Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

ஊடகங்களின் அரசியல்
பைந்தமிழ்


அவ்வளவாகப் படிப்பறிவில்லாத அந்த ஊரில் ஆசியராக இருந்த ஒருவர்தான் அங்குள்ள மக்களுக்கு வழிகாட்டி. அவர் சொன்னதைக் கேட்டு ஊருக்கு நல்லது செய்ய ஓர் இளைஞர் கூட்டமே அவன் பின்னால் இருந்தது. கூடவே சில நாய்களும். ஆசிரியரின் மாணவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களல்ல என்பது போல அந்த நாய்களும் ஊருக்குள் திருட்டு உள்ளிட்ட எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டன. நாய்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது அந்த ஆசியன் நாய்தான்.

ஒருநாள் ஆசியரும், சில மாணவர்களும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சீறிப் பாய்ந்து வந்த சில நாய்கள் அப்பாவி மான்களையும், முயல்களையும் கடித்துக் குதறி வேட்டையாடின. அதைப் பார்த்த மாணவர்களுக்கு அதிர்ச்சி, நாய்கள் இப்படிக் கூட நடந்து கொள்ளுமா? என்ற அதிர்ச்சி, இப்படிச் செய்துவிட்டதே என்றகோபம் எல்லாம் ஒன்றுசேர அந்த நாய்களை அடிக்க ஓடினர். அவர்களைத் தடுத்த ஆசிரியர் இப்படிச் சொன்னார்.... நாய்களை அடிக்காதீர் மாணவர்களே... இந்த குற்றத்துக்கு நாய்கள் காரணமல்ல.... அவற்றை அப்படிச் செய்ய வைத்த வேட்டைக்காரன்தான் காரணம்.

அந்த ஆசியர் கூறிய கருத்துகள் அந்த நாய்களுக்குத்தான் என்றில்லை.... இந்தக் கால ஊடகங்களுக்கும் பொருந்தும்.

இந்திய அளவிலான என்டிடிவி, சிஎன்என்ஐபிஎன், டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள் இன்றைக்கு செய்தியை மக்களிடம் சொல்வது என்ற நிலையைத் தாண்டி, செய்திகளை உருவாக்குவது, கருத்துக்களைத் திணிப்பது போன்ற மரபு மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

நாட்டின் நான்காவது தூண் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டாலும், இந்திய ஜனநாயகம் என்ற கூரையைத் தூக்கி நிறுத்த வேண்டிய நிலையில் உள்ள ஊடகங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றனவா என்றால்..... இல்லை என்பதுதான் பதில்.

இதற்கு முதல் உதாரணம் இடஒதுக்கீடு விஷயத்தில் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம்தான். இந்தியாவில் அனைவரும் சமநிலையை அடைய நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் என அரசியல் சாசனமே கூறுவதால் நாட்டின் நலன் கருதி, அதை ஆதரிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. ஆனால் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதும் நடந்தது என்ன....?

இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது ஏப்ரல் மாதம் இறுதியில். அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும், தலித் இயக்கங்களும் அதை ஆதரித்தனவே தவிர எந்த எதிர்ப்பும் எழவில்லை.

மே மாதம் 10ஆம் தேதி வரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட, இட ஒதுக்கீட்டை எந்த வருத்தமும் இன்றி ஆதரித்தனர். இந்த நிலையில்தான் சில ஊடகங்கள் இடஒதுக்கீடு நல்லதா.... கெட்டதா? என நேயர்களிடம் கருத்து கேட்டன. எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தி மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கூட 3ஆம் நாள் காலை வரை இடஒதுக்கீடு நல்லது என்றுதான் 80 விழுக்காடு பேர் கூறியிருந்தனர். ஆதரவு அதல பாதாளத்திற்குச் சென்றது. சில மணி நேரங்களில் ஆதரவு, எதிர்ப்பானது. ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தித் தாள்களிலும் மட்டுமல்ல, தில்லி நகர வீதிகளிலும்தான். மே 11ஆம் தேதி அகில இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் தில்லியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அந்தச் சிறு பொறியை ஊதிஊதிப் பெரிதாக்கி நாடு முழுவதும் பற்றி எரிய வைக்கும் பொறுப்பை ஊடகங்கள் பார்த்துக் கொண்டன.

