Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

அவர்கள் செய்தால் ராஜதந்திரம்! நாங்கள் செய்தால் துரோகமா?

மதிமுக தொண்டர்கள்

4-3-2006. தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். கலைஞருக்குப் பிறகு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்ட வைகோ, போயஸ் தோட்டத்தில் கால் பதித்த நாள்! அ.தி.மு.க. உடனான கூட்டணியை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா...? என்பது மே 11 அன்று தெரிந்துவிடும். இந்த மாற்றத்திற்கு காரணம், எனது தொண்டர்கள்தான் என்று மீண்டும் மீண்டும் வைகோ சொல்கிறார். அந்த தொண்டர்கள்களின் உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறோம்.

Vaiko and Karunanidhi 1. தி.மு.க. கூட்டணி வென்றால் இம்முறை முதல்வராகப் போவது கலைஞர் அல்ல, ஸ்டாலின். எங்கள் தலைவர் தி.மு.கவை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தவரை நாங்கள் முதல்வராக்க வேண்டுமா? அதற்காக 234 தொகுதிகளில் உழைக்க வேண்டுமா?

2. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு முக்கிய காரணம் எங்கள் தலைவர் வைகோ. தினகரன் ஒருவர் மட்டும் வென்றுவிடுவார் என்று எல்லோரும் அடித்துச் சொன்னார்கள். எங்கள் தலைவர் வைகோவின் பிரச்சாரத்தால் கடைசி நிமிடத்தில் ஆரூன் வென்றார். இதை ஆரூனே ஒப்புக் கொண்டார். ஆக நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியில் வைகோவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அன்று கலைஞர் எங்களுக்கு தந்தது வெறும் 4 தொகுதிகள். இன்றைக்கு சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த தொகுதிகளையே அவர் ஒதுக்கினால் எங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

3. தி.மு.க., அ.தி.மு.க இரண்டுமே வேண்டாம். தனித்துத் தான் நாங்கள் நின்றிருக்க வேண்டும். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கலைஞர், ஜெயலலிதாவுக்கு மாற்று, வைகோதான் என்பது படித்த மக்களின் கருத்தாக உள்ளது. பாமர மக்களை அந்த இரு கட்சியினரும் தம் பணபலத்தாலும், தொலைக்காட்சி பலத்தாலும் ஏமாற்றுவதால் எங்களால் இம்முறையும் தனித்து நிற்க இயலவில்லை. ஏற்கெனவே இருமுறை நாங்கள் நிராயுதபாணியாகத் தனித்து நின்று தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளோம். தமிழக அரசியலைப் பொறுத்தவரை கூட்டணிதான் வெல்லும், எனவேதான் நாங்கள் இம் முடிவை எடுத்தோம்.

4. பொடாவில் உள்ளே தள்ளியவருடனா கூட்டு? நியாயமான கேள்விதான். மிசாவில் உள்ளே தள்ளியவருடன் அவர்கள் சேரவில்லையா? எங்களை அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவைத்ததே கலைஞர் தான். நாங்கள் கேட்டது 40 தொகுதி. அவர் தர நினைத்தது 20. நாங்கள் மீண்டும் கேட்டது 25. அவர் தருவதாகச் சொன்னது 22. வார்த்தைக்கு வார்த்தை தன் தம்பி என்று பொடா சிறையில் இருந்தபோது அழுத கலைஞர் 3 தொகுதிகளைச் சேர்த்துத் தருவதால் என்ன குறைந்து விடப் போகிறார். ஒரு பேச்சுக்கு நாங்கள் 22 தொகுதிகளை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை அவர்கள் தரத் தயாராக இல்லை என்பது தான் உண்மை. 2001 தேர்தல் போலவே கடைசி நிமிடத்தில் எங்களை கழற்றி விட அவர்கள் முடிவு செய்தனர். நாங்கள் தனித்து நின்று நீர்த்துப் போக வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். அதை முன்னரே நாங்கள் தெரிந்து கொண்டதால் வேறு வழியே இன்றி அ.தி.மு.க வுடன் கூட்டணி கண்டோம். இதில் என்ன தவறு?

Vaiko and Jayalalitha 5. சீட்டுக்காக அரசியல் நடத்துபவர் வைகோ அல்ல என்று இதுவரை இருந்த நிலையை எங்கள் தலைவர் உடைத்து உள்ளார். 13 ஆண்டு காலம் தூய்மையாக இருந்தோம். என்ன பலன்? எந்தக் கட்சி அதிக சீட்டுத் தருகிறதோ அதனோடு தான் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்தார் ராமதாஸ்! ‘எச்சில் இலை தேவை இல்லை; தலைவாழை இலை விருந்தே எங்களை அழைக்கிறது' என்றார் திருமா! ‘பண்டாரங்கள்' என்று பி.ஜே.பியை வசைபாடிவிட்டு அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு கொண்டார் கலைஞர்! அவர்கள் செய்தால் இராஜதந்திரம், நாங்கள் செய்தால் துரோகமா?

6. அ.தி.மு.கவுடன் கூட்டணி எங்கள் தலைவரின் ‘இமேஜை'ப் பாதிக்கும் என்பது உண்மைதான்! அநேகமாக இந்தக் கூட்டணி தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை தான் (மே11). ராஜிவ் காந்தியின் மரணத்தின் மூலம் நாங்கள் வெல்லவில்லையென்று அன்று சொன்ன ஜெயலலிதா, எங்கள் கூட்டணி வென்றாலும், அவரின் தனிப்பட்ட வெற்றியாகத்தான் அதை அறிவிப்பார். மொத்தத்தில் இது தற்காலிகக் கூட்டணிதான். தேர்தலுக்கான கூட்டணிதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com