Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
ராணிதிலக் நேர்காணல்

ஆர். தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராணிதிலக், 1972-ல் வேலூரில் பிறந்தவர். 90-களின் இறுதியில் எழுத் தொடங்கிய இவரின் முதல் கவிதைத் தொகுப்பான நாகதிசை 2004 லிலும் இரண்டாவது தொகுப்பான காகத்தின் சொற்கள் என்ற உரைநடைக் கவிதை தொகுதி 2006லிலும் வெளிவந்தன. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர், ஸங்க்ராந்த், தனுஷ் என்ற பெயர்களிலும் கவிதைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார். தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் பாலி என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார். இவரது உலகம் இயல்பான ஒரு வாசகனுக்கு புலப்படாத, மிக நுட்பமான புரிதலுக்கான முனைப்புகளை உள்ளடக்கிறது. ஆரம்பத்தில் மிகுந்த இருண்மையுடன் வெளிப்பட்ட இவரது கவிதை உலகம் மெல்ல தெளிவுற்று, அதே இருண்மையானது எளிமையினுள் உட்பொதிந்ததாக தற்போது மாறிவிட்டது.

உங்கள் வாழ்நிலம் உங்கள் வாழ்வுக்கும் எழுத்துக்கும் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது?

எந்த ஒரு கவிஞனுக்கும் அவனடைய வாழ்நிலம் முக்கியமான ஒன்று. என் நிலம் பாலைத்தன்மை கொண்டது. வேனலும் அதிகக் குளிரும் வீசக்கூடியது. அதனுடைய எரிச்சலும் நடுக்கமும் என்னைப் பாதிக்கிறது. ஒரு நிரந்தரமான மனோநிலையை அது எப்போதும் உருவாக்குவதில்லை. என் கவிதையில் வரும் பாலாறு, எப்போதும் வறண்டுகிடக்கும் ஒன்று, அத்திப்பூத்ததுபோல எப்போதாவது நீரோடும். அது ரம்மியமானது. ஒரு வேளை, வறட்சியில் கிடக்கும் வெறுமைதான், என் கவிதைகளில் கிடக்கும் மனோநிலையோ, என்னவோ? என்னுடைய கவிதையில் இருக்கும் இயற்கை இங்கிருந்தே கிடைத்தவொன்று. ஒவ்வொரு கணத்திற்கும் மாறியபடி இருக்கும் மலை ஒன்று, ஆற்றைப் பார்த்தபடி இருக்கிறது. எப்போதும் ஒரே சாயலில் இருப்பதில்லை, இந்த மலை. கணத்திற்குக் கணம் மாறும் மனதைக் கொண்டது, இது. அனுபூதியைத் தரக்கூடியது. தவிரவும், வேறொரு பிரதேசத்தில் நான் பயணிக்கும்போது, அங்கே வாழ்ந்தபடி இருக்கும் ஒரு வறண்ட ஆறு, வறண்ட மலை என்பது, என் ஆற்றின், மலையின் சாயை எனக் கண்டு ஏக்கமடைகிறேன்.

கவிஞனுக்கும் கவிதைக்குமான உறவின் நிலை என்ன?

கவிஞனுக்கும் கவிதைக்குமான உறவின் நிலை, ஆன்மீகம் ஆனது. மனதின் பிரசவம் அது. பெறப்பட்ட அனுபவத்திலிருந்து, எழுதப்பட்ட பிரதி வரை அமைவது. தாய்-சேய் நிலைதான். ஒரு கவிதையின் ஏதோவொரு எழுத்தில், வார்த்தையில், வரியில், அக்கவிதையின் கவிஞன் வாழ்ந்தபடி இருக்கிறான். யாருக்கும் புலப்படாமல். அவன் ஏக்கம், எழுத்தாகி உள்ளது. ஒரு கவிஞனின் வாழ்வு சாட்சியம் அல்லது கல்லறை அல்லது நினைவு ஸ்தூபி என்பது அவனின் கவிதைகளே.

எந்த மாதிரியான மொழியை உங்கள் கவிதைகளில் பயன்படுத்த நினைக்கிறீர்கள்?

