Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

‘நடை'ச் சித்திரம்
இனியன்


(சென்னை மாநகரின் போக்குவரத்து மிகுந்த தெருவொன்றில், செல்வியும் அப்புவும் நடந்து வந்து கொண்டுள்ளனர்)

அப்பு: செல்வி, அந்தப் பலகையில எழுதியிருக்கிற வரியைப் பாரேன்.

செல்வி : (படிக்கிறாள்) “மெதுவாய் நடங்கள் ரோட்டில், மனைவி காத்திருப்பாள் வீட்டில்”, நல்லாத்தான் இருக்கு. அறிவிப்புகளைக்கூட இப்ப எல்லாம் கவிதை மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பு : அதுதானே நம்மல ஈர்க்குது. அதுனாலதானே நாமகூட இப்ப அதப் படிச்சோம்.

செல்வி : ஈர்க்கிறதுக்குக் காரணம், கவிதையா இருக்கிறது மட்டுமில்ல. அந்த வரிகள்ல இருக்கிற உணர்வும் ஒரு முக்கிய காரணம்.

அப்பு: கண்டிப்பா, உணர்ச்சியில்லாத கவிதை, உப்பில்லாத ஊறுகாய் மாதிரிதானே.

செல்வி : அட, சட்டுன்னு நீகூட ஒரு கவிஞனாகிட்ட. ஆனாலும் அப்பு, அந்த வரியில ஒரு குறையும் இருக்குது.

அப்பு: அதானே, குறை கண்டுபிடிக்காம நம்மால இருக்க முடியாதுல்ல.

செல்வி: சீச்சி.... நான் அப்படி ஒன்னும் தேடித் துருவிக் கண்டுபிடிக்கலே. ஆனா நீயே சொல்லு அதென்ன தெருவில ஆம்பளைங்க மட்டுமே நடக்கிறமாதிரி, வீட்ல மனைவி காத்துக்கிட்டிருப்பாங்கிறது. ஆண்கள்தான் தெருவுக்கு வரணும், பெண்கள் வீட்ல காத்துக்கிட்டே கெடக்கணுமா?

அப்பு: போச்சுடா, நீ ஒரு பெண் விடுதலைப் போராளிங்கிறத மறந்துட்டு...

செல்வி: இதோ பாரு அப்பு, இந்த இளக்காரம்தான் வேணாம்கிறது. பெண் விடுதலையே ஒனக்கு கேலிப் பொருளாப்படுதா?

அப்பு: ஐயையோ, நான் அப்படிச் சொல்லலை. நம்ம பழைய இலக்கியத்திலேயே, ‘வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ன்னு தானே சொல்லியிருக்காங்க.

செல்வி : அது பழைய பாட்டு, பழைய காலம்.

அப்பு: அப்ப மரபுகள் பத்தி நமக்குக் கவலையே வேணாமா?

செல்வி: எது மரபு? பொம்பளைய அடிமையாக்கி வீட்டுக்குள்ள அடைக்கிறதா? மனையுறை மகளிராவே நாங்க இருக்க முடியாது.

அப்பு: எங்க இருக்கீங்க. எல்லாருந்தான் வெளியே வந்திட்டீங்களே. சரி விடு, துணைவர் காத்திருப்பார் வீட்டில்னு போட்டிருக்கலாம்.

செல்வி: சரி விடு, போனாப் போகுது... இந்தப் பரிதாபமெல்லாம் எங்களுக்கு வேணாம்.

அப்பு : செல்வி, இதயே இன்னொரு கோணத்தில பாரேன். பெண்கள் எப்பவும் நிதானமானவுங்க. மெதுவாத்தான் நடப்பாங்க. ஆண்கள்தான் பரபரப்பான ஆட்கள். அதுனால அவுங்களுக்கு அறிவுரைன்னு வச்சுக்கலாமே!

செல்வி : ஏதோ சமாதானம் சொல்லுங்க.

