Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

தமிழர் வரலாறு இந்திய வரலாற்றின் முக்கியமான அம்சங்களில் ஒன்று: பேராசியர் கா. சிவத்தம்பி
நேர்காணல்: பச்சியப்பன்


கடந்த ஐம்பதாண்டு காலப் பகுதியில் பரந்த தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழமாக ஈடுபட்டு, பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் ஆழ்ந்த ஞானம், ஆராய்ச்சி, விமர்சனம் என்று பல தளங்களில் தடம் பதித்து, தமிழ் கூறும் நல்லுலகுக்குக் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். தமிழ் இலக்கணம், இலக்கியம், விமர்சனம் என்ற துறைகளை, அவற்றின் வரம்புகளுக்குள் நின்று மட்டும் நோக்காது வரலாறு, அரசியல், பொருளியல், சமூகவியல், மானுடவியல் என்று பல்வேறு புலமைசார் துறைகளின் பின்புலத்தில் நின்று தமிழியல் ஆய்வுக்கு ஒரு பன்னெறி ஆய்வுக் கலாச்சார அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஆய்வுத் துறையைச் செழுமைப்படுத்தி வருபவர் பேராசிரியர் அவர்கள். தமிழின் முதுசம் ஆக உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் சென்னை வந்திருந்தபோது தமிழர் இதழுக்காக வழங்கிய நேர்காணல்...

பண்பாடு என்பதனை எவ்வகையில் விளங்கிக் கொள்வது?

பண்பாடு என்பது உண்மையில் மானுடவியல் சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். ஆங்கிலத்தில் பொதுவாக ‘Culture’ என்று சொல்வதற்கான தமிழ்ப் பதமாக இப்பொழுது கலாச்சாரம் என்று சொல்கிறார்கள். உண்மையில் கலாச்சாரம் என்பதற்கும் பண்பாட்டுக்கும் குழப்பம் கிடையாது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் பண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இந்த வாழுகின்ற முறைமை என்பதனுள் வாழ்க்கையின் சகல அம்சங்களும் அடங்கும்.

அன்றாட வாழ்க்கை, உறவு முறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவு வகைகள், ஆடை ஆபரணங்கள், வைபோகங்கள், சடங்குகள் இவற்றின் ஊடாக, தோன்றுகிற ஒரு மனநிலை. இவற்றின் அடியாக வருகின்ற அந்த வாழ்க்கைமுறை இன்னொன்றோடு ஒப்பு நோக்குகிறபொழுது அல்லது ஒப்பு நோக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்ற பொழுது என்னை அடையாளங் காட்டுவதாக நான் கருதுகிறேன்.

அதுதான் பண்பாடு. அந்த பண்பாட்டினுள் இரண்டு பிரதானமான விடயங்கள் உள்ளன. ஒன்று வாழ்க்கை முறை, மற்றொன்று பெறுமானங்கள். இந்த வாழ்க்கை முறைக்கும் பெறுமானங்களுக்கும் தொடர்புண்டு. பெறுமானம் என்பது values.

பெறுமானம் என்பது ஒரு எண்ணக்கரு நிலைப்பட்ட முக்கியத்துவமுடைய சிந்தனை மனப்பாங்கு. ஆனால் அவற்றிற்கு ஒரு பலம் உண்டு. இந்த பெறுமானங்கள் ஒரு தனிமனிதனுடைய, ஒரு குழுமத்தினுடைய கண்ணோட்டங்களைத் தீர்மானிக்கிறது.

யாரைக் கல்யாணம் பண்ணலாம், யாரைக் கல்யாணம் பண்ணக் கூடாது என்பது, ஒரு அயலவரை எப்படி மதிக்கிறது, ஒரு ஆசியரை எப்படி மதிக்கின்றது என்பது எல்லாம் பெருமானங்கள்தான்.

