Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

தீட்டுக் கடவுளும் தீண்டிய நடிகையும்
பிரதீபன்

"ஏம்ப்பா நம்ம கஷ்டத்தையெல்லாம் தீர்ப்பாருன்னுதானே கார்த்திகை மாசத்திலே மாலை போட்டு, 48 நாள் சுத்தபத்தமா விரதமிருந்து, டாஸ்மாக் கடை பக்கமே போகாம, பயபக்தியோடு அய்யப்பனை பார்க்கப் போவோம். இப்ப அந்த அய்யப்பனுக்கே கஷ்டமாமே. ஆமாமா.. நாமதான் சுத்தபத்தமா போனோம். ஆனா, அய்யப்பன் கோயிலுக்குள்ளே சுத்தமில்லைன்னு சொல்றாங்களே, ஒண்ணுமே புரியல உலகத்திலே! அடுத்த சீசனில் மாலை போடக் காத்திருக்கும் இரு பக்தர்களின் உரையாடல் இது.

நம்ம ஊரில் குறி சொல்வது போல, கேரளாவில் தேவ பிரசன்னம் பார்ப்பது ரொம்பவும் பிரசித்தமானது. ஆசாமிகளுக்கு மட்டுமில்லாமல், சாமிகளுக்கும் பிரசன்னம் பார்க்கிறார்கள். இந்த முறை பிரசன்னம் பார்த்தவர், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர் பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கர். அவர் பிரசன்னம் பார்த்து, அய்யப்பன் ரொம்ப கோபமாக இருக்கிறார். பெண்களெல்லாம் அந்தக் கோயிலுக்குள் வருகிறார்கள். பம்பை நதி சுத்தமா இல்லை. கருவறையில் பூசை செய்யும் தந்திரிகள் குளிப்பதில்லை. பக்தர்களுக்கு வசதிகள் செய்து தருவதில்லை எனத் தெரிவிக்க, மகர ஜோதிக்கு முன்பாகவே சபரிமலையில் தீப்பிழம்பு உருவாகிவிட்டது.

அந்த உன்னிகிருஷ்ண பணிக்கர் வேண்டு மென்றே கோயில் நிர்வாகத்தை குற்றம் சாட்டுகிறார். இதற்குமுன் அவர் பிரசன்னம் பார்க்க வந்தபோது, அவருக்குத் தகுதியில்லைன்னு சொல்லித் திருப்ப அனுப்பிட்டோம். இப்போது வேறு ரூட்டில் உள்ளே வந்து பிரசன்னம் பார்த்துவிட்டு அவதூறுகளை அள்ளிவீசி விட்டுப் போகிறார் என்றார்கள் தந்திரிகள்.

நான் பார்த்த பிரசன்னம் அத்தனையும் உண்மை. தந்திரிகளெல்லாம் பிராமணர்கள். நான் பிராமணரல்லாதவன். அதனால் என் மீது பழி போடுகிறார்கள் என்று கதற ஆரம்பித்தார் பணிக்கர். (அட.. கண்ணகி சிலையை எடுக்கணும் என்பது உள்ளிட்ட பலவற்றுக்குச் சோதிடம் சொன்னபோது பணிக்கருக்குத் தோன்றாத பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சனை, தனக்கு என்றதும் வெளிப்படுகிறதே! வாழ்க பெரியார்!) பணிக்கருக்கும் தந்திரிகளுக்கும் குருஷேத்திரம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பாணத்தை விட்டார் கன்னட நடிகை ஜெயமாலா.

நானும் அய்யப்பன் கோயிலுக்குப் போயிருக்கேன். அய்யப்பன் சிலையைக் கூடத் தொட்டிருக்கேன் என்று புதுக்குண்டை வீச, பிரசன்னத்தைவிட அது வேகமாகப் பற்றிக் கொண்டது. விக்ரகத்தை யாரும் தொடமுடியாது. அந்த நடிகையும் பணிக்கரும் கூட்டுச் சேர்ந்து புரளி கிளப்ப விடுகிறார்கள் என கேரள தரப்பு குமுறியதுடன், நடவடிக்கைக்கும் தயாரானது. கன்னடர்கள் சும்மா இருப்பார்களா? நம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகைக்கு கேரளாவில் எதிர்ப்பா? விடக்கூடாது என கர்நாடகச் சட்டமன்றத்திலேயே கொதித்தெழுந்துவிட்டார் கன்னட சலுவாலியா சங்கத்தின் தலைவரும் கர்நாடக எம்.எல்.ஏ வுமான வாட்டாள் நாகராஜ்.

