Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thaagam
Thaagam Logo
செப்டம்பர் 2006
கட்டுரை

தமிழ் ஈழம்...
கலைஞர் நினைத்தால் சாதிக்கலாம்!
-பழ. நெடுமாறன்

இங்கே உள்ள தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு திரண்டிருக்கிறார்கள். இதிலே கட்சி பேதமில்லை, சாதி பேதமில்லை, மத பேதமில்லை. தமிழர்கள் என்ற உணர்வோடு திரண்டிருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிற உணர்வு நீடித்து நிற்குமானால் நிச்சயமாக டெல்லி அரசை அசைய வைக்கலாம். செஞ்சோலைச் சிறார்கள் ஆயுதம் ஏந்திப் போராட வந்தவர்கள் அல்ல. போரிலே பெற்றோரை இழந்து, உற்றாரை இழந்து அனாதைகளாகி உரிமைகளை இழந்தவர்களை நமது தமிழீழத் தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அரவணைத்தார். அனாதை என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் செஞ்சோலைச் சிறார் இல்லம். அதன் மீதுதான் திட்டமிட்டே தாக்குதல் நடத்தி, கொலை செய்திருக்கிறது சிங்கள இராணுவம்.

Nedumaran இது சிங்கள அரசுக்கும் தெரியும். இப்படித் தாக்குதல் நடத்தினால்தான் பிரபாகரனுக்கு உள ரீதியாகத் துன்பம் கொடுக்கலாம் என்று கருதி இப்படி செயல்பட்டிருக்கிறது இலங்கை ராணுவம். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. தன் மக்கள் மீது ஒரு அடி விழுந்தால் திருப்பி 9 அடி கொடுக்கும் வரை பிரபாகரன் ஓய மாட்டார். இன்றைக்குத் தமிழகத்திலே கட்சி கடந்து கண்ணீர் விடப்படுகிறது. ஏனென்றால் இது கட்சி பிரச்சினையல்ல. தமிழர் பிரச்சினை. நமது மதிப்பற்குரிய முதலமைச்சர், சட்ட மன்றத்திலே நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார் நான் அதைப் பாராட்டுகிறேன். எங்கள் மாநாட்டிற்குத் தடை போட்ட போது இந்தச் சகோதரப் பாசம் இருந்ததா என்பதுதான் கேள்வி.

எங்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக டெல்லிக்குச் சென்று, தமிழீழப் பிரச்சினையிலே இதை இதைச் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவதுதான் அவரது கடமை. சட்ட சபையில் தீர்மானம் போட்டதற்கு நன்றி. அதற்கு அடுத்தபடியாக நீங்கள் டெல்லிக்குச் சென்றிருக்க வேண்டும். பிரதமரையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை கொடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர் நினைத்தால் இதைச் செய்ய முடியும். இருந்த இடத்தில் இருந்து கொண்டு இந்த இந்த மந்திரி பதவி கொடுக்காவிட்டால்..... என்று எச்சரித்தவர் அவர். ஈழத்தமிழர்கள் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிற இந்தக் காலகட்டத்தில் தயவு செய்து டெல்லிக்குப் போங்கள். இதை இதைச் செய்யுங்கள் என்று வலியுறுத்துங்கள். அதற்கான வலிமையும் உரிமையும் அதிகாரமும் முதலமைச்சரிடம் இருக்கிறது.

1983இல் தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று சிங்களர்கள் கொலை வெறியாட்டம் நடத்தியபோது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் தனது வெளிநாட்டு அமைச்சர் மூலமும், வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சி.பார்த்தசாரதி மூலமும், 24 மணி நேரத்தில் கலவரத்தை நிறுத்தாவிட்டால் இந்தியா தலையிட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் போய் எச்சரித்தார்கள். ஜெயவர்த்தனே அரசு நடத்திய கலவரம் ஓய்ந்தது.

ஆனால், சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் காரர்கள் இலங்கைப் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் வலியுறுத்த வேண்டாமா? காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்ன?

