Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை என்னாச்சு? - தமிழகத்தில் போர்க்குரல்
அ. தமிழன்பன்


ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவத்தினர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கிழக்கின் உதயம் என்ற பெயரில் வெற்றி விழா ஒன்றையும் கொழும்பில் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

கிழக்குப் பகுதியின் முக்கிய இடங்களான மூதூர், சம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது சிங்கள அரசு. அப்படியானால் அந்தப் பகுதிகளிலிருந்து போரின் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகிறபோது அவர்களை அனுமதிக்க அரசாங்கம் மறுத்திருக்கிறது. இதன் காரணம் என்ன?

சம்பூரில் வாழும் மக்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவுமே இப்பகுதி இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது என அதீதப் பாசத்தோடு அறிவித்தவர்கள்,

அம்மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி மூதூர், சம்பூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளனவாம்.

அதியுயர் பாதுகாப்பு வலையம் என்றால் அப்பகுதிகளில் இராணுவம் முகாம் அமைத்துக் கொள்ளும். அது வீடாக இருக்கலாம், பள்ளிக்கூடமாக இருக்கலாம், கோவிலாக இருக்கலாம். எல்லா இடங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொள்ளும். மக்கள் நடமாடவே முடியாது.

இதை எதிர்த்து, இப்பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலையமாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி அங்குள்ள உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் நடந்திருக்கிறது. அது எந்தவிதமான பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.

சிங்கள அரசின் நோக்கம் என்னவென்றால், ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கிழக்குப் பகுதிகளிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிவிட்டு அங்கு சிங்களர்களைக் குடியமர்த்தி அப்பகுதிகளையும் சிங்களமயமாக்குவதுதான். இப்படி ஒரு திட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் ஏவலாளிகளாக கருணா மற்றும் பிள்ளையாரின் குழுக்கள் செயல்படுகின்றனவாம்.

சிங்களர்களால் மட்டுமின்றி யானைகளாலும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொப்பிகல காட்டுப் பகுதியில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால், காடுகளில் இருந்த யானைகள், கூட்டம் கூட்டமாக வெளியேறியுள்ளன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஊருக்குள் புகுந்த யானைகள் வயல்களை நாசமாக்கி வருவதுடன் பெருமளவு வீடுகளையும் இடித்துத் தள்ளியுள்ளன. மட்டக்களப்பு மேற்குப் பகுதியில் இரண்டாயிரம் வீடுகள் யானைகளால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெருகல் மண்டலச் செயலர் உமாமகேசுவரன் கூறுகையில், இந்த மாவட்டத்தில் ஐந்து சதவீது வீடுகள் குண்டு வீச்சில் சேதம் அடைந்துள்ளன. ஆனால், யானைகளால் 40 விழுக்காடு வீடுகள் சேதமாகிவிட்டன என்றார். ஏற்கெனவே போனால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்கள் இப்போது அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள யானைகளாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றிவிழா எனத் தொடர்ந்து சிங்கள அரசு தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இப்படித் தொடர்கிறது ஈழத் தமிழர்களின் துயரம். இதற்குத் தாய்த் தமிழகத்திலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புக் குரல் எழவில்லை. மாறாக, இந்திய அரசாங்கமோ சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடித்திருக்கிறது.

கிழக்கில் துரோகிகளை உருவாக்கி அவர்கள் மூலமே தமிழர்களை வெளியேற்றி வெற்றிவிழாக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. வடக்கு, கிழக்கில் கடந்த சூன் மாதம் மட்டும் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிக அளவாக 21 பேரும், வவுனியாவில் 9 பேரும் மட்டக்களப்பில் 8 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடந்த மாத அறிக்கையின் படி ஒரு வார காலத்தில் 34 கடத்தல் சம்பவங்கள் கிழக்கில் மட்டும் நடந்துள்ளன.

