Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

சிந்தைக்கினிய சிலம்புச் செல்வர்
பாவலர் பல்லவன்

மழை போல் பொழியும் சிலம்பு என்கிற மணித்தமிழ்த் தொடரின் முதல் எழுத்துகளைக் கூட்டினால் ம.பொ.சி வரும். வெண்கலப் பானையில் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கும் போது வரும் கிண்கிணி நாதம் நமது காதுகளில் ரீங்காரமிடும் இவர் பேசும் போதெல்லாம்.

காவி யுகுநீரும் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவம் - பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான கூடாயி னான்.
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோண்
கண்டளவே தோற்றானக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

இளங்கோவடிகள் எழுதிய இந்த வெண்பாக்களைக் காட்சிப்படுத்தி கண்ணகியை நம் கண் எதிரே தலை விரிகோலத்தோடு நிறுத்தி வைத்து உணர்வு பொங்கச் சிலம்புச் செல்வர் உரைமழை பொழியக் கேட்டவர்கள் உள்ளங்களில் ஆவேசம் ததும்பும்; அழுகை அழுகையாக வரும். ஊரறியும் தமிழில் இலக்கியங்களை இவர் எழுதியும் பேசியும் பரப்பியும் படித்தறிந்தவர்களையும் பாமரர்களையும் தம் பக்கம் திரட்டினார்.

கம்பராமாயணமும் மகாபாரதமும் கந்தபுராணமும் பெரியபுராணமும் தமிழகத்தின் தெருக்களில் பக்தி உலா வந்து கொண்டிருந்த காலங்களில் சிலம்புச் செல்வரோ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை உயர்த்திப் பிடித்தார். மன்னன் ஒருவன் எழுதிய மக்கள் காவியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் திறம் படச் செய்தார். இதனால் இவரது திருப் பெயருக்கு முன் "சிலம்புச் செல்வர்' என்கிற அடைமொழி சேர்ந்தது.

சிலப்பதிகாரம் இந்த அளவுக்குச் செல்வாக்கு அடைய இவரும் திராவிட இயக்கமும்தான் காரணமாகும் என்பது மிகையல்ல. காந்தியவாதியான சிலம்புச் செல்வர் காங்கிரசு பேரியக்கத்தில் இருந்து கொண்டே "தமிழரசு கழகம்' என்னும் கலாச்சார அமைப்பை நடத்தி வந்தார். வாழிய செந்தமிழ் "வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு' என்கிற பாரதிப் பாட்டின் வழி தேசிய ஒருமைப் பாட்டை ஓங்கி முழங்கினார். இவரது உயிர் இயக்கமான தமிழரசு கழகத்தைத் தமிழ் வளர்க்கும் கழகம் என்றே தமிழர்கள் போற்றினர்.

மீசையால் புகழடைந்தவர்களில் ம.பொ.சியும் ஒருவர். மேடைகளில் பேசும் போது உணர்வின் உச்சிக்கு இவர்போகும் போது மீசை சிலிர்த்துக் கொள்ளும் வீரவிழி இரண்டும் நிலை குத்தி நின்றுவிடும் கேட்போர் உணர்வுமயமாகி விடுவர். இவரது மீசை மீது ஆசை கொண்ட கவிஞர் ஒருவர் எப்போதும் இவர்முகத்தில் பெரிய மீசை இருந்துவரும்; இவருக்கோ தமிழ்மேல் ஆசை என்று மீசைப் புராணமே பாடியுள்ளார்.

இவர் தமிழ் முழங்கும் போதெல்லாம் மூக்குக்குக் கீழிருந்து வெண்சாமரம் வீசுவது மீசையின் திருப்பணியாக இருந்தது. சிலம்புச் செல்வரின் தலை மயிரோ கறுகறு என்று இருக்கும், ஆனால் மீசை மட்டும் வெளுத்திருக்கும். இது எப்படி? கற்பனை மீதுரக் கவிதாயினி பாடினார் ...

இவரது செவ்வாய் தமிழ்த்தேனைச் சிந்திக் கொண்டே இருப்பதால்தான் இனிக்கின்ற அத்தேன் பட்டுத் தெறித்து மீசையை நரைக்கச் செய்துவிட்டது எனக் கவிநயம் விளங்க எழுதினார்.

