தை அடிப்படையாக வைத்துத்தான் நீதிமன்றத் தடையை வாங்கியிருக்கிறார்கள். தமிழில் மந்திரங்களைச் சொன்னால் வேள்வி தீட்டாகி விடுமாம். தமிழ் வழிபாட்டு முறையில் வேள்விக்கு இடமில்லை என்கிறார்கள். அப்படியானால், வேள்வி செய்வது யாருடைய சடங்கு முறை. தமிழர்களின் அதாவது எங்களின் சடங்குமுறை இல்லாத வேள்வியை நாங்கள் ஏன் கோயில்களில் அனுமதிக்க வேண்டும்? இவர்களுக்கு மு.பெ. சத்தியவேல் முருகனார் என்பவர் மீது கோபம். இவர் தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மையம் நிறுவி, நூற்றுக்கணக்கான இளைஞர்களை, தமிழ் வழிபாட்டிற்குத் தயார்படுத்துகிறார். தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மேலாண்மைக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மீது என்ன கோபம் அவர்களுக்கு?

5.3.07இல் சென்னை அண்ணா மலைமன்றத்தில் நடைபெற்ற அரணருள் கூட்டத்தில் தருமபுரம் ஆதினம் கலந்துகொண்டு பேசியபோது, தமிழ்த் திருமுறைகளைத் தோத்திரமாக மட்டுமே பயன்படுத்தலாம். சடங்குகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவற்றிற்கு மந்திர சக்தி இல்லை. தமிழ் மந்திரங்களால் குடமுழுக்கு, சடங்குகள் செய்வது முட்டாள்தனம்... அபத்தம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட மு.பெ. சத்தியவேல் முருகனார், தனது தெய்வமுரசு இதழில் ஒரு கோரிக்கைக் கடிதம் வெளியிட்டார்.

அதாவது, தருமபுரி மடாதிபதியின் உணர்வாளர்களும், ஆன்மிக அன்பர்களும் தருமபுர ஆதினத்திற்கும், அரணருள் மன்றத்திற்கும் கடிதங்கள் போடுமாறு கேட்டுக் கொண்டார். விளைவு, அரணருள் மன்றத்திற்கும், தருமபுரத்திற்கும் மலைபோல் கண்டனக் கடிதங்கள் குவிந்து விட்டன. அதன் எதிரொலிதான் இந்த நீதிமன்றத்தடை. இந்த மூன்று ஆதினங்களுக்கும், ஒரு பெரிய எஜமானன் இருக்கிறார். தயானந்த சரசுவதி. இவர்களின் பிரதிநிதியாகத்தான் திருப்பனந்தாள் ஆதினம் செயல்பட்டு வருகிறார். திருப்பனந்தாள் ஆதினத்தின் சீடர்களான, ஜி. திருஞானசம்பந்தம் (திருநெல்வேலி) சட்டநாதன் (மதுரை) ஆகிய நான்கு பேர் மூலம்தான் வழக்குத் தொடுக்கப்பட்டு தடையும் வாங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் சேக்கிழார் அடிப்பொடி என்று ஒரு வழக்கறிஞர், அவருடைய உண்மைப் பெயர் இராமச்சந்திரன். இவர்தான் இந்த வழக்கிற்கான வாதுரையை (அபிடவிட்) தயாத்தவர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.

அந்த வாதுரையில், திருமறைகள் மிகவும் புனிதமானவை. எனவே நெருப்புக்கு அருகில் அவற்றைப் பாடக் கூடாது. எந்தக் காலத்திலும் கேள்விக்குரியது சமஸ்கிருதம்தான். அதைப் புறக்கணிக்கக் கூடாது. வேள்வி நெருப்பின் ஊடாகச் சென்று இறைவனை அடையும் சக்தி சமஸ்கிருதத்திற்குத்தான் உண்டு. திருமறையை மிகவும் புனிதமானது என்று சொல்லி, நவீன தீண்டாமையைப் புகுத்தியுள்ளனர்.

இதே அடிப்படையில்தான், தஞ்சைப் பெரிய கோயிலில் சம்பளத்துடன் ஓதுவாரை நியமித்துள்ளார் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற பார்ப்பன கும்பல்களின் பிரதிநிதி தயானந்த சரசுவதி. இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழை ஒரு கட்டத்துக்குள் நிறுத்திவிட வேண்டும் என்பதே இவர்களின் திட்டமாகும். புனிதமான கடவுளுக்கு, புனிதமான மொழியான தமிழில்தானே எல்லாச் சடங்குகளையும் செய்ய வேண்டும். சிவபெருமானே தன்னை சொற்றமிழால் பாடச் சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. சிதம்பரம் நடராசன் கையில் இருப்பது திருவாசகம்தான். சைவ மடத்தின் மடாதிபதியாக இருந்து கொண்டு தமிழுக்குத் தடை வாங்கியிருக்கும் திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமி தம்பிரான் அவமானச் சின்னம். தனது நிலையில் இருந்து மாறி, தடையை திரும்பப் பெறாவிட்டால் அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடரும்'' என்றார்.

இதற்குப் பிறகாவது மடாதிபதிகள் திருந்தினால் நல்லது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com