Keetru Thaagam
Thaagam Logo
மே 2007

புதை குழியில் சில உண்மைகள்! - தொல்லியல் து(கு)றைகள்!
கண்டிகையான்

நாம் இப்போது மாமல்லபுரம் செல்கிறோம்! பொறுங்கள்! பொறுங்கள்!! சுற்றுலா செல்ல அல்ல பல சுற்றடிப்புகளை விளாவ அது குறித்து அளாவ!

எங்கள் கல்லூரியில் நடந்த செம்மொழிப் பயிலரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறை சார்பாக தொல்லியல் குறித்த சுற்றுலாவிற்கு மாமல்லபுரம், அரிக்கமேடு, காஞ்சிபுரம் போன்ற சில ஊர்களுக்குச் சென்றோம்!

Mahabalipuram நான் அங்கே என்னென்ன பார்த்தேன். எவ்வளவு பழமையானது எவ்வளவு சிறப்பானது என்று கூறவருவேன் என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை. பிறகு, அது குறித்து என்ன கூறுவது. இருக்கிறது நிறைய இருக்கிறது!

காலத்தின் சின்னங்கள், பழமையின் எண்ணங்கள், பழந்தமிழரின் வண்ணங்கள் என்றெல்லாம் கதைக்கப்படுகின்ற தொல்லியல் வரலாறுகள். அவை தமிழரின் பழங்காலத்து எல்லைகள்! ஒவ்வொரு தமிழனும் கடந்து வந்த மைல் கற்கள்! பொதுவாகவே தமிழர்கள் வரலாறுகளை எழுதி வைப்பதில்லை. அது ஏனென்று இன்று வரையும் பிடிபடவில்லை நமக்கிருக்கின்ற வரலாறுகளே இலக்கியமும் இது போன்ற தொல்லியல் சான்றுகளும்தான்.

நம் பழமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் இவையெல்லாம் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகிறது. நான் சொல்ல வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டேன். தொல்லியல் குறித்த பாதுகாப்பும் பரமாரிப்பும்தான் அதில் நிலைகொண்டுள்ள அவலங்களும் அலட்சியங்களும் ஏராளம். அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

எனவே நீங்க சுற்றுலா பார்க்க முனைவதில் ஏமாற்றம் விழுந்ததற்கும் தடை ஏற்பட்டதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மாமல்லபுரம் இன்றல்ல பல ஆயிரம் ஆண்டுக்காலப் பழமைச் சிறப்புடையது. சங்க இலக்கியத்தில் கூட அந்த ஊர் 'நீர்ப் பெயற்று என்று குறிக்கப்படுகிறது. துறைமுகங்கள் இருந்ததையும் வெளிநாட்டு வாணிபங்கள் நடந்ததையும் அறிகிறோம். அங்கு பல்லவ மன்னர் கலைநயங்களைப் பாறைகளிலே சிற்பங்களாகவும், குகைக்கோயில்களாகவும், குடவரைக்கோயில்களாகவும், கடற்கரைக் கோவில்களாகவும் அமைத்துள்ளார்கள். இன்றளவும் பழமையின் கர்வத்தோடு கம்பீரமாய் இருக்கின்றன. இதனோடு நிரம்பவும் தொடர்புடையதுதான் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் ஆண்டார்கள் காஞ்சிபுரம் அப்போது 'கச்சி என்று குறிக்கப்பட்டுள்ளது. கலைகளின் நகரம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. இவ்வாறெல்லாம் சிறப்புகளுடைய இந்நகரங்களின் கலைகுறித்த பாதுகாப்பு கேள்விக்குறிதான்.

நாட்டின் புராதனச் சின்னங்கள், கோவில்கள், போன்றவற்றை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்கிறது. பாதுகாப்பையும் பராமரிப்பையும் அரசு கவனிக்கிறது. ஆனால் எந்த அளவிற்கு? அங்குதான் பிரச்சினையே!

அஜந்தா எல்லோராவிற்கு இருக்கும் பாதுகாப்பு மாமல்லபுரத்திற்கு இருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