மிக வெளிப்படையாகச் சொன்னால் எளிமையைத்தான். அதுவொன்றே கவிதையை அடைய செய்யும் வழி. ஒரு சிக்கலான அனுபவத்தில் வரும் எளிமையும், ஒரு எளிமையான அனுபவத்தில் வரும் இருண்மையும் கூட மொழியில் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுவதுண்டு. மேலும் நான் எளிமையை நோக்கியே செல்கிறேன். என்னை மீறி, கவிதை தனக்கானதைத் தேர்ந்தெடுத்துவிடுகிறது. ஓர் அனுபவத்தைச் சாஸ்வதமாய்ச் சொல்லி விடுகிற மொழியைத்தான் நான் விரும்புகிறேன். ஏனெனில் எனக்குக் கிடைக்கும் அனுபவம் மிக வெளிப்படையானது... மிக மிகச் சிக்கலற்றது. ஒருவேளை, சிக்கலான அனுபவம், தனக்கான மொழியைப் பெற்றிடுமோ என்னவோ?

பிரசுரம் ஆவதற்கு முன் உங்கள் கவிதைகள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதுண்டா?

நிச்சயமாக. என் கவிதையில் இருக்கும் பிழை என் மனதுக்குத் தெரிவதில்லை. அது இன்னொருவர் பார்க்கும்போது சிக்கிவிடுகிறது. உதாரணத்திற்கு, என் ஆரம்ப கால எழுத்தில் இருந்த பல சிக்கல்களை ஸ்ரீநேசன் விடுவித்தார். தற்போது ஜீ. முருகன். சமீபத்தில் எழுதிய கவிதையின் கடைசி இரண்டு வரிகளை அவர் நீக்கும்போது, கவிதை தன்னிறைவு அடைந்ததைப் பார்த்து மகிழ்ச்சி உண்டானது. இதில் இன்னொரு ஆச்சரியம் திருத்துவதற்கு முன் எனக்கு நிறைவைத் தந்த ஒன்று, இரண்டு வரிகளை நீக்கிய பின்னும் நிறைவைத் தந்தது. இதனால், ஒரு கவிதையை இன்னொரு கவிஞன் விவாதிப்பதற்கும், அத்துறை சம்பந்தமற்ற மற்றொரு படைப்பாளி விவாதிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிடுகிறது. மற்றொரு படைப்பாளி ரகசிய அறைக்குள் பிரவேசித்து, பிழையை மீட்டுவிடுகிறார். ஒரு பூரணத்துவத்தை அடையச் செய்து விடுகிறார். மொழி மீதும், வடிவம் மீதும், இது கவிதை, இது கவிதை இல்லை என்ற தீர்ப்பை வழங்குபவர்கள் சக நண்பர்களாகிய படைப்பாளிகளைத் தவிர யார் இருக்கக்கூடும்?

கவிதையைத் திரும்ப திரும்ப எழுதுவீர்களா? அல்லது.....

ஆமாம். பலதடவை மனதில் பல வடிவங்களில் எழுதிப்பார்க்கிறேன். அடித்தலும் திருத்தலும் சேர்த்தலும் மனதிலேயே நிகழ்ந்துவிடுகிறது. கவிதையைத் தாளில் எழுதும்போது, ஒரு வார்த்தை அல்லது ஒரு வரி, மற்ற வார்த்தையுடன் அல்லது வரியுடன் தன்னைச் சேர்த்துக் கொள்கிறது அல்லது தனித்துக் கொள்கிறது. இங்கிருந்ததே வடிவம் தனக்கான ஸ்திதியை அடைந்து விடுகிறது என்று நம்புகிறேன். திரும்பத் திரும்ப எழுதும்போது, ஒரு கவிதையின் பல முகங்கள் எனக்குத் தெரியவருகிறது. அதில் எனக்கானதைத் தெரிவு செய்து கொள்கிறேன். அதன் வெற்றி அல்லது தோல்வி என்பது திரும்பத் திரும்ப எழுதுவதில்தான் அமைகிறது...... அது உங்களுக்கும் நிகழவும்கூடும்..... கவிதை உருமாறிக் கொண்டிருப்பது, அதற்கான பூரணத்துவத்தை நோக்கிச் செல்கிறதாகவே படுகிறது.

மற்றவர்கள் கவிதையை வாசிக்கும்போது என்னவாக உணர்கிறீர்கள்?

