Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
செப்டம்பர் 2006

கொடுமைகளை மறக்காமல் இருக்க ஒரு ஆவணம்!

இந்திராகாந்தி ஏறத்தாழ இரண்டாண்டு காலம் உருவாக்கியிருந்த உள்நாட்டு நெருக்கடி நிலை பற்றிய ஒரு வரலாற்று நூலை முதன் முதலாகத் தமிழில் படைத்திருக்கிறார் இரா.சுப்பிரமணி. நெருக்கடி நிலைக் காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை, இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி மு.கருணாநிதி, சிட்டிபாபு, எஸ்.என்.சம்பந்தம், தியாகு, இராம.கோபாலன், கயிலை மன்னன் போன்றோர் பதிவு செய்துள்ளனர். சென்னை மத்திய சிறையில் இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஆணையமும் பல முக்கிய செய்திகளைப் பதிவு செய்துள்ளது. ஆயினும், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததற்கான சுயநல அரசியல் பின்னணியிலிருந்து தொடங்கி, இந்திய அளவிலும் தமிழக அளவிலும் அது மனித உரிமைகள் மீது தொடுத்த தாக்குதல்கள், எடுத்துக்கொண்ட இரத்த பலிகள் ஆகியவற்றைக் கோர்வையாக எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். இதன் மூலம், இந்திய மக்களுக்கு இந்திரா காந்தியாலும் அவரது கட்சியாலும் இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்கமுடியாதபடி செய்யும் வலுவான ஆவணமொன்றை நமக்கு வழங்கியுள்ளார்.

நெருக்கடிநிலைக் காலத்தின் கொடுமைகளுக்கான இரத்த சாட்சிகளை உருவாக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இந்திரா காந்தி, காங்கிரஸ், எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. ஆகியோரின் கொடுமைக்குள்ளானவர்கள், ஒடுக்கியவர்களின் இரத்த உறவுகளாக, இரத்தத்தின் இரத்தமாக மாறி, மிசா கொடுமையானதா, பொடா கொடுமையானதா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்குச் சந்தர்ப்பவாத நாடாளுமன்ற (சட்டமன்ற) அரசியல் சீரழிந்திருப்பதை இந்த நூல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தால் எவ்வாறு மாற்றப்பட்டது, தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திரா காந்தி கொண்டுவந்த சட்டத்திருத் தங்களுக்கு அதன் ஒப்புதல் பெறப்பட்டது எவ்வாறு? என்பதை இந்த நூல் விளக்குகிறது. இந்த விளக்கத்துக்குத் துணையாக இரு பிற்சேர்க்கைகள் உள்ளன.

இந்த நூலின் மிகச் சிறப்பான பகுதி, இந்தியப் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி இரா.சுப்பரமணி தொகுத்துத் தந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகும். இந்திய மண்ணில் முதன்முதலில் பத்திரிகை தொடங்கியவர் ஹிக்கி என்னும் ஆங்கிலேயர்தான் என்னும் தகவலைத் தரும் முதல் தமிழ் நூல் இதுதான். பத்திரிகை சுதந்திரத்திற்காக ஹிக்கி தொடங்கிய போராட்டம், நெருக்கடி காலத்தில் பல்வேறு வகையான அரசியல் கருத்துநிலை கொண்டவர்களால் எடுத்துக்காட்டாக, முரசொலி, விடுதலை, துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஸ்டேட்ஸ் மென், விடியல், சமரன் பத்திரிகைகளை நடத்தியவர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பதை அப்பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களும் மேற்கொண்ட சாதுர்யமான உத்தியைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மிகச் சுவைபட விளக்கியுள்ளார்.

இந்த உத்திகள் பல. எந்தவொரு சோதனைக் கட்டத்திலும் தமது கருத்துரிமையை இழக்க விரும்பாத, மக்களின் குடிமை, உரிமையைப் பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் மு.கருணாநிதியின் கொள்கை சமரசங்களையும், அரசியல் சந்தர்ப்பவாதங்களையும், விலக்கிவிட்டுப் பார்த்தால், நமது காலத்தில் வாழ்ந்த, வாழும் மிகச் சாமர்த்தியமான, நுண்மதிமிக்க பத்திரிகையாளர்களில் முதலிடம் வகிப்பவர்களில் அவரும் ஒருவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறார் இரா.சுப்பிரமணி. நெருக்கடி நிலை காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரசும், தினமணியும், ஆற்றிய துணிச்சலான, நேர்மையான பாத்திரத்தைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், இந்து நாளேட்டின் முதுகெலும்பின்மையை எடுத்துரைத்திருக்கலாம். தினமணி வெளியிட்ட துணிச்சலான கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பல்வேறு புனைப்பெயர்களில் எழுதிய அதன் அப்போதைய ஆசிரியரான ஏ.என். சிவராமன் அவர்களது பங்களிப்பைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் தென்மொழி, விடியல், சமரன் ஆகிய சிற்றேடுகள் தமது கொள்கைப் பற்றில் உறுதியாக நின்று நெருக்கடிக்கால ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரலெழுப்பியதும் காலஞ்சென்ற பெருஞ்சித்திரனார் அவர்களும் விடியல் வேணுகோபாலும் அனுபவித்த கொடுமைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நக்சலைட் புரட்சியாளர் ஏ.எம்.கோதண்ட ராமன் சமரன் ஏட்டின் வழியாக மட்டும் எதிர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சென்னை மத்திய சிறையில் மிசா கைதிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அனைத்துக் கைதிகளையும் திரட்டிச் சிறைக்குள்ளேயே உறுதியான போராட்டங்களையும் நடத்தினார். நெருக்கடிநிலைக் காலத்தில் சிறைகளிலிருந்த நக்சலைட் புரட்சியாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆகியோரது அனுபவங்களும் சாட்சியங்களும் இன்னும் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அதே போல, தீக்கதிர் பத்திரிகை எவ்வாறு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது என்பது குறித்த தகவல்கள் இந்த நூலில் இல்லை. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், முரசொலி, துக்ளக், விடுதலை போன்ற பத்திரிகைகள் போல வெகுமக்களைச் சென்றடையும் வீச்சும், வலிவும், தென்மொழிக்கோ விடியலுக்கோ இருக்கவில்லை என்றாலும் அவற்றை நடத்தியவர்களின் நெஞ்சுரம், நேர்மை, மதி நுட்பம் ஆகியவற்றின் பொருட்டு அவற்றின் செயல்பாடுகள் பதிவு செய்யத்தக்கவை. கட்சி சாராத அன்றைய கலை இலக்கிய சிற்றேடுகளில் பிரக்ஞை வித்தியாசமானது. நெருக்கடி நிலையைக் கண்டனம் செய்யும் வகையில் கவிதைகள், மொழியாக்கங்கள், சிறுகதைகள் வெளியிடப்பட்டன.

கருத்துநிலை எதனையும் சாராத நடுநிலை நோக்கில் வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளிலொன்று, நூலாசிரியர் அறிந்தோ அறியாமலோ சோ ராமசாமி போன்ற வலதுசாரிப் பிற்போக்குவாதிகள், இராம.கோபாலன் போன்ற சங்க பரிவார ஆட்கள் ஆகியோரின் ஜனநாயக உணர்வு குறித்த விமர்சனமற்ற ஒரு சித்திரம் இந்த நூலிலிருந்து எழுவதாகும்.

நூல் கிடைக்குமிடம்: 9444204387


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com