Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூன் 2006
கட்டுரை

கலைஞர் - இளைஞர்
தமிழ்


எந்த இளைஞரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் இந்த 83 வயது இளைஞர். உழைப்பு என்ற சொல்லுக்கு உருவம் கொடுத்துப் பார்த்தால் அவரது தோற்றம்தான் தெரி கிறது. எத்தனை கணிப்புகள், எத்தனை எதிர்ப்புகள்... எல்லாவற்றையும் தூள் தூளாக்கி வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடிகிறது அவரால். தமிழக அரசியல் அவரால் சுழற்றப்படுகிறது. அல்லது அவரைச் சுழல்கிறது. 70 ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர்தான் 40 ஆண்டுகால அரசியலின் அச்சாணியாக இருக்கிறார். தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலையும் நிர்ணயிக்கும் சக்தியாகப் பலமுறை தன்னைப் வெளிப்படுத்தியவர் அவர்.

சளைக்காத சாதனைக்கு சொந்தக்காரர்தான் தமிழகத்தில் முதல்வராக ஐந்தாம் முறையாகப் பொறுப் பேற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர். அரசியல் இலக்கியம் நாடகம் திரைப்படம் என அவர் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவர். "உடன்பிறப்பே' எனும் ஒற்றைச்சொல் மந்திரத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் அவரது பேச்சுக்கு உண்டென்பதைத் தமிழகம் அறியும். பாரதிக்குப் பிறகு தனக்கென ஒரு தமிழ்நடையை உருவாக்கிக் கடைநிலைத் தமிழனின் காதுகளிலும் கருத்தினிலும் தமிழைக்கொண்டு போய்ச் சேர்த்தவர் கலைஞர். பிரம்மாண்டமான ஆற்றலுக்கும் பிரமிக்க வைக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.

Karunanidhi இப்படிப் பிரமிப்பது மட்டும்தானா அந்த மூத்த தலைவரின் பிறந்தநாளில் நாம் செய்யவேண்டிய செயல்? கலைஞரின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், கடைகோடித் தொண் டர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், அதிகாரிகள் எனப் பலதுறையினரும் வெவ்வேறு வகையான பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகமும் சேர்ந்து ஆட்சி என்கிற உயர்ந்த பரிசை அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்தப் பரிசுக்கு முற்றிலும் பொருத்தமானவர் கலைஞர். அதைத்தான் ஆட்சிப் பொறுப் பேற்ற நொடியிலிருந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அவர். பரிசில் பெறும் புலவர்கள் அதனை தங்களுக்கே வைத்துக் கொள்வதில்லை என்றும், தன்னிலும் வறியவர்களின் நலனுக்கு அதனைக் கொடுத்து உதவுவார்கள் என்று கூறுகிறது பழந்தமிழ் இலக்கியம். சங்கத்தமிழ் படைத்த இலக்கியவாதி கலைஞர் இதனை அறியாதவரல்லர்.

பெரியாரின் விரல் பிடித்து நடந்தவர். பேரறிஞர் அண்ணாவின் தாள் பற்றித் தொடர்ந்தவர். ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் சாமானிய மனிதனுக்கும், தன்பெருமை உணராத தமிழ்ச் சமுதாயத்திற்கும், ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதைக்கும் தேவையானவற்றை நிறை வேற்றும் சிந்தனையும் அதற்கான செயலாற்றலும் ஒருங்கே பெற்றவர்தான் கலைஞர்.

அதனால்தான், அரிசியைக் கிலோ 2 ரூபாய்க்கு தரவும் முடிகிறது. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கவும் முடிகிறது. வண்ணத் தொலைக்காட்சி என்ற கவர்ச்சிகரமான திட்டத்தையும் வழங்க முடிகிறது. நிலமற்ற விவசாயத் தொழிலாளிக்கு 2 ஏக்கர் நிலம் என்ற எதிர்காலத் தலைமுறையின் நலன் சார்ந்த திட்டத்தையும் அறிவிக்க முடிகிறது. உழவர் சந்தைகளை மீண்டும் திறக்கும் அவரது ஆட்சிதான், கண்ணகி சிலையை மீண்டும் நிறுவுகிறது. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 15ஆயிரம் ரூபாய் நிதி தருகிறார். எல்லாப் பிள்ளைகளும் கட்டாயமாகத் தமிழைப் படித்தாக வேண்டும் எனச் சட்டம் போடுகிறார். பரிவட்டத்தை பறிமுதல் செய்கிறார். மனிதக் கழிவை மனிதனே அள்ளும் இழிநிலைக்கு முடிவுரை எழுத முன்வருகிறார். விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படுகிறது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கப்படுகிறது. தமிழர்களின் உயிருக்கும் மானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களும் அறிவிப்புகளுமே அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. தந்தை பெரியார் என்ன சொன்னாரோ, எதற்காக 95 வயதுவரை உழைத்தாரோ அதனை நிறைவேற்றுகின்ற முனைப்பு கலைஞரின் இன்றைய செயலாற்றலில் வெளிப்படுகிறது.