அட... அய்யப்பனின் நேரத்தைப் பார்த்தீர்களா... பிராமணர், பிராமணரல்லாதார் பிரச் னைக்கும் காரணமாகிறார். கன்னடர் மலையாளிகள் பிரச்சனைக்கும் காரணமாகிறார். அய்யப்பனைப் பின் தொடரும் சர்ச்சைகள் புதிதல்ல. ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? அய்யப்பன் பிறந்த கதை அறிவுக்கு பொருந்துமா? என்று சபரிமலை சீசன் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன் எங்க ஊர் சுவர்களில் எழுதி வைப்பார்கள் திராவிடர் கழகத்தினர். வருடா வருடம் அப்படி எழுதுவதால், சீசன் தொடங்குகிறது என்பதை, அதை வைத்து கண்டுபிடித்துக் கொள்வார்கள் அய்யப்ப பக்தர்கள் என்பது தனித் தகவல். அய்யப்பனின் அவதாரக் கதையே சர்ச்சைக்குரியதுதான். விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அவர் மீது சிவன் மையல் கொண்டார். பிறப்பால் ஆண்களான இருவரும் இணைந்தார்கள். அதனால் பிறந்தவர்தான் அய்யப்பன் என்பது ஐதீகம். அதனைத்தான் திராவிடர் கழகத்தினர், ஆணும் ஆணும் இணைந்தால் பிறப்பது அய்யப்பனல்ல : எய்ட்ஸ் என்று எழுதி வைத்தார்கள் சற்று காரசாரமாகவே !

இரண்டு ஆண் கடவுளர்களின் இணைப்பால் பிறந்தவர், புலிப்பால் கொண்டு வந்தவர் என்றெல்லாம் அய்யப்பன் பற்றிய கதைகள் உண்டு. அவர் கோயில் கொண்டி ருக்கும் இடத்திற்குப் பெண்கள் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. பருவம் எய்தாத சிறுமியரும், மாதவிலக்குக் கட்டத்தைக் கடந்த வயதான பெண்மணி களும்தான் சபரிமலைக் கோயிலுக்குப் போக வேண்டும். 10 வயதுக் குட்பட்டவர்களும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் மற்ற பெண்கள் போகக்கூடாது என்பது நியதி. ஏனென்று கேட்டால், அய்யப்பன் இன்னமும் திருமணம் ஆகாத சாமி என்று சொல்கிறார்கள். அப்படி யென்றால்...

பிள்ளையாரும் திருமணமாகாமல் தானே இருக்கிறார். அவருக்கு முக்குக்கு முக்குக் கோயில் இருக்கிறது. முட்டுச் சந்துகளிலும் கோயில் இருக்கிறது. அய்யர் வந்து பூசை செய்ய மறந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் அந்தப் பிள்ளையாருக்குப் பூப்போட்டு, விளக்கேற்றி வழிபடத் தானே செய்கிறார்கள்.

பிள்ளையார் தனக்கு மணமகள் தேடுவதால் பெண்களை அனுமதிக்கிறார் என்றும், அய்யப்பன் திருமணம் செய்ய விரும்பவில்லை என்பதால் பெண்களை அனுமதிப்பதில்லை என்றும் ஐதீகக் கதைகள் சொல்லப்படலாம். ஆனால், யதார்த்தம் என்பது வேறுவிதமானது. சபரிமலை என்பது மலைப் பகுதிக் கோயில். உண்மையில், அது அய்யப்பன் அல்ல, அய்யனார் என்கிறார் வேத விற்பன்னரான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். மேற்கு தொடர்ச்சி மலையின் மலைவாழ் மக்கள் வணங்கிய தெய்வத்தை, கேரள மாநில உயர் வகுப்பினரான நம்பூதிரிகள் கைப்பற்றிக் கொண்டார்கள். அய்யனாரை அய்யப்பனாக்கிவிட்டு, மலைவாழ் மக்களை விரட்டி விட்டார்கள். அவர்கள் சபரிமலையை விட்டு இன்னொரு மலைக்குச் சென்றுவிட்டார்கள் என்று குறிப்பிடுகிறார் தாத்தாச்சாரியார்.