இந்தோனேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர் பிரதமர் நேரு. அவரது மகள் இந்திராகாந்தி வங்கதேச விடுதலைக்குத் துணை நின்றார். ஆனால், நேருவின் பேரன் இந்திராவின் மகன் ராஜீவ் காந்திக் காலத்தில் ஈழ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நசுக்க இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் விடுதலைக்காக நேருவும் இந்திராவும் குரல் கொடுத்த வரலாறு தெரியாத காங்கிரஸ்காரர்கள், பஞ்சத்துக்கு ஆண்டிகள் போலப் பதவி ஆசைக்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ராஜீவ் காந்தியைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. இந்திராகாந்தி இலங்கைப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டார். திரிகோணமலையில் யார் படைத் தளம் அமைத்தாலும் அது இந்தியாவுக்குத் துரோகமான செயலாகக் கருதப்படும் என்பதில் தெளிவாக இருந்தார். இலங்கை, இந்தியாவின் பிராந்திய அமைதிக்கு உட்பட்ட நாடு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்திராகாந்தி இறந்த அடுத்த மாதம் இஸ்ரேல், பாகிஸ்தான் உள்பட எல்லா நாடுகளும் இலங்கைக்குள் வந்தன. ராஜீவும் ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிராகத்தான் இருந்தார்.

ராஜீவ் காந்தி இருந்தபோது இலங்கைப் பிரச்சினை சுமூகமாக இருந்தது போலவும், அவர் மறைந்ததால்தான் எல்லாம் கெட்டு விட்டது என்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். உண்மை நிலவரம் என்ன என்பது உங்கள் மனசாட்சிக்கே தெரியும். எனவே, இந்தப் பிரச்சினையைக் குழப்புவதில் முதலமைச்சர் ஈடுபடக்கூடாது. இந்திய அரசை வழி நடத்துகிற கூட்டணியில் மூத்த தலைவர் நீங்கள், உங்கள் மீது எல்லாத் தலைவர்களுக்கும் மரியாதை இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தச் செய்ய வேண்டும். ஆனால் டெல்லியோ 6 கோடித் தமிழர்களையும் அவமதித்துக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் சும்மா விட்டுவிடலாம். தமிழர்கள் விட மாட்டார்கள்.

ஒவ்வொரு மாநிலமும் டெல்லியிடம் தனக்கு வேண்டிய காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் டெல்லி தலையிட இதைவிட வேறு எப்போது வாய்ப்பு அமையும்? இதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே... உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது.

சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால், இதில் முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை இந்திய அரசே ஏற்றுக் கொள்ள வில்லை. விலை போகாத சட்டத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 2% மக்கள் தொகை உள்ள சீக்கியர்கள் ஜனாதிபதியாக முடிகிறது. பிரதமராக இருக்க முடிகிறது. இலங்கையிலே ஒரு தமிழன் ஜனாதிபதியாக முடியுமா? அந்த நாட்டுச் சட்டத்தின்படி சிங்களர்தான் ஜனாதிபதியாக முடியும். பௌத்தம் தான் அரசாங்க மதமாக இருக்க முடியும். இந்த நிலைமையில் மாநில சுயாட்சி அதிகாரம் என்று இந்தியா வலியுறுத்துவது யாரை ஏமாற்ற? இது நியாயமா? இவர்களுக்கு இந்திய நிலைமையும் தெரியவில்லை. இலங்கை நிலவரமும் தெரியவில்லை.

யார் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும், யார் எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் சுதந்திர தமிழீழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது.

இலங்கைக்கும் ஈழத்திற்கும் ஒப்பந்தம் என்றால், பிரபாகரன் கையெழுத்துப் போட்டால் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இலங்கைக்காக ராஜபக்சே கையெழுத்துப் போட்டால் ரணில் ஏற்றுக் கொள்ள மாட்டார். சிங்களவருக்குத் தலைவர் இல்லை. அதனால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்குப் பதில், நல்ல தலைவர்களை உருவாக்கிக் கொடுங்கள்.

