Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
மறுமுறை இறங்கும் ஆறு,
நிலாக்கள் தூரதூரமாய்....
க. மோகனரங்கன்

மறுமுறை நீங்கள் இறங்குவது முதல் முறை இறங்கிய அதே நதியில் அல்ல என ஹெராக்லிக்டஸ் சொன்னது கவிதைக்கும் வெகுவாகப் பொருந்தும். அரசுகள் அழிந்த பின்னரும், தேசங்கள் பிரிந்தபிறகும், வரலாறுகள் மாறியபோதும் காலத்தை எஞ்சி கவிதை ஜீவித்திருக்கிறது. எழுதப்பட்ட காலத்தையும், உருவாகக் காரணமாகவிருந்த சமூக, கலாச்சார சூழலையும் கடந்து வந்து வெகுகாலமான பிறகு, இன்றைக்கும் பொருத்தப் பாடுடையதாக ஒரு கவிதை நிலைத்திருக்க காரணங்கள் யாவை? ஒரு கவிதையை தனி ஒரு மனிதன் தனது அகத்தூண்டுதலினின்றும் உருவாக்கினாலுமே கூட, அவன் உபயோகிக்கும் மொழி அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அவனுடைய இனத்தின் கூட்டு மனம் என்ற வகையில் அம்மொழியில் பல சமூக கலாச்சார நினைவுகள் உட்பொதிந்திருக்கின்றன. எனவே, ஒரு கவிஞன் தான் உத்தேசிக்கும் ஒன்றை மொழி வழியே வெளிப்படுத்தும்போது, அவன் கருதாத சிலவும் அவ்வரிகளினூடாக உள்ளுறைந்து வரக்கூடும்.

Moon எழுதப்பட்ட காலத்தில், ஒரு பொருளின் அர்த்தப்படுத்தப்பட்ட ஒரு கவிதை, பலநூறு வருடங்களுக்குப் பிறகு வேறுவிதமாகவும் விளக்கப்படக்கூடும். கவிதையின் சொற்கள் திரிபற்றி எரியும் சுடர் போன்றன. தமது பிரகாசத்தின் மூலம் சிலவற்றை வெளிச்சப்படுத்தும் அதே சமயத்தில் அச்சொற்கள் நமது நிழலின் மூலம் சிலவற்றை திரையிட்டு மறைக்கவும் செய்கின்றன. அதனாலேயே ஒரு கவிதைக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு வியாக்கியானங்கள் சாத்தியமாகிறது. நம்முடைய மொழியிலுள்ள உரையாசிரியர் மரபு இதையே சுட்டிக்காட்டுகிறது. அதனாலேயே ஏழு அசைகள் கொண்ட ஒன்றேமுக்கால் அடி குறளுக்கு பரிமேலழகர் தொடங்கி சிற்பி வரைக்கும் பற்பல உரைகள் எழுதப்பட முடிகின்றது. தவிரவும் கவிதைகளில் வெளிப்படும் மனிதனின் ஆதார உணர்வுகளில் அன்றைக்கும், இன்றைக்கும் இடையிலான பெரும் வித்தியாசங்கள் ஏதுமில்லை.

குகைக்குள் வசித்த ஆதிமனிதன் அன்று உணர்ந்த அதே அச்சமும், ஐயமும், காமமும், காதலும் பசியும் வெறுப்பும்தான் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நவீன மனிதனின் உணர்வுகளுமாயிருக்கின்றன. ஆகவே, ஆதார உணர்வுகளின் அடிப்படையில் ஒரு சங்கக் கவிதைக்கும், நவீன கவிதைக்கும் எவ்வித முரண்பாடு இருப்பதில்லை. அவ்வுணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் கோணத்திலும், எதிர்வினையாற்றும் பாங்கிலுமே கால வேறுபாடு வெளிப்படும். இரண்டாயிரம் வருடங்கள் என்பது சரித்திரத்தில் மிகப்பெரிய இடைவெளி. பல இலட்சம் பக்கங்களாலும் நிரப்ப முடியாதது அப்பிளவு. ஒரு மனிதன் தன் அயுள் முழுவதும் பயணித்தாலும் கடக்க முடியாத தூரம் அது. ஆனால் மொழியின் நினைவுத் தொடர்ச்சியான கவிதைகளைப் பொருத்த வரையிலும் அவ்விடைவெளி குறுகியதே. ரசனையும், பயிற்சியும், உழைப்பும் உடைய ஒருவன் தன் தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் அந்த இடைவெளியை கடந்துவிட முடியும்.