இவை யாவும் ஒருமுகத் திரண்டு நமக்குள்ளே இருப்பதனால் நாங்கள் பண்பாடு என்பதனை எங்களுடைய ஒரு வாழ்க்கை முறையின் அடையாளமாகக் கருதுகிற ஒரு தன்மை உண்டு. இதனால்தான் இந்த பண்பாடு என்ற ஒரு சொல்லுக்கு ஒரு அசாதாரணமான முக்கியத்துவம் வந்திருக்கிறது.

தமிழ்ச் சமூகம் தன்னுடைய பண்பாட்டுக் கூறுகளை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றது?

தமிழ்ப் பண்பாடு என்று சொல்கிறபொழுது ரொம்ப நிதானமாக நாம் பார்க்க வேண்டும். ஒன்று, அனைத்திந்திய சமூகங்களில் ஒன்றாக தமிழ்ச் சமூகத்துக்கெனச் சில பண்புகள் உண்டு. தென்னிந்தியாவிற்குள் சில பொதுப் பண்புகள் உண்டு. அதிலும் தமிழ்ச் சமூகத்துக்குள் சில சிறப்பான பண்புகள் உண்டு. தமிழக நிலையில் ஒரு முக்கியமான நாம் கவனிக்காது புறக்கணிக்க முடியாத ஒரு பிரச்சனை ஒன்று இருக்கு. அது பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரச்சனை. ஒரு கட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டில் பிராமணர்களும் வரலாம். பிராமணர் அல்லாதாரும் வரலாம்.

இன்னொரு மட்டத்துல பல்வேறு காரணங்களால் பிராமணர்கள் அல்லாதோர் பண்பாடு என்று வேறுபாடுகளையும் கொண்டிருக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பொழுது இந்தியா முழுவதிலும் பிரித்தானியர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேச மக்கள் கிளம்பிய பொழுது அவர்கள் மகாராஷ்டிராவையும் தமிழ்நாட்டையும் தவிர மற்றைய இடங்கள் எல்லாவற்றிலும் சமூக விடுதலையையும் அரசியல் சுதந்திரத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்து காங்கிரசினுடைய வளர்ச்சியில் துரதிர்ஷ்டவசமாக சமூக விடுதலை சமூக சமத்துவம் என்ற கொள்கைகள் வலியுறுத்தப்படவில்லை இதனால் தமிழ்நாட்டிற்கு ஒரு விசேஷமான பிரச்சினை உண்டு. பிரித்தானியர் ஆட்சி தன்னுடைய மேலாதிக்கத்தில் இந்தியா முழுவதையும் கொண்டு வருவதற்கு முயன்றபொழுது அது வைதீக சமஸ்கிருத மரபுவழி வந்த ஒரு பண்பாட்டை, பொதுவான இந்திய மரபாகச் சொல்லுகிற ஒரு போக்கை வளர்த்தது. இதை ஆரம்பத்துல இருந்தே தமிழ்நாட்டுல ஏற்காத ஒரு நிலை இருந்தது. இங்கு அதிலிருந்து வேறுபட்ட ஒரு பண்பாடு உண்டு என்று சொல்லுகிற ஒரு எடுத்துரைப்பு இங்கே நடந்தது. அந்த வேறுபாடுகள் கிறித்தவ பாதிரிகள் காலத்தில் ரொம்ப அழகாக எடுத்துச் சொல்லப்பட்டன.

வீரமாமுனிவர் போன்றவர்கள் இலக்கணம் சார்ந்து செயல்பட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வருகிற இந்த மதம் சார்ந்த இயக்கங்கள் தமிழினுடைய மிக முக்கியமான அம்சங்களையெல்லாம் ஒட்டுமொத்தமான இந்திய சமஸ்கிருத மயமாக்கத்திலிருந்து விடுபட்டவை என்பதை எடுத்துக்காட்டின. கால்டுவெல் என்பவர் திராவிட ஒப்பியல் இலக்கணம் மாத்திரமல்ல. திருநெல்வேலியின் வரலாற்றையும் திருநெல்வேலியில் இருந்த சாணாருடைய வரலாற்றையும் எழுதினார். இந்தப் பிரதேசத்தினுடைய தனித்துவம் அனைத்திந்திய மட்டத்தில் பதிவாகியது 19ம் நூற்றாண்டில்தான்.

