Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு
பொ.ஐங்கரநேசன்


நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின்னணிக்கும் பொருந்தக் கூடிய எடுப்பான நீலநிறம். கோடையில் குளிர்மை. குளில் சூடு. பசபசவென்றிருக்கும் வியர்வையில் இருந்து விடுதலை. பட்டி தொட்டியெல்லாம் போட்டு அடிக்கக் கூடிய கடின உழைப்பு. நீடித்த உழைப்பில் நிறம் தேய்ந்து போனாலும் அதுவும் தனி நாகரிகம். சலவை பற்றிய கவலையேயில்லை. இத்தனைக்கும் மேலாக ஒப்பீட்டளவில் மலிவான விலை... இவை தான் இன்றைய தலைமுறை ஜீன்ஸைத் (Jeans) தலைமையில் வைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள்.

டெனிம், லெவி (Levi), லீ (Lee), கெஸ் (Guess) என்ற லேபல்களுடன் விற்பனையில் தூள்பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் ஏதோ தங்களுக்காகவேதான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே 18 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கம் தோண்டுபவர்களின் கடுமையான பாவிப்புக்கென இந்த ‘Tough and rough’ ஜீன்ஸ் துணிகள் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டன.

1980இல் ஹாலிவுட் திரையுலகின் கவ்பாய் (cow boy)களின் கண்ணில் பட... கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டி விட்டது. ஜேம்ஸ் டீனும் மர்லின் மன்றோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூத்தார்கள். ஹாலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையே இன்று ஜீன்ஸýக்கு உலகம் பூராவும் விந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

துணி உற்பத்தியில் இன்று உலகின் முன்னோடியாகத் திகழுவது சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கும் Levistrauss நிறுவனம். இதன் வருடாந்த விற்பனை ஏழு மில்லியன் அமெக்க டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இதில் 71 வீதம் ஜீன்ஸ் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஜீன்ஸ் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே டெனிம் துணியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. எனக்கு ஏன் சார்ம்ஸ் (charms) சிகரெட் பிடிச்சிருக்கு தெரியுமா? அதன் அட்டைப் பெட்டியில் அச்சாகியிருக்கும் எனது மனசுக்குப் பிடிச்சமான ஜீன்ஸ் துணிதான் காரணம் என்று ஒரு இந்திய இளைஞனைச் சொல்ல வைக்கும் அளவுக்குத் துணி உலகின் கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் ததும்ப வைத்திருக்கிறது. ஆனால் ஜீன்ஸ் உலகின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரைபோலக் கண நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.

மூன்றாம் உலக நாடொன்றின் பருத்தித் தோட்டம் ஒன்றிலிருந்து மேற்குலகின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான ஜீன்ஸின் பயணப்பாதை துணியைப் போலவே கரடு முரடாக கரடு முரடாக (tough and rough) இருக்கிறது. இலகுவில் கீறிக் கிழிந்து போகாத ஜீன்ஸின் வரலாறு மனதைக் கீறிக் காயப்படுத்துகிறது.

ஜீன்ஸ் துணியைத் தமது நாடுகளில் தயாரிப்பது பல விதங்களிலும் தங்களுக்குப் பாதகமானது என்பதைத் தெரிந்து கொண்ட மேற்கத்தைய நாடுகள் அதைச் சாமர்த்தியமாக வறிய நாடுகளின் தலை மீது சுமத்தி விட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு வேளை உணவைக்கூடச் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிடப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000 சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்றவிளம்பரங்களால் பருத்திப் பயிர்ச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள விவசாய நிலத்தின் ஐந்து வீத இடத்தை இன்று பருத்தியே அடைத்துக் கொண்டிருக்கிறது.

உணவுப் பயிர்களுக்குத் தேவையான நீர், பசளைகள், களைக்கொல்லிகளைப் பருத்திக்குப் பயன்படுத்துவதுடன் இதன் பாதுகாப்புக்கென மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விசிற வேண்டியிருக்கிறது. புதிது புதிதாக உருவாக்கப்படும் கலப்பினப் பருத்திச் செடிகள் நோய்களுக்கும் பீடைகளுக்கும் காட்டும் எதிர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. உலகில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நான்கில் ஒரு பாகம் (ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம்) இந்தப் பருத்திச் செடிகளின் மீதே தெளிக்கப்படுகின்றன. இதனால் நிலம் நஞ்சாவதுடன் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் வருடந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால் பூச்சிகொல்லி நஞ்சுகளின் போத்தல்களில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நாலு சதவீதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன.

இயற்கையான உரங்களையும் பூச்சித்தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் பசுமை முறைக்கு ஒரு டாலர் செலவழிக்கப்பட்டால் அதனை விடப் பல ஆயிரம் மடங்குகளில் (4000 டாலர்கள்) புதிது புதிதான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்படுகிறது.

இவ்வளவு இழப்புகளையும் பயிர்செய் நிலங்களில் கொடுத்துவிட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன?

நூல்களாக மாற்றப்படும்போதும் நீலநிறச்சாயம் ஊட்டப்படும்போதும் மிகப் பெருமளவில் இரசாயனக் கழிவுகளைத் தன் பங்குக்கும் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூலை நீலமாக மாற்றப் பயன்படும் இன்டிகோ (Indigo) சாயத்தைத் தயாரிக்கும்போது வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான டன்கள் அளவில் நச்சுப் பொருள்கள் தண்ணீருடனும் மண்ணுடனும் கலந்து சுற்றுச் சூழலை சீரழித்து விடுகின்றன. போதாக்குறைக்கு பியூமைஸ் கல்லை (Pumice) (நிறைய துளைகளைக் கொண்ட கண்ணாடி மாதியான கல். Stone Wash ஜீன்ஸ் தயாப்பில் உரோஞ்சுவதற்கு பயன்படும்) தோண்டி எடுப்பதால் நியூ மெக்ஸிக்கோவின் ஒரு நிலப்பகுதி அப்படியே நாசமாக்கப்பட்டிருக்கிறது.

பணக்கார நாடுகளில் ஜீன்ஸ் விற்பனை அமோகமாக இருந்தாலும் இந்த நாடுகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைத் தமது மண்ணில் அமைக்க விரும்பாததற்கு சுற்றுச்சூழலின் சீர்கேடு மட்டும் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக்கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. பங்களாதேஷ், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. கனடாவில் இந்திய மதிப்பில் 1000 ரூபாய்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்ச வடோல் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் தொகை வெறுமனே 27 சதங்கள் (cents) தான்.

வறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்ற பலமான குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. நெசவாளர்கள் பெண்களாக இருப்பதால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதும் இங்கு சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோல் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மன்டான் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கான ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கு நாடுகள் மட்டும் அல்லாமல், பண வருவாய்க்குரிய ஒரு தொழிலாக இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளும் ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அரவிந்த் நிறுவனம் இப்போது 66 நாடுகளுக்கு 155 வகையான டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ஜீன்ஸ் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜீன்ஸ் துணியிலான ஒவ்வொரு ஆடையையும் பார்க்கும்போது நமது பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்குக் குட்பை சொல்லி விடுவோம் போலவே தெரிகிறது. நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறவும் கூடும். ஆனால் அது அழித்துவிட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com