ஆகவே வரலாற்றிலும், கவிதையிலும் வெவ்வேறு தன்மையிலானதாக காலம் இயங்குகிறது. சரித்திரத்தின் மறதிக்கு எதிரான அழியா நினைவாகவே கவிதை ஒரு இனத்தின் மொழியிலும், கலாச்சாரத்திலும் நிலைத்திருக்கிறது. அவ்வாறான நிலைபேறுடைய பழம்கவிதைகளோடு அதேவிதமான உணர்வை ஏதோ ஒருவிதத்தில் எதிரொலிக்கச் செய்யும் நவீன கவிதைகளை அருகில் வைத்து வாசித்துப் பார்க்கும் முயற்சியாகவே இக்கட்டுரைத் தொடர் அமைகிறது.

காலத்தால் அழிந்தது போக, இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஈராயிரத்துக்கும் அதிகமான சங்கக் கவிதைகள் கி.மு. 100லிருந்து 500க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது மொழியியல் அறிஞர்களினது முடிவு. இக்கவிதைகளில் பயின்று வரும் ‘திணைக் கோட்பாடு' என்பது உலகில் வேறெந்த தொன்மையான மொழியிலும் காணப்படாத சிறப்பம்சமாகும். இதன் மூலம் தெய்வம், மாந்தர், நிலம், பருவம், பொழுது, தொழில், உணர்வு விலங்குகள், பறவைகள் என உயிர்வாழ்வின் சகல கூறுகளும் ஒருங்கிணைந்த வலுவானதொரு இயற்கைப் பின்புலம் இக்கவிதைகளில் அமைந்துள்ளது. அகமோ, புறமோ தாம் புலப்படுத்த வேண்டிய உணர்வு நிலையை இயற்கையின் மீது படியவைத்துக் காட்டுவது இக்கவிதைகள் பலவற்றிலும் இயல்பாக பயின்றுவரும் உத்தியாகும்.

மூவேந்தர்களின் சூழ்ச்சியால் தம் தந்தையையும், மண்ணையும் இழந்த பாரிமகளிரின் கூற்றாக அமைந்தது பின் வரும் கையறுநிலைப்பாடல்:

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம்
எம்மூன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றுஎறி முரசின் வேந்தர் எம்
குன்று கொண்டார் யாம் எந்தையும் இலமே.

(புறநானூறு - 112)

மேடைகளிலும், திரைப்படத்திலும் எடுத்தாளப்பட்டு, பிரபலமடைந்த இப்பாடலின் கவித்துவம் அதன் அபூர்வமான, கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி செறிவினால் உருவானது. மரணம் என்பது ஒரு குரூரமான யதார்த்தம். மனவெறுமையின் அழுத்தம் தாள முடியாதது. அவ்வெறுமையை எதிர்கொள்ளும் முகமாகவே, அழுது அரற்றுவதிலிருந்து விழுந்து புரண்டு ஒப்பாரி வைப்பது வரையிலும் எல்லாவிதமான மிகை உணர்ச்சி செயல்களையும், அத்தருணத்தின் போது மிக இயல்பாகச் செய்கிறோம். அப்போது மேற்கொள்ளப்படுகின்ற சடங்குகளிலும் மௌனத்திற்கு பதிலாக சப்தமும் ஆர்ப்பாட்டமும் உள்ளதையும், அதை முன்னின்று நடத்துபவர்கள் கொண்டாட்ட மனநிலையுடன் இருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.

இவையெல்லாமே முடிந்தவரையிலும் மரணத்தை இயல்பான ஒன்றாக மீட்டுக் காட்டுவதற்கான முயற்சிகள்தான். இத்தகைய மிகையுணர்ச்சிகள் ஏதுமின்றி தம் துக்கத்தையும், அதற்கு காரணமானவர்களின் மீதான சீற்றத்தையும் (வென்று எறி முரசின் வேந்தர் - இகழ்ச்சிக்குறிப்பு) தணிவானதொரு தொனியில் வெளிப்படுத்துகிறது இக்கவிதை. ஒரு தனிப்பட்ட இழப்பை நேரடியாகக் கூறாமல் இயற்கையின் அழியாத சாட்சியான நிலவை முன்னிறுத்தி சொல்வதனால் உருவாகும் அவலத்தின் ஆழமானது, அத்துயருக்கு ஒருவித காவிய பரிமாணத்தை நல்கிவிடுகிறது.

மேற்கண்ட புறநானூற்று பாடல் கிளர்த்தும் நினைவுகளின் புறச்சட்டகத்தினுள் ஏதோ ஒருவகையில் பொருந்துவாக அமைந்த தேவதச்சனின் ஒரு கவிதையையும் நான் வாசித்திருக்கிறேன். எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் எனத் தொடங்கும் அக்கவிதையும் பல்வேறு தருணங்களில் பார்த்த முழுநிலவுகளைப் பற்றியே விவரிக்கிறது. ஆனால் புறநானூற்றக் கவிதைக்கு முற்றிலும் வேறு திசையில், வேறு வகையில்.