வாசிக்கும்போது நான் இருப்பதில்லை. பிரதியின் ஏதோ ஒரு பாத்திரமாகிவிடுகிறேன். காஃப்காவை, நகுலனை வாசிக்கும்போது நாம் அல்லாமல் வேறு யார் இருக்கக்கூடும். கவிதையைப் பொருத்தமட்டில், அந்த க்ஷணம் நம்மிருப்பில் இல்லை. கவிதையில் தான் இருக்கிறேன், ஏதோ ஒரு செடியாக, மலராக. கவிதையிலிருந்து விடுபட்டு பார்க்கும்போது நான் இல்லாமல் போகிறேன். ஓசிப் மெண்டல்ஷ்டாம், நகுலன் கவிதைகள் வாசிக்கும்போது இருக்கும் மனோநிலை பிரத்யேகமானது. என்னை அறியாமலேயே நானிந்த சூழலை உணர்ந்துவிடுகிறேன். சமீப காலமாக யவனிகா ஸ்ரீராம், சங்கர ராம சப்ரமணியன், ஸ்ரீநேசன் ஆகியோரின் கவிதைகளை வாசிக்கும்போது நான் எழுதி இருக்கவேண்டிய, எழுதாமல் விட்ட ஒன்றாகவே படுகிறது.

மற்றவரின் கவிதையை நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும்?

ஏனெனில் என்னால் எழுதமுடியாத ஒன்று அதில் இருக்கிறது. பாலைநிலவனின் கொண்டாட்டத்தையோ, யவனிகா ஸ்ரீராம் அரசியலையோ, பழனிவேளின் நிலத்தையோ, கண்டராதித்தனின் ஸ்திரிபோகத்தையோ என்னால் உணர்த்திருந்தாலும், எழுத முடியாததுதானே. கதவற்ற வீடு திறந்திருக்கிறது. நான் உள்ளே சென்றாக வேண்டும். வாழ்ந்தாக வேண்டும். இதையும் கடந்து கனகச்சிதமான வடிவத்தையோ, மொழியையோ நாம் கவிஞன் என்ற அடிப்படையில் கற்றாகவேண்டும்.... கொண்டாட வேண்டும். இவையும் ஒரு காரணமாகலாம். வாசிப்பதால்தான் எப்படியான கவிதையை நான் எழுதக்கூடாது என்பதை உணரமுடிகிறது. குட்டிரேவதி, பிரான்சிஸ்கிருபாவின் மொழியைக் காணும்போது, எப்படி மொழியை விணடிக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்கிறேன். நகுலனை, பிரம்மராஜனை, தேவதச்சனை வாசிக்கும்போது கவிதையில் அமைந்திருக்கும் சூட்சுமங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆக விதிவசத்தினால் ஒரு கவிதையை வாசித்தாக வேண்டியுள்ளது. விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்கூட, ஏனெனில் அது பிரசுரமாகிவிட்டிருக்கிறது......

கவிஞனை வரையறுக்க முடியுமா? உங்கள் வகைப்பாடு கவிதையின் பண்முகத் தன்மையை நாசம் செய்யாதா?

கவிஞனை வரையறுக்க இயலும். ஏனெனில், அவன் சமூகத்திற்கு வெளியில் இருக்கிறான். சமூகத்தின், மதிப்புகளுக்கு, எதிரான, மாறான, இணையான மதிப்பைப் பெற்றவன். ஒரு கவிஞனின் உள்ளுணர்வு, நுண்ணுணர்வு சமூகத்திடம் எப்போதும் இருப்பதில்லை. புலப்படாத உலகத்தின் வாசனையை அறிந்தவன். கவிஞனின் பிறதுறை பற்றிய அறிவு, சமூகம் சாராதது. இப்படி சொல்வதால் அவனின் பன்முகம் மாறப்போவதில்லை. தத்துவம், அழகியல் ரசனை, ஆன்மீகம், இயற்கையான கவிஞனின் பன்முகம் இன்னும் ஆழமாக வளரவே செய்யும்.

மொழி எப்படி வீணடிக்கப்படுகிறது?