இயக்குநர் சீமான்

பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்?

அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது?

காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீது, கொச்சைப் படுத்துகிறவர்கள் மீது அவனுக்கு ரோஷமும் வரமாட்டேங்குதே! கோபம் வரமாட்டேங்குதே! உள்ளே விடமாட்டேன் என்கிற கோவிலுக்குத்தான் காவடியும் தீச்சட்டியும் தூக்கிக் கொண்டு செல்கிறான். மானம், ரோஷம் மறந்தவன் எப்படி இந்தக் கூட்டத்துக்கு வருவான்? எல்லாம் அச்ச உணர்வு. திருடிவிட்டு, கொலை பண்ணி விட்டு, கற்பழித்துவிட்டுச் சிறைக்குப் போகிறவனை விட இனவிடுதலைக்காகப் போராடுகிறவன் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டான்?

ஒருவன் நம் கண்முன்னே ரத்தம் சிந்தி, கீழே விழுவதைப் பார்த்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? என் படம் வந்து 6 மாதமாகிறது. அடுத்த படத்துக்குச் சம்பளம் வாங்கிவிட்டு வேலை பார்க்காமல் இந்த மாதிரி கூட்டத்துக்கு ஏன் போறேன்னு பல பேர் கேட்கிறான். எனக்கு என் வருமானத்தைவிட இனமானம் பெரிது. சீமானுக்குச் சினிமா என்பது தொழில். நிஜத்தில் அவன் யார்? பெரியாரின் பேரன்.

என் மூதாதையர்கள் வாதாபி வென்றான், கடாரம் கொண்டான், என் பாட்டி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கல் எடுத்து வந்து கோயில் கட்டினான். கோட்டை கட்டி வாழ்ந்தான் என் பாட்டன், முப்பாட்டன். அந்த இனம் இன்று கோடித் துணியைக் கட்டிக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடக்கிறதே. என் இனம் ராமேஸ்வரத்துக்கே அகதியாய் வருகிறதே? இது என் இனத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிற கொடுமை. எங்கள் அண்ணன் காசி ஆனந்தன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
வண்டி இழுத்து
கொம்புகளை மறந்தன
மாடுகள்.

இன்றைய தமிழனுக்கு என்ன தெரியும்? ஒரு திரைப்படம் வெளியானால் அங்கே கட்அவுட் வைத்து, குடம் குடமா பாலை ஊற்றத் தெரியும். சில்லறையாகக் காசை மாற்றி வைத்துக் கொண்டு திரைக்கு முன்னால் வீசி விசிலடிக்கத் தெரியும். தண்ணியைப் போட்டுவிட்டு ஆடத் தெரியும். சண்டை போட்டுக் கொண்டு கத்தியை எடுத்து குத்திக் கொண்டு சாகத் தெரியும்.

திரைப்படத்தில், தாயைக் கெடுத்துக் கொன்றவனை, தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவனை, தன் அண்ணன் தம்பியை வெட்டிக் கொன்றவனை உச்சகட்ட காட்சியில் பழி வாங்கி முடிக்கிற கதாநாயகனை ஹீரோ, அவதார புருஷன் என்று கொண்டாடுகிற என் தமிழினம், இதை நிஜத்தில் இலங்கையில் செய்யும் போது அதைத் தீவிரவாதம் என்கிறது. சினிமாவில் நடிப்பவனுக்கு இந்தத் தேசம் விருது கொடுக்கிறது. ஆனால் நிஜத்தில் என் உறவுகள் கொல்லப்படும்போது நாங்கள் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

இங்குள்ள ஆறரைக் கோடித் தமிழர்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் சிங்களக் காவல் துறைக்கு இந்தியா பயிற்சி கொடுக்கிறது. சிங்களனுக்குப் பயிற்சி அளிக்கிறீர்களே..... பம்பாயில் குண்டு வைத்தவனைப் பிடித்தீர்களா? பெங்களூர் விஞ்ஞானிகள் மாநாட்டில் குண்டு வைத்தவர்களைப் பிடித்தீர்களா? உங்களிடம் பயிற்சி பெற்று அவன் என்ன செய்யப் போகிறான்?