தமிழ்த்தாய் தமது கையிலேந்தி இருந்த செங்கோலை இவர்தம் கையில் கொடுத்து இலக்கியம் படைக்கச் சொல்லி இருப்பால் போலிருக்கிறது. இலக்கிய உலகில் எண்ணற்ற படைப்புகளை இவர் உருவாக்கியிருக்கிறார். எழுத்துலகில் இவர் செங்கோல் செலுத்தி வாழ்ந்தார் என்பது இலக்கியம் கண்ட உண்மையாகும்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து, அச்சுத் தொழி லாளியாக மிக உழைத்து பள்ளி சென்று படிக்க முடியா விட்டாலும் தானே முயன்று முயன்று கற்றுத் தேர்ந்து எழுந்து வியக்குமாறு எண்ணத்தால் பேச்சால் எழுத்தால் தொண்டால் வரலாறு படைத்தவர் ம.பொ.சி.

இவரது பட்டறிவும் படிப்பறிவும் தமிழகத்தைக் கட்டிப்போட்டது. இந்திய நாட்டின் விடுதலைப் போரில் இவர் களங்கண்டு கடுஞ் சிறை சென்று வதைபட்டு வயிற்றுப்புண் பெற்று வந்ததெல்லாம் வரலாற்றுப் பதிவுகளாகும். விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனை மக்கள் முன் நிறுத்தி உயர்த்திக் காட்டினார் சுதந்திரத்தீ மூட்டினார். அந்தப் போராளியின் வரலாறு திரைப்படமாகத் துணை நின்று பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

அதே போன்று மண் விடுதலைக்காகத் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த மாமனிதர் வ.உ.சியைப் பற்றிப் பேசியும் எழுதியும் கப்பல் ஓட்டிய தமிழனாகத் திரை ஓவியம் படைக்கத் தூண்டியும் தொண்டறம் புரிந்தார்.

மேலும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டை வளர்க்க இங்கே பாடுபட்ட வள்ளற் பெருந்தகையை ஆழ்ந்து கற்று, இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்கிற உயரிய நூல் சாகித்ய அகடமியின் பரிசினைப் பெற்றது. இவ்வாறு இவர் தொட்டதெல்லாம் துலங்கிற்று. இவர் உயர்த்திப் பிடித்ததெல்லாம் விளங்கிற்று, இவர் எழுதிக் குவித்ததெல்லாம் கற்றோரையும் மற்றோரையும் அறிவு பெறவைத்தது. தமிழுக்கு மேலும், தகு உயர்வளித்தது. எழுத்துப் பணி, பேச்சுப் பணியோடு இவர் ஓய்ந்திருக்கவில்லை. அரசியல் பணியாற்றித் தமிழ்நாட்டின் எல்லை மீட்புப் போருக்குப் படைதிரட்டிப் பாடு பட்டதை வரலாறு இன்றும் பேசிக் கொண்டிருக்கிறது.

இவரின் கடும் உழைப்பினாலும் தான் தென் குமரியும் திருத்தணியும் நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. "மதறாஸ் மனதே' என்று ஆந்திரர் உரிமை கொண்டாடியதையும் "நாஞ்சில் நாடு நமதே' என்று மலையாளிகள் மார் தட்டியதையும் இவர் போராட்டத்தால் முறியடித்தார். இவர் வளர்த்த காங்கிரசு இயக்கமோ திருத்தணியும் தென்குமரியும் இந்தியாவில் தானே இருக்கின்றன என்று ஏகடியம் பேசிக் குறுக்குச்சால் ஓட்டியது.

தமிழ் வழங்கும் நம்மரும் தாய்நாட்டைத் தமிழ் நாடு என்று பெயரிட வேண்டும் என்பது சிலம்புச் செல்வரின் அடுத்த போர் முழக்கமாகும்.

காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கம் என்பவரும் "தமிழ்நாடு' பெயர் மாற்றப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாதிருந்தும் அது நிறைவேறாமலே போராடிச் செத்தார். இறுதிவரை காங்கிரசு அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாமல் தமிழ் நாடு என்ற போர்க் குணத்தைக் கொச்சைப்படுத்தியது. அடுத்தடுத்து நிகழ்ந்த சமுதாயப் புரட்சியால் சனநாயகத் தீர்ப்பால் மக்கள் விரோதக் காங்கிரசு ஆட்சி வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்ந்தது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணா நம் நாட்டுக்குத் "தமிழ்நாடு' என்ற திருப்பெயரைச் சூட்டினார்.

சட்டமன்றத்திலும் கட்சி வேறுபாடு கருத்து வேறுபாடு இன்றி அனைவரும் தமிழரின் நெடுநாளைய கோரிக்கையை நிறைவேற்றினார். முதல்வர் எழுந்து நின்று "தமிழ்நாடு' என்று ஓங்கி உரைக்கச், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மும்முறை வாழ்க ! வாழ்க ! வாழ்க ! என இடி முழக்கமிட்ட வரலாறு இங்கே நடந்தது.

