Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
செப்டம்பர் 2006

தமிழர் தலைவர்
சாமி.சிதம்பரனார்

ஈ.வெ.ரா. கதர் வளர்ச்சிக்காக ராட்டினத்தைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வந்தார். கதர் மூட்டைத் தூக்கி விற்றார். அந்நிய நாட்டுத் துணியை விலக்க வேண்டுமென்பதற்கும், கதரையே அணிய வேண்டுமென்பதற்கும் இவர் சொல்லும் விதவிதமான காரணங்கள் கேட்பவர்கள் மனதை அவ்வினாடியிலேயே கவ்விவிடும். சுருங்கக் கூறவேண்டுமானால் தமிழ்நாட்டில் இன்று கதர் உடுத்துபவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரும், இதுவரையில் கதர் உடுத்தி இப்போது கைவிட்ட பல்லாயிரக்கணக்கானவரும் ஈ.வெ.ராவின் சொற்பொழிவைக் கேட்டுக் கதர் அணிந்தவர்களேயாவார்கள்.

‘கோர்ட்டு'களை விலக்க வேண்டும் என்பதைச் செயலில் காட்டியவர் இவரேயாகும். இக்கொள்கையின் பயனாய்த் தம் குடும்பத்திற்கு வரவேண்டிய சுமார் 50,000 ரூபாயை இழந்தார். அதில் 28,000 ரூபாய்க்கு ஒரு அடமானப் பத்திரம் இருந்தது. ஒத்துழையாமை காரணமாய்க் கோர்ட்டுக்குப் போய் அதை வசூலிக்க ஈ.வெ.ரா. விரும்பவில்லை. காங்கிரசுக்குத் தலைவராக இருந்த சேலம் சி.விஜயராகவாச்சாரியார் அவர்கள் இதையறிந்தார். "இந்தப் பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உமக்கு இஷ்டமில்லையானால் நீர் அதை ‘மேடோவர்' (மாற்றி) செய்து கொடுத்துவிடும். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தையடைய உமக்கு இஷ்டமில்லையானால், வசூல் செய்ததும் அதைத் திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடும்" என்று ஈ.வெ.ராவிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார். அது சமயம் அவர் திரு.விஜயராகவாச்சாரியாருக்குச் சொன்னதாவது: ‘நானே வழக்காடுவதும் ஒன்று தான் உங்களிடம் எழுதிக்கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான். இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல. கொள்கையே பெரிது, பணம் பெரிதல்ல," என்பதாகும்.

ஒரு பொதுக்கூட்டத்தில் இந்தப் பிரஸ்தாபம் வந்தபோது, "இந்தச் சேதி உண்மையா?" என்று திருச்சி தோழர் ச.ம.சி.பரமசிவம் அவர்கள் சேலம் திரு. விஜயராகவாச்சாரியாருக்குக் கடிதம் எழுதிக் கேட்டார். அதற்கு ஆச்சாரியார், "ஆம்" என்று பதில் எழுதியதோடு, ஈ.வெ.ராவின் விஷயத்தில் இதைப் பற்றித் தமக்கு எழுதிக் கேட்டது அதிசயமிருந்ததென்றும் அக்கடிதத்தில் குறிப்பட்டிருந்தார்.

மதுவிலக்குப் பிரச்சாரம் மும்முரமாக நடந்தபோது, காந்தியார் ஒரு பணியிட்டார். "கள்ளுக்கு உதவும் மரங்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும்" இது அப்பணி வட நாட்டில் பெரும்பாலும் கள் தருவது ஈச்ச மரங்கள். அவைகளை வெட்டி வீழ்த்துவதால் பெருஞ்சேதம் இல்லை. தென்னாட்டில் அப்படியல்ல. இங்கே கள் இறக்கப்படுவது தென்னை மரங்களில். தென்னையின் பயன் மிகமிகப் பெரியது. இவைகள் அழிக்கப்பட்டால் நாட்டுக்குப் பொருட்சேதம் பல. இதைப் பற்றிக் காந்தியார் சிந்திக்கவே இல்லை போலும்! காந்தியாரின் பணியைப் பலர் ஏற்றனர். வடநாட்டில் பல இடங்களில் ஈச்ச மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இச் செய்தி, செய்தித்தாள்களில் வந்தன. கண்டார் ஈ.வெ.ரா. காந்தீய வெறியில் மூழ்கியிருந்தார் அல்லவா? தமது தோட்டங்களிலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார். அக்காலத்தில் காந்தீய வெறியினால் தென்னைகளை வெட்டி வீழ்த்திய பைத்தியக்காரர்களில் இவரே தலைசிறந்தவர் என்று கூறலாம்.

