Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
சினிமாவுக்குப் போன சித்தாளு
பாலசுப்ரமணியன்

புதிய அரசியல் நடவடிக்கைகள் அவைகளுக்கான புதிய கலை வடிவங்களை உருவாக்கும் அல்லது நிலவும் கலை வடிவங்களில் தனக்கான மாற்றத்தை செய்யும். அரசியல், கலை வடிவங்களின் மூலம் அதற்கான அழகியல் வெளிப்பாட்டையும், இயங்கு தளத்தையும் பெற்றுக் கொள்ளும். இரண்டின் வளர்ச்சிக்கு இரண்டும் அவைகளுக்கான பங்கை ஆற்றியபடி இருக்கும். தொண்ணூறுகளில் உருவான தலித் அரசியல் முனைப்பு அதற்கான கலை வெளிப்பாடான தலித் இலக்கியத்தையும் உருவாக்கியது. இவ்விரண்டும் அதனதன் தளத்தில் புதிய எழுச்சிகளைத் தோற்றுவித்தன. தேசியம், மார்க்ஸீயம் போன்ற சமூக முழுமைக்குமான ஒற்றைத் தன்மையுள்ள அரசியல் சிந்தனைகளுக்குப் பின்பு குழுக்களுக்கான அரசியல் மரபுகள் தோன்றின.

Actor இவ்வகையான துணை அரசியல் மரபுகள் ஒருபோதும் சமூக முழுமைக்குமான ஒன்றாக மாறக்கூடிய வாய்ப்பற்றதாக இருக்கும். இதற்கு இலக்கியம் விதிவிலக்காக இருக்கலாம். தலித் இலக்கியம் பொது வாசகர்களிடத்தில் பெற்ற வரவேற்பை தலித் அரசியல் அனைத்துப் பிரிவு மக்களிடமும் பெற முடியவில்லை. ஒரு பார்வையில் இலக்கியத் தேர்வு ஆபத்தில்லாத அரசியல் சார்பாக இருப்பதும் அதன் காரணமாக இருக்கலாம். கடந்த பதினைந்து ஆண்டுகளில் துணை அரசியல் நடவடிக்கை எந்த உயரத்தை அடைந்து தேக்கமுறுமோ அந்த இடத்தை தலித் அரசியல் அடைந்து விட்டது. அதைப் போலவே அதன் இலக்கிய வடிவமும், இவ்விடத்திலிருந்து அப்படியே தேய்ந்து போகாமல் தலித் அரசியல் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உண்டாகிறது. அதன் கலை வெளிப்பாட்டு வடிவங்களிலும் மாற்றத்தை கொண்டு வருவது அதற்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும். இதன் பின்னணியில் திருமாவளவனின் சினிமா பிரவேசத்தைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பலம் வாய்ந்த கலை வெளிப்பாடு சினிமா. அதனை தேசியம் பயன்படுத்தியிருக்கிறது. பிறகு திராவிடம், மார்க்ஸீயம் பயன்படுத்தியிருக்கின்றன. தலித் அரசியல் இன்னும் அதனை ஒரு ஊடகமாக பயன்படுத்தத் துவங்கவேயில்லை. முழுதும் வியாபாரமாகிவிட்ட தமிழ் சினிமா தலித் அரசியல், பண்பாடு கலாச்சாரம் பற்றிய வெளிப்பாட்டிற்கு இடம் தராது என்பது மிகத் தெளிவானது. இம்மாதிரியான ஒரு இடத்தில், சினிமாவில் நடிப்பதின் மூலம் தான் முன்வைக்கும் அரசியலுக்கு ஒரு பரந்துபட்ட வெகுஜன கவனத்தை உருவாக்க முடியும் என திருமாவளவன் நம்பினால் அது நிச்சயமாக அவருடைய அறியாமையாகத்தான் இருக்க முடியும்.