இதையெல்லாம் நாங்கள் இந்திய இறையாண்மைக்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் இந்திய இராணுவத்தில் அதிகம் இருப்பவன் தமிழன்தான். கார்கில் போரில் அதிகமாகச் செத்தவனும் தமிழன்தான். கார்கிலுக்காக அதிகமாக நிதி வசூலித்துக் கொடுத்தவனும் தமிழன்தான். பிணமானவனும் தமிழன். பணம் தந்தவனும் தமிழன்.

போர்க்களத்தில் பெண்கள் மீது, சிறுவர் சிறுமிகள் மீது, பள்ளிக்கூடம் மீது, மருத்துவமனை மீது குண்டு வீசக் கூடாது என்ற தார்மீகம் உள்ளது. அந்தத் தார்மீகத்தையே மீறி குழந்தைகளைக் கொன்ற இலங்கை ராணுவத்தை இந்தியா கண்டிக்கவில்லையே? இந்த நாட்டில் வாழ்கிற ஒரு தேசிய இன மக்களை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற செயல் இது.

இந்திராகாந்தி அம்மையார் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள சீக்கியர்களையெல்லாம் நாடு கடத்தியதா இந்திய அரசு? பாதுகாப்பு பணியில், ராணுவத்தில் ஒரு சீக்கியரை சேர்க்க மாட்டோம் என முடிவு செய்ததா இந்தியா? அந்த இனத்தின் மீது பொருளாதாரத் தடை விதித்ததா? சில காலம் கழிந்த நிலையில், அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங்கை இந்நாட்டின் பிரதமராக அமர்த்தியிருக்கிறார் சோனியா காந்தி அம்மையார். ஆனால், நமது இனம் ஒரு பொதுவான பிரச்சினைக்கு ஒன்று திரள முடியாமல் உள்ளது.

தமிழீழத்தை ஆதரிக்காமல் இங்கே, எந்த அரசியல் கட்சியாலும் ஒரு வாக்கு கூட வாங்கமுடியாது என்ற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் செய்ய வேண்டிய பணி. இதய நோய்க்கு அறுவை சிகிச்சை என்பது வன்முறையா? அது மருத்துவம். அங்கே செய்து கொண்டிருப்பது மருத்துவம்.

எத்தனை காலமாக அங்கே ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்கள் போராளிகள். சிங்கள அப்பாவி மக்களை அவர்கள் கொன்றதாக ஒரு செய்தி சொல்லுங்கள். சிங்களப் பெண்ணின் தாவணியைத் தமிழன் தொட்டான் என்ற செய்தியைப் படித்திருப்பீர்களா? ஆனாலும் இந்த உலகத்தாரின் பார்வைக்கு இவர்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள்.

எல்லா இன விடுதலையையும் ஆதரிக்கிற நீங்கள், எங்கள் இன விடுதலையை மட்டும் ஏன் ஆதரிக்க மறுக்கிறீர்கள்? தமிழன் நாடு அடையக் கூடாது என்பதால்தானே! எல்லாருக்கும் தனி நாடு கிடைத்துவிட்டால் நாம் எங்கே போவது என்று இங்குள்ள பார்ப்பன சக்தி திட்டமிட்டதால்தான் இந்த நிலை. இப்படி இருந்தும், சிங்கள அரசு, தமிழர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறது தெரியுமா? இலங்கை அதிபர் ராஜபக்சே ஒவ்வொரு நாட்டுக்கும் பிச்சை எடுப்பது போலச் சென்று, எனக்கு ஆயுதம் கொடு, எனக்கு ஆயுதம் கொடு என்கிறான். ஆனால், புலிகள் யாரிடமும் ஆயுதம் கேட்பதில்லை. அதுதான் இலங்கை அரசுக்குப் பயம். இவன் யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேங்குறான். பேசவும் மாட்டேங்குறான் என்ன கணக்குன்னே தெரியலையே என்று மிரண்டு போயிருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் இரண்டு பேர் மல்லுக்கட்டி சண்டை போடும்போது, ஜெயிக்க முடியாதவன் அடுத்தவன் காதை கடிச்சிட்டு ஓடிடுவான். இந்தக் கேவலத்தைதான் சிங்கள ராணுவம் செய்கிறது. அவர்களால் சண்டை போட முடியவில்லை என்றதும், நம் தமிழ் சொந்தங்களைப் பிடித்து, முன்னே நிறுத்திக் கொள்கிறார்கள். இதற்குப் பெயர் சண்டையா? இதற்குப் பதிலாக நாண்டு கொண்டு செத்துப் போகலாம். இதுவரை புலிகளின் வழி காட்டுதலில் அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வீரன் என்பவன் வீரனோடு மோதவேண்டும்.