தனித்தமிழ் தன்மையை அந்த பிரதேச தன்மையை, அதனுடைய பண்பாட்டை, அதனுடைய இலக்கியங்களை வற்புறுத்துகின்ற அதே வேளையில், தமிழ்நாட்டின் அடிநிலைச் சமூகத்தினர் தங்களுடைய தனித்துவத்தை தங்களுடைய சமத்துவத்தை வற்புறுத்துவதற்கான சங்கங்களை நிறுவ ஆரம்பித்தார்கள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அமைப்பின் தோற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அதனுடைய வரலாற்றினை சரியாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, பிரித்தானிய ஆட்சி தோற்றுவித்த இந்த சென்னை மாநிலத்தில் சென்னை மாநிலம் முழுவதிலும் உள்ள பிராமணர்கள் அல்லாத நிலச்சுவான்தார்கள் ஆன முதன்மையாளர்கள் பிரித்தானிய ஆட்சியில் வருகின்ற லாபங்கள், வருமானங்கள் இல்லாமல் போகிறதே என்பதற்காக இணைந்து 1916இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தொடங்குகிறார்கள்.

நாயர், பிள்ளை, ரெட்டி, முதலியார் ஒன்று சேர்கிறார்கள். இங்கு அரசியல் ரீதியாக, பண்பாடு ரீதியாக, மத ரீதியாக இவர்கள் எல்லாம் ஒன்றாகி விடுகிறார்கள். இந்த இயக்கத்தைத்தான் பின்னர் சுய மரியாதை இயக்கமாக மாற்றினார்கள். காங்கிரசினுடைய சுதந்திரப் போராட்ட முறைகளிலே ஈடுபட்டு அதுல ஒரு முக்கியமான இடத்தை வகித்த ஒருவர் இந்தச் சமூகப் பிரச்சனை காரணமாக அதிருப்தி கொண்டவராக அதற்கு வெளியே வந்து அவர் 1926ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் என்னும் இயக்கத்தை தொடங்கினார். இந்த சுயமரியாதை இயக்கம் என்பதை ஆழமாகப் பார்த்தால் அது ஒரு பண்பாட்டு இயக்கம். பிராமணர் அல்லாத மனிதர்களுக்கும் மனிதர்கள் என்கின்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது.

பெரியார் வருகையையும் அவரது எழுச்சியினையும் எப்படிப் புரிந்து கொள்வது?

திராவிடக் கட்சி என்ற பெயரில் அமைத்தது 1944ல்தான். பெரியார் சில விஷயங்களில், ரொம்ப வித்தியாசமான போக்குகள் காட்டுகிறார். பெரியாருக்கு வெவ்வேறான சக்திகள் தொழிற்படுகிறது. ஒன்று அவர் சோவியத் புரட்சியினால் கவரப்படுகிறார். திரும்பி வரும் வழியில் இலங்கையில் பௌத்தத்தினால் கவரப்படுகிறார். அங்கு முக்கியமான பௌத்த அறிவியல் அறிஞரை அவர் சந்திக்கிறார். அதோடு வந்து, பெரியாரின் முக்கியத்துவம் என்னவென்றால் அவர் அதனை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றாமல் அதனை ஒரு பண்பாட்டு நடைமுறை இயக்கமாகவே பேணி வருகிறார்.