அந்த மலை மக்களின் தீப்பந்தத் திருவிழா தான், சபரிமலையிருந்து தூரத்தில் தெரியும் மகரஜோதி என்ற கருத்தும் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. மலைத் தெய்வமாகி விட்ட அய்யப்பனை காணச் செல்வதற்கு மிகப் பெரிய அளவில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சிரமங்களை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பயணப்பாதையில் புலி வருமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆண்கள் அத்தனை சிரமங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதால், பெண்கள் சபரி மலைக்குச் செல்வது, பாதுகாப்பு கருதி ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பிறகு, அதுவே ஐதீகமாக்கப்பட்டு பெண்களுக்கு நோ என்ட்ரி என போர்டு மாட்டாத குறையாக, பெண்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்திருக்கலாம்.

பிறகு, சற்று அந்த விதிகளை தளர்த்திச் சிறுமிகளும் கிழவிகளும் மட்டும் வரலாம் என மாற்றியிருக்கலாம். அந்த இருக்கலாம்கள் என் பது சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ள சுற்றுச்சூழலை ஒட்டிய யூகம்தான். என்ன காரணமாக இருந்தாலும், பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கலாமா கூடாதா என்பதற்கு காலத்திற்கேற்ற உதாரணமாக இருக்கிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்திச் சித்தர் பீடம். (பழைய வாத்தியார் திடீரென குறிசொல்ல ஆரம்பித்து, ஆம்பளை அம்மாவாக மாறியது உள்பட பல மூடநம்பிக்கைகள் இங்கும் உண்டு) சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் கோயிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. வாகனங்கள் பெருகியபடி இருக்கின்றன. ஆண்களை விடப் பெண்கள் தான் அதிக அளவில் பக்தர்களாக வருகிறார்கள். மேல்மருவத்தூர் கோயில் நிர்வாகம் என்ன செய்தது?

பெண்கள் எங்கள் கோயிலுக்கு தாராளமாக வரலாம். அவர்களே கருவறைக்கு வந்து சாமியைத் தொட்டுக் கழுவலாம். அலங்காரம் செய்யலாம். பூசையும் செய்யலாம் என்றதுடன், மிக முக்கியமாக மேல்மருவத்தூர் நிர்வாகம் சொன்னது என்ன தெரியுமா? மாதவிலக்கு என்பது இயற்கையானது. அதனால், மாதவிலக்கான பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று நாங்கள் தடுக்கப் போவதில்லை. அந்தப் பெண்களும் கோயிலுக்கு வரலாம் என்பதுதான். ஒரு மாநிலத் தலைநகருக்குச் செல்லும் சாலையையொட்டிய ஊரில் அமைந்துள்ள கோயில் என்பதால் காலத்திற்கேற்ற மாற்றங்களைப் பெற்றிருக்கிறது மேல்மருவத்தூர். ஆனால், காட்டுப் பாதையைக் கடந்து மலைப் பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலிலோ பெண்கள் வந்தார்கள் என்பது சர்ச்சைக்குரியதாக மாறுகிறது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒரு பெண், கோயிலுக்குச் செல்வது குற்றமா? நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு வேண்டும் என்று கோரும்போது, கடவுள் சன்னிதானத்தில் பெண்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? எல்லாக் கோயில்களிலும் பெண்கள் நுழைவதற்கான உரிமை வேண்டும் என்ற குரல் அய்யப்பன் கோயில் விவகாரத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. வர்ணாசிரமம், பிராமணீயம், ஆணாதிக்கம் என எல்லாப் பூனைகளுக்கும் மணி கட்டும் வேலையை செய்திருக்கிறார் நடிகை ஜெயமாலா.

அய்யப்பன் விக்ரகத்தைத் தொட்டேன் என்று சொன்ன நடிகை ஜெயமாலா, "கூட்டத்தில் என்னைத் தள்ளி விட்டார்கள். அதனால் நான் சாமிசிலை மீது விழுந்து, அதைத் தொட்டு வணங்கினேன்' என்கிறார்.
சபரிமலைக்குச் சென்ற பக்தர்களோ, அப்படித் தள்ளிவிட்டாலும் சிலை மீது விழ முடியாது என்றும் அது பல அடி தொலைவில் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படியானால், நடிகை ஜெயமாலா சபரிமலைக் கோயில் கருவறைக்குள் சென்று அய்யப்பனைத் தொட்டிருக்க வேண்டும். கருவறைக்குள் ஒரு பெண் எப்படி நுழைந்தார்?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

கடவுள் கதைகளில் பலவும் சொத்தை

அய்யோ; அப்பா !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com