1921ஆம் ஆண்டில் கள்ளுக்கடை மறியல் மிகவும் புகழ் பெற்றது. ஈரோட்டில் மறியல் மும்முரம் மிகுதி. ஈ.வெ.ரா. மறியலைத் தலைமை தாங்கி நடத்தியவர். இதற்காக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மறியல்காரர்கள் தடையுத்தரவைப் பொருட்படுத்த வில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை புகுந்தனர். 1921 நவம்பரில் ஈ.வெ.ராவும் அவரோடு சுமார் 100 தொண்டர்களோடு சிறைப் பிடிக்கப்பட்டார். ஒரு மாதம் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி. நாடெங்கும் கலவரம். இச்சமயம் நாகம்மையாரும், ஈ.வெ.ராவின் தங்கை கண்ணம்மாளும் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர். மறியல் செய்பவர்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர்.

நாகம்மையாரும், அவருடன் சென்ற தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி 10,000 பேர்களுக்குச் சிறை வேண்டியிருக்குமென்று அதிகாரிகள் கருதி, சென்னை அரசாங்கத்துக்குத் தந்தி கொடுத்து முன்னறிவுடன் தடையுத்தரவை நீக்கினர். அதுசமயம் சர்க்கார் 144-க்கு மதிப்பற்று வாய்தா காலத்திற்குள் ரத்து செய்யப்பட்டது இது ஒன்றேயாகும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு குடும்பத்துடன் தேசத்திற்குத் தியாகம் செய்த இராமசாமியாரை இன்று சிலர் நாக்கில் நரம்பின்றித் தேசத்துரோகி என்று தூற்றுகின்றனர். என்னே இக்கற்றுக் குட்டிகளின் பேதமை.

இச்சமயம் பொதுவாகவே இந்தியாவில் நடந்துவந்த ஒத்துழையாமைக் கிளர்ச்சி சம்பந்தமாகக் காங்கிரசுக்கும், அரசாங்கத்துக்கும் ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இதற்காகப் பம்பாயில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற சர்.சங்கரன் நாயர் தலைவர். இம்மாநாட்டின் பெயர் மாளவியா மாநாடு. இம்மாநாட்டின் நடவடிக்கை துவக்கப்படும் முன்பு திரு. பண்டிட் மாளவியா அவர்களும், சர்.சங்கரன் நாயர் அவர்களும் ‘மறியலை நிறுத்திவிட்டு, நடவடிக்கை துவக்கலாம்' என்று காந்தியாரைக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது காந்தியார், ‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும்" என்று பதிலுரைத்தார். இச்செய்தி அச்சமயம் 19-1-22ஆம் தேதி வெளியான "ஹிந்து" பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காந்தியார் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், ஈ.வெ.ராவின் மனைவி நாகம்மையார், அவரது தங்கை கண்ணம்மாள் ஆகிய இரு பெண்மணிகளும் மறியலுக்கு முக்கிய காரணமானவர்கள். ஆதலால் அவர்களின் கருத்தையறிந்த பின்பே முடிவு செய்ய வேண்டுமென்று கருதிக் கூறியதேயாகும்.

கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன் முதல் முடிவுசெய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. அவர்கள் வீட்டில் காந்தியார் முதலிய தலைவர்கள் கூடின காலத்தில் கள்ளுக்கடை மறியல் செய்ய வேண்டுமென்று பேசி முடிவு செய்யப்பட்டது. அம்முடிவுக்கு அடிப்படை ஈ.வெ.ராவின் முழு ஆதரவேயாகும். இவ்வுண்மையை இளங்கன்றுகள் சில அறியாதிருக்கலாம். ஆனால் காந்தியாரும், ஆச்சாரியாரும் மறந்திருக்க முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com