படிமங்களாலும், குறியீடுகளாலும்தான். நமக்குக் கிடைத்த அனுபவம் உருவகம் சார்ந்ததா அல்லது படிமத்தைச் சார்ந்ததா என்பதைப் பொறுத்தே கவிதையில் அவற்றின் பங்கு அமையக்கூடும். நமக்குக் கிடைக்கும் அனுபவவெளி ஒரு மனநிலையை மட்டும் கொண்டதாக இருக்கலாம். எழுதும்போது அந்த மனநிலைக்குச் சம்பந்தமற்ற, அழகியல் என்ற பூச்சிற்காக, பல படிமங்கள், உருவகங்களைப் பயன்படுத்தம்போது, கவிதையின் மனோநிலை சாகடிக்கப் படுகிறது. ஏனெனில் நாம், பெற்ற அனுபவம் ஒரு கணத்தில் நிகழக்கூடியது. அதனால், நாம் எழுதும்போது வரும் படிமங்களும் உருவகங்களும் அந்த கணத்தில் நிகழ்வதில்லை. நாம்தாம் உருவாக்குகிறோம். அடைகிறோம். இதனால் ஒரு கவிதை தன் ஆன்மாவை இழந்துவிடுகிறது. இவை குட்டிரேவதி, பாலைநிலவன், சகிர்தராணி, பிரான்சிஸ் கிருபா ஆகியோரின் பெரும்பான்மை கவிதைகளில் நிகழ்ந்துவிடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

கவிதைத் தொழில்நுட்பம் பற்றிய அறிவு கவிஞனுக்கு அத்யாவசியமானதா?

அத்யாவசியமானதுதான். ஒருவரை அடையாளம் காட்டுவது அதுதானே. ஆத்மாநாம் கவிதைகளை, அவரின் கவிதைபற்றிய உரையாடலை வாசிப்பவர், இதைத்தான் உணரமுடியும். அவரின் கவிதைகள் பலவும் வெற்றியடைந்திருப்பதற்குக் காரணம், அதனுடைய தொழில்நுட்பம்தான். சத்யன் கவிதைத் தொகுதிக்குப் பின்னால் அச்சிடப்பட்டிருக்கும் ஒரு கவிதையே, இதற்குச் சரியான உதாரணமென்பேன். மிசச் சமீப கால உதாரண கவிதைகளாக, பழனிவேள் மற்றும் ஸ்ரீநேசனுடையவை.

ஒரு சொல்லைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை என்றால், அது தொழில் நுட்பத்தால் விளைந்த ஒன்று. சிலருக்குக் கவனத்தில் நிகழ்ந்துவிடுகிறது.... சிலருக்கு யதேச்சையாய் அமைவதும் உண்டு. மொழி மற்றும் வடிவம் சார்ந்த ஒழுங்கமைவுக்கு இது அவசியம் தேவை. செழுமையை நோக்கிச் செல்லத் துடிக்கும் ஒரு கவிதைக்கு இது தேவையானதும்கூட எழுதுவதின் மூலம், வாசிப்பதின் மூலம் கண்டடைவதைவிட, திருத்தி திருத்தி எழுதும் நிலையில் கண்டடைவது திருப்திகரமானதாக இருக்கும் என நம்புகிறேன். திருத்தி எழுதுதல் என்பதுகூட தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றுதானே.......

கவிதை, வசன கவிதையிலிருந்து எங்கே பிரித்தறியப்படுகிறது? அதன் வீச்சை அடைந்துவிட்டதாக நம்புகிறீர்களா?

இன்றைய நவீன கவிதையிலிருந்து, உரைநடைக்கவிதை வடிவத்தில் பிரித்தறியப்படுவதாகவே நம்புகிறேன். இறுக்கமான வடிவம், தேர்ந்த மொழி ஆகிய டென்சனிலிருந்து விடுபட்டு, திறந்த நிலைக்கு உரைநடைக் கவிதை என்னால் எழுதப்பட்டது. எழுகை, மோனை போன்ற தொடை, சந்த நயங்கள் இன்றைய கவிதைகள் தெரிந்தோ, தெரியாமலோ எழுதப்படுகிறது. இத்தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான வடிவ மொழிக்கு உரைநடைக்கவிதை வடிவம் உதவியது. இதன் வீச்சை என் பெரும்பான்மை கவிதைகள் அடைந்திருப்பதாகவே உணர்கிறேன், நம்புகிறேன்.

சம கால கவிதைகள் குறித்து ஏதாவது சொல்ல இருக்கிறா?

எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? இன்றைய கவிதையில் மிகச்சிறந்த ஆளுமைகளான இளம்கவிஞர்களைத்தான் குறிப்பிடுவேன். ஸ்ரீநேசனின் நவீன வாழ்வில் தத்துவமனோநிலை, கண்டராதித்தனின் மரபை மீறும் காமம், பழனிவேளின் உலகமயமாதலில் அழிந்துபோகும் நிலம், யவனிகா ஸ்ரீராமின் மூன்றாம் உலகம் மீதான அரசியல் நிலைப்பாடு, பாலைநிலவனின் இயற்கை மீதான வசீகரம், சங்கர ராம சுப்பிரமணியனின் தெளிவற்றதும் கொண்டாட்டமுமான குழந்தைமை மனோநிலை, லக்ஷ்மி மணிவண்ணனின் உடனடி அரசியல், கரிகாலனின் பின் நவீனத்துவ அரசியல், அய்யப்ப மாதவனின் புனைவுத்தன்மை, பெருந்தேவியின் தொன்மையைக் கடந்த வாழ்நிலை, மாலதி மைத்ரியின் பெண் அடையாளம் என அடுக்கிக் கொண்டேபோகலாம். மிக ஆரோக்கியமானதாகவும் மோசமானதாகவும் படுகிறது. உடலரசியல், சிறு தெய்வ வழிபாடு, கலகம், புனிதம் கலைத்தல், பாலியல் எனச் சமூக கட்டுகளை மீறி எழுதப்படுகிறது. கவிஞர் இசையின் கவிதையன்றில் வருவதுபோல், மதுவை ஊற்றியவுடன் பிளாஸ்டிக் டம்ளர் பொற்கலயமாகிவிட வேண்டும்.

கவிதையில் சொல்லை, தொடரைப் பிரிக்கும்போது என்னவிதமான மாற்றத்தைக் கவிதை அடைகிறது? உதாணத்துடன் விளக்க முடியுமா?

முடியும். என் கவிதை என்பதைவிட, இக்கேள்விக்கு உதாரணமாக ஸ்ரீநேசன் கவிதையை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவரின் நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் என்ற கவிதை ஞானக்கூத்தன், கரிகாலன், விக்ரமாதித்யன் எனப் பலரால் சிலாகிக்கப்பட்டவொன்று, மிகவும் தப்பார்த்தமாக. அக்கவிதையின் இடையில் வரும், நீங்கள் கூட பார்த்திருக்கலாம் என்ற வரி, மிகக் கவனக்குறைவால், நீங்களும் பார்த்திருக்கலாம் என்றே பட்டிருக்கிறது. கூட என்ற இணைப்புச் சொல்லை வெட்டித் தனியாக எழுதும்போது, நீங்களும் புணர பார்த்திருக்கலாம் என்ற அர்த்தத்தில் அமைந்துபோகிறது. இது ஏனோ நமக்குத் தெரிவதில்லை. ஆனால் மொழி மீது பரிச்சயம் கொண்ட நபரால், இப்பிரிப்பை அறிந்து, அர்த்தத்தை உணர முடியும் என் நம்புகிறேன். ஒரு சொல் பிரியும்போது, அது மனதில் வேறொரு சூழலை உருவாக்கிவிடுவதும் உண்டு. மிக எளிமையான உதாரணம், தேவதச்சனின் மத்/தியான வெயில் இங்கு மத் என்ற சொல் பிரிப்பு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான மனோநிலையை உண்டாக்கிவிடக்கூடும். தொடரைப் பிரித்தலுக்கு, மிக எளிமையான, திறந்த நிலையிலான உதாரணங்களுக்குப் பிரம்மராஜனிடமும் நகுலனிடமும் நாம் போயாகவேண்டும்.

இலக்கிய அரசியல் ஒரு கவிஞனுக்குத் தேவையான ஒன்றா?

ஒரு கவிஞன் தன் புகழை மிகச் சீக்கிரமாக, எழுதாமலே அடைந்துவிட இலக்கிய அரசியல் தேவையானதுதான். இன்றைய சூழலில், யார் யார் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. எனக்கு அரசியல் எப்போதும் தற்கொலைக்குச் சமமானது.

மிகச்சிறந்த கவிதை எதைப்பற்றி அமையும் என உங்களால் யூகிக்க முடிகிறதா?

