Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
தீப்பந்த நாள்முதல் நாளது தேதிவரை....
க.சீ. சிவகுமார்

ஒரு சிறிய கிராமம். அரச மரம் கொண்ட கல்லுக் கட்டுப் பிள்¬யார். நாழி ஓடும் சீமை ஓடும் வேய்ந்த ஊர்ப்பொது மன்றம் : அதுவே பொழுது போக்குக் களமாகவும் செயல் ஆற்றும். அதனெதிரே கதிரடிக்கும் களம். பெட்டிக் கடைகள் சாலைவழியில் இல்லாமல் உள்ளடுங்கி இருக்கின்றன. சேலம் மாவட்டம் மேட்டூருக்கு அருகில் முன்னம் சொன்ன இலக்கணத்தில் ஒரு கிராமம் விளங்கி வருகிறது. ஏர்வாடி, பேருந்து வசதி இருப்பதற்கான சான்றுகளும் தென்படவில்லை.

எர்வாடியைச் சொந்த ஊராக் கொண்ட எழுத்தாளர் மு. ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்த ஒரு கிராமியக் கூத்து கடந்த 2008, ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.

ஏர்வாடியின் களத்து மேட்டில்தான் மேடையும் பாடலும் பாவ நிறுத்தங்களும், பாரதப்போரின் பதிமூன்றாம் நாள். ஒவ்வொரு பாத்திரமும் வரும் பொழுதே தங்கள் கொடிவழிக் கதையைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நாம் கேட்டு மறந்த, கேளாமல் இருந்த எத்தனையோ சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. அபிமன்யுவின் மரணம்தான் அன்றைய நிகழ்வின் உச்சமென்றாலும் ஜெயரதனின் மரணம் கூட சொல்லப்படுகிறது. ஜெயத்ரதனின் மரணம் இலவச, விதிவச, சாபநிமித்த இணைப்பாக அவனது நைனா பிருகத்காயனின் மரணத்தையும் உள்ளடக்கியது. (இந்த மரணம் பற்றி அறிதலின் மறு வாசிப்புக்கு ஜெயமோகனின், ‘விரித்த கரங்களில்' சிறுகதையைப் படிக்கலாம்.) ஸ்ரீமத் நாராயணன் வந்து தேவ நாட்கள் தேவ வருடங்கள் பற்றிய கணக்குச் சொல்லும் பொழுது மானுடக்காலச் சிறுமை ஞாபகத்துக்கு வருகிறது.

மானுடத்தின் அதியவசியங்களை வேறு கட்டியக்காரக் கோமாளி நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார். கூத்தினிடைவெளியில் முது பெண்கள் எழுந்து போகும்போது அவர், ‘என்ன சின்னாயா சாணி போடப்போறாயா?' என்று வேறு கூச்சநாச்சமில்லாமல் கேட்கிறார். இதிலென்ன கூச்சம், ‘குதமிருந்தால் குத்தாரியும் போடவேண்டியதுதானே'. மொத்தத்தில் அப்படி ஒரு கிராமத்து சுபாவத்தில் இனிய நல்ல நாடகம்தான். அன்று இரவு தற்காலிகமாக மீசை வழித்த அபியையும் (அபிமன்னன்தான்), கர்ணனையும் நான் காதலித்தேன். கண் பறிக்கும் காஸ்ட்யூமும் முன் பாவாடையும் அப்படி ஆக்குகின்றன. நல்ல கூத்துதான் போங்கள். இது இரவு பத்து தொடங்கி பகல் ஆறரை வரை நடைபெற்ற நாடகம் என்று வையுங்கள். நான் கூறப்போந்தது மேற்படி நாளின் பிற்பகலில் நிகழ்ந்த மனதிற்குகந்த சில நடவடிக்கைகள் பற்றி.

சில கட்டங்களாக நடைபெற்ற முதலாம் அமர்வில் கூத்துப் பயிற்சிக்கான ‘களரி' என்கிற அமைப்பினை நவீன தெரு மற்றும் மேடை நாடகக்காரரான பிரளயன் தொடங்கிவைத்தார். காலகாலமாக மனப்பாட மரபிலேயே பாடம் பயின்று வந்த கலைஞர்களுக்கு, இனி வருங்கால கணினி யுகத் தேவையை அனுசரித்து இப்படியான ஒன்று அவசியமே அவசியம்தான். அதனை அடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது. அனேகமாக பலருக்கும் அது கன்னி விருதாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வயது கூடிய ஆண்கள், இளைஞர்கள், மாற்றுப் பாலிகர் ஒருவர் என அனைவரும் விருது பெற்றார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (அகில உலகப்) பொதுச்செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்த அதனைத் தொடர்ந்து.