தனது வெள்ளித்திரை தோற்ற மயக்கத்தை திருப்தி செய்து கொள்ளமுடியுமென அவர் நம்பினால் வியாபார ரீதியில் வெற்றிபெறாத, கலைத் தன்மை சிறிதுமில்லாத திரைப்படங்களில் பங்காற்றுவதின் மூலம் விரையில் அந்த எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நேரிடும். அவரால் வெகுகாலத்திற்கு நீடிக்கிற சினிமா வளர்ச்சியை எம்.ஜி.ஆர். போல அடைய முடியாது என்பது தெளிவாகத் தெரிகிற பிறகும் தொடர்ந்து சினிமா முயற்சிகளில் ஈடுபட முனைந்தால் அது அவரது அரசியல் நடவடிக்கைகளில் கவனக் குறைவை உண்டுபண்னும். எதிர்கால தலித் அரசியலில் ஈடுபடும்.

இன்னும் அரசியலில் நுழையாத தலைமுறையினர் இதனை நகைப்பிற்குரிய முட்டாள் தனமாகத்தான் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றவர்கள் முதலில் நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அரசியலிலிருந்து நடிப்பதற்குப் போனவர்கள் கோமாளிகளாகத்தான் ஆனார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போனவர்களும் அதனை கேலிக்கூத்தாகத்தான் ஆக்கினார்கள்.

தமிழக அரசியல் களளத்தில் தலித் அரசியலுக்கான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள் கிருஷ்ணசாமியும், திருமாவளவனும். இவ்விருவரில் தாக்குப்பிடித்து நிற்பது திருமா மட்டுமே. தேர்தல் கூட்டணி சேர்வது, தொகுதி உடன்படிக்கை பேரம் பேசுவது என திமுக, அதிமுக மே¬ஐகளில் தவிர்க்க முடியாத அங்கமாக தங்கள் கட்சிகளை வளர்த்தவர்கள் இவர்கள். தற்போது சட்டமன்றத்தில் 3 உறுப்பினர்கள் எனுமளவிற்கு திருமாவளவன் அடைந்த அரசியல் வளர்ச்சியை கிருஷ்ணசாமி அடைய முடியாது. அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பவராக திருமாவளவன் காட்டிக் கொண்டார்.

தமிழ் அடையாளம் பேசுவது, தமிழில் பெயர் சூட்டிக் கொள்வது, இத்தளத்தில் இராமதாஸ§டன் சேர்ந்து செயலாற்றுவது என தலித் அரசியலைத் தாண்டியும் தனது கட்சியை பொது அடையாளத்திற்குள் நுழைக்கிற முயற்சியில் ஈடுபடுவது அவர் மட்டுமே. இத்தருணத்தில் சினிமாவில் நடிக்கிற ஆசையை யார் அல்லது எது தூண்டியதோ அவர் திசைமாறிப் பயணிக்கிறார். தலித் அடையாளம் மட்டுமே அரசியலில் உயரத்தை எட்டுவதற்கு உதவாதது என நினைத்து வேறு அடையாளங்களையும் தேடிப் போகிறார் போலும். வேறு எம்மாநிலங்களிலும் இம்மாதிரியான தலித் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களுக்கு தனது இந்த வெளிப்பாட்டுத் தளத்தை ஒரு முன்மாதிரியாக வைப்பாரா?

கலை வெளிப்பாடு ஓர் அரசியல் நடவடிக்கையாகும். தமிழ் சினிமா ஒரு வியாபாரம் எனும்போது அது ஓரளவிற்கு தனது தேசிய, திராவிட, மார்க்ஸீய சார்பை வெளிப்படுத்தியது. அதற்கு இவ்வரசியல் நடவடிக்கைகளின் சமூக முழுமைத் தன்மையும், வியாபார வெற்றக்கான பார்வையாளர்கள் பரப்பைக் குறித்த நம்பிக்கையும் காரணமாகும். அதுவும் எந்த அரசியல் வெற்றி அடைகிற ஒன்றாக இருக்கிறதோ அதை மட்டுமே வெளிப்படுத்தியது. உதாரணத்திற்கு திராவிடம் உச்சத்தில் இருந்த போது வெளிப்படுத்தியது. உதாரணத்திற்கு திராவிடம் உச்சத்தில் இருந்த போது தேசிய சார்புமிக்கத் திரைப்படங்கள் வெளிவரவேயில்லை. மேற்சொன்ன அரசியல் அடையாளங்களை அந்தந்தக் காலத் திரைப்படங்களில் பங்காற்றியவர்கள் வெளிப்படுத்தியது போல திருமாவளவன் தலித் அடையாளங்களை தான் பங்கு பெறும் திரைப்படங்களில் வெளிப்படுத்துகிறாரா?