மாமல்லபுரத்துக் கல்சிற்பங்கள் பழமையானவை. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. தமிழர்களின் பழமையை உணர மிக முக்கிய அடையாளங்களில் அதுவும் ஒன்று. ஆனால் அதன் பாதுகாப்பு செத்தவன் வாயில் பாலூற்றும் கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம்! இது போன்ற கல்சிற்பங்கள் இருக்குமிடத்தில் சில மீட்டர் தொலைவுக்கு எந்த அதிர்வும் இருக்கக் கூடாது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் மாமல்லபுரம் அப்படியா இருக்கிறது? இப்படியே போனால் கல் சிற்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுவிடும். சற்றுக் காலத்துக்கு முன் ஏற்பட்ட ஆழிப்பேரலையும் அதனால் ஏற்பட்ட அழிவும் தான் நம்மைச் சங்க காலத்தில் கடற்கோள் நடந்திருக்கும் என்பதை நம்ப வைக்கிறது. நூற்றில் பத்துப்பங்கு ஆழிப் பேரலைக்கே இவ்வளவு செய்கூலி சேதாரம் என்றால் கடற்கோள் என்று சொல்லப்படுகின்ற 'கடலால் உலகம் அழிதல் என்பது எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. மாமல்லபுரமே அதற்கும் சான்று. மாமல்லபுரத்திலே ஒவ்வொரு நாளும் புதியபுதிய கற்கோவில்கள் கிடைப்பதை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.

நிலமட்டத்தில் இருந்து கடலில் சுமார் 20 கி.மீ. தொலைவிற்குப் பாறைகளில் செய்த சிற்பங்கள் கடலுக்கடியில் இருப்பதை மதியவெயில் வேளையில் சென்றால் காணமுடியும் என்பதை ஆய்வாளர்கள் கூற்று வழியாக அறிகிறோம். ஆனால் அவற்றை உறுதி செய்ய இது வரையில் அரசின் நடவடிக்கை என்ன? இது ஒரு பக்கம்.

கன்னியாகுமரி தமிழகத்தின் அழகிய பகுதி. இங்குச் சூரிய உதயத்தைக் காண்பது அலாதியான இன்பமளிப்பது. கடலில் இருந்து சூரியன் எழுகிற போது கடல் நீட்டத்திற்கும் சாலை போட்டுக் கொண்டு எழுவான். கடலே சிவப்புத்தங்கம் கொட்டியது போல் ஜொலிக்கும் அற்புதம்! அற்புதம்!!

ஆனால், அங்கே நின்று கொஞ்ச நேரம் கூட அதைக் கண்டு ரசிக்க முடியாது அந்த அளவிற்கு மலக்கிடங்காக மாறி இருக்கும் பகுதியாக அது உள்ளது.

இதையெல்லாம் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்? பராமரிக்க முடியாதா? கிடக்கட்டும். 'நம்பது தானே என்று விட்டு விடுகிறார்களா? மாமல்லபுரம் போன்ற இடத்தில் சிற்பங்களைப் பார்க்க ஒரு தொகை வசூலிக்கிறார்கள் அதுவும் எப்படி? உள்ளூர்காரராய் இருந்தால் 10, 25 என்றவாறும் வெளிநாட்டுப் பயணிகளிடம் 250 ரூபாய் என்றும் வசூல் செய்கிறார்கள். ஏன் இப்படி? நாம் வெளிநாடு சென்று அங்கிருக்கும் புராதனச் சான்றுகளைப் பார்க்க இப்படித்தான் வேறுபாட்டுடன் வசூல் செய்கிறார்களா? வசூலிக்கக் கூடாது என்பதல்ல வாதம். வரைமுறையோடு இருக்க வேண்டும் என்பதுதான்!!

இறுதியாக நான் ஒன்றை உணர்வோடும் உணர்ச்சியோடும் சொல்லிக் கொள்ள விழைவேன். நமது வரலாற்றுக்குறிப்புகள் எழுத்துக்களால் ஆனதல்ல கற்களாலும் கலைகளாலும் ஆனது. அவை மிகுந்த நுட்பத்தோடு இன்றைய அறிவியலுக்கே சவால் விடும் முறைகளோடும் அமைக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரியத்தை பின்புலத்தை உணர்த்த இதை விட வேறு சான்றுகள் கிடையாது. இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாததைத் தேடுவது முட்டாள் தனம்! எனவே, இவற்றையெல்லாம் பாதுகாக்கும் உரிமை மாநில அரசுக்கு இருந்தாலும் சரி மத்திய அரசுக்கு இருந்தாலும் சரி இவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை கட்டளையாகவே விடுக்கிறேன். ஆம்!

மன்றாடிப் பெறுவதற்கு இது என்ன பிச்சையா? உரிமை! எனக்கு மட்டுமானதன்று அனைவருக்குமான உரிமை. எல்லோர்க்கும் இந்த உணர்வு வர வேண்டும்.

ஏனென்றால் இவை நம்மோடு மட்டுமே முடிந்து போகும் செய்திகளல்ல! நம் தலை முறைகளின் எச்சங்கள். வரப்போகும் தலைமுறைக்கு மிச்சங்கள்!