Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிஜ நிலை

பிரதீபன்

சாராய வியாபாரிக்கு ‘மில்லி' அளவு தெரியும். கல்வியின் அளவுகோல் தெரியுமா? ஆனால், தமிழகத்தில் அவர்கள்தான் ‘கல்வி வள்ளல்'களாகிப் படிப்பை மொண்டு மொண்டு ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள. இருபது ஆண்டுகளாக இதுதான் நிலைமை.

Students தொடக்கக் கல்வியை ஏழை வீட்டுப் பிள்ளைகளும், கிராமப்புறப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பிள்ளைகளையெல்லாம் பள்ளிக்கு கொண்டு வருவதில் பெருமளவு வெற்றி பெற்றார். ஆனால், தொழிற்கல்லூரிகளைத் தனியாரின் கொடுங்கரங்களில் கொண்டுபோய் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் சுயநிதிக் கல்லூரியாகத் தொடங்கி இன்று நிகர்நிலை பல்கலைக்கழகமாகப் பெருவடிவம் எடுத்து நிற்கிறது கல்வி வியாபாரம்.

சாராய வியாபாரிகள், அடிதடி ரவுடிகள், பெரிய மனிதர்களுக்குச் சேவை செய்யும் மாமாக்கள், ஊழலில் புழுத்த அரசியல்வாதிகள், கறுப்புப் பணக்காரர்கள், இவர்கள்தான் இத்தகைய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிகரற்ற தலைவர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாடுகளைப் பராமரிப்பதற்குக்கூட குறிப்பிட்ட அளவு அறிவும் கருணையும் தேவைப்படுகிறது. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடம் வியாபாரத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் பரந்து விரிந்து கிடக்கிறது எஸ்.ஆர்.எம். நகர். பல ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நகரில் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் இன்று எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் கல்வி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. இங்கே படித்த இரண்டு மாணவர்கள் ஹெச்.சி.எல் என்ற பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.

சில மாதங்கள் உருண்டன. அந்த மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமையகம், நீங்கள் படித்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்படவில்லையே? உங்கள் சான்றிதழ்களை எப்படி ஏற்பது? என்று கேள்வி கேட்க, அதிர்ந்து போனார்கள் மாணவர்கள்.

அரசு வேலை என்பது கானல் நீராகிவிட்ட காலத்தில், தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை வாங்கலாம் என்ற கனவுடன்தான் இத்தகைய நிகர்நிலைப் பல்கலைக்கழங்களைத் தேடி மாணவர்கள் வருகிறார்கள். மாணவர்களின் பெற்றோரும் தங்கள் இருப்புகளையெல்லாம் கல்விக் கட்டணமாகச் செலுத்தியும், இலட்சக் கணக்கில் கடன் வாங்கியும் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். கல்லூரியில் சேரும் போதோ படிக்கும் போதோ எந்த விவரமும் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. அது பற்றிக் கேட்டாலும் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மிரட்டல்தான் வெளிப்படுகிறது.

படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போது, தாங்கள் படித்த கல்லூரிக்கு அங்கீகாரமே இல்லையென்றால் மாணவர்கள் மட்டுமல்ல, இலட்சக்கணக்கில் செலவழித்த பெற்றோரும் கதிகலங்கிப் போய் விடுகிறார்கள். கல்வி எனும் கலைமகளைக் காசாக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களோ இது குறித்து கவலைப்படுவதில்லை. எஸ்.ஆர்.எம். நிறுவனம் அப்படித்தான் செயல்பட்டிருக்கிறது. இரண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தால் பீதியடைந்த இன்றைய மாணவர்கள், அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் அங்கீகாரம் பற்றிக் கேள்வி கேட்க, உருட்டுக்கட்டையால் பதில் சொல்லியிருக்கிறது எஸ்.ஆர்.எம். நிர்வாகம்.

கல்விச் சேவைக்காகவே கல்லூரிகளை நடத்தியவர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்குள் காவல்துறையின் பூட்ஸ் கால்கள் படுவதே கண்ணியக் குறைவு என நினைத்தவர்கள். ஆனால், எஸ்.ஆர்.எம். நிர்வாகமோ தங்களிடம் அங்கீகாரம் பற்றிக் கேள்வி கேட்ட மாணவர்களை அடித்து உதைப்பதற்காகக் காவல்துறையை வரவழைத்ததுடன், நிர்வாகத்தின் கைவசமுள்ள குண்டர்களைக் கொண்டும் தாக்கியுள்ளார்கள். கணினிகளை மாணவர்கள் சேதப்படுத்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு. கணினிகள் சேதமானதற்காகக் காவல்துறையும் குண்டர்களும் தாக்குவார்கள் என்றால், மாணவர்களின் எதிர்காலத்தைச் சேதப்படுத்தியதற்காக இராணுவமும் போராளிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தாக்கலாமா?

எஸ்.ஆர்.எம்மின் இலட்சணம் அம்பலமான பிறகு ஒவ்வொரு நிகர்நிலையின் யோக்கியதையும் வெளியே தெரிய வந்தது. சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கும் அங்கீகாரம் இல்லை. நிர்வாகத்திற்குப் பயந்து மாணவர்கள், அடையாளம் தெரியக்கூடாது என்ற அக்கறையுடன் பாதியளவு முகத்தை மறைத்துக் கொண்டு பேட்டியளிக்கும் தீவிரவாதிகள் போல ஊடகங்களுக்குத் தங்கள் நிலைமையை விளக்கியது பரிதாபமான காட்சி. ஜெயில் சாமியார் ஜெயேந்திர சங்கராச்சாரியாரின் நிர்வாகத்தில் உள்ள ஏனாத்தூர் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களும், தங்கள் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை எனப் போராடத் தொடங்க, நிர்வாகங்களோ கல்லூரிகளை காலவறையின்றி மூடிவிட்டன.

Students "பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் போதும். அகில இந்திய தொழில் நுட்பக் கல்லூரிக் குழுவின் அங்கீகாரமே வேண்டாம்'' என்கின்றன நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள். "தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரமின்றி வகுப்புகளைத் தொடங்க முடியாது. நாங்களும் கூட அந்த அங்கீகாரத்தைப் பெற்றே ஆக வேண்டும்'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன்.

இப்போது இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. மார்ச் 7ஆம் தேதிக்குள் தொழில் நுட்பக் குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அறிவிப்புக்கு மார்ச் 16ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நுழைவுத் தேர்வு விவகாரம் போலவே அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரமும் சட்டத்தின் பிடியில் இருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் இருளின் பிடியில் இருக்கிறது. இவர்களின் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை தீவிரமாய்ப் போராடிக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.கவிலும் ஒரு மாணவரணி இருக்கிறது. அவர்களுக்கு ‘அம்மா' புகழ் பாடும் டிஜிட்டல் பேனர் வைப்பது மட்டும் தான் புரட்சிகரமான செயல். தி.மு.க விலும் மாணவரணி இருக்கிறது. மொழிப் போரில் மாணவர்கள் ஆற்றிய பலனை வீரதீரமாகப் பேசிவிட்டு, இன்றைய மாணவ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் ஓட்டுக்களை மனத்தில் வைத்து இந்த விவகாரத்தை கையிலெடுத்து மாணவர்களின் நலனுக்காகப் போராடலாம்.

கல்வி வியாபாரிகள், அரசு, நீதிமன்றம் என மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை வருங்காலத் தூண்கள் என வர்ணித்த அரசியல் மேடைகளோ பாராமுகமாய் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளிடமிருந்து கலைமகளை யார் மீட்கப் போகிறார்கள்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com