தமிழ்த்தாய்க் கண்மணிகளில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது. தமிழர்கள் மகிழ்ந்து கூத்தாடினர். சிலம்புச் செல்வர் பூரித்துப் போனார். சென்னைக் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பெயர்சூட்டு விழா நடந்தது.

அதுபோது, முதல்வர் அண்ணா உடல்நலக் குறைவோடு, மருத்துவர்கள் தடுத்த போதும் விழா மேடைக்கு வந்து விட்டார். உள்ள உயிர் ஒன்றுதான்; அதுபோகப் போவதும் ஒருமுறைதான். "தமிழ்நாடு' பெயர் சூட்டு விழா அரங்கிலேயே போகட்டுமே என்கிற முடிவோடுதான் அண்ணா விழாவுக்கு வந்திருக்க வேண்டும். கலைவாணர் அரங்கில் மக்கள் திரள் பிதுங்கி வழிந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவுக்குத் தலைமை ஏற்றவர் யார் தெரியுமா? சிந்தைக்கினிய நம் சிலம்புச்செல்வர்தான். விழாத் தலைமை ம.பொ.சியே ஏற்க வேண்டும் என்று அண்ணா பெரிதும் விரும்பினார். காலமெல்லாம் தமிழ், தமிழ் என்று தோள் தட்டித் தொண்டு செய்த அந்த மாமனிதருக்கு அண்ணா மகுடம் சூட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும். தமிழ் உணர்வு ததும்பிவழியும் அவ்விழாவில் தலைமை ஏற்றுச் சிலம்புச் செல்வர் பேசும்போது....

கால் நகம் முளைத்த காலம் முதல் நான் காங்கிரசுக்காகப் பாடுபட்டுள்ளேன். அங்குகூட எனக்குக் கிடைத்திடாத வாய்ப்பு திராவிட இயக்கத்தவரால் இங்கே கிடைத்திருக்கிறது. என் தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டும் பெருவிழாவுக்குத் தலைமை தாங்க நான் என்ன தவம் செய்தேனோ?

எதிர்காலத்தில் என் பேரப் பிள்ளைகள் "தமிழ்நாடு' என்று எங்கள் தாத்தா தலைமையில் தான் பெயர் சூட்டினார்களாம் என்று பெருமை பொங்க பேசிக்கொள்வார்கள். அறிஞர் அண்ணா தான் இந்த அரிய வாய்ப்பை எங்கள் தாத்தாவுக்கு வழங்கிச் சிறப்பித்தவர் எனப் புகழ்ந்து பேசுவார்கள்.

இப்படி வருங்காலத்தில் எனது வாழையடி வாழைகள் வரலாற்றுப் பெருமை கொள்ளுமாறு தமிழ்நாட்டு முதல்வர் செய்துவிட்டார். எனது வாழ்க்கையில் இது போன்றதொரு சிறப்பு இனி என்றும் அமையப் போவதில்லை.'

சிலம்புச் செல்வர் இவ்வாறு பேசி நெகிழ்ந்து நெக்குருகிப் போனார். குழுமி இருந்த தமிழர்களும் உணர்வென்னும் குன்றேறிக் கையொலித்தனர். தமிழினம் நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அசைபோட வேண்டிய காவிய சம்பவம் இது.

நமது தமிழ் இலக்கியங்களை வண்டி இழுப்பவருக்கும், மூட்டை சுமப்பவருக்கும் புரியும்படியாக வகுப்புகள் நடத்திட வேண்டும் என்னும் தாகத்தோடு திருக்கழுக்குன்றத்தில் முத்தமிழ் இலக்கிய மன்றம் கண்டோம் நாங்கள்.

அந்தச் சிற்×ரில் ஒரு பத்தாண்டுக்காலம் இலக்கிய வகுப்புகளைப் புலவர்களின் துணையோடு நடத்தி வந்தோம். ஓர் ஆண்டு முழுவதும் சிலப்பதிகாரக் காவியத்தை வாரவகுப்புகளாக நடத்தி முடித்திருந்தோம்.

ஆண்டு முடிவில் சிலப்பதிகார விழா எடுக்கத் தீர்மானித்தோம். சிலம்புச் செல்வர் இல்லாமல் சிலப்பதிகார விழாவா? அரசு அலுவலரும், ம.பொ.சியார்க்கு அணுக்கமானவருமான மாணிக்க வேலருடன் இருசப்பக்கிராமணி தெருவிலிருந்த ஐயாவின் வீட்டுக்குச் சென்றேன் நான்.

