Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வரலாறு
கோவி. லெனின்

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை விளக்கி எழுதத் தெரிந்தால் 5 மதிப்பெண்களோ, 10 மதிப்பெண்களோ நிச்சயமாகக் கிடைத்துவிடும். ராணுவ வீரர் மங்கள்பாண்டே, ஜான்சிராணி லட்சுமிபாய், டெல்லி மன்னர் பகதூர் ஷா உள்ளிட்ட பெயர்களுடன் 1857 என்ற ஆண்டுக் கணக்கையும் தெரிந்திருந்தால், அதை வைத்து சிறு குறிப்பு எழுதி 5 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்றுவிடமுடியும். மதிப்பெண்களுக்கான வரலாற்றுப் பாடங்களுக்கும், உண்மையான வரலாற்றுக்கும் எவ்வளவு இடைவெளி என்பதை வேலூர் சிப்பாய்ப் புரட்சியின் 200ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

முதல் இந்திய சுதந்திரப் போர் எனப் பெயர் பெற்றுவிட்ட அந்த நிகழ்வு நடந்தது 1857இல்! ஆனால், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே 1806இல் வேலூரில் சிப்பாயப் புரட்சி நடைபெற்று, வெள்ளைக்கார அரசாங்கத்தை நடு நடுங்க வைத்திருக்கிறது. முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 150ஆம் ஆண்டு தொடக்கவிழாவுக்கு இந்திய அரசு இப்போதே ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது. ஆனால், அதற்கும் முன்பாக நடைபெற்ற வேலூர் சிப்பாய்ப் புரட்சியின் 200ஆம் ஆண்டு நிறைவு விழாவை மாநில அரசுதான் முன்னின்று நடத்த வேண்டியதாயிற்று. மாநிலத்தை ஆள்பவர்கள், மத்தியில் உள்ள கூட்டணி அரசிலும் இடம் பெற்றிருப்பதால், அதிலும் அஞ்சல் துறைக்கான அமைச்சரையும் பெற்றிருப்பதால், வேலூர் சிப்பாய்ப் புரட்சியின் நினைவு அஞ்சல் தலையை ஜூலை 10 ஆம் தேதியன்று வெளியிட முடிந்தது.

அஞ்சல் தலைகள் குறித்து கவிஞர் வைரமுத்து மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அஞ்சல் தலை
என்பது என்ன ?

முத்திரை இட்டு
முகத்தை அழிக்க
ராஜாங்கம் வைத்திருக்கும்
இரகசியத் திட்டம்தானே !

வேலூர் சிப்பாய்ப் புரட்சிக்கான அஞ்சல் தலை வெளியீடு, ராஜாங்கத்தின் இரகசியத் திட்டத்தின் ஒன்றாக இருக்காது என நம்பலாம். ஆனால், முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் சிப்பாய்ப் புரட்சிக்கு தந்த முக்கியத்துவத்தை வேலூர் சிப்பாய் புரட்சிக்குத் தரவில்லையே, ஏன் இந்தப் பாகுபாடு?

முதல் இந்திய சுதந்திரப் போர் என்பது என்ன ? பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய சிப்பாய்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்பட்டார்கள். பிரிட்டிஷ் வீரர்களுக்குரிய உரிமைகள் இந்திய வீரர்களுக்கு இல்லை. நம் நாட்டில் படையமைத்து நம்மையே இழிவுபடுத்துகிறார்களே.. என்கிற சுதந்திர உணர்வு இந்திய வீரர்களுக்குள் கனன்றது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களில் பசுமாட்டுக் கொழுப்பு தடவப்பட்டிருந்ததால் அதனைப் பயன்படுத்த இந்து வீரர்கள் மறுத்தனர். பசு என்பது, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் உயிரினம் என்பதால் இதற்கு இந்துச் சிப்பாய்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோலவே, இதில் பன்றிக் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட, பிரிட்டிஷ் படையில் இருந்த முஸ்லிம் சிப்பாய்களும் இதனை எதிர்த்தனர். பன்றிக் கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்துவது பாவச்செயல் என்பது அவர்களின் நிலை.

இந்த எதிர்ப்புகளைப் பிரிட்டிஷ் படைத் தளபதிகள் புறக்கணித்த நிலையில், 1857ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் மீரட் ராணுவ முகாமில் மங்கள்பாண்டே என்ற இந்திய சிப்பாய், பிரிட்டிஷ் ஆட்சியைக் காப்பதற்காகத் தனக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியை, பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு எதிராகவே பிடித்தார். அவரோடு இந்துமுஸ்லிம் சிப்பாய்களும் சேர, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் அன்றே ஆரம்பமானது. அதேவேளையில், நேரடி வாரிசு இல்லாத மன்னர்களின் சமஸ்தானங்களை பிரிட்டிஷ் அரசு எடுத்துக் கொள்ளும் என உத்திரவிடப்பட்டதால், இதை எதிர்த்து ஜான்சி ராணி, டெல்லி மன்னர் பகதூர் ஷா உள்ளிட்டோர் போர்க்களம் கண்டனர். சிப்பாய்க் கலகத்தையும், மன்னர்களின் எதிர்ப்பையும், அன்றைய கட்டத்தில் நவீனமாக இருந்த ஆயுதங்களை ஏந்திய பெரும்படையைக் கொண்டு அடக்கியது பிரிட்டிஷ் ராணுவம், இதுதான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்.