ஆதிக்க வர்க்கம் இதனை அத்தனை எளிதாக நிறைவேற்ற அனுமதித்து விடுமா? 97% மக்களுக்கு 27% இடஒதுக்கீடு என்பதற்கே பூமிக்கும் வானுக்குமாக துள்ளிக் குதித்து வம்படி செய்கிற வர்க்கம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பதையோ, தமிழ்க் கட்டாயப் பாடம் என்பதையோ, நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் என்பதையோ அத்தனை எளிதாக அனுமதித்து விடுமா? தன்வசமுள்ள அத்தனை அத்திரங்களையும் ஏவி, இந்த ஆட்சியை விரட்டு வதற்காகவே 24 மணி நேரத்தையும் செலவிடும். அரசியல் ரீதியான காரணங்களை அலசும். சட்டரீதியான வாய்ப்புகளை உற்று நோக்கும். சந்து பொந்துகளில் வழி இருக்கிறதா என ஆராயும். இனத் துரோகிகள் அகப்படுகிறார்களா என வலை வீசும். தமிழினத்தின் அழிவு எதிரிகளால் ஏற்படுவதல்ல.

துரோகிகளால் ஏற்படுவது என்பதை வரலாற்றின் பல பக்கங்களில் பார்க்க முடிகிறது. இந்த அரசை வீழ்த்துவதற்குத் தோதாக விபீஷணர்கள் கிடைப்பார்கள். எட்டப்பர்கள் கைகொடுப்பார்கள். இவையெல்லாம் தமிழினத்தின் வரலாற்றில் புதிதல்ல. ஜனநாயகக் களத்திலும் புதிதல்ல என்பதை ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பேற்று, இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்ட இந்தியாவின் ஒரே முதல்வரான கலைஞர் அறிவார். எதிரியையும் அவர்களுடன் துணை சேரும் துரோகிகளையும் வீழ்த்துவதற்குத் தேவையான பலமான ஆயுதம், நம்பிக்கைதான். இந்த அரசு மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையே எல்லாத் தடைகளையும் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும். கவிழ்த்தாலும் நெருப்பு போல நிமிர்ந்து எரியும். கலைத்தாலும் தண்ணீரைப் போல மீண்டும் ஒன்று சேர்ந்து பெருக்கெடுக்கும்.

83 வயதில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தனது கட்சியையும் கூட்டணியையும் வெல்லச் செய்து, ஆட்சியைப் பிடித்து முதல்வ ரான தலைவரைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. 93 வயதில் மூத்திரச் சட்டியை ஏந்திக்கொண்டு மாநிலம் முழுக்கப் பிரச்சாரம் செய்த புரட்சியாளர் பெரியாரைத் தமிழகம் கண்டிருக்கிறது. கலைஞர் அரசின் செயல்பாடு களில் பெரியாரைக் காணத் தமிழகம் காத்திருக் கிறது. தேர்தல் களத்தின் கதாநாயகன் என வருணிக்கப்பட்ட தி.மு.கவின் தேர்தல் அறிக் கையில் பெரியாரின் கனவுகள் பல இடம்பெற்று இருந்தன. மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அந்தத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றை நிறைவேற்றும் இலட்சியத்தில் கலைஞர் காட்டும் உறுதியே மக்கள் சக்தியை அவர் பக்கம் நிலைநிறுத்தும்.

நிலச்சீர்திருத்தம், தொழில்வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவையே பொருளாதார வளர்ச்சிக் கான அடிப்படை அம்சங்கள். தாய்மொழி வளர்ச்சி, பண்பாட்டு எழுச்சி, சமூக நீதிக்குப் பாதுகாப்பு இவையே சமுதாயத்தின் வளர்ச்சிக் கான முக்கிய அம்சங்கள். இதனைத் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் காணமுடிகிறது. அவற்றை நடைமுறையில் காணும் நாளினை தமிழகம் எதிர்பார்த்துள்ளது. இன எதிரிகள் பலம் பெருக்கி நிற்கும் களத்தில், இந்த அம்சங்களை நிறைவேற்றுவது நீண்ட போராட்டமாகவே அமையும். பெரியாரின் குருகுலத்தில் பயின்ற கலைஞருக்குப் போராட்டம் என்பது பயனுள்ள பொழுதுபோக்கு. அதனால் அவர் சளைக்காமல் போராடுவார். அத்தகைய போராட்டத்தைத் தொடர்ந்தாலும் இவற்றையெல்லாம் நிறை வேற்ற நீண்டகாலம் ஆகும். ஆகட்டுமே!

பெரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பணியில் நீண்டகாலமாகப் போராடி பெரியாரை விடவும் நீண்ட காலம் வாழ்பவர் கலைஞர் என்ற இன்னொரு பெருமையும் அவருக்கு சேரட்டுமே! தமிழர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாகவும் தமிழகத்தை வளமும் நலமும் உடையதாகவும் செய்யும் பணியை நிறைவேற்றி முடிக்கும்வரை தமிழகத்தின் முதல்வராக கலைஞர் நீடிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். தமிழகத்தின் மூத்த தலைவரின் பிறந்தநாளில் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ளும் தமிழர்களின் இதயக்கூட்டுக்குள் அடைகாக்கப்படும் ஆசைகள் இவைதாம். இந்த ஆசைகளுக்குச் சிறகுகட்டி, வானத்தை வசப்படுத்தச் செய்யும் ஆற்றல் தாய்ப்பறவையான கலைஞரிடம் மட்டுமே இருக்கிறது. அதனைச் செய்து முடிப்பார் என தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

காவிரி நதி நீர் உரிமை

விவசாயிகளின் கூட்டுறவுக்கடன்களை ரத்து செய்து அவர்களின் தோள்சுமையையும் மனச்சுமையையும் குறைத்த கலைஞர், ஜூன் 12ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார். இதனால் காவிரிப் பாசனப்பகுதியில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் கடந்த சில மாதங்களாகவே போதிய நீர் இருப்ப தாலும், கர்நாடக மாநிலத்தின் நீர்ப்படிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து, அங்குள்ள அணைகள் நிரம்பியிருப்பதாலும்தான் இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருக்கும் என்பது உறுதியன்று. கர்நாடகம் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளும் சாக்கடையாகத்தான் தமிழகப் பகுதியில் ஓடும் காவிரி இருக்கிறது. இந்நிலையை மாற்றி, காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்டும் விதத்தில் இச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்குத் காரணமாக இருந்த கலைஞர், தனது ஆட்சிக் காலத்தில் இதற்குத் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. அதுபோலவே முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தமிழகத்தின் உரி மையை நிலைநாட்டிட வேண்டும். பிற மாநிலங்களில் அடகுவைக்கப் பட்டுள்ள தமிழகத்தின் உரிமைகள் மெல்ல மெல்ல மீட்கப்பட வேண்டும்.

தமிழ்க் கல்வி

நடப்புக் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக அமையவேண்டும் என்ற சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழைப் படிக்கச் செய்வதற்கே சட்டம் தேவைப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியதே! தமிழ் என்ற சொல்லைக் கேட்டாலே பிரிவினை வாதம், தீவிரவாதம் என அலறுகிற ஆதிக்கச் சக்திகள் வலுப்பெற்றிருக்கும் மண்ணில், பள்ளிகளில் தமிழைச் சொல்லிக் கொடுக்கச் சட்டம் கொண்டு வருவதும் கூட விமர்சனத்திற்குள்ளாகும். அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், எல்லாப் பள்ளிகளிலும் எல்லா வகுப்புகளிலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற நிலையை கலைஞர் அரசு உருவாக்க வேண்டும். படிப்படியாகத் தமிழ் வழிக்கல்விக்கான தடைகளையும் தகர்த்தெறிந்து அதனைச் செயல் படுத்துவதோடு, தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு, சுயதொழில் உதவி ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். தமிழாய்ந்த முதல்வரான கலைஞரிடம்தான் இதனை எதிர்ப்பார்க்க முடியும். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை அவையில் படிப்பதுகூட காலவிரயம் எனச் சொன்ன முதல்வர்களைக் கண்ட மாநிலத்தில், தமிழின் அருமையை உணர்ந்த முதல்வரான கலைஞர்தான் இதனைச் செய்யவேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்கிற கலைஞர் அரசின் அறிவிப்பு, படித்த இளைஞர்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறது. அதுமட்டு மின்றி, மகளிர் சுய உதவிக்குழுக்களைப் போல் இளைஞர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். உலகமயமாக்கல் கொள்கையினால் இன்று தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அத்தகைய நிறுவனங்களில்தான் இருக்கின்றன. எனவே தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, மத்திய அரசின் மூலம் அதனை விரைவாக நிறைவேற்றுவதற்குக் கலைஞர் முயற்சியெடுக்க வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு. தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொழிற்சாலை தொடங்குகிறது என்றால் அதில் எல்லா நிலைகளிலும் 90 விழுக்காட்டுக்குக் குறையாமல் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையும், தொழிற்சாலை அமையும் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்திப் பெறவேண்டும்.