விழாவில் பங்கேற்கச் சிலம்புச் செல்வர் இசைவளித்தார். சிறகுகளைப் பெற்றுவிட்ட பறவை போல் நான் ஊர் திரும்பினேன். விழா ஏற்பாடுகள் நண்பர்கள் ஒத்துழைப்போடு சிறப்புற நிகழ்ந்தன.

விழா நாளன்று காலை எனக்கு ஒரு தொலைவரி சென்னையிலிருந்து வந்தது. அதில், ""விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். வயிற்றுப் புண்ணால் நான் வதைபடுகிறேன். விழா சிறக்க வாழ்த்துக்கள். என்று குறிக்கப்பட்டிருந்தது.

தந்தி வாசகம் என்னைத் தடுமாற வைத்தது; தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சென்னைக்குப் புறப்பட்டேன். ஐயாவின் இல்லம் அடைந்தேன்.

கண்கலங்கப் பேசினேன், "ஐயா, தங்களை அழைத்துச் செல்லாமல், இங்கிருந்து நான் போகமாட்டேன். மகிழுந்தில் வந்து, விழா மேடையில் அமர்ந்து தாங்கள் முகம் காட்டினால் போதும், பேச வேண்டாம்,'' என்று கேட்டுக் கொண்டேன்.

மாலை 4 மணியளவில் ஐயாவுக்கு ஓரளவு நலம் ஏற்பட்டது. எங்கள் நல்வாய்ப்பு என்றே நினைக்கிறேன். வயிற்று வலியோடு மன்ற விழாவில் பங்கேற்றார் சிலம்புச் செல்வர். தமிழறிந்த நெஞ்சங்கள் விழா அரங்கில் நிறைந்திருக்கக் கண்ட சிலம்புச் செல்வரால் பேசாநோன்பிருக்க இயலவில்லை.

பீறிட்டடித்தது பேச்சு. பெருமழை கொட்டியதுபோல இரண்டு மணிநேரம் சிலப்பதிகாரம் காட்டும் நாகரிக நெறி என்னும் தலைப்பில் பேசினார். கேட்டுக் கிறுகிறுத்தது கூட்டம். முதுநெல்லிக்கனிபோல் முன்கசந்து பின் இனித்தது எனக்கு.

தங்கும் விடுதியில் பேசிக் கொண்டு இருந்த போது நான் கேட்டேன்; வயிற்று வலியோடு துன்புற்ற தங்களால் எப்படி இரண்டு மணி நேரம் பேச முடிந்தது சிலம்புச் செல்வர் சிரித்துக் கொண்டே சொன்னார் :

கேட்கும் ஆர்வம் உள்ளவர்கள் கூடி இருந்த அவையில் நான் கொடுக்காமல் வாய்மூடிக் கிடந்தால் நான் படித்ததனால் ஆன பயன் என்ன? கன்றுகள் பசியுடன் இருக்கும் போது தாய்ப்பசு பால் தராமல் இருக்குமா? என்றார்.

கலந்துரையாடலுக்குப் பின்...

ஐயா விரும்பியபடி இடியப்பமும், தேங்காய்ப்பாலும் குமரிவாழைக் குருத்திலையில் அன்போடு நண்பர்கள் புடைசூழ நான் பரிமாறுகிறேன். சங்க இலக்கியம், இடியப்பத்திற்கு ஓர் இனிய உவமை நயம் செறிந்த பெயரை வழங்கி இருக்கிறது ஐயா, என்றேன் நான்.

அறிவார்வத்தோடு என்ன பெயர்? என்று கேட்டார் ஐயா.

"நுண்ணூல் அடிசில்' என்றேன் நான்.

இந்தப் பதச்சேர்க்கையைக் கேட்டதும் ஒரு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்தார் சிலம்புச் செல்வர். மேலும் நான் தொடர்ந்தேன்...

இடியாப்பம் இழைப்பம் என்கிற பெயருடன் இன்றும் கேரள மண்ணில் வழக்காற்றில் உள்ளது என்றேன். ஒரு புதிய சொல்லை ஆழ்ந்த பொருளுடன் புரிந்துணர்ந்த பூரிப்பும் பரவசமும் ஐயாவின் முகமலரில் கண்டு மெய்சிலிர்த்த அநுபவம் இன்றும் எனது நினைவில் இனிக்கத் தான் செய்கிறது.

அளப்பரிய சிறப்புகளை எல்லாம் அடைந்து உயர்ந்த சிலம்புச் செல்வர், சிகரங்களைத் தொடப்பட்டபாடு தாளம் பட்டிருக்காது, தறி நாடா பட்டிருக்காது. நான் சுமந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல என்பார் அவர். தான் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலுக்கே "எனது போராட்டங்கள்' என்று பெயரிட்டதிலிருந்தே இதனை நாம் உய்த்துணரலாம்.

அவரது வாழ்க்கைப் பாதை மலர்ப்பாதை அன்று. கல்லும் முள்ளும், கரடும் முரடும், சுடுமணல் காடும், சுற்றி நிற்கும் பகையும் நிறைந்த பயங்கரப் பாட்டையாகவே இருந்துள்ளது. அப்பாதையில் அவர் கடும் பயணம் மேற்கொண்டே மாபெரும் தலைவராக அவரால் வர முடிந்திருக்கிறது.

அவரது அரசில் எதிரிகள், கூட இருந்தே குழி பறித்திருக்கிறார்கள். பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்திருக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகம் புரிந்திருக்கிறார்கள்.

இருசப்பக் கிராமணித் தெரு எலும்புக்கூடே என்று ஏகவசனம் பேசியோர், மண்ணெண்ணெய் மா.பொ.சி. என்று எரிச்சல் மொழி வீசியோர், ஏறுகிற மேடைக்கு ஏற்றவாறு பொழிபவர் என்று இகழ்ந்து உரையாடியோர் இவர்களையெல்லாம் புறங்கண்டே இவர் புகழ் மாலைகளைப் பெற்றிருக்கிறார்.

அவர்காலத்துப் பத்திரிகையாளர், கவித் தென்றல், இடம் இருக்கும் போதெல்லாம் கட்டம் ஒன்றில் இவரது படத்தை இடம்பெறச் செய்து விட்டு இந்த இடத்தில் அடுத்த வாரம் புயல் வீசும் என்று எச்சரித்துப் புழுதிவாரித் தூற்றியதுண்டு.

தமிழாய்ந்த அத்தலை மகனின் தகுதி சான்ற தலைமையில் நான் மணம் புரிந்து கொண்டதை எனது வாழ்நாள் பெருமையாக இன்றும் நீள நினைந்து நெஞ்சம் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழுக்கும், தமிழனுக்கும், தமிழ் நிலத்துக்கும் துடிதுடித்த தொண்டறம் புரிந்த தமிழினப் போராளி இன்று இருந்திருந்தால் நூற்றாண்டு கடந்திருப்பார்.

சிலம்புச் செல்வரைத் தமிழக மேலவைத் தலைவராக்கி அழகு பார்த்த முத்தமிழறிஞர் கலைஞர் ஐந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப் பேற்ற காலத்தில் சிலம்புச் செல்வர்க்கு நூற்றாண்டு நிறைவு விழா வந்தது அவருக்கு நல் வாய்ப்பாக அமைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

மூத்த தமிழ்ச்செம்மலை முன்னோடித் தலை வரை முழுதுணரக் கலைஞரால் மட்டுமே முடியும். எல்லாச் சிறப்புகளையும் சிலம்புச் செல்வர் அவரால் பெற முடியும் என்பது நிஜமானது.

"தலைகொடுத்தேனும் தமிழகத்தின் தலைநகரைக் காப்பேன்' என்று முழக்க மிட்டவர்க்குத் தலைநகரில் சிலை எடுப்பேன் என்றார் தமிழக முதல்வர் கலைஞர்.

அவர்தம் சிந்தனைச் செல்வங்களாம் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக நல்லறிவிப்பு செய்துள்ளார். ஐயாவின் பேரப்பிள்ளைகள் மனம் மகிழுமாறு இருபது இலட்சங்களைப் பரிவுத்தொகையாக வாரிவழங்கி நூற்றாண்டு விழாவைப் பெருமைப்படுத்தி இருக்கிறார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

தமிழக முதல்வருக்குத் தமிழ் மணக்கும் திசையெல்லாம் நன்றி பாராட்டித் தலை வணங்கும்.

சிலம்புச் செல்வி கண்ணகிக்குச் சிலை எடுத்தான் சேரமன்னன் !

சிலம்புச் செல்வர் ம.பொ.சிக்குச் சிலை எடுப்பார் எங்கள் சோழ மன்னர் !

காவியச் சிலம்பசைத்த ம.பொ.சி திருப்புகழ் வாழ்க !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com