Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கவிதை

தம்பி

கோவி. லெனின்

உயிரின் வலி எல்லாருக்கும் ஒன்றுதான். இதைத்தான் உரக்கச் சொல்லியிருக்கிறான் தம்பி. நீ அடிக்கும் போது எனக்கு எப்படி வலிக்குமோ அதே வலிதான் நீ அடி வாங்கும் போதும் ஏற்படும் என்பதை உரத்தும் உதைத்தும் இந்தத் ‘தம்பி' புரிய வைக்கிறான். ‘வன்முறையை ஒழிப்பதற்கான வன்முறை' என்பது தமிழ்த் திரைக்குப் புதிது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்ற தோழர் மாவோவின் வரிகள் தான் ‘தம்பி'யின் கதைக்கரு.

Pooja and Madhavan in 'Thambi' மரம் வெட்டப்படுவதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத இளகிய இதயம் கொண்ட தம்பிக்கு, மனிதர்களை வெட்டிக்கூறு போடும் கூட்டத்தின் மீது நியாயமான கோபம் எழுகிறது. தன் கண் எதிரே வெட்டப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கத் தோழரைக் காப்பாற்ற முயன்றும் பயனில்லாமல் போகிறது. கொலைகாரர்களின் சேவகர்களாக இருக்கும் காவல்துறையோ, தம்பியை கொலைகாரனாக்க முயல்கிறது. தம்பியோ கொலைகாரர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறான். சத்தமில்லாமல் முடிக்க நினைத்த கொலை விவகாரத்திற்குச் சாட்சியாக இவன் வந்துவிட்டானே என்ற கோபத்துடன் வஞ்சம் தீர்க்கிறது கொலைகாரக் கும்பல். குருவிக்கூட்டுக் குள் வெடிகுண்டு வைத்ததுபோல, தம்பியின் அன்பான குடும்பத்திலிருந்த அப்பா, அம்மா, தங்கை மூவருமே கொலைக் கும்பலால் கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு பழிக்குப் பழி வாங்க எதிரிகளைத் ‘தம்பி' கொல்வதுதானே மீதிக்கதை என்று நீங்கள் நினைத்தால்... மன்னிக்க வேண்டும். அது உங்கள் தவறல்ல. இப்படித்தான் தமிழ்த்திரைப்படத்தின் கதை இருக்கும் என ரசிக மனங்களின் மீது நம் திரையுலகினர் உருவாக்கியிருக்கும் கட்டுமானம் அப்படி. அந்தக் கட்டு மானத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறான், இயக்குநர் சீமானின் ‘தம்பி'.

எதிரிகளைப் பழிவாங்கும் வழக்கமான கதாநாயகனாகத்தான் பெருங்கோபத்துடன் தம்பி கிளம்புகிறான். ஆனால், தன்னைப் போலவே எதிரிக்கும் ஓர் அன்பான குடும்பம் இருப்பதையும், எதிரியின் உயிரைப் பறித்துவிட்டால், தனது தாய் தந்தை தங்கையை இழந்து, தான் எப்படித் துன்பப்படுகிறோமோ அதே துன்பத்தை எதிரியின் குடும்பமும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற பேரன்பு கொண்டு, ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் எதிராகப் பேருருவம் எடுத்து நிற்கிறான் தம்பி. தடிகொண்டு தாக்க வருபவர்களை நச்சுப்பற்களால் கடிக்காமல், தடியாளர்கள் பயந்து ஓடும்படி பக்குவமாகச் சீறுகிற பாம்புபோல வன்முறையாளர்களை விரட்டுவதற்குச் சில வன்முறை நடவடிக்கைகளை தம்பி கையாள்கிறான். உயிர்களிடத்து அன்பு செய்யத் தெரிந்தவனுக்கு சில உடம்புகளை நையப்புடைக்கவும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அத்துடன் ரசிகர்களின் நாடித்துடிப்பும் புரிந்திருக்கிறது.

தம்பி பாத்திரத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் நடிகர் மாதவன். அலைபாயுதே, மின்னலே ரக அமுல்பேபி மாதவன் இந்தப் படத்தில் இல்லை. ரன்னை விடவும் இன்னும் வேகமான கோபமான மாதவனை இதில் பார்க்க முடிகிறது. பேரன்புடன் பொறுமையாக இருப்பவன் பெருங்கோபம் கொண்டவனாக மாறும் நொடிகளில் மாதவன் மிரள வைக்கிறார். அதற்கேற்பக் காட்சியமைப்புகளில் பின்னி எடுத்திருக்கிறார் இயக்குநர் சீமான். படம் நெடுகக் காட்சிகள் இருந்தாலும் உதாரணத்திற்கு இரண்டு.

தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரத்தின் சருகுகள் பக்கத்து வீட்டில் விழுவதால், அந்த வீட்டுப் பெண்மணி அடிக்கடி சண்டை போடுகிறாராம். அதனால் மரத்தை வெட்ட முடிவு செய்கிறார் தம்பியின் தந்தை. மரம் வெட்டப்படுவதைத் தம்பியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரத்தின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்து விடுகிறான். மறுநாள் மரத்திற்கு மரண தண்டனை. முதல்நாள் இரவில் எல்லோரும் உறங்கியபின் மரத்தின் அருகே வருகிறான் ‘தம்பி'. "லேசா வலிக்கும், கொஞ்ச நேரம் பொறுத்துக்க'' என்று மரத்திடம் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஆணியை அடிக்கிறான். அந்த ஆணியில் ஒரு பூமாலையை தொங்கவிடுகிறான். மரத்தினடியில் இரண்டு செங்கற்களை நட்டுக்குத்தாக வைத்து, தங்கையின் மஞ்சள் தாவணியை கிழித்துக் கல்லுக்குச் சுற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் போய்ப் படுத்துக் கொள்கிறான்.

காலையில் அவனை எழுப்பி அழைத்து வரும் தங்கை, "அண்ணே... அங்கே பாருண்ணே'' என்கிறாள். மாலை சூடிய மரமும், அதன் கீழ் ‘சுயம்பு'வாகக் கிளம்பிய மஞ்சளாடை மாரியாத்தாவும் தெரு மக்களுக்கு திடீர்த் தெய்வமாகிவிட, அத்தனை பெண்களும் குலவையிட்டு பொங்கல் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தம்பிக்கு மரத்தை மரணத்தின்பிடியிலிருந்து காப்பாற்றி விட்ட நிம்மதி. தன் தங்கையுடன் அவன் வெளியே வர, அந்த மாமரம் நன்றி தெரிவிப்பது போல் தன் கிளைகளை அசைக்கிறது. கருணையும் கவிதையும் வழிகின்ற காட்சி இது.

மரத்தின் உயிர் பறிக்கப்படக்கூடாது என நினைப்பவனால், மனிதரின் உயிர்களைப் பறிப்பவர்களை சும்மா விட்டுவிட முடியுமா? கொலைகாரர்களில் ஒருவனை நையப்புடைத்து அழைத்து வருகிறான். கொல்லப்பட்டவனின் வீட்டில் கேட்கும் அழு குரலையும், உறவுகளின் பரிதவிப்பையும், கணவனை இழந்த மனைவியின் கதறலையும், அனாதரவான பிள்ளைகளின் நிலையையும் நேரில் பார்க்க வைக்கிறான். தான் கொல்லப்பட்டாலும் தன் குடும்பம் இப்படித்தானே நிற்கும் என்பது அந்தக் கொலைகாரனுக்கு புரிகிறது. மரணத்தின் விளைவு என்ன என்பது அந்தக் கொலைகாரனால் உணரப்படுகிறது. தம்பி தந்த இந்த தண்டனையை விட இ.பி.கோ பிரிவில் வேறு என்ன பெரிய தண்டனை கொடுத்து விட முடியும்? இதுபோன்ற காட்சிகளைப் படம் நெடுகிலும் அமைத்து அமைதி விதைகளை நடவு செய்திருக்கிறார் இயக்குநர் சீமான்.

Madhavan பாத்திரப் படைப்புகளிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். அதில் மிகவும் கவர்ந்தது தம்பியின் தந்தை பாத்திரம். தம்பிக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் உருவாகும்போது தாய், தங்கை எல்லோரும் இயல்பாகப் பதறுகிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு தம்பியிடம் வரும் தந்தை, ‘நான் இருக்கேன்' என்று அவனது நியாயமான செயலுக்கு ஆதரவும் நம்பிக்கையும் தருகிறாரே, அந்த ஒரு காட்சி போதும். குடும்பத்தில் எல்லோரும் பதறும் போது தந்தை மட்டும் எப்படி ஆதரவு கொடுக்கிறார் என்ற கேள்வி எழும். அதனால் தான் ‘தம்பி'யின் வீட்டுச் சுவர்கள் மூலமாகவே தந்தையின் பாத்திரத்தை விளக்கிவிடுகிறார் இயக்குர் சீமான். சுவர்களில் பெரியார், அண்ணா, பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரது படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. சுயமரியாதையும் வீரமும் பொது நலனில் அக்கறையும் கொண்ட தலைவர்களின் மீது பற்றுக்கொண்ட தந்தையால் தம்பியின் நியாய உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது. பாதையைச் சரியாகத் தேர்வு செய்தால் பயணத்தில் வரும் தடைகளைக்கண்டு பயப்படத் தேவையில்லை என்பதைப் பல காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் சீமான்.