அரசியல் படங்களேயற்ற ஒரு சமூகமாக தமிழ் சமூகம் இருக்கிறது. அதன் சமகால அரசியல் வறட்டுத்தனத்தைப் போலவே தமிழகம் சினிமாவிலும் வறட்டுத்தனத்தையே கொண்டிருக்கிறது. பெரும் முதலீடுகள், கண்கள் கூசும் நட்சத்திர நடிகர்கள் என அது சில்லறை நோக்கங்களுடைய வாணிபமாக வளர்ந்திருக்கிறது. இந்நிலையில் தேசியம் செய்யாத, திராவிடம் செய்யாத ஒன்றை, மார்க்ஸீய இயக்கங்கள் செய்து பார்த்த ஒன்றை, தலித் இயக்கங்கள் செய்யலாம். மாற்று சினிமா நடிவடிக்கைகளில் அது தனக்கான தளத்தை உருவாக்கலாம். தலித் அடையாளம், பண்பாடு, கலாச்சாரம், அம்மக்களின் தனித்த அவமானங்கள், கொண்டாட்டங்கள் போன்றவைகள் குறித்த பதிவுகள் தமிழ் சினிமாவில் இல்லை. தமிழகத்தில் அது இருக்கிறதா எனுமளவிற்கு மாற்று சினிமா என்பது பாலவீனமாக செயல்படுகிற ஒன்று. அது பரந்த அளவில் தனக்கான அரசியல் பின்புலத்தை தமிழகத்தில் பெற்றிருக்கவில்லை. இந்த வாய்ப்பு மார்க்ஸீய இயக்கங்களுக்குப் பிறகு சம காலத்தில் தலித் இயக்கங்களுக்கு இருக்கிறது. அதனை திருமாவளவன் போன்றவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்.

தலித் வாழ்வைக் காட்டும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்படக் கூடிய திரைப்படங்களை புதிய அழகியல் தன்மையுடன் அவர் தனது இயக்க மாநாடுகளில், பொதுக்கூட்டங்களில் திரையிடலாம். இம்மாதிரி வடிவங்களில் காட்சி ஊடகத்தில் செயல்படுவதற்கான பட்டறைகளை தனது இயக்க இளைஞர்களுக்கு நடத்தலாம். உலக சினிமாவைக் குறித்த அறிவைக் கொண்டு சேர்க்கலாம். அடுத்த தலைமுறை தலித் இளைஞர்களை அறிவார்ந்த பாதையில் வளர்த்தெடுப்பதின் ஒரு அடையாளமாக, இம்முயற்சிகளில் அவர் ஈடுபடலாம். இதன் மூலம் தலித் இளைஞர்கள் உச்ச நட்சத்திரங்களின் மீதான மயக்கங்களிலிருந்து தெளிவடையலாம்.

நட்சத்திரங்களின் மீது எல்லா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மயக்கம் இருக்கிற போதும் அது வாக்காக மாறுகிற வரலாறு தலித்துகளிடம் மட்டுமே உண்டு. அம்மக்களை இந்தச் சுரண்டலிலிருந்து விடுவிக்கிற முயற்சியில் திருமா தனது சினிமா முயற்சிகளைச் செய்யலாம். அதை விடுத்து வியாபார சினிமாவில் தலைகாட்டி, தனது இயக்கத்தின் மீது கவனத்தைத் திருப்ப முடியும் என தொடர்ந்து அவர் நம்பினால் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கோமாளியாகத்தான் தோற்றமளிப்பார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP