Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

தமிழர் தலைவர்
சாமி. சிதம்பரனார்

இருவருக்கும் வாதம் வலுத்துச் சாத்திரம் பார்த்தார்கள். ஈ.வெ.ரா. தம் தந்தையைக் காலில்லாப் படுக்கையில் சந்தியாசம் வாங்கிக் கொள்ளும்படி செய்தார். ஊருக்குள் புதைப்பதற்காக நகர சபையின் உத்தரவு கேட்டார். உத்தரவு மறுக்கப்பட்டது. கவர்ன்மெண்டுக்கு எழுதி, கலெக்டர் மூலம் உத்தரவு பெற்றார். தந்தையார் உயிருடனிருக்கும் போதே, அவர் முன்னிலையில், அவர் உடலை என்ன செய்வது என்று குமாரர்கள் வாதாடுவதென்றால், விந்தையாயிருக்கிறதல்லவா? தகப்பனார் இருவருக்கும் சமாதானம் சொன்னார்.

வெங்கட்ட நாயக்கர் இறந்தவுடன் ஈ.வெ.ரா. இஷ்டப்படியே அவருடலைப் புதைத்து ஒரு சமாதி கட்டப்பட்டது.

நாயக்கர் இறப்பதற்கு முந்தியே அவரது சொத்தைத் தர்மத்திற்கு விட்டு ஒரு டிரஸ்ட் எழுதி வைக்கச் செய்துவிட வேண்டுமென ஈ.வெ.ரா. வெற்றிபெற்றார். இன்றும் அப்பத்திரத்தில் சாட்சி போட்டிருப்பவர்களில் ஈ.வெ.ரா மட்டும் கையெழுத்திட்டிருப்பதைப் பார்க்கலாம். குடும்பச் செலவுக்கு இரண்டு பிள்ளைகளுக்கும் தாராளமாய்ப் போதுமான சொத்தை மட்டும் விலக்கி, எஞ்சியுள்ள சொத்து முழுதும் தர்மத்திற்கே எழுதி வைக்கப்பட்டது. அப்போதே முழுச் சொத்தும் ஆண்டொன்றுக்குச் சுமார் 20,000 ரூபாய் வருமானமுடையதென்றால், எவ்வளவு மிகுதியான பொருளைச் சேமித்து வைத்திருந்தார் வெங்கட்ட நாயக்கர் என்பது விளங்கும்.

ஈரோட்டில் 1920ஆம் ஆண்டு வரையிலும் ஈ.வெ.ரா.வின் தொடர்பில்லாத பொது நிலையங்களேயில்லை. பொதுக் காரியங்களும் இருந்ததில்லை. இவரை நகரத் தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்தபோது இவர் அப்பதவிக்கு இலாயக்கில்லை யென்றும், இஷ்டம் போல் பொறுப்பில்லாமல் திரிகிறவர் என்றும் அங்குள்ள பார்ப்பனர்களுடைய தூண்டுதலால் கலெக்டருக்குச் சிலர் ஆட்சேபனை மனுப் போட்டார்கள். அங்குள்ள கிறித்தவப் பாதிரிமார்கள் முயற்சிக்கு இவர் விரோதமாக இருந்து வந்ததால், அவர்கள் பள்ளிக்கூடங்களை நடக்கவிடாமல் செய்ததால் இரண்டொரு பாதிரிமார்களும் இதற்கு உடந்தையாயிருந்தார்கள். எனவே, கலெக்டர் அவ்விதமே இவர் தகுதியில்லை என்று எழுதிவிட்டார்.

அச்சமயம் சர்.பி.ராஜ கோபாலாச்சாரியார் ஸ்தல ஸ்தாபன மெம்பராக இருந்தார். அவர் ஈரோட்டில் சப்கலெக்டராக இருந்தவர். ஈ.வெ.ரா.தம் மேலுள்ள பொறாமையால் சிலர் இவ்விதம் பொய்யாக மனுக் கொடுத்துள்ளார்களென்றும், அச்சமயம் தாம் 29 பொது நிலையங்களில் அங்கத்தினராயும், நிர்வாகஸ்தராயும், தலைவராயும் இருப்பதாகவும் ஒரு மனுக் கொடுத்தார்.

அவற்றுள் ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, வாசகசாலை, மகாஜன ஹைஸ்கூல் சமரசக்கமிட்டி, சண்டைக்கு ஆள் சேர்க்கும் கமிட்டி முதலியவை மிக முக்கியமானவையாகும். இதையறிந்த சர்.பி.ராஜகோபாலாச்சாரியார் ஈ.வெ.ரா.வை முன்னமே தெரிந்தவரானதால் முதலில் கொடுக்கப்பட்ட ஆட்சேபனை மனுவைப் பொய்யென்று தள்ளி ஈ.வெ.ரா.வைச் "சேர்மெனா''க நியமித்தார். 1919ஆம் ஆண்டில் ஈரோட்டில் இராமசாமியார் ‘சேர்மென்', சேலத்தில் திருவாளர் சி. இராஜகோபாலாச்சாரியார் ‘சேர்மென்', இவர் அடிக்கடி ஈரோட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு நகரசபை நிர்வாகத்தைக் கண்டு மிகவும் புகழ்ந்து பேசுவார்.