காரல் மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின், காஸ்ட்ரோ, சேகுவாரா எனச் சிவப்பு சிந்தனை கொண்டவர்களின் படங்களும் அவர்களின் கருத்துக்களும் படத்தில் ஆங்காங்கே பளிச்சென வெளிப்படுகின்றன. எந்த ஒரு இடத்திலும் வலியத் திணிக்காமல் காட்சியின் போக்கிலேயே இவற்றை வெளிப்படுத்தியிருப்பது இயக்குநரின் திறனுக்கு சான்று. கதாசிரியர் சீமான், இயக்குநர் சீமான் எனப் பல பரிமாணங்களில் சீமான் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும் தம்பியில் அவர் சிகரம் தொட்டிருப்பது வசனத்தில்தான். ‘புலியை இன்னொரு புலி அடிச்சுக் கொல்றதில்லை. சிங்கத்தை இன்னொரு சிங்கம் அடிச்சுக் கொல்றதில்லை. மனுசனை மனுசன் அடிச்சிக்கொல்றதா?'

"ரத்தம் தேகத்துக்குள்ளேதான் ஓடணும். அது ஏன்டா தெருவுல ஓடுது'' "மானைக் கொன்னா ஜெயிலு. மனுசனைக் கொன்னா பெயிலு'' இவையெல்லாம் ஒரு சில தீப்பொறிகள். படம் முழுக்க இப்படி அனல் பறக்கிறது. அதிலும், கல்லூரி விழாவில் தம்பி பேசும் வசனங்களில் மாதவன் தெரியவில்லை. இயக்குநர் சீமானின் குரல்தான் உள்ளேயிருந்து ஒலிக்கிறது. மேடைகளில் சீமானின் பேச்சைக் கேட்டவர்களால் இதனை உணர முடியும்.

தம்பி படைப்பில் சீமானோடு கைகோத்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காட்சிக்கான களங்கள், உடைகள், நிறங்கள் என எல்லாமே கச்சிதமாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கதாநாயகிதான் வழக்கம் போல் நாயகனுடன் பாட்டுப் பாடுவதற்காக வந்து போகிறார். நாயகி பூஜாவுக்கு அவ்வப்போது நடிக்கக் கிடைத்திருக்கும் காட்சிகளில், குறிப்பாக தம்பியையும் அவன் நண்பர்களையும் சகட்டுமேனிக்குத் திட்டித் தள்ளும் தொடக்கக் காட்சியில் அசத்துகிறார். பின்னர் வழக்கம்போல் நாயகனின் தீரச்செயலில் மயங்கி காதலிப்பது வழக்கமான தமிழ்ப்படம்தான் என்றாலும், காதலனுக்கு அவர் தரும் பரிசு வித்தியாசமானது. கண்ணாடிப் பெட்டியில் மண்ணை நிரப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறார். இதில் தண்ணீர் ஊற்றுங்கள் என்றும் சொல்கிறார். தம்பியின் குடும்பத்தார் தினமும் தண்ணீர் ஊற்றுகிறார்கள். மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் விதை, ‘ஐ லவ் யூ' என வளர்கிறது. வளமான நயமான இதமான கற்பனை. அடுத்த காதலர் தினத்தில் பல காதலர்கள் கண்ணாடிப் பெட்டியில் மண் நிரப்பிப் பரிசு கொடுக்கப் போகிறார்கள்.

தம்பி நடத்தும் தையற்கூடத்தை நாயகி பார்வையிடுகிறாள். அங்குள்ள ஒரு பெண்ணிடம், உங்க அப்பா எங்கே என்று கேட்க, ஜெயிலில் இருக்கிறார் என்கிறாள் அந்தப் பெண். அடுத்த பெண்ணிடம் அவளது அப்பா பற்றிக் கேட்கிறார் நாயகி. அதற்கு அந்தப் பெண். "எங்க அப்பாவைக் கொன்றதால தான் அவங்க அப்பா ஜெயிலிலே இருக்கிறார்'' என்கிறாள். கொல்லப்பட்டவரின் குடும்பமும், கொலை செய்தவரின் குடும்பமும் நிர்க்கதியாகி விடக்கூடாது என்கிற சமூக அக்கறை கொண்டவனாகத் ‘தம்பி' இருக்கிறான். அதனால்தான் இரண்டு குடும்பத்துப் பெண்களுக்கும் தன் தையற்கூடத்தில் வேலை கொடுத்திருக்கிறான் என்பதை நாயகி அறிகிறாள். இந்தச் சமூக அக்கறைதான் படத்தில் உள்ள ஒரு சில குறைகளையும் புறந்தள்ள வைத்து விடுகிறது.

விறுவிறுப்பு என்றாலே காதலியுடன் மாரத்தான் ஓட்டம் ஓடுவது, வில்லனை புரட்டி எடுத்து துவைத்துக் காயப்போடுவது, இடைவேளைக்கு முன்போ பின்போ குத்தாட்டப் பாட்டு என்கிற தமிழ்த்திரையின் அண்மைக்கால மரபுகளைத் தகர்த்தெறிந்து, சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை விறுவிறுப்பான காட்சிகளோடு இணைத்துப் புதிய முயற்சியுடன் ஒரு படத்தைத் தந்திருக்கிறார் சீமான். ரசிகர்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்திருப்பது சீமானின் உழைப்புக்கும் அவரது சிந்தனைக்கும் கிடைத்த பெருமை. ‘தம்பி'யின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது.

- கோவி. லெனின் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com