Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்
சாமி சிதம்பரனார்


எல்லூரில் இருந்த ராமசாமியோ சூப்பர்வைசரிடம் மட்டும் தம் கதைகளைக் கூறி, எவருக்கும் தெரிவிக்காமாலிருக்கும்படி கேட்டுக் கொண்டு, அதன்படியே அங்கு வேடிக்கை சிநேகிதராக வசித்து வந்தார்.ஒருநாள் அவரும், சூப்பர்வைசருமாகக் கடைவீதிப்பக்கம் சென்றபோது, அங்கு ஒரு கடையில் கடைக்காரர் எள் அளந்து கொண்டிருந்தார். அந்தக்கடை "மோதே வெங்கன்னா கனிகர ஸ்ரீராமுலு'' என்பவருடையது. ஈ.வெ.ராவின் வியாபார உணர்ச்சி அவரை அந்தப் பக்கம் திருப்பியது. கையில் கொஞ்சம் எள்ளை அள்ளிப் பார்த்தார். "என்ன விலை'' என்று கடைக்காரரைப் பார்த்துக் கேட்டார். பிறகு எள்ளைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். கடைக்காரர் இவரை யாரென்று பின்னால் வந்த சேவகனை விசாரித்தார். அன்றைய தினமே கடைக்காரர் வெங்கட்ட நாயக்கருக்குக் கீழ்வருமாறு கடிதம் எழுதிவிட்டார். "தங்கள் மகன் என் கடைக்கு வந்தார். சரக்கைப் பார்த்தார், என் கடையில் கொள்முதல் செய்யாமல் வேறு கடையில் செய்திருப்பதாகத் தெரிகிறது. நான் தங்களுக்கு என்ன குற்றஞ் செய்தேன்? இதுவரையில் எப்போதாவது நாணயக்குறைவாய் நடந்திருக்கிறேனா? தயவு செய்து தங்கள் மகனுக்கு எழுதுங்கள்.''

Periyar E.V.Ramasamy இக்கடிதத்தைப் பார்த்தார் வெங்கட்ட நாயக்கர். வியப்புற்றார். அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார். இழந்த கண்ணைத் திரும்பப் பெற்றவரானார். வீட்டிலுள்ள மற்றவர்களும் இச்செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர். அந்த வினாடியே வெங்கட்ட நாயக்கர் மற்றொரு நண்பரையும் ஒரு ஆளையும் உடனழைத்துக் கொண்டு எல்லூருக்குப் புறப்பட்டார். கடிதம் எழுதிய வணிகரின் கடைக்கு நேரே வந்தார். சூப்பர்வைசரின் உறைவிடத்தைத் தெரிந்து கொண்டார். ஒரு வண்டியிலேறிக் கொண்டு பிள்ளையின் வீட்டெதிரில் வந்திறங்கினார். இரவு நேரம். வீட்டுக்குள் பிள்ளை ஏதோ வேலையாயிருந்தார். ஈ.வெ.ரா. முன் அறையில் படுத்திருந்தார். நாயக்கர் கதவைத் தட்டினார். பிள்ளை கதவைத் திறந்தார். நாயக்கரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். உள்ளே அழைத்துச் சென்று ஒரு அறையில் உட்கார வைத்தார். பக்கத்தில் ஈ.வெ.ரா. நின்றார். அவரைப் பார்த்து "முதலில் பையன் எங்கேயிருக்கிறான், சொல்லுங்கள். மற்ற செய்திகளைப் பிறகு பேசிக் கொள்ளலாம்'' என்றார். ராமசாமி திருதிருவென விழித்துக் கொண்டு, "நான்தான்'' என்றார். அதன் பிறகுதான் ஒருவாறு உருத்தெரிந்து கொண்டார். "அப்பா! உன்னைப் பெற்றதால் பார்க்காத ஊரெல்லாம் பார்த்து விட்டேன்'' என்று சொல்லிச் சிறிது கண்கலங்கினார்.

இரண்டு நாட்கள் அங்குத் தங்கிய பிறகு, "ஊருக்குப் புறப்படலாமா?'' என்று நாயக்கர் கேட்டார். "புறப்படலாம்'' என்றார் ஈ.வெ.ரா. இதற்குள் ஹைதராபாத்துக்குத் தந்தி கொடுத்தார். சோப்புப் பெட்டியும் வந்து சேர்ந்தது. அதைத் தம் தந்தையிடம் கொடுத்தார் ராமசாமி. பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒன்றரைப் பவுன் மோதிரம் தவிர, பாக்கி நகைகள் அப்படியே இருந்தன. நாயக்கர் அதிசயத்தில் திகைத்தார். பிள்ளையாண்டான் நகைகளை விற்றுத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பாரென்று நினைத்தார். "அடே ராமசாமி! இவ்வளவு நாளாய் எப்படியடா சாப்பிட்டாய்?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார். "நாம் ஈரோட்டில் கொடுக்கும் சதா விருத்தியை (பிச்சை) எல்லாம் வசூல் பண்ணிவிட்டேன்'' என்றார் ஈ.வெ.ரா. ஒருபக்கம் நாயக்கருக்குத் துக்கம், ஒரு பக்கம் சிரிப்பு. "சரி, நகைகளைப் போட்டுக் கொள்'' என்றார் நாயக்கர். ஈ.வெ.ரா. மறுத்தார். நகைகளை விற்றுச் சாப்பிட்டிருப்பான் என்று ஊரிலுள்ளவர்கள் கருதாமலிருப்பதற்காக நகைகளை அணிந்து கொள்ள வேண்டுமென்றும், பிறகு வேண்டுமானால் கழற்றிவிடலாமென்றும் நாயக்கர் சொல்ல, ஈ.வெ.ரா. அதை ஏற்றுக் கொண்டு எல்லா நகைகளையும் அணிந்துக் கொண்டார்.