1857க்கு சற்றும் இளைத்ததல்ல, 1806இல் நடந்த வேலூர் சிப்பாய்ப் புரட்சி. மைசூர் சாம்ராச்சியத்தின் மன்னனான திப்புசுல்தான் பிரிட்டிஷ் படையிடம் தோல்வியடைந்த பிறகு, அவனது வாரிசுகளையும் குடும்பத்தினரையும் பிரிட்டிஷார் சிறை வைத்திருந்த இடம், வேலூர்க் கோட்டை. மொத்தம் 1363 கைதிகள். அதே வேலூர்க் கோட்டையில்தான் வெள்ளையர் ராணுவத்தின் படைப்பிரிவும் இருந்து வந்தது. இந்த ராணுவத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் சிப்பாய்களாக இடம் பெற்றிருந்தனர். வெள்ளைக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழக மன்னர்கள் நடத்திய போரில், மன்னர்களின் படைகளில் இருந்தவர்கள்தான், பின்னர் பிரிட்டிஷ் படையில் பணியாற்றினர். தமிழக மன்னர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு, தோல்வியடைந்து, தூக்கிலிடப்பட்ட நிலையில், வேலை வாய்ப்பிழந்துபோன படைவீரர்கள், பிரிட்டிஷ் படையில் வயிற்றுப் பிழைப்புக்காக சேர வேண்டியதாயிற்று. எனினும், அவர்களுக்குள் தாய் மண் விடுதலை என்ற நெருப்புக் கங்கு அணையாமலேயே இருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லைச் சீமைக்காரர்கள்.

புரட்சி எண்ணம் கொண்ட இந்த படை வீரர்களுக்கும் திப்பு சுல்தானின் வாரிசுகளுக்கும் வேலூர் கோட்டைக்குள் நல்ல தொடர்பு ஏற்பட்டது. இதன் மூலம், வெளியில் இருந்த திப்புவின் ஆதரவாளர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து பிரிட்டிஷாருக்கு எதிரான படை திரட்டலில் ஈடுபடலாயினர். அதே நேரத்தில், கோட்டைக்குள்ளும் வெள்ளையருக்கு எதிரான அணி உருவாகிக் கொண்டிருந்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் உள்ள ஆங்கிலேய வீரர்களைப் போலவே இந்திய வீரர்களும் தலைப்பாகை அணியாமல் அதற்குப் பதிலாக தொப்பி அணிய வேண்டும், ஒரே மாதிரி மீசை வைத்துக்கொள்ளவேண்டும், தாடி வளர்க்கக் கூடாது என்றெல்லாம் பிரிட்டிஷ் ராணுவத் தளபதிகள் உத்தரவிட்டனர். இது இந்துமுஸ்லிம் சிப்பாய்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. குறிப்பாக, திருநீறுநாமம் போன்ற மதச் சின்னங்களை அணியக்கூடாது என்கிற உத்தரவு பெரும் புயலை உள்ளுக்குள் கிளப்பயிருந்தது.

இதையடுத்து, ஜூலை 12ந் தேதியன்று வேலூரிலும் ஹைதராபாத்திலும் உள்ள ராணுவ முகாம்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் ராணுவத் தளபதிகளுக்குத் தகவல் கசிந்து விட்டது. அதனால், முன்கூட்டியே தாக்குதல் நடத்தச் சிப்பாய்கள் முடிவு செய்தனர். 1806 ஜூலை 9ஆம் தேதி வேலூர் சிறையில் திப்பு சுல்தானின் மகளுக்குத் திருமணம் நடக்க, கோஷா அணிந்த பெண்கள் போல புரட்சியாளர்கள் நுழைந்துவிட்டனர். திருமணப் பல்லக்கில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஜூலை 10ஆம் தேதி இரவு 2 மணிக்குச் சிப்பாய்கள் புரட்சி வெடித்தது. அந்த நிலையிலும் போர்த் தர்மத்தை மீறாத தமிழக வீரர்கள் அந்தக் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரப் பெண்களையும், குழந்தைகளையும் துன்புறுத்தவில்லை. மாறாக, பாதுகாப்பாக இருக்கச் சொல்விட்டு வெள்ளைக்கார ராணுவத் தளபதிகள், வெள்ளைக்கார ராணுவ வீரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் 117 வெள்ளையர்கள் பலியாயினர்.