நிலச்சீர்திருத்தம்

தமிழகத்தில் உள்ள தரிசு நிலத்தை மேம்படுத்தி, நிலமற்றோருக்குத் தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்கிற தி.மு.க. தேர்தல் அறிக்கை விவசாயிகளால் வரவேற்கப்பட்டும், எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் எவ்வளவு என்பதைக் கலைஞர் அரசு முறையாகக் கணக்கிட்டு, அவற்றை முறைப்படி பங்கிட்டுத் தரும் என்ற நம்பிக்கையைக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரியினரும் மக்களிடம் வழங்கியிருக்கிறார்கள். அந்தந்தப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள நிலமற்றோருக்கு வழங்குவதுடன், மற்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறாதவகையில் பாதுகாப்பு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ள வேண்டும். சொந்த ஊரில் உள்ள விவசாய நிலத்தை விற்றுவிட்டு வெளியூரில் குடிபோக யாரேனும் முடிவு செய்தால் அவர்களின் விவசாய நிலம், ரியல் எஸ்டேட்காரர்களின் கைகளில் சிக்கிவிடாமல் அரசாங்கம் அதனை சந்தை விலைக்குப் பெற்று, விளைநிலமாகவே காப்பாற்ற வேண்டும். ஏரிகள், குளங்கள், ஆறுகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தயவு தாட்சணியமின்றி அகற்றி நீர்வளத்தைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயம் செழிக்கும்.

பண்பாட்டு மீட்பு

நீதி கேட்கும் நிலையில் கடற்கரையில் நின்ற கண்ணகியை அநீதியாக அகற்றியது கடந்த அரசு. அதே சிலை, அதே நிலை என்கிற முழக்கத்தை ஐந்தாண்டுகளாகத் தமிழறிஞர்கள் முன்வைத்தும் செவிட்டுக் காதுகளுடனேயே இருந்தது சென்ற அரசு. கலைஞர் தலைமை யிலான அரசு அமைந்திருப்பதால் கண்ணகிச் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு, தமிழ்கூறும் நல்லுலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது. கண்ணகிச் சிலையை மீட்டு, நிறுவியதுபோல கண்ணகிக் கோட்டத்தில் தமிழர்களுக்குள்ள உரிமையையும் கலைஞர் அரசு மீட்க வேண்டும். திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கச்சத்தீவு எனத் தமிழகம் இழந்தவை அதிகம். இனியும் அத்தகைய இழப்புகள் கூடாது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை, பூம்புகாரில் எழுநிலை மாடம் எனத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங் களின்மீது அக்கறை செலுத்தும் கலைஞரால் தான், தமிழர்களின் உரிமையை மீட்பதற்கு ஆவன செய்ய முடியும்.

சமூக நீதி

மனித உரிமை என இன்று முன்வைக்கப்படு பவனவற்றைத்தான் சுயமரியாதை என அன்றே மொழிந்தது திராவிட இயக்கம். மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்த கலைஞர் அரசு மனிதக் கழிவை மனிதரே அகற்றும் முறையை ஒழிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஆதிதிராவிட மக்கள் மட்டுமே செய்து வரும் இந்த இழிவான பணியை முற்றிலுமாக ஒழித்து அவர்களுக்கு மாற்று வேலை தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. அது போலவே, தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை தயவு தாட்சணியமின்றி அடக்க வேண்டும். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தேர்தலை நியாயமாக நடத்த ஆவன செய்ய வேண்டும். அதிகாரத்தில் தலித்துகளுக்கு உள்ள உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்றதும் காலங் காலமாக அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். போராட்டம் என்ற பெயரில் வீதிக்கு வருகிறார்கள். வீதியிலேயேகிடப்பவன் அதிகாரம் உள்ள இடங்களில் உள்ளே நுழைவது எப்போது? இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. மத்திய அரசு இதனை அமல்படுத்துவதற்கான முழு முயற்சியை கலைஞர் அரசு எடுக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட சமூகம் எனும்போது அதில் பெண்களும் அடங்குவர். மகளிருக்குச் சொத்துரிமை, மகளிர் காவலர்கள் என பெண்ணுரிமைத் திட்டங்களைக் கொண்டு வந்த கலைஞர் அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, 1996இல் தேர்தலையும் நடத்தியது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மகளிர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படவேண்டும். சத்துணவு சமையல் கூடத்தில் தலித் பெண்களை சமையல்காரராக நியமிப்பதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் சந்திக்கும் தொந்தரவுகள் உள்ளிட்டவற்றைக் களையவேண்டும். நாடாளு மன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசைக் கலைஞர் நிர்பந்திக்க வேண்டும்.

