Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

இளைஞரணி!?

செவ்வேல்

இன்றைய தமிழக அரசியலில் இளைஞர்களுக்கு என்ன மரியாதை? ஒரு கட்சியின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய இளைஞர்கள் முடியைவிடக் கேவலமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம். தி.மு.க இளைஞரணியின் வெள்ளிவிழா மாநாடு திருச்சியில் நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன் இளைஞரணியைத் தொடங்கியபோது முதன்மைப் பொறுப்பில் யார் இருந்தார்களோ அவர்களே இப்போதும் அதே பொறுப்பில் இருக்கிறார்கள் எனும்போது அது எப்படி இளைஞரணியாக இருக்கும் என்பது புரியவில்லை. கலைஞர்தான் அழகுத்தமிழில் கவிதையோ கடிதமோ எழுதி விளக்க வேண்டும்.

அ.தி.மு.கவில் இளைஞரணி என்பது அனாதைப் பிள்ளை. "அம்மா' பேரவைக்கு இருக்கும் மதிப்பில் கால் பங்கு, கை பங்குகூட இளைஞரணிக்குக் கிடையாது. இளம் வயதில் எம்.பி.ஆன ராணி வீட்டுக் கன்னுக்குட்டியாம் தினகரனைக்கூட அம்மா பேரவையில் வைத்திருந்துதான் கழற்றிவிட்டார்களே தவிர, இளைஞரணிக்கான பொறுப்பைக் கொடுக்கவில்லை. தலை நரைத்துப்போன எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர்தான் அ.தி.மு.கவின் இளைஞரணியில் பெயரளவுக்கு இருக்கிறார்கள். கழகங்களின் இளைஞரணி இப்படியிருக்க, காங்கிரசின் இளைஞரணி வரிந்துகட்டிக் கொண்டிருக்கிறது.

பல நேரங்களில் மயான அமைதியுடன் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் எப்போதாவது சர்ச்சைகள் வெடிக்கிறது என்றால், அது காங்கிரஸ் இளைஞர் பிரிவின் கைங்கரியமாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் இருந்தபோது,அவரது ஆதரவாளர்களும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்களும் சத்தியமூர்த்தி பவனுக்குள் நடத்திய சண்டைக் காட்சிகள் விஜய், அஜீத் போன்ற அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களுக்கே சவால் விடும் விதத்தில் இருந்தது.

பவனில் இருந்த இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வாசன் ஆட்கள் பூட்டுப் போட்டுவிட்டார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனது அறைக்கு வந்தபோது, திண்டுக்கல் பூட்டுத்தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்துபோய்விட்டார். அவரது ஆதரவாளர்கள் பூட்டு உடைப்புப் போராட்டம் நடத்தினர். (அடடா... மகாத்மா காந்திகூட சுதந்திரப் போராட்டத்தின் போது இப்படி ஒரு போராட்டம் நடத்தியதில்லை) பூட்டை உடைத்த விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள், வாசன் ஆதரவாளர்களின் மண்டையை உடைக்கும் போராட்டத்திற்குத் தயாராக, இருதரப்பிலும் பதற்றம் கூடிப்போனது. கூச்சல், குழப்பம், பேச்சு, ஏச்சு என நவரசக் காட்சிகள் அரங்கேறி முடிந்தபின், அந்தப் பிரச்சினையும் முடிந்து போனது.

சண்டையும் சச்சரவும் புலவர்களுக்கு மட்டுமல்ல, கதர்வேட்டிக்காரர்களுக்கும் பரம்பரைச் சொத்துதான். அதனால், சத்தியமூர்த்தி பவனம் மறுபடியும் அண்மையில் ஒரு முறை சண்டைக்களம் ஆனது. தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத்தின் தந்தை. தந்தை பதவிக்கு வந்தால் மகனுக்குப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது இன்றைய அரசியலில் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. ஆனால், தமிழ்நாடு காங்கிரசிலோ தந்தைக்கு மாநிலத் தலைவர் பதவி என்றதும், மகனுக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி பிடுங்கப்படும் என்ற நிலைமை. விஷ்ணு பிரசாத்தை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் அதிகமானதால் அந்த இடத்தைப் பிடிக்க நீயா நானா என்ற போட்டி உடனடியாகத் தொடங்கிவிட்டது. அண்ணன் காலியாவதற்கு முன்பே திண்ணைக்குப்போட்டி.

உலகப் பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்து இந்தியப் பொருளாதாரத்தை உலக வங்கியில் அடகு வைத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு அரசியலில் ஏதேனும் ஒரு கைத்தடி (பிடிமானம்) தேவைப்படுகிறது. அப்பாவின் "ஜென்டில்மேன்' பிம்பம் தனக்குக் கைகொடுக்கும் என நினைத்தாலும், இன்றைய அரசியலில் இடம்பிடிக்கச் சில சாகசங்கள் தேவைப்படுகின்றன. சொந்தத் தொகுதியிலேயே தன்னை யாருக்கும் தெரியாவிட்டாலும், இவர்தான் வீரர், சூரர் என்று பலூனுக்கு காற்றடிப்பதுபோல பிம்பத்தைப் பெரிதாக்க ஊடகங்கள் நிறையவே இருக்கின்றன. அத்தகைய ஊடகங்களுக்குக் களப்பணியாற்றும் செயல்வீரர்களைவிடஇத்தகைய "ஜென்டில்மேன்' நபர்கள் மீதுதான் கவனம் அதிகம். இதைப் புரிந்து வைத்திருக்கிறார் கார்த்திக் சிதம்பரம்.

