Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

முடிவை நோக்கி மூன்றாவது அணி
நண்பன்


நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவணை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

ஆண்டிதான் தோண்டியை உடைக்க வேண்டும் என்பதில்லை. அரசியல்வாதிகளாலும் இது முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் மூன்றாவது அணியா ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, பின் அதன் அழிவுக்கும் வழிகோலியுள்ளவரான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

மூன்றாவது அணி என்பதே கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட கோபுரம் அல்ல. அது ஆண்டிகள் ஒன்று சேர்ந்து கட்டிய மடம்தான். அதேபோல் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டதும் நாம் நினைப்பது போல ஜெயலலிதா அல்ல... முலாயம் சிங்.

மாயாவதிக் கட்சியையும், காங்கிரசையும் உடைத்து உத்தரப்பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஆட்சியை முலாயம் சிங் யாதவ் அமைத்தாலும், கடைசிக் கட்டத்தில் அது கலகலத்துப் போய்விட்டது. நோய்டாவில் சிறுமிகள் படுகொலை, மாநிலம் முழுவதும் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, பார்ப்பனர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரின் ஆதரவுடன் மாயாவதி எடுத்த பேருரு போன்றவற்றால் முலாயம்சிங் யாதவின் ஆட்சிக் கனவு கலையத் தொடங்கியது.

இது ஒருபுறமிருக்க காங்கிரஸ் சார்பில் ஒருபுறம் சோனியா காந்தியும் மறுபுறம் இராகுல்காந்தியும் உத்தரப் பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்யத் தொடங்க, அதற்குப் பதிலடி தருவது எப்படி என்று யோசித்துப் பார்த்தபோதுதான், சோனியாவை விமர்சிப்பதில் புகழ்பெற்ற ஜெயலலிதா முலாயம்சிங் யாதவின் நினைவுக்கு வந்தார். சோறு வாங்கினால் கூடவே கூட்டு, பொறியல்கள் செய்வதில்லையா? அதே போல ஜெயலலிதாவுக்குத் துணையாக, எங்கே செல்லும் இந்தப் பாதை என்று தவித்துக் கொண்டிருந்த தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக் தலித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அசாம் கனபசத் தலைவர் கோஸ்வாமி, சார்கண்ட் விகாஸ் கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோரை அழைத்து உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வைத்தார்.

ஆனால் இத்தனை பேர் முட்டுக்கொடுத்தும் முலாயம் சிங்கின் ஆட்சி அகற்றப்பட்டுவிட அடுத்து எதை வைத்து அரசியல் செய்வது என்று சிந்தித்தபோது உருவான எண்ணம்தான் மூன்றாவது அணி. ஏற்கனவே ஏழு கட்சிகள் இருந்த நிலையில் அதிமுகவின் இலவச இணைப்பாக வைகோவின் மதிமுகவையும் சேர்த்துக் கொள்ள சூன் மாத மத்தியில் ஐதராபாத் நாயுடு வீட்டிலிருந்து வெற்றிகரமாகப் புறப்பட்டது மூன்றாவது அணி.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் அப்துல் கலாம் வேட்பாளர் என அறிவித்து, அதை அப்துல்கலாமே ஏற்க மறுத்ததால் முதல் கோணலே முற்றும் கோணலானது. சந்திரபாபு நாயுடு வீட்டில் தொடங்கி சவுதாலா வீடு வரை மூன்று கூட்டங்கள் நடந்தும் கூட்டணியின் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படவே இல்லை. கூட்டணி சார்பிலான கூட்டங்கள் முடிந்த பிறகு முதலில் மைக் பிடித்ததால் தாம்தான் தலைவர் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்க, அப்படியானால் நாங்களெல்லாம் எதற்காம்? என முலாயம் சிங்கும், சந்திரபாபு நாயுடுவும் கேள்வி எழுப்ப, குதிரைவண்டியின் எட்டுக் குதிரைகளும் எட்டுத் திசையில் இழுத்துச் சென்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மூன்றாவது அணியின் பயணம் அமைந்தது.

இந்த ஆத்திரத்துடனேயே இடையிடையே தில்லி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த ஜெயலலிதா, தாம்தான் கொள்கைகளுக்காக வாழ்வதைப் போலவும் அதே போன்றதொரு நிலையை கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று சொல்லி வைக்க கூட்டணிக்குள் மோதல் கொலுவேறத் தொடங்கியது.

இதுதான் சமயமென்று குறுக்கே புகுந்த பாரதிய ஜனதா தலைவர்கள், இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு இருக்கக் கூடாத இடத்தக்கு ஏன் ஓடுகிறாய் ஞானத் தங்கமே என சில அறிவுரைகளையும் பல சலுகைகளையும் வழங்க, புத்தருக்குப் போதி மரத்தடியில் கிடைத்ததைப் போல ஜெயலலிதாவுக்கு போயஸ் தோட்டத்தில் புதிய ஞானம் பிறந்தது. கூடவே தமிழக அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவதை விடுத்து, அகில இந்திய அரசியலுக்கு ஆசைப்பட்டு, இருப்பதை விடுத்துப் பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையாக நமது கதையும் முடிந்து விடுமோ என்ற பயமும் வந்தது.