அப்பு : அது கூட நடந்து போற ஆண்களுக்குத்தான். வாகனம் ஓட்டிகிட்டுப் போறவுங்களுக்கு இல்ல. மெதுவாய் நடங்கங்கிறத விட, மெதுவாய் ஓட்டுங்கள் அப்பிடிங்கிறதுதானே சரியா இருக்கும்.

செல்வி: எப்பிடியோ, ரோட்டில் - வீட்டில்னு ரெண்டு வார்த்தைகள் அழகா அமைஞ்சு போச்சு.

அப்பு: ஆனாலும், ‘ரோட்டில்'ங்கிற சொல்லுக்குப் பதிலா, தமிழ்ல வேற ஏதாவது பொருத்தமாப் போட்டிருக்கலாம்.

செல்வி: ஓ.... அடுத்து மொழிச் சண்டைய ஆரம்பிக்கிறியா?

அப்பு: இது மொழிச் சண்டையில்ல, மொழி உணர்வு.

செல்வி: ஆறு வார்த்தையில அஞ்சு தமிழ்தானே... போதாதா? ஒன்னே ஒன்னு இங்கிலீஷ் இருந்தா என்ன?

அப்பு: ஆணுக்கு அடிமையா இருக்கக் கூடாதுங்கிற. ஆனா அடுத்தவன் மொழிக்கு அடிமையா இருந்தா என்னன்னு கேக்கிற. அது மட்டுமில்லாம, ஆறுக்கு அஞ்சு போதாதான்னு வேற கேக்கிற. இது என்ன கத்தரிக்காய், முருங்கங்காய் பேரமா? ஆறுக்கு ஆறும் தமிழா இருந்தா, அது பெரிய ஆடம்பரம்னு நெனைக்கிற போலிருக்கு.

செல்வி: ஒங்க இலக்கணப்படியே வரேன். ‘வீட்டில்'ங்கிற வார்த்தைக்கு ‘ரோட்டில்'ங்கிற இங்கிலீஷ் வார்த்தை அழகான எதுகையா இல்லையா?

அப்பு: முதல்ல அது ஆங்கிலச் சொல்லே இல்ல. ‘ரோடு'ங்கிற ஆங்கிலச் சொல்லையும், ‘இல்'ங்கிற தமிழ் உருபையும் சேத்து.... என்ன கூத்து இது?

செல்வி: இப்படில்லாம் பாத்தா, அப்புறம், என்ன நண்பரே, தாங்கள் யாது வினவுகின்றீர்? இப்படித்தான் பேசிக்கிட்டுத் திரியணும்.

அப்பு: பெண் விடுதலை உனக்கு இளக்காரமாப் போச்சான்னு கேட்டே, இப்ப மொழி உணர்வு உனக்கு இளக்காரமாப் போச்சு இல்ல. ஒங்கள மாதிரி ஆளுங்க குடுக்கிற தைரியத்துலதான், ஒரு ஆள், அவள் காதலித்தாள், அவனும் லவ்வினான்னு எழுதறான்.

செல்வி : (சிரிப்புடன்) என்னது லவ்வினானா?

அப்பு : ஆமாமா, கவ்வினான் மாதிரி லவ்வினான். (இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே நடக்கையில், எதிரே வந்த ஆள் மீது மோதி விடுகின்றனர்)

மூன்றாவது ஆள் : சிரிப்பையும், பேச்சையும் அப்புறம் வச்சுக்குங்க. தெருவில பாத்து நடங்க. இந்நேரம் கார் கீர் மேல மோதியிருந்தா. என்ன ஆகியிருக்கும்? நாம திரும்பி வருவோம்னு நம்பித்தான் வீட்ல உள்ளவங்க காத்துக்கிட்டிருக்காங்க.

(அப்புவும் செல்வியும் அந்த வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தனர்)

இருவரும் : ம்.... இந்த ஆள் அந்த வரிகளுக்குப் பொழிப்புரையில்ல சொல்லிட்டுப் போறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com