Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
செப்டம்பர் 2006

மத்திய அமைச்சரை அவமதித்த சென்னை அய்.அய்.டி!

ஏழை மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசின் அய்.அய்.டியில் பார்ப்பன மாணவர்களே ஒட்டுமொத்தமாக இதுவரை படித்து வந்தனர். படிப்புச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிலும் ஒட்டு மொத்தக் குத்தகை அவாள்களுக்கே. பல்கலைக் கழகங்களில் நடக்கும் பொதுவான தேர்வுத் தாள்கள் திருத்துவது போன்ற முறை அய்.அய்.டியில் கிடையாது. அவர்களின் தகுதி திறமைகளை அரை நூற்றாண்டுக் காலமாக அவர்களுக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டு அமெரிக்க டாலருக்குப் பறந்து சென்றனர். 27% எங்களுக்கு வேண்டும் என்ற குரல் பிற்படுத்தப்பட்ட மக்களால் எழுப்பப்பட்ட போது அய்யர், அய்யங்கார் டிபார்ட் மெண்டில் இடி விழுந்தது போல் எண்ணினர்.

இந்திய அரசியல் சட்டத்தில் தலித் மக்களுக்கு 22.5% விழுக்காடு மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் கொடுக்கச் சொல்லியிருந்தாலும் பறையர், பள்ளர், மாலா, மாதிகா ஆகிய உண்மையான அப்பா அம்மாவுக்குப் பிறந்த பஞ்சமர்களை இத்தனை ஆண்டுகள் ஏமாற்றியது போலப் பல நூறு ஆயிரம் சாதியாய் பிரிந்து கிடக்கும் சூத்திரர்களை ஏமாற்ற முடியாதே! என்னும் ஆதங்கத்தில் காமகோடி மடம் தொடங்கிக் காசுமீரப் பண்டிட் வரை உயர்கல்வி நிறுவனமான அய்.அய்.டியில் சமூக நீதிக்கே வேலை இல்லை என்று திட்டம் போட்டு வாடகைக்கு ஆட்களை எடுத்து தம் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

இப்போது டில்லியில் இருந்து, தந்தை பெரியாரின் மண்ணானத் தமிழகத்திலும் பார்ப்பன குஞ்சுகள் வாய்திறக்க ஆரம்பத்து விட்டன.

பலநூறு கோடி ரூபாயில் 1200 அறைகள் கொண்ட (நவீன) மாணவர் விடுதி ஒன்று கட்ட பாரதீய ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் சென்னை அய்.அய்.டிக்கு மட்டும் ஆயிரங் கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

டெண்டர் முறையைப் பின்பற்றாமல் எல் அண்ட் டி என்னும் அவர்களுடைய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மற்ற ஒப்பந்தக்காரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். மாணவர்கள் தங்கும் விடுதிகள் நவீன வசதிகளோடு கட்டப்படுவதால் டெண்டர் முறை தேவையில்லை என்று வாதாடி அவாள்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அதிலும் பார்ப்பன மாணவர்கள் படிக்கும் அறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக ஒதுக்கப்படுவதில் குளியளரை, கழிவறை, கதவு, சன்னல் இவை தவிர வேறென்ன நவீனமாகப் பொருத்தினார்கள் என்பது அவாள்களுக்கே வெளிச்சம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி போய் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி வந்ததால் காஞ்சி சங்கர மடம் நடத்தும் ஏனாத்தூர் கல்லூரி பார்ப்பன மாணவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். காஞ்சியில் இருந்து ஒட்டு மொத்தமாய் ஆண்டுதோறும் ஆறு மாதம் (ஒரு செமஸ்டர்) சென்னை அய்.அய்.டியில் தங்கிப் பாடம் படித்து விட்டு அமெரிக்கா பறக்கலாமே என்ற எண்ணம் விபத்துக்குள்ளாகி விட்டது.

இதற்குமுன்பே 13+2 விடுதிகள் நிரம்பியிருக்கும் சென்னை அய்.அய்.டியில் 1200 அறைகள் கொண்ட நவீனமான விடுதி ஏன் என்றே தெரியவில்லை?. அதற்கான அவசியமும் ஏழைகள் நிறைந்த நாட்டிற்கு ஏன் என்றும் தெரியவில்லை.

இந்த நவீன விடுதிக் கட்டிடத்தைத் திறந்து வைக்கத்தான் அர்ஜூன் சிங் 3.9.2006 அன்று மாலை 5.30க்கு வரவழைக்கப்பட்டார்.

அந்தக் கட்டிடத்தை நேரில் சென்று கூடத் திறக்காமல் வீடியோ மூலம் சி.எல்.டி. என்னும் அறையில் இருந்து திறந்து வைத்தார்.

மேலும் 7 அய்.அய்.டிகளின் பாடத் திட்டங்களை இன்டர்நெட்டில் பதிக்கும் திட்டத்தையும் நம் அமைச்சர் அர்ஜூன் சிங் வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்.

இது எல்லாம் நாடறிந்த செயல்கள் நாடறியாத செயல்கள், மூடி மறைக்கப்பட்ட செயல்கள் மாண்பமை அர்ஜூன் சிங் அவர்கள் அங்கிருந்து புறப்பட்ட உடன் நடந்தேறியது.

அர்ஜூன் சிங்கை வரவேற்க அய்.அய்.டி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரே பேனரை அவாளுடைய மாணவர்கள் சிலர் கீழே இழுத்துப் போட்டு முதலில் காலால் மிதித்து அர்ஜூன் சிங் டவுன் டவுன் என்று கத்தினார்கள்.

