Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி

சுபவீ

Subhavee பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்.
தேர்தல் பாதை திருடர் பாதை

என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம்.

மிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி.சி இணைந்த புதிய கட்சி, போல்ஷ்விக்குகள், எஸ்.ஓ.சி. முதலான பொதுவுடைமை இயக்கங்கள் சில, இன்று வரையில் தேர்தல் புறக்கணிப்பையே முன் மொழிகின்றன.

பீகார் சிறை தகர்ப்பு போன்ற நிகழ்வை நடத்திக் காட்டியிருக்கிற மக்கள் யுத்தக்குழு எம்.சி.சி. ஆகியவை தேர்தல் புறக்கணிப்பு நிலையை முன்னெடுத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புரட்சிகரப் படையோ அதற்கான திட்டங்களோ எதுவும் இல்லாமல் தேர்தலையும் புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்ற கேள்வி என் போன்றோருக்குள் எழத் தொடங்கியிருக்கிறது.

மிகப் பெரிய புரட்சிப் படையைக் கட்டியிருந்த சோவியத் நாட்டில், 1917ஆம் ஆண்டு புரட்சிக்கு சில வாரங்கள் முன்பு நடந்த தேர்தலில் கூட நாங்கள் பங்கேற்றோம் என்று லெனின் குறிப்பிடுகின்றார். அதனால் புரட்சி எந்த விதத்திலும் தள்ளிப் போய் விடவில்லை என்பதை நாம் அறிகின்றோம். அது ஒரு புறமிருக்க, புரட்சிகர மாற்றத்திற்கான திட்டமும், படை அணியும் இல்லாத சூழலில், நாம் தேர்தலில் பங்கேற்பதுதான் பொருளுடையது என்று தோன்றுகிறது. தேர்தல் களத்தில் நிற்கும் இரண்டு கூட்டணிகளுக்கும் மாற்றாக புதிய ஒரு கட்சியை அல்லது கூட்டணியை உருவாக்குகிற வலிமை நமக்கு வரும் வரையில் இருக்கிற கூட்டணிகளுக்குள் எந்த ஒன்றை ஆதரிப்பது என்கிற நிலை நமக்கு ஏற்படுகின்றது.

இரண்டும் ஒன்றுதான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்பது புரட்சிகரமான தொடரைப் போலத் தென்பட்டாலும், அது நடைமுறை உண்மைகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதை நாம் உணர வேண்டும். இரண்டும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது, சமமற்றவைகளைச் சமமாகக் காட்டுகின்ற முயற்சி.

சமமானவர்களைச் சமமற்று நடத்துதல் எப்படி முறையில்லையோ, அவ்வாறே சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதும் முறையற்றதே ஆகும். இப்படி இருவரையும் சமப்படுத்துகிற நிலை, இருவரில் யார் மிக மோசமானவர்களோ அவர்களுக்கே மறைமுகமான உதவியாக இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. தமிழகச் சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது மறைமுகமாக, மிக மோசமான சக்தியாக இருக்கிற ஜெயலலிதாவுக்கு உதவுகிற செயல்தான். தி.மு.க மீதும், தி.மு.க கூட்டணியின் மீதும், குறிப்பாகத் தி.மு.க. தலைமையின் மீதும் நம்மில் பலருக்கு கடும் விமர்சனங்கள் இருக்கலாம். அந்த விமர்சனங்களில் நியாயங்களும் இருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவோடு இதனைச் சமப்படுத்திச் சொல்வதென்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.

Jayalalitha இந்த ஒப்பீட்டு முறையே தவறானது என்று கருத வேண்டியதில்லை. தேர்தல் களத்தில் ஒப்பீட்டு முறை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. நமக்கு வேறு மாற்று இல்லை என்கிற போது ஒப்பீட்டு முறையில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய நிலையும் உள்ளது. ஜனநாயகமின்மையும், சமத்துவமின்மையும், ஆதிக்கப்போக்கும், ஆணவ குணமும், பார்ப்பனியத்தின் அடிப்படைத் தன்மைகள் என்றால் அவற்றின் முழு உருவாக ஜெயலலிதா இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து, பல்லாயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்து, ஒரு மிகப் பெரிய சர்வாதிகாரி போல அவர் நடந்து கொண்டார். பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தார். அவர்களையெல்லாம் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அதை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் ஏற்பட்ட ஒழுங்கின்மை, நிர்வாகக் குறைவு காரணமாக பல பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போனார்கள். வெள்ளத்தில் கூடத் தப்பிப் பிழைத்த அவர்களை வெள்ள நிவாரணம் அடித்துச் சென்று விட்டது. தன் குற்றத்தை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, தி.மு.க.வைச் சேர்ந்த தனசேகரன் எனும் ஒரு மாநகராட்சி உறுப்பினர்தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி அவரைச் சிறையில் அடைத்தார். அவரைப் பிணையில் விடுமாறு உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோதும் அதை ஏற்க மறுத்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் தன் குற்றத்தை உணராமல் அவரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தார்.