எல்லோரும் எல்லூரைவிட்டுப் புறப்பட்டு சென்னை வழியாக ஈரோட்டை அடைந்தார்கள். சேர்ந்த சில நாட்கள் கழிந்ததுமே ஈ.வெ.ராவுக்குக் குடும்பத்தில் அதிகப் பொறுப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக மண்டிக்குத் தம் பெயர் இருந்ததை மாற்றி "ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி'' என்று பெயரிட்டார். இவருடைய துறவிக்கோலப் படம் இன்றும் உள்ளது. இப்படம் காலஞ்சென்ற பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்களால் பெரிதாக்கப்பட்டு "ஆயில் பெயிண்ட்'' செய்யப்பட்டதாகும்.

ஈ.வெ.ராவின் பொது வாழ்வு மிகுந்த சிறப்புடையது. தன்னலமற்றது. நேர்மையுடையது. இளமைப் பருவம் முதல் இப்படித்தான். இளமைப் பருவத்திலேயே சாதி பேதம் அறியாதவர், மத வேறுபாடு உணராதவர். கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், முசுலீம்கள் முதலிய எல்லா வகுப்புப் பிள்ளைகளுடனும் நன்றாகப் பழகியவர். எப்பொழுதும் 10 பேர்கள் கூடவே இருப்பார்கள். வயதேறிய பின்னும் பல வகுப்பினரையும் தோழராகக் கொண்டிருந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டில் எந்த நன்மை, தீமைகள் நடைபெற்றாலும், முதலில் அங்கு அவரைக் காணலாம். யாரும் இவரை அழைப்பார்கள். சில சமயங்களில் அழைப்பில்லாமலே சென்று விடுவார். தோழர்களும் உடன் செல்வார்கள். அவ் வீட்டுக்காரியங்களைத் தாமே முன்னின்று நடத்துவார். காரியங்கள் முற்றும் நிறைவேறிய பின்புதான் வீடு திரும்புவார். இவருடைய இவ்வியற்கைக் குணத்தினால் ஊரார் முழுவதும் இவரை உற்ற தோழராகக் கருதினர். குடும்ப விவகாரங்கள், வியாபாரத் தகராறுகள், சண்டை சச்சரவுகள் தீர்த்த வண்ணமே இருப்பார். கோர்ட்டுகளிலிருந்தும் விவகாரங்கள் இவரது தீர்ப்புக்கு வரும்! எப்படிப்பட்ட விவகாரத்தையும் பைசல் செய்துவிடுவார்.

ஒரு சமயம் ஈரோட்டில் ‘பிளேக்' நோய் வந்து விட்டது. அதனால் மக்கள் பலர் மடிந்தனர். மற்றவர்கள் அஞ்சி ஊரைவிட்டு ஓடிவிட்டனர். செல்வந்தர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எல்லோருக்கும் முந்தி ஓடிவிட்டனர். போக்கிடமில்லாத ஏழை மக்களே ஊரில் தங்கி உள்ளம் நடுங்கியிருந்தனர். இச்சமயம் ஈ.வெ.ரா. வெளியே போகாமல் தனது தோழர்களுடன் சிறிதும் அஞ்சாமல் ஊரிலிருந்த ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். இச்சமயத்தில் அவர் நடந்து கொண்ட தைரியத்தை இன்றும் பலர் புகழ்வர். அனேகப் பிணங்களைத் தாமே தூக்கிக் கொண்டு போவார். இந்நிகழ்ச்சியால் அவர் பலராலும் போற்றப்பட்டார்.
கடைத் தெருவிலும் இவருக்குச் செல்வாக்கு மிகுதி. கடைக்கணக்குகளில் ஒருவருக்கொருவர் தகராறு வந்தால் இவர்தாம் தீர்த்துவைப்பார்.