பிராமணிய மேலாண்மை எதில் தங்கி நின்றதோ அதை எதிர்த்தார். அதாவது மதத்திற்கு எதிரான எதிர்ப்பு வந்தது. கோயிலுக்கு எதிரான எதிர்ப்பு வந்தது. மத நடைமுறை எதிர்ப்பு இயக்கமாகவும் மாறியது. இது கோயில் சம்பந்தமாகத்தான் மாறுகிறது. அப்ப இதனால் என்னாச்சு என்று சொன்னால் இங்கே சமூக விடுதலைக்கான போராட்டம் என்பது தமிழ்நாட்டின் வரலாற்றுச் சூழல் அந்த காலகட்டச் சூழல் காரணமாக பாரம்பரிய இந்துமத எதிர்ப்பாகவும் மாறுது. அவர் மொழி அபிமானத்தையும் முதன்மைப்படுத்தவில்லை. அப்ப தமிழ்நாட்டுல பண்பாடு என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ரொம்ப ஒரு சிக்கல்பட்ட கேள்வியாகும்.

பெரியார் கட்டமைத்த, கட்டமைக்க விரும்பிய பண்பாடு எது? அதற்கும் இங்கு நிலவிய சூழலுக்கும் உள்ள உடன்பாடாக, முரண்பாடாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பெரியார் உண்மையில் சுய கௌரவத்தை அடிப்படையாகக் கொண்ட, சமூக மேலாண்மைகளை எதிர்க்கின்ற, பிராமணியத்தை எதிர்க்கின்ற ஒரு சமூக முறைமையிலேயே அவர் நிற்கின்றார். அந்த சமூக சீர்திருத்தவாதத்துல பெண்களின் நிலைமையைப் பற்றிப் பேசியது முக்கியமானது. ஒட்டுமொத்தமான இந்திய வரலாற்றைப் பேசுகிறபொழுது பெரியாருடைய அந்த பெண் விடுதலை இயக்க நடைமுறைகள் பற்றி பெரிதாகக் கூறப்படுகிறது. மற்றது அவர் தனது இயக்கத்தை சமூகச் சீர்திருத்த இயக்கமாக வைத்திருக்கிறாரே தவிர அதற்கு மேலாக அவர் தன்னைக் கொண்டு செல்ல விரும்பினதாக எனக்குத் தெரியவில்லை.

அந்தத் தேவை, அண்ணாவுக்கு ஏற்படுகிறது. 1944இல் திராவிட கட்சி தொடங்குது. 1949-இல் தி.மு.க. தொடங்குது. அறிஞர் அண்ணா சொல்றார், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார். அவர் மதத்தை அங்கே ஏற்கிறார். அப்ப, இது தமிழ்ப் பண்பாட்டுக்குத் தேவையாக இருக்கிறதா? இதில் உள்ள முக்கியம் என்னவென்று சொன்னால், ஒவ்வொரு ஐடியாலஜியும் ஒவ்வொரு பண்பாட்டு நடைமுறையை வற்புறுத்தியது இதுதான். பெரியார் தன்னுடைய சமூக சீர்திருத்தவாதத்தை அரசியல் காரணங்களுக்காக எந்தவிதத்திலும் அவற்றினுடைய வலிமைகளைத் திரிக்கவோ நீர்க்கவோ விரும்பவில்லை.

பெரியார் மொழியை முதன்மைப்படுத்தாதற்குக் காரணம் என்னவென்று சொன்னால், சமூக மேலாண்மை உள்ள சக்திகள் சிலவற்றைப் புனிதம் என்று கூறினார்கள். அந்த பின்புலத்தில்தான் இங்கு அவருடைய கருத்த சட்டையையும் புரிந்துகொள்ள வேண்டும். அவர் பண்பாடு என்ற சொல்லை எத்தனை தடவை பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். இதில் உள்ள பிரச்சனைகள் என்னவென்றால், பெரியார் மறைமலையடிகள் ஆகியோரைப் பின்பற்றுகிறவர்கள் மூல நூல்களைப் படிப்பதில்லை. பெரியாருக்கும் பெரியாருடைய தோழர்களுக்கும் மறைமலையடிகளுக்கும் ஒரு வழக்குவந்து, அது நீதிமன்றம்வரை செல்லும் நிலைமை ஏற்பட்டு, அதை திரு.வி.க. தடுத்து வைத்தார். ஒருவகையில் திரு.வி.க. மதம், மொழி, சமூக சீர்திருத்தம், பெண்ணின் பெருமை எல்லாவற்றையும் கொண்டு வருபவராக ஒரு தோற்றம் வருகிறது. ஆனால், அவரால் அதுக்கு மேல போக முடியவில்லை.

சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் ஒரு பண்பாட்டு உருவாக்கத்தினுள் இந்த மத நம்பிக்கைகள் இல்லை என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு உயர் கோயில்கள் பெரிய சுசீந்திரம், திருவாரூர், தஞ்சாவூர் முக்கியமல்ல. ஆனால் பேச்சியம்மன் முக்கியம். பிரச்சனை என்னவென்றால், இவர்கள் பிராமணியத்தால் அடிப்படை மத நம்பிக்கையை நிராகரிக்கப் போய் இவர்களுக்கு எதிரான ஒரு இயக்கம் வரத் தொடங்கியது. அது முற்றுமுழுதாக மதத்தைக் கொண்டுவரப் பார்க்குது.

கற்பு குறித்த விவாதம் ஓரு வருடங்களாக மிகக் கடுமையாக இருக்கு. அதில் தமிழ்த் தேசிய இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் முரண்படக் கூடிய சூழல் இருக்கிறது. இதை எப்படி அணுகுவது?

நம்முடைய மரபில் ஒரு பெண் ஒரு ஆணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு கிடையாது. ஒரு ஆண், ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு விதி இல்லை. கிராமங்களில் அறுத்துக் கட்டுதல் என்று சொல்லுகிற பழக்கம் உண்டு. நீ ஒருவனோடு வாழ்கிறபொழுது, நீ ஒருத்தியோடு வாழ்கிறபொழுது அவனுக்கு அல்லது அவளுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் பிரச்சனையே தவிர வேறான்றும் இல்ல. ஒரு ஆளுக்கு இரண்டு கல்யாணம், மூன்று கல்யாணம் நடக்குது. முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள் நடுத்தாரத்துக்கு மூன்று பிள்ளைகள் இதெல்லாம் கிராமங்களில் இருக்கின்றது. கிராமத்தில் பெண்கள் மறுமணம் பண்ணலயா? அவர்கள் கற்பிழந்தவர்களா என்ன?

என்னைப் பொறுத்த வரையில் கற்பு என்பது நீ யாரை கல்யாணம் பண்ணியிருக்கியோ அந்த வேளையில் அந்த ஆண் அல்லது பெண்ணுக்கு கட்டுறுதியோடு இருத்தல். கற்பு என்ற சொல் கற்றுக் கொள்ளுதல் ஆகும். படிப்பு மாதிரி. கல் + பு = கற்பு. இந்தச் சமூகத்தில் இது. மற்றச் சமூகத்திற்கு மற்றது.

தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்பது பற்றி...

உண்மையில் தமிழர் வரலாறு இந்திய வரலாற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. குறிப்பாக 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பண்பாட்டின் மேலோங்கிய அம்சமாக விளங்கிய பல்லவ சோழர் காலங்கள் இந்தியப் பண்பாட்டின் உயர் கட்டங்களாக விளங்கியவை. அது மட்டுமல்ல வட இந்தியாவில் கங்கைக் கரையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் இருந்து வேறுபட்ட இன்னொரு நிலைப் பட்ட வாழ்க்கை முறையினை தெற்கிலே உள்ள தமிழகத்து வரலாறு மூலம் நாங்கள் காண்கிறோம். அது அந்தப் பண்பாட்டிற்கு, அந்த வாழ்க்கை முறைக்கு அந்த வரலாற்று ஓட்டத்திற்கு எதிர்நிலைப்பட்ட இன்னொரு தளநிலைப்பட்டது.