கொள்கைவழி அரசியல்

கலைஞரிடமுள்ள பகுத்தறிவு, மொழியுணர்வு, சுயமரியாதை, இனவுணர்வு ஆகியவற்றை அவரது அமைச்சரவைச் சகாக்களிடம் கூட காண முடிவதில்லை. அதன் விளைவுதான், கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள ஜெயேந்திரரைக் கும்பகோணம் மடத்திற்குப் போய்ச் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கோ.சி.மணி. முன்னாள் அமைச்சரான தங்கவேலு சில ஆண்டுகளுக்கு முன் (பா.ஜ.க வுடன் தி.மு.க கூட்டணி வைத்திருந்த நேரத்தில்) நெல்லையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, அவர்கள் மேடையில் நடந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் நிலையே இப்படி என்றால் அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும்?

என்னதான் மரம் பெரியதாக வளர்ந்திருந்தாலும் வேர்களை வெட்டிவிட்டு நிலைத்திருக்க முடியாது. கொள்கை எனும் வேர்களை பலப்படுத்தாமல் இருப்பதன் விளைவுதான் இவையெல்லாம். பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளில் கலைஞர் காட்டும் உறுதியைத் தி.மு.க வின் அடுத்தகட்டத் தலைவர்களும் காட்டும் விதத்தில் கொள்கை வழி அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் என்று ஜெயேந்திரருடன் சமாதானமாகப் போவது திராவிடர் கொள்கைகளுக்கு நேர் விரோதமானதாகும். ஜெயலலிதா என்பவர் ஆரியத்தின் அரசியல் தலைமை. ஜெயேந்திரர் என்பவர் ஆரியத்தின் ஆன்மீகத் தலைமை. இரண்டையும் வலிவுடன் எதிர் கொண்டு தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை கலைஞருக்கு இருக்கிறது. பகுத்தறிவுப் பாசறைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, கொள்கை வழி அரசியலுக்குத் தொண்டர்களைத் தயார்படுத்தும் பணியில் கலைஞர் ஈடுபடுவார் எனத் தமிழகம் எதிர்பார்க்கிறது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை

"என் தமிழ்ச் சாதியின் உயிரைப் பறித்துவிட்டுத் திரும்புகிற படையை வரவேற்கச் செல்ல மாட்டேன்'' என இந்திய அமைதிப் படை சென்னைக்கு திரும்பி வந்த நேரத்தில் ஓங்கி ஒலித்த குரல், அன்றைக்கும் முதல்வராக இருந்த கலைஞரின் குரல். ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை வட இந்தியத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் மதுரையில் "டெசோ' மாநாட்டை நடத்திய வரும் கலைஞர்தான். ஈழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்காக அவரும் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்த வரலாறும் உண்டு.

ஈழத் தமிழர் நலன் குறித்து இந்திய அரசின் கவனத்தைத் திருப்புவதற்கு, மத்திய அரசை வழிநடத்தும் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உள்ள கலைஞரால்தான் முடியும். ஈழத் தமிழரின் வாழ்வுரிமை குறித்து தி.மு.க வின் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் 2 ரூபாய் அரிசி, விவசாயக் கடன் ரத்து ஆகிய வாக்குறுதிகளைப் போல் ஈழத்தமிழர் விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்ற எதிர் பார்ப்பு கடல் கடந்த தமிழர்களிடமும், தாய்த் தமிழகத்தில் இருக்கும் உணர்வாளர்களிடமும் உள்ளது. ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு அமைகிற வகையில் இந்திய அரசின் செயல்பாடுகள் அமைவதற்கும், தமிழர் பிரச்சினை என்றாலே மத்திய அரசின் கவனத்தை திசைமாற்றிவிடும் வல்லாதிக்கச் சக்திகளை முடக்குவதற்கும், கலைஞர் முயற்சி எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com