இன்னொரு பக்கம் பார்த்தால் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்திற்கு மூன்றாவது அணி என்ற மண்குதிரையில் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் முகத்தையோ, முலாயம் சிங் யாதவின் முகத்தையோ பார்த்து தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு எவரும் ஓட்டுப் போடப் போவதில்லை. மேலும் அத்தேர்தலில் காங்கிரசா, பாரதீய ஜனதாவா என்ற கேள்விதான் எழும். இந்தச் சூழலில் இரு அணிகளில் ஒன்றில் இருந்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பது ஜெயலலிதாவின் கணக்கு. காங்கிரசும் திமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்களாக இணைந்து விட்ட நிலையில், பட்டுப் போன மரமாக இருந்தாலும் பாரதீய ஜனதாதான் நாம் படர்வதற்கேற்ற இடம் என்பதை முடிவு செய்துவிட்டார் ஜெயலலிதா. அதுவே மூன்றாவது அணியின் முடிவுரையாகவும் மாறியிருக்கிறது.

அந்த முடிவுரையின் முதல் கட்டம்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் (?!) அவரது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லிக்கும், சென்னைக்கும் பறந்தும், விரைந்தும் போய் வாக்களித்தது. கடந்த வாரம் தில்லியிலிருந்து சென்னை வந்து ஜஸ்வந்த் சிங் வைத்த வணக்கம், தற்போது இணக்கமாக மாறியுள்ளது. விரைவில் அது நெருக்கமாகி 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது உறவாக மலரும்.

அட... என்னங்க... குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி எடுத்த முடிவை மீறி பாரதீய ஜனதா ஆதரவுபெற்ற பைரோன்சிங் ஷெகாவத்துக்கு அதிமுக வாக்களித்து விட்டது. அதனாலேயே மூன்றாவது அணி உடைந்து விட்டது என்பதோ, அதிமுக, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதோ சரியாக இருக்குமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

உண்மைதான்... குடகு மலையில் உருவாகும் அந்த ஓடையை முதலில் பார்ப்பவர்களுக்கு இதுதான் காவிரியாக ஓடப் போகிறது என்பது தெரியாது. 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த வெள்ளையர்களைப் பார்த்தவர்களுக்கும் இவர்கள்தான் 300 ஆண்டுகாலம் இந்தியாவை ஆளப் போகிறார்கள் என்பதும் தெரிந்திருக்காது. அதேபோல் இந்தச் சிறு நிகழ்வுகளும் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம்... ஆனால் நாளை நடக்கப் போவது இதுதான்.

மூன்றாவது அணி உடைவது உறுதியாகிவிட்டதற்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. அம்மா எப்போது மூட்டையை கட்டுவார், திண்ணை எப்போது காலியாகும்? என்று கூட்டணியிலுள்ள மற்ற தலைவர்கள் காத்திருப்பதும் ஒரு காரணமாகும். மூன்றாவது அணிக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர் ஒருவரைத்தான் அதிலுள்ள கட்சிகள் தேடிக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தை விட்டு வெளியே வந்தால் முலாயம் சிங்கை யாருக்கும் தெரியாது. ஆந்திராவைத் தாண்டி சந்திரபாபு நாயுடுவை எவருக்கும் தெரியாது என்ற நிலையில் இடதுசாரிக் கட்சிகள் வந்தால் மூன்றாவது அணிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதே அதிலுள்ள கட்சிகளின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதா இருக்கும் வரை அந்த அணியில் சேர இடதுசாரிகள் கட்சிகள் தயாராக இல்லை. இடதுசாரிகள் வரும்பட்சத்தில் அந்த அணியிலிருக்க ஜெயலலிதாவுக்கும் விருப்பமில்லை.

இந்த உண்மையும் ஜெயலலிதா உட்பட அந்த அணியில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் தெரியும். அதனால் ஜெயலலிதாவை மூன்றாவது அணியிலிருந்து தள்ளாமல் தள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் ஆகியோருடன் முலாயம் சிங்யாதவும், சந்திரபாபு நாயுடுவும் வெளிப்படையாகவே பேச்சு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இப்படியாக மூன்றாவது அணியிலிருந்து வெளியேற நினைக்கும் ஜெயலலிதா முதல் வெளியேற்ற நினைக்கும் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் வரை எல்லோரும் தங்கள் கணக்கைத் தொடங்க சரியான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சுபயோக சுபதினத்தில் இப்போதைய மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவுக்கு வரும். இடதுசாரி என்ற பெயருடன் கூடிய புதிய மூன்றாவது அணிக்கு முன்னுரை எழுதப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com