இந்தப் பிரதேசத்தின் வரலாறு அந்த வரலாறோடு எப்ப சேர்வது. அதற்கு முந்தைய அதன் நிலவரம் என்ன என்று பார்க்கலாமே தவிர தமிழர்களுக்கு வரலாறு இருக்கா என்பது ரொம்ப கொச்சைப்படுத்தின, புலமையாளருடைய வாயில் வராத ஒரு வாதம் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்து. தமிழ்நாட்டு வரலாறு இந்திய பொதுவான பண்பாட்டுக்களித்த பெருங்கொடைகள் ஏராளமாக உண்டு. துரதிஷ்டவசமாக, கடந்த 25 வருடங்களாக மத எதிர்ப்பு, திராவிட கருத்து நிலை காரணமாக நாங்கள் பக்தி இயக்கங்களை முன்னிறுத்தவில்லை. ஆனால் உலக இலக்கிய நிலையில் தமிழின் மிகப் பெரிய சிறப்புகளில் ஒன்று அதிலே உள்ள பக்தி இலக்கியங்கள். காரைக்கால் அம்மையார், ஆண்டாள், திருநாவுக்கரசர், நம்மாழ்வார், மாணிக்கவாசகர் இவர்கள் எல்லாம் பக்தி இலக்கியங்களை இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே அளித்த பெரிய மனிதர்கள். இதை நான் சொல்வதாலேயே சிவத்தம்பி மார்க்சிஸ்ட் அல்ல என்று சொல்வார்கள். அது ஒரு பாடமாக நான் பார்க்கிறேன்.

உங்களுக்குத் தெரியுமா பெரியார் கடைசி வரையில தனக்கிருந்த கோயில் உரிமையை யாருக்கும் எழுதித் தரவில்லை. கோயில் என்பது வெறுமனே தெய்வ நம்பிக்கை இல்லை. ஒரு சமூக அதிகாரம். அந்தக் கிராமத்தில் உள்ள கோயில்ல எனக்கு எட்டாந்திருவிழா நான் அதை நடத்துறேன் என்று சொன்னால் அது அந்த அந்த கிராமத்துல உள்ள சமூகத்துல உள்ள ஒரு அந்தஸ்த்து பற்றிப் பேசுவது. ஆண்டான் அடிமை முறையை வலுப்படுத்துவதாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஆண்டான் அடிமை முறை காரணமாக எல்லாம் கெட்டுப் போச்சுன்னு சொல்ல முடியாது.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்து?

50 வருஷங்களுக்கு முந்தி இந்தியாவினுடைய முக்கியத்துவமே இறக்குமதி இல்லாத தற்சார்புப் பொருளாதாரம்தான். ஆனால் இப்ப அப்படி உண்டா என்ன? தமிழ் இவற்றினால் அழிந்து போகாது.

தமிழ் எப்ப அழியும் என்று சொன்னால் தமிழர் இல்லாமல் போகும்போது, அதாவது, வையாபுரி என்பவர் ரொம்ப அழகாகச் சொல்வார், கம்பர் எழுதிய தமிழை திருவள்ளுவர் படித்திருந்தால் அவருக்கு விளங்கி இருக்காது என்று. கம்பர் தமிழ் நமக்கு விளங்கவில்லை என்பதால் தமிழ் அழிந்து விட்டதா என்ன? தமிழ் மாற்றம் காணலாம். மற்றபடி தமிழ் வாழறது வாழாமல் போறது எல்லாம் தமிழரைப் பொறுத்த விஷயம். வேறு எவரைப் பொறுத்த விஷயமும் அல்ல.

தமிழ் மாணவர்களிடையே தமிழ் படிக்கிற ஆர்வம் குறைவதன் காரணமாக எதைக் கருதுகிறீர்கள்?

நீங்கள் சரியாகக் கற்றுக் கொடுப்பதில்லை. பதினைந்து வருடத்திற்கு முந்தி ஆங்கிலம் கற்பித்தது போலவா இப்போது ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார்கள்? இல்லையே! தமிழ் மட்டும்தான் மாறவில்லை. தமிழுக்கான தேவை குறைந்திருக்கிறதாக நீங்கள் கருதுகிறீர்களா? அந்தத் தேவையைக் குறைத்தது நாம்தான். இவை மாறாமல் இருப்பது யாருடைய குற்றம்? தமிழருடைய குற்றம், தமிழ் ஆசிரியருடைய குற்றம். அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ் மாறாமல் இருந்தால் தமிழன் மாறாமல் இருப்பான் என்று. இது ரொம்ப வேதனையானது.