கே.ஏ. குணசேகரன் தனது தசைக்கரங்களால் விருதுகளை வழங்கினார். அந்த அமர்வில் கவிஞர்கள் ஆதவன் தீட்சண்யா, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி மற்றும் பாமரன் ஆகியோர் கருத்துப் பகிர்ந்தனர். (செம ஹாட் மச்சி). கீதாஞ்சலி பிரியதர்சினி, அனுராதா, சக்தி அருளானந்தம் ஆகியோர் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்கள். கடந்த ஆண்டு கலைமாமணித் தேர்வில் அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளில் மூன்றே மூன்றுதான் கிராமப்புறக் கலைகளுக்காம். (என்ன பாதகம் சார் இது?). ஒரு வகையில் இந்தப் பருவத்தில் கலைமாமணி விருது பெறாமல் இருப்பதும் கூட நல்லதுதான். கலைஞரின் பொற்கரங்களில் அதைப் பெறுவதற்கு முன் சுண்ணாம்புக் காளவாயில் அடுப்பெரிக்கிற பாவனையில் (அல்லது தொஸ் விளையாட்டில் அப்போதுதான் எழுப்பிவிடப்பட்ட ஆட்டக்காரரின் பாவனையில் நின்று அதை) வாங்கவேண்டும். விருதுகளின் தலைப் பட்சங்கள் ஒருபுறம் இருக்க ‘சென்னைச் சங்கமம்' மாதிரியான நிகழ்ச்சியில் (ஃபார்ம் ஃபில் அப் செய்து கொடுத்து காசு வாங்கும் கலை இன்னும் கிராமப்புறத்தான்களுக்கு கைகூடாத நிலையில்) நடத்திய ‘கூத்துகளை (நேர்ப்பொருள்)' ஆதவன் தீட்சண்யாகவும் ஹரியும் வருத்தமுடன் பதிவு செய்தார்கள்.

அடுத்ததாக இறக்கை - இருமாத இதழின் 51 ஆம் எண்ணின் வெளியிட்டு நிகழ்ச்சி (தக்கணத்திலிருந்து அஃது எர்வாடி மு. ஹரி முகவரியிலருந்து வரப்போகிறது) நிகழ்வதனில் இசை, க.சீ. சிவகுமார், எழில்வரதன் ஆகியோர் பேசியதை அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார்.

கிராமிய - அல்லது கொங்கு வட்டாரக் கூத்திசையின் மிசையான இந்த எளிய முயற்சியாகப்பட்டது - தன்னளவிலான பிரக்ஞையுடன் பண்டைக் கலையைத் தக்கவைக்கவும், மேலெடுத்துச் செல்லவும், அங்கீகாரத்தைக் கோரிப்பெறவுமான ஒரு ஏற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டது நல்ல செய்தியேயாகும்.

திருச்சி, சென்னை போன்ற ஊர்களிலிருந்து கல்லூரி மாணவ மாணவியர், நாடகத்துறைசார் இளைஞர்கள் வந்திருந்தது என்னை உவகை உறச்செய்தது. அவ்வண்ணமே வீரசூர்யா, லட்சுமி சரவணக்குமார். பா. திருச்செந்தாழை இன்னோரன்ன புதுவரவு எழுத்தாளர்களும் ஆர்வமுடன் வந்து பங்கு பெற்றது மகிழ்ச்சியளித்தது. புது எழுத்து, இறக்கை, தக்கை சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். எனக்கும் கூட ‘புதுவெக்கை' என்றொரு பத்திரிக்கை ஆரம்பிக்க யோசனைதான். அட்டையும் சேர்த்து பனிரெண்டு பக்கங்கள் (ஆசிரியர் தன் கருத்துக்கூறுதல் ஒன்பது பக்கங்கள்). தமிழக மே மாதங்கள் 45 பாகை செல்சியஸ்சைத் தொடுகிறபொழுது அதைத் தொடங்க திண்ணமாக எண்ணம். நிற்க....

அரிதினும் பெரிதினும் முயன்று இதை எர்வாடியில் ஏற்பாடு செய்த ஹரிகிருஷ்ணன் கூத்தில் வல்லவராக இல்லாவிடினும் சிற்சில வேடங்களில் பங்கு பற்றுகிற பாத்திரக்காரனாயிருப்பது விசேஷமான ஒன்றாகம். வடிவம், இறுக்கம், களம், காலம், அரசியற்றன்மை அவ்வளவையும் இணைத்து இந்தக் கலையை முன்னெடுத்துச் செல்லும் பெருங்கடப்பாடு ‘களரி' அமைப்பினை வந்து சேர்கிறது. இதற்கு இணைகரம் நீட்டுதல் இன்றியமையாததுமாகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com