குறைவாகவே எழுதும் தேவதச்சனின் கவிதைகள் அவை பிரசுரமான தருணங்களில் கவனம் பெற்றவை. சாதாரண வார்க்தைகளைப் பிணைத்து இவர் உருவாக்கும் சிறிய வரிகள் அசாதாரணமானதொரு அனுபவத்திற்கு நம்மை ஆட்படுத்தும் வல்லமை பெற்றவை. மேல் பார்வைக்கு தத்துவத்தின் சாயல் கொண்டதாகத் தோன்றும் இவர் கவிதைகள் உண்மையில் அதற்கு எதிரான ஒரு மனநிலையைக் கட்டமைக்கும் முனைப்புடையவை.

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேலையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.

இக்கவிதை முதல் பார்வைக்கு நெருடல் ஏதுமின்றி சரளமாக நகர்வதாகவும், ஸ்படிகம் போன்ற தெளிவுடன் சொற்களில் எவ்வித மறைபொருளும் அற்றதாகவுமே தோன்றுகிறது. எனினும் எளிய முற்று பெற்ற வரிகளைக் கொண்ட இந்தக் கவிதையின் அர்த்தம் அவ்வளவு மேலோட்டமாக பிடிபடக்கூடிய ஒன்றல்ல.

கவிதை சொல்லி தன் வாழ்நாளில் பல பவுர்ணமிகளைப் பார்த்திருக்கக்கூடும். அதில் நான்கு பவுர்ணமிகள் பற்றி கவிதையில் சுட்டப்பெறுகிறது. இப்பவுர்ணமிகள் மாத்திரம் அவருடைய நினைவில் ஏன் பதிந்திருக்கிறது என்ற வினாவிற்கு நேரிடையான பதில் எதுவும் கவிதையில் இல்லை, அதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பது பற்றி நம்முள் ஊறும் யோசனைகளே ஒரு வகையில் இக்கவிதையின் அர்த்தப் பரப்பாகிறது.

பூரணம், அழகு, சாந்தம், கருணை இவற்றின் மொத்தக் குறியிடாகத் தோன்றும் முழுநிலவை கவிஞன் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறான். அச்சந்தர்ப்பங்களை ஒட்டிய மாறுபட்ட மனநிலைகளில் அக்காட்சியின் அனுபவம் என்னவாக இருந்தது? ஒரே மாதிரியாகவா? அல்லது காணும் சந்தர்ப்பத்திற்கேற்ப மாறுபட்ட ஒன்றாகவா? ஒரு தன்னியல்பான நிகழ்வை அனுபவம் கொள்வதில் நம் மனம் நிகழ்த்துகிற மாயத்தின் பங்கு என்ன? என்பது போன்ற பல யோசனைகளுக்கும் நம்மை இட்டுச்செல்கிறது இக்கவிதை.

தம் நாட்டில் தந்தையுடன் பார்த்த நிலவினை, தந்தையையும், நாட்டினையும் இழந்தபிறகு காணும் நிலவுடன் ஒப்பிடுவதால் உருவாகும் அவலச்சுவையே புறநானூற்று கவிதையின் மைய உணர்வாகிறது. ஆனால் தேவதச்சனின் இக் கவிதையில் காண்பவரின் அக உணர்வானது புறக்காட்சியின் மீது பிரதிபலிக்கப்படுவதில்லை. ஆதலால், கவிதை தன்னளவில் ஒரு மொழியாலான ஆடியாக, வாசகனின் கற்பனைகளுக்கேற்ப பிம்பங்களைக் கூட்டும் தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

அன்று பிள்ளைப் பிராயத்தின் பயணங்களின்போது கூடவே வந்து மகிழ்வூட்டிய நிலவு, நமக்கு மட்டுமே சொந்தமானதொரு பரிசாக நினைவின் ஆழத்துள் புதைந்திருக்கிறது. உறக்கத்தின் நடுவில் விழித்துக் கொள்ளும்போது ஜன்னலின் ஊடாக நம்மையே உற்று நோக்கும் நிலவை அப்பரிசின் மிச்சமாக இன்றும் காணலாம். நாம் கேட்டு வளர்ந்த கதைகளில் நமது கற்பனைக்கெட்டும் தூரத்தில் தவழ்ந்து கொண்டிருந்த நிலவு இப்போது செயற்கைக் கோள்களில் பயணித்து ஏறவேண்டிய வேற்றுகிரகமாக மாறிவிட்டிருக்கிறது. இவ்விருவேறு நிலவுகளுக்கிடையிலான தொலைவே நம் கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான தொலைவாகவும் விரிந்து கிடக்கிறது. இத் தொலைவை கடக்குமொரு பயணமாகவே மேற்கண்ட இரு கவிதைகளை குறித்த வாசிப்பு அமைகிறது.