Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

புகலிடத்தமிழர் முகாம்களுக்கு ஒரு நாடகப் பயணம்
சண்முகராஜா


‘விருமாண்டி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் சண்முகராஜா. தற்போது ‘தீநகர்', ‘மருதமலை', ‘பிரிவோம் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத் துறையிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவரும் அவருடைய குழுவினரும் புகலிடத் தமிழர் முகாம்கள் தோறும் விழிப்புணர்வு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள். அவை பற்றிய அனுபவங்களை அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

தமிழக அரசின் சமூகநல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மறுவாழ்வுத் துறையின் மேற்பார்வையில் புகலிடத் தமிழர்களுக்கான முகாம்கள் 160க்கும் மேல் தமிழகத்தில் அமைந்துள்ளன. 1983லிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான புகலிட மக்கள் ஏதிலிகளாக இம்முகாம்களில் தஞ்சம் புகுகின்றனர். கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் இயக்குநராகப் பதவி வகிக்கும் மறுவாழ்வுத் துறையின் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் முகாம்களுக்கு சென்றவண்ணமிருக்கின்றன.

கடந்த 24 வருடங்களாக மறுவாழ்வுத் துறையின் அரசு நலத்திட்டங்களோடு ஒரு சில தொண்டு நிறுவனங்களும் தங்களுடைய நலத் திட்டங்களையும் இணைத்து மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. அதில் சி.ஆர்.எஸ். ஆஃபர், அட்ரா ஆகியன மறுவாழ்வுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வரும் நிறுவனங்களாகும். மேற்கண்ட நிறுவனங்கள் தங்களுக்கென வெவ்வேறு வகையான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து அதன்கீழ் உதவிப்பணிகளை ஆற்றி வருகின்றன. அதில் சமீப நாட்களில் அட்ரா (அட்வெண்டிஸ்ட் டிவலப்மெண்ட் அண்ட் ரிலிப் ஏஜென்ஸி) என்ற128 நாடுகளில் பணிபுரியும் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 72 முகாம்களில் திருமிகு. சச்சிதாநந்தவளன் அவர்களை இயக்குநராகக் கொண்டு பொதுச் சுகாதாரத்தை மையப்படுத்தி இயங்கி வருகிறது.

1. குடிநீரைக் கையாளுதல், 2. கழிவுநீரை அகற்றுதல், 3. மலத்தைப் பாதுகாப்பாக அகற்றுதல், 4. குப்பை மற்றும் விலங்கினக் கழிவுகளை அகற்றுதல், 5. வீட்டுச் சுகாதாரம் மற்றும் உணவு சுத்தம், 6. தன் சுத்தம், 7. கிராம சுகாதாரம் ஆகிய சுகாதாரத்தின் ஏழு அடிப்படைக் கூறுகளை முதன்மைப்படுத்தி முகாம் வளாக எல்லைக்குள் நிர்ணயிக்கப்பட்ட இட வசதிக்குள் சுகாதார வளாகங்கள், நீர் தேக்கிகள், சுகாதாரத்தைப் பேணுவதற்கு இன்றியமையாத அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதீத பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வளங்களைப் பேணுவதற்கும் அதைப் பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் விதமாகவும் அட்ரா எங்களது நிகழ் நாடகக் குழுவை அணுகித் திறந்தவெளி நாடகம் ஒன்று பொது சுகாதாரம் தொடர்பாக தயாரித்து அதை முகாம்களில் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் மதுரை செசி மையத்தில் நடைபெற்ற நான்கு நாள் உறைவிடப் பயிலரங்கில் அக்கம் பக்கம் என்னும் நாடகம் தயாரிக்கப்பட்டது.

பொதுச் சுகாதாரம் பற்றிய சிந்தனைகளை யுனெஸ்கோ சுகாதாரத் திட்ட நிபுணர் பாபு அவர்களும், நாடக உருவாக்கம், வடிவமைப்புப் பணிகளை நானும், சுவிஸ்சர்லாந்தைச் சேர்ந்த மிரேலிகுகோலஸ் இருவரும் முன்னெடுக்க குழுவின் ஒத்துழைப்போடு ‘அக்கம் பக்கம்’ உருவாகியது.

கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட சுகாதார வளாகங்களின் கட்டிடப்பணி முடியும் தருவாயில் உள்ள முகாம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு முதலில் நிகழ்த்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. நாடகக் குழுவுடன் அந்தந்த முகாமின் சுகாதாரப் பணித் திட்ட பொறுப்பாளர் உடன் வந்து நாடகத்தில் வெளிப்படும் சுகாதாரம் தொடர்பான கருத்துகளை உள்வாங்குகையில் மக்கள் முன் வைக்கும் பிரச்சனைகள், எதிர்வினைகள் ஆகியவற்றைத் தகுந்த முறையில் பரிசீலித்து நாடகம் முடிந்த பின்னும் அவற்றிற்கான தீர்வுகளைச் செயல்வடிவில் மக்களைச் சென்றடைய சரிெய்ய வேண்டுமென திட்டமிடப்பட்டது.

நிகழ்த்து கால அட்டவணை தயார் செய்யப் பெற்றது. மக்கள் பணி முடித்து முகாம்களுக்குத் திரும்பிய பின் ஓய்வு நேரங்களில் குறிப்பாக மாலை 7 மணி அல்லது 9 மணியளவில் முகாமின் பொதுவிடத்தில் குழந்தைகள் முதல் முதியவர் வரை முகாமின் அனைத்துத் தரப்பினரும் அழைக்கப் பெற்று ஒரு திருவிழாவின் தொடக்கம் போல் நாடகக் குழு வரவேற்கப்பட்டது. அதன் பின்னரும் குழந்தைகள் புடைசூழ நடிகர்கள் முகாமின் வீதிகளில் பாடியபடி மீண்டும் மக்களை வரவேற்றுத் திரும்ப, முக்கிய அறிவிப்புகளுக்குப் பின் மக்களை அந்நியப்படுத்தும் உடை, ஒப்பனை ஏதுமற்று நடிகனின் ஆதார அம்சங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் விதத்தில் நாடகம் தொடங்கியது.

கட்டியக்காரன் பாட்டு மற்றும் அடவுகளுடன் கொசுவிற்கும் எலிக்கும் திருமணமான நாட்டுப்புறக் கதையைக் கூறி கொசுக்கள் மனித இனத்திற்கு எதிராகச் செயல்படும் விசித்திர உலகத்தை காட்சிப்படுத்துவதோடு, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெண் பார்க்கச் செல்லும் படலம், குளக்கரைக் காட்சிகள், தெருச்சண்டை, பஞ்சாயத்து, குலதெய்வத்திடம் குறிகேட்டல் ஆகியனவாக விரியும் இந்நாடகத்தின் கதைக்களன், கதாபாத்திரங்கள், சூழல் ஆகியன தமிழக நாட்டார் வழக்காறுகளை, பண்புகளை புகலிடத் தமிழர்கள் தரிசிக்கும் விதமாகவும் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும்படியாகவும் அமைந்தது.

பொதுச் சுகாதாரம் சார்ந்த கருத்துகளை அறிவுறுத்தும் நோக்கம் நாடகத்திற்கிருந்தாலும் அதை நகைச்சுவையோடும், மண்சார் அனுபவங்களோடும் தாள, லயம் கொண்ட உடல் மொழியில் திறந்த வெளியில் நடிகர்கள் வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

கோபால சமுத்திரம் முகாமில் நாடக நிகழ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக இளம்பெண்கள் கூடி பேரமைதியான சூழலில் யாழ், வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டகளப்பென ஈழத்துப்பிரதேசப் பெயர்களோடு, ஈழ வளம் சொல்லும் பாடலை தழுதழுக்கும் குரலில் பாடியது எல்லோருக்குள்ளும் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இதுபோலவே நினைவுகள் மூப்படையாத நெஞ்சங்களின் தகிக்கும் அனுபவங்களும் பகிர்தலுமாக போகநல்லூர், கோபால சமுத்திரம் ஆகிய திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட முகாம்களில் துவங்கிய இந்நாடகப் பயணம் இதுவரை தமிழகம் முழுவதிலும் 26 முகாம்களில் நடந்தேறியுள்ளது. இன்னும் நடக்கவிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com