உலகத்திலேயே மோசமான வன்முறை என்பது எது தெரியுமா? தன்னை ஒருவன் திருப்பித் தாக்கவே மாட்டான் என்று தெரிந்து கொண்டு தாக்குகிறோமே அதுதான். அதைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. சிங்கள ராணுவம் செய்து கொண்டிருக்கிறது. வீரனோடு மோது; அப்பாவி குழந்தைகள் மீது ஏன் குண்டு போடுகிறாய்? இதிலிருந்து என்ன தெரிகிறது. அவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு ஒரே நாடாக இருக்கணும், மாநில சுயாட்சி என்றெல்லாம் இந்தியா பேசுவது எவ்வளவு ஹம்பக். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளே சின்ன சண்டை வந்தால் வீட்டை இரண்டாகப் பிரித்து விடுகிறான். இத்தனை ஆண்டுகளாக போராடிய பிறகும், செஞ்சோலையில் அப்பாவிப் பிஞ்சுகள் கொல்லப்பட்ட பிறகும், இலங்கையில் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு கேவலமான பேச்சு, தனி ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை.

இவற்றை விட்டுவிட்டு வேறு பஞ்சாயத்துப் பேசாதீர்கள். நாட்டாமை... தீர்ப்பை மாற்றிச் சொல்லுங்கள். இங்கே என்ன பிரச்சினை தெரியுமா? கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா இங்கே இருக்கிற தேசிய கட்சிகளெல்லாம் மாநில நலத்தைப் பேசுகின்றன. நம் மண்ணில் இருக்கிற மாநிலக் கட்சிகளோ தேசியம் பேசுகின்றன. அதுதான் இங்கே பிரச்சினை.

இதை எல்லாம் புரியாமல் தமிழன், விஜயகாந்த் பின்னால் போகிறான். அவருக்கு இடஒதுக்கீட்டில் அக்கறை இருக்கிறதா? இனப் பிரச்சினையில் அக்கறை இருக்கிறதா? இவர் பிறந்தநாள் கொண்டாடாவிட்டால் ஈழம் கொடுத்திடுவான் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏன், ஈழம் கிடைக்கும் வரை சோறு தின்ன மாட்டேன் என அறிவிப்பு செய்யுங்களேன்!.

அஜிதா

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது நமது நடுவண் அரசு லெபனானுக்கு 25 ஆயிரம் டன் கோதுமையும், தண்ணீரும், மருந்துகளும் கொடுத்திருக்கிறது. அதேபோல ஈழத்தில் பொது மக்களும் குழந்தைகளும் நீரின்றிச் சாகவில்லையா? எங்களுடைய வரிப்பணத்தில் லெபனானுக்கு உதவிகளைச் செய்யும்போது, இலங்கைக்கு அனுப்பாததற்குக் காரணம் என்ன? இந்தக் கேள்வியைத் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்க முடியும். ஆனால், இந்திய இறையாண்மைக்குப் பாதகமான எதையும் வெளிப்படுத்தமாட்டோம் என்று ஒரே வரியில் பதில் வரும்.