இப்படி ஒவ்வொரு செயலிலும் தன் சர்வாதிகாரப் போக்கையே அவர் வெளிப்படுத்தினார். பார்ப்பனியத்தினுடைய நெடுநாள் ஆசையான மதமாற்றத் தடைச் சட்டத்தை அவரே நடைமுறைப்படுத்தினார். பொடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் வைகோ(!), நெடுமாறன், நக்கீரன் கோபால், சாகுல்அமீது உள்ளிட்ட பலரை ஒன்றரை ஆண்டுக் காலம் சிறையில் அடைத்தார்.

தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை தன் பகைபோல் கருதி, அவர்கள் மீது எப்போதும் காழ்ப்பை உமிழ்ந்தார். ஆளுங்கட்சியாய் இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாய் இருக்கும்போதும் சரி, தமிழ் வழிக் கல்வியை தொடர்ந்து எதிர்த்தார். இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான பார்ப்பனிய குணத்தை வெளிப்படுத்துகிறவராகவே அவர் என்றைக்கும் இருந்தார்.

சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சும், பேசிய விதமும் ஆணவத்தின் உச்சத்திலேயே எப்போதும் இருந்தன. அவர் தன் ஆட்சியில் நல்லவை எவற்றையுமே செய்யவில்லையா? நல்ல திட்டங்களே இல்லையா? என்றால் இருந்தன என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சி தரத்தக்க மிகப் பெரும் படுதோல்வியை அவர் சந்தித்ததற்குப் பிறகு, தன் போக்கை அவர் மாற்றிக் கொண்டார். மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றார். அரசு ஊழியர்களுக்கு வேலை வழங்கினார். சாலைப் பணியாளர்களைப் பணியில் சேர்த்துக் கொண்டார். ஆடுகளை, கோழிகளை வெட்டலாம் என்று அறிவித்தார். வெள்ள நிவாரண நிதி என்று குடும்ப அட்டைக்கு 1000, 2000 என்று பணத்தை அள்ளி வழங்கினார்.

இன்றைக்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசினுடைய நிதியகம் முற்றிலுமாக காலியாகிற அளவுக்கு அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். எல்லாம் தோல்விக்குப் பிறகு! எனவே இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.

Brahmin and Periyar அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாட்டுக்கு செய்தவை எல்லாம் தீங்குகள். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் செய்தவை எல்லாம் நன்மைகள். எனவே, அவர் வெற்றி பெற்றால் நாட்டுக்கு கெடுதல் செய்வார் என்பதும், தோல்வி அடைந்தால் நன்மைகள் செய்வார் என்பதும் நமக்கு விளங்குகின்றது. இப்போது நம் முன்னால் இருக்கின்ற கேள்வி, நாட்டுக்கு நன்மை செய்கிறவராக அவரை ஆக்க வேண்டுமா? தீமை செய்கிறவராக ஆக்க வேண்டுமா? என்பது தான். தேர்தலில் படுதோல்வி அடைந்தால் மட்டுமே அவர் நல்லவைகளை நினைத்துப் பார்க்கிறவராக இருக்கிறார். எனவே அதற்கான வழியை நாம் வகுக்க வேண்டும். இந்தக் கருணையில்லா ஆட்சி கருகி ஒழிய வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் நினைவு கூற வேண்டும். பார்ப்பனியத்தின் குணம் என்ன என்பதை மறைந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மிகச் சரியாகத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். ‘எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி' என்பதுதான் பார்ப்பனியம் என்றார் அவர். ஜெயலலிதாவோடு இதனை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கின்றன. எட்டிய போதெல்லாம் நம் தலையைப் பிடித்தார். எட்டாத நிலையில் கால்களைப் பிடித்தார். இயல்பான அந்த இனத்தினுடைய குணம் வாய்ப்பிருந்தால் தலையிலே ஏறி அமர்வது, வாய்ப்பில்லை என்றால் காலில் விழுவதற்கும் கலங்காமல் இருப்பது.

இதைத்தான் அய்யா பெரியார் அவர்கள் கூட, ‘பலித்தவரை...' என்பதுதான் பார்ப்பனியம் என்றார். எவ்வளவு பலிக்குமோ அவ்வளவு பார்க்கலாம். பலிக்கவில்லை என்றால் விட்டு விடலாம். எனவே, தங்களை நிறம் மாற்றிக் கொள்ள, உருமாற்றிக் கொள்ள எப்போதும் பார்ப்பனர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக ஜெயலலிதா செய்து காட்டியிருக்கிறார்.

எனவே, வருகிற தேர்தலில் அவருக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது, இந்தத் தேர்தலிலிருந்து அவரை அகற்றுவதாக இல்லாமல், அரசியல் அரங்கிலிருந்தே அவரை அகற்றுவதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது.

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com