திடீர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாத மேஜர் கோட்ஸ், வேலூரிருந்து 16 மைல் தொலைவில் இருந்த ஆற்காடு தளபதி கில்லெஸ்பிக்குத் தகவல் அனுப்ப, அவன் பெரும்படையை அனுப்பி வைத்தான். ஆற்காட்டிலிருந்து வந்த வெள்ளையர் படை, வேலூர்க் கோட்டைக்குள் புகுந்து புரட்சியாளர்களை மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் என அப்பாவிகளையும் சேர்த்து 800 பேரின் உயிரைப் பறித்து, புரட்சியை ஒடுக்கியது. பிடிபட்ட வீரர்களைக் கோட்டையின் முன்புறத்தில் கட்டிப்போட்டு, சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் படை. எனினும், சிப்பாய்களின் இந்த எழுச்சி இலண்டனிலிருந்த பிரிட்டிஷ் தலைமையையும் நடுங்க வைத்தது என்பதே வரலாற்றுக் குறிப்பு.

முதல் இந்திய சுதந்திரப் போரையும், வேலூர் சிப்பாய் புரட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டுக்கும் அடிப்படையானது, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டதும், அவர்களின் மத நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டதுமாகும்.

இயல்பிலேயே, அந்த வீரர்களிடமிருந்த சுதந்திர உணர்வு போர்க்குணமாக மாறியதால், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துப்பாக்கியைத் திருப்பினார்கள் என்பதும் புரியும். சிப்பாய்கள் புரட்சி செய்த அதே வேளையில், இந்திய மன்னர்களும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். இதன் விளைவுதான், முதல் இந்திய சுதந்திரப் போரும், வேலூர் சிப்பாய்ப் புரட்சியும். ஆனால் வரலாறோ 1857இல் நடந்ததை முதல் இந்திய சுதந்திரப் போர் என்கிறது. 1806இல் நடந்ததை வரலாற்றின் பார்வையிலிருந்து மறைக்கிறது. ஏனெனில், 1857இல் நடந்த புரட்சி என்பது வடஇந்தியாவில்! 1806 புரட்சி தென்னிந்தியாவில் தமிழகத்தில்! இந்தப் பாகுபாடுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் பங்கைக் குறிப்பாக, தமிழகத்தின் பங்கைக் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது.

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னதாகவே தமிழக மன்னர்களான பூலித்தேவன், வீரன் அழகுமுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, ராணி வேலு நாச்சியார் ஆகியோர் வெள்ளையர்களுக்கு எதிராக வாளேந்தி மடிந்த வரலாறு, வடதிசை நோக்கிப் பயணிக்கவில்லை. தங்கள் பகுதிக்குள் இந்த வரலாறு பயணிக்காதபடி பார்த்துக் கொள்வதில் தேசியத் தலைவர்கள் கவனமாகவே இருந்திருக்கிறார்கள்!

காலவெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு வருகிறது. அதில், புரட்டுகளும் புரட்டிப் போடப்படுகின்றன. இந்திய ரயில்வேத் துறையின் இணையமைச்சர் வேலு, வேலூர் சிப்பாய் புரட்சியின் 200ஆவது நிறைவு விழாவுக்குச் செல்வதாகத் தனது துறையின் அமைச்சரான லாலுபரசாத் யாதவிடம் சொன்னபோது, வேலூரில் அப்படியொரு புரட்சி நடந்திருக்கிறதா? எனக் கேட்டுள்ளார் லாலு. வேலூர்ப் புரட்சி பற்றி வேலு விளக்க, தமிழக வீரர்களின் தீரம் கண்டு அதிசயித்திருக்கின்றார் லாலு. இதனை இணையமைச்சர் வேலுவே வேலூரில் நடைபெற்ற 200ஆம் ஆண்டு விழாவில் சொன்னார். தேசியப் பார்வையில் எழுதப்பட்ட வரலாறுகளால் தமிழக மாணவர்களும் கூட வேலூர் சிப்பாய்ப் புரட்சியை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அதனால்தான், இனி வரலாற்றுப்பாடத்தில் வேலூர்ப் புரட்சி பற்றிய கட்டுரை இடம்பெறும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

வரலாற்றை நினைவுபடுத்துவதற்கே நமக்கு 200 ஆண்டுகாலம் தேவைப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் பல பகுதிகளிலும் தமிழகத்தின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது. அந்த வரலாற்றுச் செய்திகளை மீட்டெடுத்து, இந்திய அளவில் கவனப்படுத்துவதற்கு வேலூர் சிப்பாய்கள் புரட்சியின் 200ஆம் ஆண்டுவிழா தொடக்கமாக அமைந்திருக்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com