கணக்கில் நிபுணர். புள்ளி விவரங்களில் தேர்ந்தவர். எண்சுவடி தலைகீழ்ப் பாடம். இத்துடன் நல்ல நினைப்பு வன்மை! பெரும் புள்ளிகளையும் சிறிது நேரத்தில் வாய்க்கணக்காகவே முடிவு கட்டி விடுவார். கடை சம்பந்தமான பேரேடு, குறிப்பு முதலியவைகளை ஒரு முறை பார்த்தால் போதும் அப்படியே மனத்தில் படம் பிடித்துக் கொள்வார். இதனால் எந்தவிதமான கணக்குத் தகராறுகளையும் தீர்க்கும் திறமை பெற்றிருந்தார். நடுநிலைமையில் எவ்விதச் சிக்கல்களையும் முடிவு செய்யுங் குணம் பெற்றிருந்தார். இதனால் கடைக்காரர்களின் பெருமதிப்புக்கும் உரியவரானார். இப்பொழுதும் பொது மேடைகளில் பேசும் போது அரசாங்க வரவு செலவு கணக்கைப் புள்ளிவிவரங்களுடன் வெளியிடுவார். இக்கணக்கின் மூலம் விளங்கும் குற்றங்களை விளக்கமாக எடுத்துக் காட்டுவார்.

இவர் பொது வாழ்வில் தலையிட்ட பின் மைனர் விளையாட்டுகள் சிறிது சிறிதாக விலகிவிட்டன. அதிகாரிகளின் நட்பு புகுந்தது, அறிவாளிகளின் கூட்டுறவு வளர்ந்தது. செல்வர்களின் சேர்க்கை பெருகிற்று. காலஞ்சென்ற பா.வெ. மாணிக்க நாயக்கர் போன்ற பெருந்தமிழறிஞர்கள் இவருடைய யுக்தியான வேடிக்கைப் பேச்சுகளுக்காகவே இவரது கூட்டாளிகளாயினர்.

இக்காலத்தில் கருவூரில் மருதையாப் பிள்ளையென்னும் பெரும் புலவர் ஒருவரிருந்தார். அக்காலத்துப் புலவர்கள் மருதையாப் பிள்ளையைக் கண்டால் நடுநடுங்குவார்கள். இவர் யாருக்கும் அஞ்சாதவர். எங்கும் செல்வாக்குள்ளவர். இப்பொழுதும் ஈரோட்டுப் பகுதியிலுள்ளவர்கள் இவரைப் பற்றிப் பல வேடிக்கைக் கதைகள் கூறுவார்கள். இவருக்கு "விதண்டாவாதி'' என்ற பெயர். சாதி, சமயம், சாத்திரம் முதலியவற்றிலுள்ள புரட்டுகளைக் கண்டிப்பார். இவருக்கும் ஈ.வெ.ராவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இவருடைய நட்பு ஈ.வெ.ராவின் சீர்திருத்தக் கொள்கைகளுக்குப் பெரிதும் உறுதியளித்து வந்தது.

இக்காலத்தில் கைவல்ய சாமியாரின் நட்பும் ஏற்பட்டது. இவர் கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றவர். ஆதலின் "கைவல்ய சாமியார்'' எனப் பெயர் பெற்றார். பார்ப்பனியத்திற்குப் பரம விரோதி. பகுத்தறிவாளர். ஈ.வெ.ரா. காங்கிரஸ்காரராய் இருக்குங்காலத்தில் ஈ.வெ.ரா வின் போக்கைக் கண்டிப்பார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையே ஆதரிப்பார். இவருடைய நட்பும் அக்காலத்தில் ஈ.வெ.ராவின் கொள்கைக்குப் பேராதரவு அளித்து வந்தது ‘குடிஅரசு' ஆரம்பித்த காலம் முதல் இவர் ஒவ்வொரு வாரமும் அதில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை உண்டாக்கின. அக்கட்டுரைகளிலுள்ள விவாதங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எந்தப் படிப்பாளியோ, புலவரோ பதில் கூற முயன்றது கூட இல்லை. இச் செய்தி அக்காலக் ‘குடி அரசு' வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

ஈ.வெ.ரா பல பொதுக்காரியங்களையும் மேற்கொண்டு நடத்தியிருக்கின்றார். தமது கொள்கைக்கு முரண்பாடான காரியங்களிலுங்கூடப் பொறுப்பெடுத்துக் கொண்டால் அவற்றை நேர்மையாக நடத்தி வைக்கும் குணம் இவரிடமுண்டு.

"எனது வர்த்தகத் தொழிலில் நான் ஒரு அளவுக்கு வெற்றி பெற்றேன். எனது தகப்பனாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். என் தகப்பனார் இருக்கும்போதே எங்கள் வியாபாரத்திற்கு அவர் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கொடுக்கப்பட்டு விட்டது. ஊர்ப் பெருமை விஷயங்களிலும் என் தகப்பனார் ஒவ்வொன்றிலுமிருந்தும் விலகிக் கொண்டு என்னையே தள்ளிவிட்டார்''.

தொடரும்