இந்து, அவுட்லுக் போன்ற சில ஆங்கில இதழ்கள் இட ஒதுக்கீட்டின் அவசியத்தைப் பாராட்டின. ஆனால் நடுநிலையாக இருந்து கருத்துச் சொல்ல வேண்டிய ஊடகங்கள், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து போராடத் தொடங்கின. அதன் பின்னர் தெருமுனையில் 2 பேர் நின்று இடஒதுக்கீட்டை விமர்சித்தாலும் அதை 70 எம்.எம். அளவுக்கு வித்துக் காட்டிய ஊடகங்களுக்கு ஊர் முழுவதும் நடந்த இடஒதுக்கீடு ஆதரவுப் போராட்டங்களை 7 வினாடிகள் காட்டுவதற்கு கூட நேரமின்றிப் போனது. அதேபோல் அச்சு ஊடகங்களில், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிப் பல செய்தியாளர்கள் பக்கம், பக்கமாக செய்தி எழுதித் தந்தாலும் அவை சத்தமின்றி பக்கத்தில் இருந்த குப்பைக் கூடைகளுக்குச் சென்றன. காலை முதல் மாலை வரை தில்லியில் திடகாத்திரமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுக்காக லிட்டர் கணக்கில் கண்ணீர் வடித்த ஊடகங்களுக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தி அதற்காகக் காவல் துறையினடம் தடியடி பட்டு உண்மையாக இரத்தம் கொட்டிய மாணவர்களைப் பார்த்து இரக்கப்படுவதற்குகூட மனம் வரவில்லை.

ஊடகங்கள் எல்லாம் மதச் சார்பற்றவை என்பதை உடைத்துக் காட்டிய நிகழ்வுகளும் பல உண்டு. அதில் முதன்மையானது வந்தே மாதரம் விவகாரம். பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர்களும் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கட்டாய மாக்கலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதை எதிர்த்து சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அவ்வளவுதான்... அடுத்த நாளே பல பத்திரிகைகளில் முஸ்லீம்கள் தேசத் துரோகிகள் என தலைப்புப் போட்டு பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் வெளிவந்தன.

காரணம்... வந்தே மாதரம் என்பது தேசபக்திப் பாடலாம். அதை எதிர்ப்பதாலேயே முஸ்லீம்கள் தேசத் துரோகிகளாம். இப்படி விமர்சித்தவை எல்லாமே மதச்சார்பின்மை பற்றிக் காகிதம் கிழியும் அளவுக்கு அச்சடிக்கும் பத்திரிகைகள்தான். ஆனால், இஸ்லாமியர்களைப் பொறுத்த வரை வந்தே மாதரம் பாடலைப் பாடுவதென்பது அவர்களின் தாயையே பழிப்பதற்கு இணையானது என்பதைச் சொல்லும் துணிச்சல் எந்த ஊடகத்துக்கும் இல்லை.

ஆம்... பலரும் நினைப்பது போல வந்தே மாதரம் தேசபக்திப் பாடல் அல்ல. தேசவிரோதப் பாடல்... அது ஆனந்த மடம் (ஆனந்த்மத்) என்ற புதினத்தின் ஒரு பகுதி. இந்தியாவை மொகலாயர்கள் ஆண்டதை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாடகத்தில், இஸ்லாமியர்கள் அனைவரையும் அடித்துக் கொல்ல வேண்டும் அல்லது நாட்டை விட்டுத் துரத்தியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துர்கையம்மனின் முன் பாடப்படும் வன்முறையைத் தூண்டும் பாடல்தான் அது. ஆனால், அப்பாடலை எழுதிய பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற பார்ப்பனர் அப்போதே அதற்குத் தேச பக்தி என்ற போர்வையைப் போர்த்திவிட, இன்றும் பலர் அப்பாடலைக் கேட்டு ஏமாந்து போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அந்தப் புதினத்தின் முடிவில் வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிப்பதாகவும், அதன்பிறகுதான் உயர்சாதியினருக்குப் பாதுகாப்பும், உயர்பதவிகளும் கிடைப்பதாகவும் கூறி முடிகிறது. இப்படி நாட்டுக்கு எதிராகப் புதினம் எழுதிய பக்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு வெள்ளைக்கார அரசு 1858இல் நீதிபதி பதவியும், அதன்பின் ராய்பகதூர் பட்டமும் கொடுத்துக் கவுரவித்தது. இப்படி வெள்ளையருக்குத் துணை போன ஒருவர், இஸ்லாமிய எதிர்ப்புணர்வுடன் எழுதிய பாடலைப் பாட மறுப்பதாலேயே இஸ்லாமியர்கள் தேச விரோதிகள் எனப் பட்டம் வழங்குவது எப்படிப் பத்திரிகை தர்மமாகும்.

இது மட்டும்தான் என்றல்ல.... ஊடகங்கள் போட்ட வேடங்களுக்கு இன்னும் பல உதாரணங்கள் உண்டு. மும்பைத் தொடர்வண்டிகளில் சில மாதங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் சிலர் உயிரிழந்தது பலருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன் மும்பைக்கு அருகிலுள்ள மாலேகான் என்ற ஊரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில்

40 பேருக்கு மேல் உரியிழந்தது பற்றி பெரும்பாலானோருக்குத் தெநிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த குண்டு வெடிப்பு பற்றி ஒருநாள் செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் அடுத்த நாளிலிருந்து அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் மும்பை குண்டுவெடிப்பு பற்றிப் பல மாதங்கள் செய்தி வெளியிட்டன. காரணம்... மாலேகானில் இறந்தது முஸ்லீம்களாம்... மும்பையில் இறந்தது இந்துக்களாம். ஊடகங்களின் சமநிலைக்கு இதைவிடவா உதாரணம் தேவை?