முடியும் என்று நினைக்கிறேன். இதுவும் ஒரு யூகம்தான். ஒரே வார்த்தையில் சொல்வதெனில், அதில் ஆன்மீகம் இருக்கும். இந்த ஆன்மிகம் மதத்தைச் சார்ந்தவொன்று அல்ல. ஒரு பேருண்மையை தனக்குள் அடக்கிக்கிடப்பது. அறுதியிட்டுக் கூற முடியாத தன்மையை அது எப்போதும் பெற்றிருப்பது. அழகியலையும் தத்துவத்தையும் சார்ந்து இயங்கக் கூடியது.

கவிஞனாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

கடைசி பட்சமாகவே உணர்கிறேன். நான் பெறும் மிக நுணுக்கமான அனுபவங்களை என்னால் எழுதமுடிகிறது என்பதால், சில கணங்களில் தோல்வியடைகிறேன் என்பதால், நாம் எழுதும் அனுபவங்களை, எழுதாதவர்களும் பெற முடியும் என்பதால்.

கவிதையை வாசிக்காத, எழுதாத கணங்களில் உங்கள் மனோநிலை எப்படியிருக்கிறது?

எப்போதும், வறண்டநிலைதான். நான் மட்டுமே இருப்பதான தோற்றம். என்னைப் புரிந்தவர்கள். முதலில் சொல்வது, நம்பமுடியாதவன். திடீர் திடீர் என மனநிலையை மாற்றிக் கொள்பவன். உடல் ஒரு நிலையில் இருந்தாலும், மனம் கணத்திற்குக் கணம் காற்றைப் போலவும், வெயிலைப் போலவும் உருமாறியபடியே இருக்கிறது. ஆனாலும் ஏகாந்தநிலையில், எச்சரிக்கையுடன் இன்னும் சொல்லப்போனால் விழிப்புடன் இருக்கிறேன். இதுவும் நண்பர்கள் சொன்னதுதான். நண்பர்கள் தான் என் மிகச் சிறந்த, தெளிவான, அப்பழுக்கற்ற கண்ணாடிகள். கண்ணாடிகளை மறுக்க முடியுமா என்ன?

தமிழ்க் கவிதையில் மிகச் சிறந்த ஆளுமையாக யாரை நினைக்கிறீர்கள்?

சிறு திருத்தம். ஆளுமைகள் என்று மாற்றிக் கொள்வோம். நகுலன், ஆத்மாநாம், பிரம்மாரஜன், தேவதச்சன் ஆகியோரை மிகச் சிறந்த ஆளுமைகளாக நினைக்கிறேன். புரிபடாத வாழ்நிலையையும் மனநெருக்கடிகளையும் கவிதையின் பல்வேறு சோதனை வடிவங்களையும் தரிசனம் மீதான கொண்டாட்டத்தையும் இவர்களைத் தவிர யாரால் தரமுடியும்? என் மனநிலைக்கு நெருக்கமாக இவர்களைத் தான் உணர முடிகிறது, என்னால்.

இன்றைய கவிஞர்களை, ‘இளம்தலைமுறைகள்’ என்று பெயரிட்டார் இந்திரன். ‘நான்காம் தலைமுறை’ என்று அழைக்கிறார் ஸ்ரீநேசன். உங்களின் கருத்து எப்படி.....?

நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டியததான். பெயரில் என்ன இருக்கிறது? இதை யார் சொன்னது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? நவீன வாழ்வின் கசப்புகளை, மரபை மீறிய வாழ்நிலைகளை, புனைவுகளை முன்வைக்கும் இவர்களை எப்படி என்றாலும் அழைக்கலாம். யார் பட்டியல் போட்டாலும், நாம் முதலில் செய்ய வேண்டியது, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை முற்றிலுமாகக் கழற்றிவிடுவதுதான்.

இவர்களைக் கடந்து இன்றைய நவீன கவிதையில் சில பேரைச் சொல்லமுடியுமா?

நிச்சயமாகச் சொல்லமுடியும். குலசேகரன், இசை, இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், ஜீவன் பென்னி, பயணி, சீ. கோவிந்தராஜ், அ. செல்வராஜ் ஆகியோரை எனக்கு நெருக்கமாகக் கொள்கிறேன். நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் அவர்கள் நம் அனுபத்தில் சிக்காததை எழுதுகிறார்கள்.

கவிதை விமர்சனத்துறை இப்போது எந்த அளவில் இருக்கிறது?

மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. சாதிய அரசியலையும் உடலரசியலையும் கடந்து இன்னும் கவிதை விமர்சனம் வெளியேறவேண்டும். குழு அரசியலும் மிக நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால், இளம் கவிஞர்களைக் இளம்கவிஞர்கள் எழுதுவது, விமர்சனநிலையில், ஆரோக்கியமாகவே உள்ளது.

உங்கள் கவிதை மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ஏற்றுக் கொள்கிறேன், சில கணங்களில் மறுக்கவும் செய்கிறேன். எந்தவொரு படைப்பும், விமர்சனம் என்ற பெயரில் முழு முற்றாக அடைந்துவிடமுடியாது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே. விமர்சனம் என்பது ஒரு படைப்பை, வேற களத்தில் புரிந்துகொள்ள, ஒரு வழிகாட்டுதல் என்றே நினைக்கிறேன். என்னுடையதை மட்டும் அல்ல, மற்றவர்களின் கவிதைகள் மீதான விமர்சனத்தையும் அப்படித்தான் எதிர்கொள்கிறேன்.

ஒரு கவிஞனின் அல்லது படைப்பாளியின் தன்னொழுக்கம் ஓர் அபத்தமா?

கவிஞனின் தன்னொக்கம் அபத்தமானதுதான். அவன் கொண்டிருக்கும் ஸ்திரி, லாகிரி வஸ்துகளின் தொடர்பு ஒன்றே அவனைக் கவிஞனாக மதிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் அவனைவிட சிறந்த ஸ்திரிலோலர்கள், குடிகாரர்கள், இச்சமூகத்தில் கவிதை எழுதாமலே வாழ்கிறார்கள். அறமின்மை அல்லது எதிர் - அறம் என்ற செயல்பாடு, கவிஞனை விட அதிகமாக அரசியல்வாதியிடம், கள்ளர்களிடம், விபச்சாரிகளிடம் இருப்பதால், அவனின் தன்னொழுக்கம் அபத்தமானதே, ஒழுக்கம் - ஒழுக்கமின்மை என்ற முரணில், கவிஞனைவிட, மிகச் சிறப்பாக வாழ்பவர்கள், இப்பூமியில் இருக்கத்தானே செய்கின்றார்கள், எனவே, அபத்தம் - அபத்தமின்மை என்ற வாழ்வு, கவிஞனுக்கு மட்டும் நிகழ்வது இல்லை.

கடைசியாக ஒரு கேள்வி, இலக்கியம் தவிர்த்து வேறு துறைகள் உங்களைப் பாதித்துண்டா?

ஆம். சமீப காலமாக தார்க்கோவ்ஸ்கியின் படங்களை, அவருடைய எழுத்தை வாசித்து வருகிறேன். தாஸ்தாவொயஸ்க்கியை எப்படி என்னால் உணரமுடிந்ததோ, அதற்கு இணையாக இவரை உணர்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், என்னால் அகவயத்தில் பயணப்பட கற்றுத் தருபவர் அவர். நமக்குள் இருக்கும் ஸ்டாக்கரை அவர் சிருஷ்டித்துத் தருபவராகவே இருக்கிறார். ஒரு படைப்பாளி எப்படி இருக்க முடியும்? எப்படி பயணித்தாக வேண்டும் என்பதை உணர வைப்பவர், அவர். அன்பையும் இரக்கத்தையும் போதிக்கிறார் அவர். தாஸ்தாயெல்ஸ்க்கியையும் காஃப்காவையும் தார்க்கோவ்ஸ்கியையும் மௌனியையும் நகுலனையும் கோணங்கியையும் பின்தொடர்பவர்கள் தீவிர கதியைப் பெற்றிடுபவர்களாகவே இருக்க முடியும். சினிமாவைத் தவிர எனக்குக் கிரிக்கெட் பிடித்த வொன்று. நான் ஒரு லெக்ஸ் ஸ்பின்னர். சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டில் நான் ஒரு ஒழுங்கமைதியை, பிரத்யேகமான நடையைக் கண்டடைகிறேன். ஒரு பந்தை அவதானிப்பதில், அதற்குப் பதில் தருவதில் அவரை விட யார் பிரமாதம்? சொல்லுங்கள். மிக அதிக ரன்கள் எடுக்கும்போது, அவரின் முகத்தைப் பாருங்கள். இதைத்தான் அவர்களிடம் காண்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com