வெளியில் தெரியாமல் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இது தற்போதைய ஈழத்து நிலைமையின் ஒரு துளி. இவற்றையெல்லாம் உடனுக்குடன் அறிந்தும் தமிழகத்தில் எந்த எதிர்வினையும் இல்லை. நாளைக்கு வடக்கிலும் தன்னுடைய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி மக்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும் நோக்கத்தில் ராஜபக்சே பேசி வருகிறார். அப்படி ஒரு நிலைமை வந்தாலும் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? எங்களுக்கான ஆதரவுக்குரல் இங்கே ஒலிக்காதா? என்று ஏக்கத்துடன் கேட்டார் ஒரு ஈழத்தமிழர்.

நம் உள்ளத்தில் இடியென இறங்கிய அந்தக் குரலின் வீரியம் குறையுமுன்பே, ஈழத் தமிழர்களுக்குச் சிக்கல் என்றால் எப்போதும் போல் நிற்கிறதிராவிடர் கழகம் இப்போதும் முதலடி எடுத்து வைத்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.

20-07-2007 அன்று, ஈழத் தமிழர் வாழ்வுமைக்கான ஆர்ப்பாட்ட முழக்கம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் நடந்தது. தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இதே நேரத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி வடக்கையும், கிழக்கையும் சிங்கள அரசு பிரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இதில் இந்தியா உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை என்னாச்சு? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்க இந்திய அரசு முன்னுமை கொடுக்க வேண்டும் என்றும் போர்க்குரல் எழுந்தது.

பேராசியர் சுபவீ, பாவலர் அறிவுமதி, ஓவியர் மருது, கோ. சாமிதுரை, அறிவுக்கரசு, கலி. பூங்குன்றன், பார்வதி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன், அ.இல. சிந்தா, மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய வீரமணி, சிங்கள அரசு திட்டமிட்டு ஒரு புறம் குண்டுவீசியும், மறுபுறம் பட்டினிபோட்டும் மக்களைக் கொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நாங்கள் நாட்டால் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இனப்படுகொலையை நடத்தி வருகிறது சிங்களஅரசு. இந்தியா இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கக் கூடாது. உடனடியாக சிங்கள அரசை வலியுறுத்தி படுகொலைகளை நிறுத்த வேண்டும். ராஜபக்சேவின் தம்பி டெல்லி வந்தபோது அவரைச் சந்திக்க மறுத்ததைப் பாராட்டுகிறோம். அதே வேளையில் தமிழர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என்றார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகப் பேசியும் செயல்பட்டும் வருகிறார். அவரை மாற்றவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய சுபவீ கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசுக்கு ஆதரவானவராகவும் முதல்வர் கலைஞருக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் வீரமணியின் இப்போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலான ஒரு நிகழ்வு. இப்பேச்சுகளும் உணர்வுகளும் செயல் வடிவம் பெற்றால்தான் அம்மக்களுக்குப் பாதுகாப்பு. அதை நோக்கித் தமிழகம் பயணிக்க வேண்டும்.

அதிர்ச்சியில் ராஜபக்சே

ராஜபக்சே அரசுக்கு அங்குள்ள எதிர்க் கட்சிகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் தேர்தலைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் புந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில் அனைத்துக் கட்சி மாநாடு, ஆணைக்குழு மற்றும் பேச்சுவார்த்தைகள் நடத்திப் பல வருடங்களாகத் தீராமல் இருக்கும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதெனத் திட்டமிட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்தால் ஒன்பது மாதங்களுக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட ஏனைய சிறுபான்மையினர் அனைவருக்கும் ஜனநாயக உமைகள் சமமான முறையில் வழங்கவும், பிளவுபடாத ஒரே இலங்கைக்குள் பரந்த அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையும் அமுல்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும், அனைவரின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களின் அனுமதியுடன் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தை ஏதாவது ஒரு கட்சி அல்லது குழு நிராகரித்து, தொடர்ச்சியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாயிருந்தால் அனைத்துலக சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் அனைவரின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கும் வகையில் விரிவான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும். முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கி இவ்வேலைத்திட்டம் அனைத்துலக போர்க்காலச் சட்டதிட்டங்களுக்கேற்ப வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் மேற்கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணிக்கு சந்திரிகாவின் ஆதரவும் வெகுவாக உள்ளது. இந்நிகழ்வுகள் ராஜபக்சேவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com