மும்பைத் தொடர்குண்டு வெடிப்புக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பது வரை பட்டியலிட்டுக் கட்டுரை எழுதிய இதழ்கள் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கு என்ன இழப்பீடு வழங்கலாம் என்று சிந்திக்கவே இல்லையே....

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இராமேஸ்வரம் வழியாகக் கப்பல் போனால், தமிழகம் வளம் கொழிக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, யாரோ சிலர், இல்லாத ராமர் கட்டிய பாலம் இன்னும் இருப்பதாகக் கதை கட்டிவிட, அந்தப் பாலத்தின் பெருமை பற்றித்தான் வட இந்தியப் பத்திரிகைகள் பத்திபத்தியாக எழுதின. அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டா? என்பது பற்றிச் சிந்திக்கச் சில தமிழ் இதழ்களைத் தவிர வேறு எவருக்கும் தோன்றவில்லை.

அணுசக்தி என்ற அழிவு சக்தியுடன் வந்த அமெரிக்கக் கப்பலைக் கண்டித்துக் கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பற்றிச் செய்தி வெளியிடாமல், அக்கப்பலில் வந்த ஆண்களும் பெண்களும் அரை குறை ஆடைகளுடன் கிக்கெட் விளையாடியதை நாள் முழுவதும் காட்டின ஆங்கிலத் தொலைக் காட்சிகள்.

அண்மையில் ரஜினிகாந்தின் சிவாஜி படம் வெளியாகு முன்பே இந்தத் தொலைக் காட்சிகள் ரசிகர்களிடம் கருத்துக் கேட்கிறோம் என்ற போர்வையில் அடித்த கூத்துகள், கலாச்சார வரையறைகளைத் தாண்டி விட்டன. ரசிகர்களின் மனநிலையைப் படம்பிடிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு அவர்களை மனநோயாளிகளைப் போல சித்தரித்தனர்.

மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பதில் அக்கறையின்றி, பிரசாந்திடமிருந்து கிரகலட்சுமிக்கு எப்போது விவகாரத்து கிடைக்கும். ஸ்ரீகாந்த் வீட்டிலிருந்து வந்தனா எப்போது வெளியேறுவார் என்பதில் பக்கங்களை அழிக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் என ஊடகங்கள் உருக்குலைந்து போனதற்கு உதாரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

ஒரு நாட்டில் ஊடகங்கள் செயலிழக்கும் போதுதான் சர்வாதிகாரம் தலையெடுக்கிறது என்பது சர்வாதிகாரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை என்ற தூண்களில், மற்ற தூண்களும் செயலிழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நான்காவது தூணின் கடமை. அந்த நான்காவது தூணே செயலிழந்து விட்டால் ஜனநாயகக் கூரை சவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

ஆட்டிப் படைப்பவர்கள்

ஊடகங்கள் உலகையே ஆட்டி வைக்கும் திறன் கொண்டவை என்றாலும் அவற்றை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் ஒரு சாராரிடம் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் 37இல் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 315 பத்திரிகையாளர்களில் ஒருவர்கூட தலித்தோ, பழங்குடியினரோ இல்லை. இவர்களில் 49 சதவீதம் பேர் பார்ப்பனர்கள், மராத்தாக்கள், படேல்கள், ஜாட்கள், ரெட்டிகள். ஊடகத் துறையில் உயர்பதவியில் உள்ளோரில் 88 சதவீதம் பேர் உயர் சாதியினர் ஆவர்.

இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே ஊடகத் துறையில் உயர்பதவிகளில் உள்ளனர். ஆங்கில ஊடகங்களில் மட்டும் எடுத்துக் கொண்டால் முஸ்லீம்கள் ஒருவர்கூட உயர் பதவியில் இல்லை. அதே நேரத்தில் இந்திய மக்கள் தொகையில் 2.3% மட்டுமே உள்ள கிறித்தவர்களில் 4 சதவீதம் பேர் ஊடகத்துறையில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஊடகத்துறை உயர் பதவிகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். ஆங்கில அச்சு ஊடகங்களில் 14% பதவிகளையும் இந்தி அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் 11% பதவிகளையும் பெண்கள் வகிக்கின்றனர். அவர்களிலும் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களே.

(ஆதாரம்: சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மையம் கடந்த ஆண்டு நடத்திய கணக்கெடுப்பு)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com