ஊடகங்களில் தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வரவேண்டும் என்ற கருத்து அவர் மனத்துக்குள் இருந்ததால், "கருத்து' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதுவும் கலைஞரின் மகள் கனிமொழியோடு சேர்ந்து. கார்த்திக் சிதம்பரம் திட்டமிட்ட இந்த அமைப்பைத் தொடங்கி வைத்தவர் "அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீனின் ஒன்றுவிட்ட தம்பி'யான எழுத்தாளர் சுஜாதா. இதன் தொடக்கவிழாவில் உலகத் தொலைக்காட்சிகளெல்லாம் திரண்டு வந்து செய்தி சேகரித்தன. கார்த்திக் சிதம்பரம் இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தார். அதற்காகவே திட்டமிட்டுக் கனிமொழி, சுஜாதா என பிரபலத்தன்மை கொண்டவர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டு அரசியலின் கள நிலவரம் என்னவென்றே தெரியாமல் நுனிப்புல் மேயும் என்.டி.டி.வி, ஆஜ்தக் போன்ற அகில இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள், கருத்துக் கந்தசாமியான கார்த்திக் சிதம்பரத்தை ஜென்டில்மேன் அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்தி, காங்கிரஸ் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றன. கட்சிக்காக ஒரு துளி வியர்வையும் சிந்தாமல், கஞ்சிபோட்டு இஸ்திரி செய்யப்பட்ட கதர் சட்டையின் மடிப்பு கசங்காமல், மேலிடத்தின் அருட்பார்வையைப் பெற்று, தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடலாம் என்கிற கார்த்திக் சிதம்பரத்தின் கணக்கை, நிறைவேற்றிவைத்தன அகில இந்திய ஊடகங்கள். ப.சிதம்பரத்துக்குப் பிறந்துவிட்டார் என்ற ஒரே தகுதி மட்டுமே கொண்ட கார்த்திக் சிதம்பரம், தமிழக இளைஞர் காங்கிரசின் தலைவராகிவிடுவார் என்ற பிரச்சாரம் பலமாகவே முன்வைக்கப்பட்டது.

இதைவிடக் கேலிக்கூத்து என்னவென்றால், கார்த்திக் சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் என்ற பெயரில் தன் கைக் காசு போட்டுப் போஸ்டரையும் அடித்துவிட்டார். ""தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வருகை தரும் கார்த்திக் சிதம்பரத்தை வரவேற்கிறோம்'' என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒட்டப்பட்டன. தற்போதைய தலைவர் நீக்கப்படவில்லை. புதிய தலைவர் பற்றிய அறிவிப்பையும் மேலிடம் வெளியிடவில்லை. ஆனால், ப.சி.மகனின் பதவிப் பசி, சுவரொட்டியாக வெளிப்பட்டது.

கூட இருப்பவனுக்கு பதவி கொடுத்தாலே குத்துவெட்டு, கோஷ்டி தகராறு என வரிந்து கட்டுவது தான் காங்கிரஸ் கலாச்சாரம். கட்சிப்பணிகளில் எவ்விதத் தொடர்பும் இல்லாத கார்த்திக் சிதம்பரத்துக்குப் பதவி எனப் பிரச்சாரம் செய்தால் சும்மா இருப்பார்களா கதர் சட்டையினர்? பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. செல்லகுமாருக்கு கட்சியில் ஏதாவது ஒரு பதவி தேவைப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி இல்லையென்றதும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர் பார்த்தார். அதற்கும் கார்த்திக் சிதம்பரம் வந்துவிட்டார் என்றதும், தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டார்.

உருட்டுக்கட்டைகளோடு வந்த அவர்கள், சத்தியமூர்த்தி பவனைத் தேர்தல் நேரத்து பீகார் மாநிலம் போல ஆக்கிவிட்டார்கள். ஜெயா டி.வி. இதை அப்படியே படம் பிடித்து, எதிரி வீட்டு இழவுக்கு தன் வீட்டில் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது போல ஒளிபரப்பி மகிழ்ந்தது. ஆனாலும், காங்கிரஸ் மேலிடம் வழக்கமான பொறுமையுடன் இருக்கிறது. இந்தப் பொறுமையை பயன்படுத்திக் கொண்டு, கார்த்திக் சிதம்பரம் தரப்பு சுவரொட்டி பிரச்சாரத்திலும், டெல்லியில் சிபாரிசுகளைப் பிடிப்பதிலும் மும்முரமாக இருக்கிறது. ராகுல்காந்தியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறது.

ஆதரவெல்லாம் இருக்கட்டும்... கட்சிக்கு எப்போது கார்த்திக் சிதம்பரம் வந்தார். காங்கிரஸ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்? காங்கிரஸ் தொண்டர்களோடு அவருக்கு இருக்கும் தொடர்பு என்ன? என்பவையெல்லாம் மேலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமா? அனுமதியில்லாமல் சுவரொட்டி அச்சிட்டது குறித்துக் குறைந்தபட்ச நடவடிக்கையாவது மேற்கொள்ளுமா? அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்கள் கட்சிப்பணிகளில் ஈடுபடுவதைவிட, பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாகவோ உறவினராகவோ இருக்க வேண்டியது முக்கியம் என்பதைத்தான் கார்த்திக் சிதம்பரத்தின் நடவடிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.


(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com