ஈராக் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது உலக நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. ஆனால் செஞ்சோலைத் தாக்குதலுக்காக இந்தியாவே மவுனம் சாதிக்கும்போது உலக நாடுகளிலிருந்து சிறு அளவு எதிர்ப்பே வெளிப்படுகிறது.

மல்லை சத்யா

வாகனத்தில் நாம் போகும்போது பார்க்கலாம், எங்கேயாவது ஓரிடத்தில் ஒரு நாய் அந்த வாகனத்தை துரத்திக் கொண்டே வரும். குறிப்பிட்ட எல்லை வரை வரும். சில நாய்கள் அம்பாசிடர் கார் போன்ற குறிப்பிட்ட வாகனத்தை மட்டுமே துரத்தும். அதற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை. அந்த நாய்களில் ஏதாவதொரு நாய் எப்போதாவது அந்த வகை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்க வேண்டும். அந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத நட்பு நாய், அதே வகை வாகனங்கள் வரும் போது, இது தனது நட்பு நாயைக் கொன்ற வாகன மாயிற்றே என்று விரட்டும். அந்த நாய்க்கு இருக்கின்ற உணர்வு தமிழனுக்கு இல்லையா?

தமிழ் முழக்கம் சாகுல் அமீது

ஈழத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை இங்குள்ள ஊடகங்கள் திரித்தும் மறைத்தும் வெளியிட்டு வருகின்றன. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நமக்கு தெரிந்த அளவுக்குக்கூட இங்கிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் பதிவு செய்வதில்லை என்பதே நமது வருத்தம்.

எப்பொழுதும் தங்கள் மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று ஆதிக்க சக்திகள் அடையாளப்படுத்தும். அந்த வகையில் புலிகள் இயக்கத்திற்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நாம் கவலைப் படத்தேவையில்லை. புலிகள் மண்ணுக்காகப் போராடுபவர்கள். சிங்கள வெறியர்கள் கூலிக்காக போராடுகிறவர்கள். போராளிகளை கூலிக்காரர்கள் வென்றதாக வரலாறு கிடையாது.

வரலாற்றை உற்று நோக்கினால், 26 ஆண்டுகள் துப்பாக்கி முனையில் ஒரு போர் வீரனை கூலிப்படை சிறைப்படுத்தியது. இறுதியில் அவன் முன்னால் அந்த ஆதிக்கச் சக்திகள் மண்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நெல்சன் மண்டேலாவின் வரலாறு இது. அதுபோலத் தான் ஃபிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத், முஸ்தபா கமால் பாட்சா போன்ற கொள்கை வீரர்களின் வரலாறுகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.

அந்த நிலை நமது ஈழத்திற்கு நாளை வந்தே தீரும் இந்த வேளையில் பிஞ்சுக் குழந்தைகளின் மீது அவர்கள் குண்டு வீசித் தாக்கியதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நாம் துடித்துக் கொண்டு இருக்கிறோம், ஒரு எழுச்சி தமிழகத்தில் இப்போது வந்திருக்கிறது இந்த எழுச்சியில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக நமது ஆதங்கத்தை உலகத்திற்கு தெரியபடுத்துவதில் யாரும் பின் வாங்கக் கூடாது.

அன்பு தென்னரசன்

உலகத்தில் 8 கோடி அரபு மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்களுக் கென்று 22 தனி நாடுகள் இருக்கின்றன. அதிலே 21 நாடுகள் ஐக்கிய மன்றத்திலே அங்கம் வகிக்கின்றன. அதே அளவு மக்கள் தொகை தமிழ் பேசுகின்ற மக்கள் தொகை. ஆனால் அவர்களுக்கென்று ஒரு தனிநாடு கூட உலகத்தில் இல்லை. நமது கொடி ஐக்கிய மன்றத்தில் பறக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் இருந்து கொண்டிருக்கிறது. அங்கே தனி ஈழம் மலரப் போகின்றது. இப்போதோ, இன்னும் சற்று நாளையோ. தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒத்த குரல் எழுப்பினால், அது இன்னும் விரைவாகும். இதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு இருப்பவர் எங்கள் அய்யா நெடுமாறன் மட்டும்தான். அவரவர்கள் தத்தமது அரசியலைப் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியலில் 40 பேர் 400 குழுக்களாக இருக்கிறார்கள்.