ஒரு சமயம் ஈ.வெ.ரா.வைப் பார்த்து, "உங்களுடைய ‘சானிடரி இன்ஸ்பெக்டரை' எங்கள் நகரசபைக்குக் கொடுங்கள்'' என்று திரு. ராஜகோபாலாச்சாரியார் கேட்டார் என்றால், ஈரோட்டின் நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்?

அச்சமயம் மதுரை மில் தொழிலாளர்கள் சம்பந்தமாய் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்களின் வழக்கு மதுரையில் நடந்து கொண்டிருந்தது. அதற்குத் திரு.ராஜ கோபாலாச்சாரியார் அவர்களே வக்கீல். ஆகையால், திரு.வரதராசலு நாயுடுவும், திரு. சி. ராஜகோபாலச்சாரியாரும் அடிக்கடி ஈ.வெ.ரா.வின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அதன் பயனாகவும், பொதுநிலையங்கள் பலவற்றில் ஏற்கெனவே தொடர்பு வைத்துக்கொண்டு ஊக்கமாய் வேலை செய்துவந்த பழக்கத்தாலும் அவ்விருவரும் ஈ.வெ.ரா.வைக் காங்கிரசிற்கு இழுத்தார்கள். சி.ராஜகோபாலாச்சாரியாரும், ஈ.வெ.ரா.வும் சேர்ந்தாற்போல் சேர்மென் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். அச்சமயம் பஞ்சாப் படுகொலைக்காகப் பலர் ராஜிநாமா செய்த நேரமாதலால் சர்.பி.ராஜகோபாலாச்சாரியார் ஈரோட்டுக்கு வந்து ஈ.வெ.ராவுக்கு ராவ் பகதூர் பட்டம் சிபாரிசு செய்திருப்பதாகவும், ராஜிநாமாவை வாபஸ் வாங்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஈ.வெ.ரா. இணங்கவில்லை. திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் அப்போது காங்கிரசிலிருந்தார்.

1920இல் காந்தியாரின் திட்டப்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கோர்ட்டு விலக்கு, பள்ளிக்கூட விலக்கு, உத்தியோக விடுதலை ஆகியவை ஈ.வெ.ரா மனத்தைக் கவர்ந்தன என்றாலும், தீண்டாமை ஒழிப்பு விஷயத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவதற்கு நல்ல சந்தர்ப்பமொன்று ஏற்படப் போகிறது என்ற ஆசையாலும், சாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டிய காரியத்திற்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்ற அவாவினாலும் சிறிதும் யோசிக்காமல் சட்டென்று காங்கிரசில் இறங்கி விட்டார். உடனே தமது மற்றும் உள்ள எல்லா கவுரவப் பதவிகளையும் உதறித் தள்ளினார். தாம் கொண்டிருந்த பொதுநிலையத் தொடர்புகளையெல்லாம் சிறிது சிறிதாக அறுத்துக்கொண்டார். இக்காலத்தில் இவர் தந்தையார் காலம் முதல் நடைபெற்று வந்ததும், இவர் பெயராலேயே 15 ஆண்டுகள் நடந்து வந்ததுமான வாணிபமும் நிறுத்தப்பட்டது. இவர் நடத்திவந்த பஞ்சு ஆலையையும் நிறுத்திவிட்டார். ஒத்துழையாமைப் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி, தாமே ஒரு பிரச்சாரத் தொண்டராக ஆகி தமிழ்நாடெங்கும் சுற்றுப் பிரயாணஞ்செய்து வரலானார்.

இச்சமயத்தில் அரசியல் வானத்தில் பெசன்ட் அம்மையார் உச்சநிலையில் இருந்தார். அவருக்குத் துணையாகப் பல ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். இவர்கள் மிகவும் மிதவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தபடியால், ஈ.வெ.ராவும், அவரது நண்பர்களும் பெசன்ட் அம்மையாரை அரசியலிலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டனர். ஸ்ரீரங்கத்தில் திரு. கே. வி. ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஈ.வெ.ரா. சி. ராஜகோபாலாச்சாரியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, விஜயராக வாச்சாரியார், டாக்டர் ராஜன், வரதராசலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், ஆதிநாராயணச் செட்டியார், கே. வி. ரங்கசாமி அய்யங்கார் ஆகிய ஒன்பது பேருங்கூடி, பெசன்ட் அம்மையாருடைய ‘ஹோம்ரூல்' கிளர்ச்சிக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்வதென முடிவு செய்துகொண்டனர். இக்கூட்டுறவு வளரும்போது மற்றொரு புறம் நீதிக்கட்சியும் வளர்ந்து கொண்டே வந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com