வெளியில் இருந்து முன்பேயே எஸ்.எம்.எஸ் மூலமாக அழைக்கப்பட்டிருந்த உயர்சாதி மாணவர் கூட்டமும் இவர்களோடு கலந்து கொண்டார்கள். அர்ஜூன் சிங்கை எதிர்த்து ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழியிலும் திட்டினார்கள். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் இடத்தைக் காலி செய்வதில் கவனம் செலுத்தினார்களே தவிர பின்பு என்ன நடக்க போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இடத்தில் வெறும் 150 மாணவர்கள் அர்ஜூன்சிங் பெயரை எழுதிய பேனரைத் தலை கீழாகப் பிடித்துக் கொண்டு வாய்க்கு வந்த மொழிகளில் முழக்கம் எழுப்பி ஊர்வலத்தைத் தொடங்கிவிட்டனர்.

அர்ஜூன் சிங் ஒழிக! என்ற முழக்கம் அய்.அய். டியையே அதிர வைத்து விட்டது.

சில மாணவர்கள் `அப் அப்' மன்மோகன் சிங் என்றும் `அப் அப்' சிதம்பரம் என்றும் கத்திக்கொண்டே வந்தார்கள். அய்.அய்.டி. இயக்குநர் அனந்தின் வீட்டை ஊர்வலம் நெருங்கிய போது உச்சகட்ட நிலைக்கு மோசமான முழக்கங்களை எழுப்பனர்.

சூரியன் மறைக்கப்பட்டு இரவான நிலையில் அந்த ஊர்வலம் அய்.அய்.டி இயக்குநரின் வீட்டிற்கு முன்பு உள்ள பெருந்திடலில் கூடியது.

என்.டி.டி.வி. வரும்வரை மாணவர்கள் அர்ஜூன் சிங் முழக்கத்தை விடவில்லை. கூட்டம் கலைய ஆரம்பித்த நிலையில் என்.டி.டி.வி. கேமிராவுடன் வந்து இறங்கியது. நடந்த ஆட்ட பாட்டங்களைப் படம் பிடித்துக் கொண்டு போய் இருக்கிறது என்.டி.டி.வி.

நிறையக் கூட்டம் இல்லாத காரணத்தால்தான் அய்.அய். டி. யின் முகப்பு வரை பார்ப்பன மாணவர்கள் வரவில்லை. எல்லா மீடியாவையும் அழைத்து அவாள் மாணவர்களை ஒன்று சேர்த்து அடுத்த வாரத்தில் ஒரு ஊர்வலம் நடத்துவதாகத் திட்டம் போட்டு கூட்டத்தை முடித்துவிட்டார்கள்.

இராணுவ இரகசியம் போல் அய்.அய்.டி. இயக்குநர் இந்தத் திட்டத்தைக் கமுக்கமாக வைத்திருக்கின்றார். இன்னுமொரு ஐந்தாண்டுகள் இயக்குநராக இருப்பதற்கு அர்ஜூன்சிங் நமக்கு உதவுவார் என்ற அனந்தின் நெற்றியில் மாணவர்கள் இன்னொரு நாமத்தைச் சாற்றி விட்டார்கள்.

விருந்தினர் ஒருவரை அய்.அய்.டி. நிறுவனத்திற்கு அழைத்து (அதுவும் மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சரை) மாணவர்களை வைத்துக் கேவலப்படுத்தியது அய்.அய்.டி. இயக்குநர் அனந்திற்கு எந்த வகையிலும் இனிமேலும் அய்.அய்.டி. நிறுவனத்தின் இயக்குநராக இருப்பது பொருந்தாது. இது நாட்டிற்கு ஏற்பட்ட கேவலம். காவலர்கள் அங்கிருந்து போய்விட்டாலும் பல நூற்றுக் கணக்கில் சொந்தச் செக்யூரிட்டி வைத்திருக்கும் அனந்த் என்ன செய்தார்?

எப்போதும் இருண்டு கிடக்கும் ஸ்டேடியத்தில் அந்த மாணவர்களுக்கு மின்சார வசதி செய்து கொடுத்தது யார்? இதற்குக் காரணமான ஒரு சில மாணவரையாவது இதுவரை அனந்த் சஸ்பெண்ட் செய்யாததன் காரணம் என்ன?

தமிழக முதல்வர் இனிமேலாவது அய்.அய். டி. பிரச்சினையில் தலையிட்டு 480 பேராசிரியர்களில் 3 பேர் மட்டுமே தலித் என்னும் நிலையை மாற்ற வேண்டும்.100க்கு 22.5 விழுக்காடு தலித் மாணவர்களுக்குப் படிக்க இடம் கொடுக்காமல் அரசையும் அரசியல் சட்டத்தையும் ஏமாற்றி வரும் பார்ப்பனர்களைச் சிறையில் தள்ளத் தனிச் சட்டம் கொண்டுவரக் கலைஞர் முயற்சி செய்ய வேண்டும்.

இல்லையேல் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குப் படிப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தாலும் பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாய் இருக்கும் அய். அய்.டியில் நம் மாணவர்கள் படித்து வெற்றி பெறுவது எப்படி? 10 விழுக்காடு கூட நம்மவர்கள் அங்கு இல்லை.

எல்லோரும் துரோணர்களாகவும் பீஷ்மாச்சாரிகளாகவும் இருக்கும் போது இனிமேலும் நம்மாணவர்கள் ஏகலைவர்கள் ஆக வேண்டுமா? கலைஞர்தான் தீர்வு காண வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com