தமிழ் கற்பித்தல்ல மிகுந்த புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கலைஞர் போன்றவர் ஆட்சியில் தமிழ்ப் பேராசிரியர் அன்பழகன் போன்றவர்கள் ஆட்சியில் ஏன் இதைச் சிந்திக்கக் கூடாது? தொல்காப்பியத்துல உள்ள இலக்கணம் நன்னூல்ல இல்ல. எந்த மொழிக்கும் - இலக்கணம் இல்லாம மொழி இல்ல. இந்தப் பொறுப்பு கல்வியாளர்களிடம் உள்ளது. திராவிட இயக்கம் வந்த காலத்தில் இருந்து தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கு. இவ்வளவையும் வைத்துக் கொண்டு நாம் தமிழ் கற்பித்தலில் எத்தகைய நவீனமய மாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்? இதைப் பேசுவாரில்லை.

ஷோபா சக்தி, புஷ்பராஜா போன்றவர்கள் தங்களுடைய படைப்புகளில் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்து இருப்பதோடு, ஈழத்தில் இன்னமும் சாதியப் பிரச்சினை எல்லா படிநிலைகளிலும் அப்படியே இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒரு போராட்டம் நடந்திட்டு இருக்கு. அந்தப் போராட்டத்துக்கு ஒரு சர்வதேச, அகண்ட முக்கியத்துவம் உண்டு. ஆனபடியினால் அதில் உள்ள விஷயங்கள் எல்லாத்தையும் எதிர்க்கிற கட்சியல்ல நான். அதே சமயம் அவங்களுடைய அனுபவத்துல அவர்களுடைய உண்மையான பார்வையில் அது பிரச்சனைகளாக இருக்கும் என்று சொன்னால் அவர்கள் அதை இலக்கியமாக்குறதுல எனக்கு எதிர்ப்புக் கிடையாது. அதை விமர்சிக்கிறதுக்கு உரிமை உண்டு. அந்தப் போராட்டத்துல தவறுகள் இருக்கலாம். சரி, திருத்தச் சொல்லு. ஆனால் அந்தப் போராட்டத்துக்கான தேவைப்பாடு இருக்கிறதா இல்லயா? ஷோபா சக்தியோ, யாரோ அதப்பத்திப் பேசலியே. அதான் பிரச்சனை.

இலங்கையில் தமிழர்களுடைய உரிமைக்கான ஒரு போராட்டத்துக்குத் தேவையே இல்லை என்று இவர்கள் சொல்வார்களாயின் அது பிரச்சனைதான். அந்தக் கண்ணோட்டத்துல புஷ்பராஜா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இயக்கங்கள் வளர்ந்த முறை அதில் உள்ள பிரச்சனைகளெல்லாம் புஷ்பராஜா சொல்லி இருக்கிறார். அது புஷ்பராஜாவின் பார்வை.

ஒன்று தெரியுமா? நாங்கள் நவீன விஞ்ஞான உலகினுடைய பிதாமகன் என்று கருதுகிற ஐசக் நியூட்டன் எழுதி வைத்திருக்கிறாராம். 2006இல் இயேசு மீண்டும் பிறப்பார் என்று. இதைச் சொன்னது யார்? ஐசக் நியூட்டன். எனவே, சொன்னால் சொல்லிட்டுப் போறார்கள். கவலைப்பட ஏதுமில்லை.

ஈழத்தில் உள்ள சாதியச் சிக்கல்கள் குறித்து?

ஈழத்துத் தமிழ் மக்களிடையே சாதி இருக்கிறது. ஆனால் அது அரசியலை சிக்கல்படுத்துகிற ஒரு விடயமாக இல்லை. அந்த ஒரு இயக்கம் மாத்திரமல்ல. எல்லா இயக்கங்களை எடுத்துக் கொண்டாலும் அது இல்லை. காரணம் என்னவென்று சொன்னால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமூகத்தின் சகல மட்டங்களில் இருந்தும், சகல தளங்களில் இருந்தும் வந்திருக்கிறார்கள். தலித் விஷயம் எல்லாம் 1950களிலேயே பேசித் தீர்த்து விட்டோம். ஜீவா டானியல் போன்றவர்களெல்லாம் எழுதி அதை முன்னுக்குக் கொண்டு வந்து... எல்லாம் முடிந்தது.

தீண்டாமை இப்பக் குறைந்து விட்டது. இதற்கு நல்ல உதாரணம் இந்த இயக்கத் தலைவர்களுடைய திருமணங்கள். அது சாதிகள் மறுத்த திருமணங்களாக இருந்தன. அவர்களுடைய பிள்ளைகளுக்கு இப்ப பத்து, பதினைந்து வயசு ஆகி இருக்கும். இதற்காகச் சாதி இல்லை, அங்கு தேனும், பாலும் ஓடுது என்று சொல்லவில்லை. சாதி இருக்கு; ஆனால் நெகிழ்ந்திருக்கு.

உங்களுடைய வாழ்க்கை ஒரு நெடிய பயணம் ஆகும். நீங்கள் கண்டறிந்த வாழ்வியல் விழுமியங்களை, எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

அந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு நிறைய இருக்கு. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எனக்குக் கிடைத்த சிறப்புகளுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. எனக்கு நல்ல ஆசிரியர்களும் நல்ல நண்பர்களும் வாய்த்தார்கள். அது மிகப் பெரிய ஒரு விஷயம். சிவப்பிரகாசம், நஜுஸ், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வித்யானந்தன், தாம்சன், கைலாசபதி, சிவலிங்கம் என்று அந்த ஆசிரியர்களுடைய பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் ஒன்று சொல்லுவேன். உனக்குள்ளே ஒரு தேடல் இருந்தால் அதை நீ தேடணும். நீ தேடவே வேணும்.

ஆங்கிலத்தில் ஒன்னு சொல்வார்கள். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அவன் தன்னுடைய அந்த இரவு நேர எண்ணெய்யை எரித்துக் கொண்டிருந்தான் என்று. அந்த உண்மையான தேடல் இருக்குமேயானால்... திருவள்ளுவர் சொல்லிவிட்டாரே.... முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். நீ ஒரு ஆராய்ச்சியாளர் என்று சொன்னால், நீ எந்த வேலையிலும் ஆராய்ச்சியாளர்தான். சாப்பிடுறபொழுது, பெண்சாதியோட இருக்கிற பொழுது, பிள்ளையோட இருக்கிறபொழுது, எங்கேயும் எந்த நேரத்திலும் தேடு, உண்மையான தேடல் இருக்குமேயானால் தொடர்ந்து தேடணும். அது நிச்சயமாக பலன் தரும்.

என் சொந்த வாழ்க்கையில் நான் கண்டது இதுதான். இதற்கு மேல் என் வாழ்க்கையைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. நான் பெருசாய் சாதிச்சதாய் ஒண்ணுமில்ல.

நான் என்னுடைய ஆசிரியன் தோளில் இருந்து பார்க்கிறேன். அவனுக்குத் தெரிந்த தூரத்திலும் பார்க்க எனக்கு அதிக தூரம் தெரிகிறது. என் மாணவன் எனது தோளில் இருந்து பார்க்கிறான். அவனுக்கு நான் கண்ட தூரத்திலும் பார்க்க அதிக தூரம் தெரியும். இதுதான் புலமை வளர்ச்சியின் நியதி. முந்தி வந்த அறிவை பயன்படுத்தி மேலே மேலே செல்ல வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com