இங்கே தமிழகத்தில் தொண்டர்களுக்குதான் பஞ்சம். தலைவர்களுக்கு பஞ்சமே இல்லை. புதிய புதிய தலைவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அய்யா நெடுமாறன் பின்னால் அணிவகுப்பதில் என்ன குறை? அவரவர்களுடைய அரசியலை வேறு வேறு தளங்களில் வைத்துக் கொள்ளட்டும். ஈழத்திலே அந்த பிஞ்சுகள்மீது குண்டுமாறி பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். துடித்து சாகின்றனர். இந்த ஒரு போராட்டத்திலாவது ஓர் அணியில் சேருவதற்கு இவர்களுக்கு என்ன குறை? சிறு சிறு குட்டைகள் போல் ஆங்காங்கே பிரிந்து இருப்பதைவிட அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு காட்டாற்று வெள்ளமாக திரண்டு வந்தால் எதிரிக்கு பயம் வரும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் ஈழப் போராட்டம் முடிவுக்கு வராது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் ஈழம் விரைவில் அமையும்.

இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால் யாருக்கு சொல்வது? ஈழத் தமிழர்களுக்காக ஒரு கூட்டத்தை நடத்தியதற்காக ஒரு பொடாவைச் சந்தித்தார் தமிழ் முழக்கம் சாகுல்அமீது. பொடாவில் இருந்து வெளியில் வந்து அவருடைய சொந்தத் தொழிலைப் பார்த்திருக்கலாம்.

பொடாவில் இருந்ததால் அவருக்கு என்ன இழப்பு என்பது எனக்கு தெளிவாக தெரியும். தமிழகத்திலே பல தொழிலதி பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஏற்பட்டதைப் போல ஒரு இழப்பு யாருக்கும் ஏற்படவில்லை. ஏறத்தாழ 600 பேருந்துகளை இலங்கையில் இயக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தான நிலையில் பேருந்துகளை இயக்குவதற்கு அத்தனை உத்தரவுகளும் அவருக்கு வந்து விட்டது. அவர் கைது செய்யப்படவில்லை என்றால், அவர் இலங்கையிலே ஒரு போக்குவரத்து அதிபராக இருந்திருப்பார். 600 பேருந்துகளை இயக்கிக்கொண்டிருப்பார். பொடாவில் போனதால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் பல கோடி. இருந்தாலும் ஈழத்திலே அந்தப் பிஞ்சுகள் கொல்லப்பட்டதை அறிந்து துடித்துப்போனார். உடனடியாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று உடனே அய்யாவை போய்ப் பார்த்தார். அனுமதி கேட்டார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அவருக்கு நன்றி சொல்வதா? அல்லது பல நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு குறுகிய காலத்தில் அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி சொல்வதா? சொந்த நிகழ்ச்சிக்கு கூடி வருகை தந்திருக்கின்ற உங்களுக்கு நன்றி சொல்வதா? யாருக்கும் நன்றி சொல்ல நான் தயாராக இல்லை.

கூடி குரல் எழுப்பினால்
ஈழம் விரைவில் மலரும்!

-செஞ்சோலை நிகழ்விற்கு தமிழ் முழக்கம் சென்னையில் எடுத்த விழாவிலிருந்து...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
chinna
2008-10-22 10:03:00
sayashivas@yahoo.com

i want to help my peopls? What i should do/

santhosh kumar
2008-10-26 09:51:00
cutesantho@yahoo.co.in

mmmmmmmmm...ya.....good....he s telling fact....

M.SURESH
2008-11-22 02:50:00
vkpsuresh1986@yahoo.com

i accepet your real fact...

Thamilarasan
2008-11-24 11:50:00
thamil_26@rediffmail.com

ya, he told 100% fact in his every word.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP