Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூன் 2006
கட்டுரை

தன்னம்பிக்கை விதைத்த தாகம் விழா
பிரதீபன்


பொழுதைப் போக்குவதற்காகப் பல நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொழுதை விடியச் செய்யும் நிகழ்ச்சி மே 28ஆம் நாள் மாலையில் சென்னை அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. "தமிழ் முழக்கம்' எடுத்த நமது "தாகம்' இதழின் 15ஆம் ஆண்டு விழாவில், தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குநர் சீமானின் "தம்பி' திரைப்படத்திற்கு பாராட்டு விழாவும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவை காணும் வாய்ப்பை பெறமுடியாத வாசகர்களுக்காக நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களைத் தருகிறோம். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் தொடரும் காலம் இது. ஆனால் 100% பெண்களே இசையமைக்கும் The girls இசைக் குழு, விழா மேடையை ஆக்கிரமித்திருந்தது. ஆசியாவின் ஒரே பெண்கள் இசைக்குழு தன்னம்பிக்கையும் தமிழுணர்வுமிக்க பாடல்களை இசைத்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்க, அதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகளும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன.

Seeman மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கு மாறாக, இயற்கையின் கவனக் குறைவால் உயரமாக வளரமுடியாமல் போனவர் சுஜாதா. தனது உயரம் குறைந்து விட்டாலும் தன்னம்பிக்கையின் உயரம் குறையாமல் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறிக் காட்டியவர். தாகம் மேடையில் தனது தன்னம்பிக்கைக் குரலை பதிவு செய்து இளைஞர்களுக்கு ஊக்கம் தந்த சுஜாதாவிற்கு தாகம் சார்பில் விருது வழங்கியவர், தாகத்தின் வளர்ச்சியில் தோளோடு தோள் நிற்கும் "ஜோதி' அச்சக உரிமையாளர் கணேசமூர்த்தி அவர்கள்.

விருதினைப் பெற்றுக்கொண்ட சுஜாதா, ""எனது பெற்றோர், ஆசிரியை, நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மேடையில் எனக்கு விருதளித்த தாகத்திற்கு நன்றி'' என்றார். தந்தை பெரியார், தத்துவ அறிஞர் காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை திரையில் வெளிப்படுத்தும் இயக்குநர் மணிவண்ணனுக்கான விருதை அவரது மகன் ரகுவண்ணன் பெற்றுக் கொண்டார். அவருக்கு விருது வழங்கியவர், "மம்மி' என்றது குழந்தை, "அம்மா' என்றது மாடு, என்ற சவுக்கடி வரிகளைத் தந்த பாவலர் பல்லவன் அய்யா அவர்கள்,

"கலாபக் காதலன்' படத்தில் மிகச் சிறப்பாக நடித்த நடிகை அட்சயாவுக்கு, ஈமுகோழி வளர்ப்புமுறையைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துவரும் "அரவிந்த் மாடர்ன் ஃபார்மஸ் உரிமையாளர் ஏ.ஜி. ராமச் சந்திரன் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

"தமிழக எல்லையிலிருந்து இங்கே வந்திருக்கிறேன். தாகம் என்பது எல்லோருக்கும் இருக்கணும். அது பத்திரிகையாக இருப்பது பாராட்டுக்குரியது. 15 ஆண்டுகாலமாக சிறப்புடன் வெளிவருகிறது. 1992லிருந்து நான் தாகம் படித்து வருகிறேன். ஈமு கோழி வளர்ப்பு, முயல்வளர்ப்பு ஆகியவற்றை தாகம் மூலம் அறிமுகப்படுத்தி, 1லட்சத்து 45 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். எல்லோருக்கும் தாகம் இருக்கிறது. அதற்கு ஊக்கம் தர ஆள் வேண்டும்.''

விருதைப் பெற்றுக்கொண்டு நடிகை அட்சயா, நன்றி தெரிவித்துப் பேசியதுடன், "எல்லா டைரக்டர்களும் பாம்பே, பெங்களூர்னு பெண்களை தேடுறாங்க. Talented தமிழ் Girlsக்கு வாய்ப்புத்தரணும்'' என்று சொல்லி, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் விதத்தில் ஒரு பாடலையும் பாடினார்.

உலகமயமாக்கலுக்கு எதிராக "நாகரீகக் கோமாளி' எனும் திரைக்காவியத்தை படைத்த அதன்ண இயக்குநர் தயாரிப்பாளர் ராம்ஜி பாலனுக்கு விருது வழங்கப்பட்டது.

அவருக்கு விருது வழங்கியவர் தாகம் இதழின் வளர்ச்சிக்குத் துணை நிற்பவரும், பொதிகைத் தொலைக்காட்சியில் "வெளிச்சத்தின் மறுபக்கம்' எனும் விழிப்புணர்வுத் தொடரை தொடர்ந்து இயக்கிவரும் "மதுரா டிராவல்ஸ் அதிபர் வி.கே.டி.பாலன்.

"ஒரு பத்திரிகையை 15 ஆண்டுகாலம் நடத்துவது என்பது மிகப் பெரிய சாதனை. தாகத்தின் மூலம் தம்பி செங்குட்டுவன் அதைச் செய்திருக்கிறார். அது போலவே "தம்பி' படத்தின் மூலம் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் சீமான். தமிழர்களுக்கென ஒரு நாடு வேண்டும், ஐ. நா. சபையில் தமிழனுடைய கொடி பறக்கவேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறவரை யாரும் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள். தம்பி என்றுதான் அழைப்பார்கள். அவரைப் போலத்தான் இந்தத் தம்பியும். இதன் இயக்குநர் சீமானையும், தாகம் செங்குட்டுவனையும், இந்த விழாவினை எடுக்கும் தமிழுணர்வாளர் பொடா சிறையை அஞ்சாமல் எதிர் கொண்டவர், "தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களுக்கும் நன்றி'' என்றார் உணர்ச்சிப் பூர்வமாக.

"தம்பி', "தவமாய் தவமிருந்து' போன்ற தரமான படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் இளவரசுக்கு விருது வழங்கினார், தாகம் குடும்பத்திலிருந்து தொழிலதிபராக உயர்ந்திருக்கும் பொன்.கோபால். கவிஞர் நா.முத்துக்குமாருக்கு "வாசவிசுதாகர் விருது வழங்கினார்.

"ஊனம் என்பது உடலில் இல்லை'' என்பதை இருகால்களும் இல்லாத நிலையிலும் நிரூபித்திருக்கும் சக்திராணிக்கு, தாகம் இதழின் சட்ட ஆலோசகரும், பெண்ணுரிமைக்காகப் போராடிவரும் வழக்கறிஞருமான தோழர் அஜிதா வழங்கினார்.

"15ஆவது ஆண்டு என்பது கவனமாக இருக்க வேண்டிய வயது. இப்படியும் போகலாம் அப்படியும் போகலாம். சரியான பாதையில் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என வாழ்த்தினார். விருது பெற்ற சக்திராணி, "எல்லோருக்குள்ளும் தன்னம்பிக்கை இருக்கிறது'' என அனைவருக்கும் ஊக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பண்ருட்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மக்களோடு மக்களாகப் பணியாற்றும் பா.ம.கவின் துடிப்பு மிக்க இளைஞருமான வேல்முருகன், "தாகம்' விருதினைத் தமிழ் முழக்கம் சாகுல் அமீதின் கரங்களால் பெற்றுக் கொண்டார்.

அவர் உரையாற்றுகையில், "இங்கே நான் பார்க்கின்ற கூட்டமெல்லாம் தமிழ்ச் சமூ கத்தின் போராளிகள் கூட்டமாக இருக்கிறது. சிறந்த மக்கள் பணிக்காக ஏற்கனவே, இந்தியாவில் உள்ள 7000 சட்டமன்ற உறுப்பினர்களுள் என்னைத் தேர்வு செய்து விருது வழங்கியிருக்கிறார்கள். 8000 கேள்விகளைக் கேட்ட ஒரே உறுப்பினர் என்பதால் எனக்கு மற்றொரு விருதும் வழங்கப் பட்டுள்ளது. மூன்றாவது விருதாக, இலக்கியப் போராளிகள் ஒன்று சேர்ந்து வழங்குகின்ற இந்த விருதினைக் கருது கிறேன். இனத்திற்காகவும் மொழிக்காகவும் எத்தனை தடாக்களையும் பொடாக்களையும் தாங்கக்கூடிய சாகுல் அமீது அவர்களின் கையால் இந்த விருதினை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படியே நடந்திருக்கிறது. 15 ஆண்டுகாலம் போராடி பத்திரிகை நடத்தி, என்னுடைய மக்கள் பணியை நேரில் ஆய்வு செய்து விரிவாக எழுதிய செங்குட்டுவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே விருது பெற்ற ஊனமுற்ற சகோதரிகளின் திறமையினை, ஒரு சட்டமன்ற உறுப்பினராக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என உறுதியளிக்கிறேன்'' என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய "தமிழ் முழக்கம்' சாகுல் அமீது, "மக்கள் நலனுக்காகப் போராடி வரும் வேல்முருகனுக்கு இந்த நிகழ்ச்சிகளின் பெருமையை அர்ப்பணம் செய்கிறேன்'' என்றார் உணர்வுப் பூர்வமாக.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த நிகழ்ச்சியின் உச்சகட்டம் நெருங்கியது. விழாத் தொடக்கத்திலிருந்து இறுதி வரை முன் வரிசையில் அமர்ந்து ரசித்தபடி இருந்த "தம்பி' படத்தின் நாயகி பூஜா மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரது நடிப்புக்கும் தமிழார்வத்துக்கும் சேர்த்து விருது வழங்கினார், "சேவாவர்ஷினி' நிறுவனத்தை நடத்துபவரும் தாகம் இதழின் வளர்ச்சிக்கு துணை நிற்பவருமான தொழிலதிபர் உதயகுமார். விருது வழங்கி அவர் பேசும்போது, "தன்னம்பிக்கையின் சிகரமாக மேடைக்கு முன்பும் மேடையிலும் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்று சொன்ன கவிஞரின் மனநிறைவுக்கு இன்று ஒரு விழா. பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டும் பைந்தமிழ்பாடும் என்ற பெருமை உண்டு. நான் படித்த அந்தக் கல்லூரிப் பாசறையிலேயே பயின்ற ஆசிரியர் செங்குட்டுவனுக்குப் பாராட்டுக்கள். 15 வருடமாக தாகம் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை, தம்பி படத்தின் மூலம் இயக்குநர் சீமான் ஏற்படுத்தியிருக்கிறார். அது நான் மிகவும் ரசித்த படம். "தமிழுக்கு விழா, தம்பிக்கு விழா, எனது "தம்பி செங்குட்டுவனுக்கு விழா'' என்றார். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மழலைத் தமிழில் பேசத் தொடங்கினார் நடிகை பூஜா.

"இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் என் இனிய அன்புள்ள வணக்கம். இந்த திரையுலகத்துக்கு வருவதற்கு முன்னாடி ஒரு தாகம் இருந்தது. அது தான் தமிழ்த் தாகம். நான் ஸ்கூலில் படிக்கும்போது, எனக்கு First Language தாய்மொழி கன்னடம், Second language இங்கிலீஷ். Third language பிரெஞ்ச் மற்றும் இந்தி மொழி இருந்தது. இதில் எதையாவது படிக்கணும். நான் டீச்சர்கிட்டே போய், திராவிட languageஆன தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இதில் ஒன்றை Languageஆக எடுத்துக்கலாமேன்னு கேட்டேன்.

Award அன்னைக்கு ராத்திரி நான் கடவுள்கிட்டே வேண்டும்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் படிக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுன்னு கேட்டேன். அந்த வாய்ப்பு தம்பி படம் பண்ணும் போது தான் நிறைவேறியது. இங்கே நடிக்க வரும்போது தமிழில் ஒரு வார்த்தை தெரியாமல் வந்தேன். தண்ணிங்கிற வார்த்தை மட்டும்தான் தெரியும். இப்ப நான் இங்கே இந்த அளவு பேசுவதற்குச் சீமான், அறிவுமதி போன்றவங்க தான் காரணம். இப்ப திக்கித் திணறித்தான் பேசுறேன். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்வாங்க. தமிழை நல்லா கத்துக்கிட்டு உங்க முன்னாடி பேசுவேன்.

"தமிழுக்கு அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாரதிதாசன் சொல்லியிருப்பதை சீமான் எனக்கு சொன்னார். "குழல் இனிது யாழ் இனிது என்பர்; தம் தாய்மொழியாம் தமிழ்ச் சொற்கள் கேளாதவர்'' என நிறைவு செய்தார்.

தமிழகத்து நடிகைகளே தமிழ்ப் பேசத் தயங்கும் நிலையில் கன்னடத்தைச் சேர்ந்த நடிகை பூஜா, தன்னை வாழவைக்கும் தமிழை நன்றி மறவாமல் நினைத்துப் பேசியதற்கு அரங்கமே கைதட்டியது.

இதனைத் தொடர்ந்து, "பெரியாரின் பேரன், சேகுவேராவின் தம்பி'' என்று வர்ணனையாளர் சொன்னதுமே இயக்குநர் சீமான் மேடையேறப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு அரங்கம் ஆர்ப்பரித்தது. அவருக்கு விருது வழங்கியவர். "தமிழ் முழக்கம்' சாகுல் அமீது. எனது மருமகன் இயக்கிய "தம்பியின் 125வது நாள் விழாவை நாகையில் உள்ள ஹோட்டல் தமிழகத்தில் நடத்தவிருக்கிறேன்' என்ற இனிய அறிவிப்பை வெளியிட்டார்.

விருது பெற்றுக் கொண்ட சீமானின் உரைக்காக அரங்கம் தன் காதுகளைத் தீட்டிக் கொண்டது.

"பெருந்தலைவர் காமராஜர், நாடு சுதந்திரமடைந்து எல்லோருக்கும் கொடியேற்றி மிட்டாய் கொடுத்தபோது, "வாங்க... வாங்க... சோறு பொங்கியாச்சு எல்லோரும் சாப்பிட வாங்க. ஆனா, இந்தச் சோறு பொங்க நிறைய கட்டைங்க வெந்திருக்கு அதை ஞாபகம் வச்சுக்குங்கன்னு சொன்னதாகச் சொல்வார்கள். எந்த வெற்றியும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை.

இந்த விழாவை என் மாமா சாகுல் அமீதின் "தமிழ் முழக்கம், தம்பி செங்குட்டுவனின் "தாகம்' இதழும் சிறப்பாக செய்து இருக்கிறது. இந்த இதழ் தொடங்கியதிலிருந்து எங்களுக்குத் தாகம் அடங்கவில்லை. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி.
இதற்கு முன் பேசிய சகோதரி (நடிகை அட்சயா) தமிழ் Girlsக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றார். தமிழுக்கு அப்புறம் Girls என்று சொல்கிறவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நாங்க தூக்குப் போட்டுத்தான் தொங்கணும். பேசினால் ஆங்கிலத்திலேயே பேசி, அந்த மொழியை கௌரவப்படுத்தணும் அல்லது தமிழிலேயே பேசி தாய்மொழியை வாழ வையுங்கள். தமிழில் பாதி பேசி, ஆங்கிலத்தில் பாதி பேசி எழவு மொழியாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள். இந்தமாதிரி பிரச்சினைகள் உள்ள தமிழ்த் திரையுலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் "தம்பி' படம் எடுக்கப்பட்டது.

நான் நிறைய தோல்விகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், தோல்விகளைக் கண்டு துவண்டு போனதே இல்லை. காலையில் எழுந்ததும் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓடிக் கொண்டே இருப்பேன். ஏதோ ஒரு இலக்கு தெரிகிறது என்று சளைக்காமல் ஓடுவேன். சோர்ந்துபோய் தண்ணி அடித்து விட்டு, தாடி வளர்த்துவிட்டு, கஞ்சா குடித்து விட்டு சுற்றுபவனல்ல நான். நான் தினமும் சிரைத்துக்கொள்பவன். எப்போதும் உற்சாகமாக இருப்பவன். என் தோல்வி குறித்து, என் மனத்துக்கு என்றும் நான் சொன்னதில்லை. விழிப்பதற்காகவே உறக்கம். எழுவதற்காகவே தோல்வி' என்று நினைப்பவன் நான்.

ஒரு கவிதை படித்தேன். ஒருவன் பூமியில் விழுந்து விழுந்து எழுகிறான். 9 முறை விழுந்து எழுந்தவனால் அதற்குமேல் எழ முடியவில்லை. அப்போது பூமித்தாய், "எழுந்திரு மகனே... எழுந்திரு... ஏற்கெனவே 9 முறை எழுந்தவன்தானே நீ, என்கிறாள். அவனை உற்சாகப்படுத்தி எழுப்பிவிடுகிறாள். அந்தக் கவிதையையும், 94 வயதில் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு நினைவு பிறழாமல் மக்களுக்காகப் பேசிய தந்தை பெரியாரையும், தோற்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். ரொம்ப நாளாக எனக்கொரு சந்தேகம், அந்தக் கிழவன் தன் கண்ணாடிக்கு மேலே ஒரு பூதக் கண்ணாடியை வைத்து எதையோ தேடுறானேன்னு யோசித்தேன். உங்களுடைய, என்னுடைய, நம்முடைய எதிர்காலத்தைத்தான் அவன் தேடியிருக்கிறான்.

திரைப்படம் தொடர்பான விழா என்றால் கிளுகிளுப்பு இருப்பதுதான் வாடிக்கை. ஆனால் "தாகம்' மேடையில் இணைந்து நடந்த "தம்பி' விழாவில் எழுச்சியே அதிகமாக இருந்தது. சமுதாயத்தின் போர்வாளாகச் செயல்படும் "தாகம்' இதழின் 15ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் புதிய உத்வேகம் பெற்று அரங்கிலிருந்து வெளியேறினர். இந்த விழாவின் வெற்றி, தாகத்தின் வெள்ளி விழாவுக்கு கட்டியங்கூறியது.

நிகழ்ச்சியை மருத்துவர் வேலாயுதம் மற்றும் வழக்குரைஞர் மகாலட்சுமி சிறப்புடன் தொகுத்து வழங்கினர்.

தொகுப்பு: பிரதீபன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com