Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

மலையைப் பிளந்த உளி
வழக்கறிஞர் அஜிதா

எல்லா மதங்களும் எந்த அளவு தமது அடிப்படை விஷயங்களைப் பற்றி பேசுகின்றனவோ அந்த அளவுக்கு பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற நெறியையும் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

பெண்ணடிமைத்தனமான கருத்துக்கள் மதங்களிருந்துதான் தோன்றியுள்ளன என்பதை நாம் எல்லா காலங்களிலும் பார்க்க முடியும். அதுதான் பெண்ணடிமைத்தனத்தின் ஊற்றுக் கண்ணாகவும் அதனை நிலைநிறுத்துகிற நிறுவனமாகவும் இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டுப் போகக்கூடாது அவர்கள் படிக்கக்கூடாது என்பதை இதிகாசங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. பெண்களை ஒரு சொத்து போலத்தான் இதிகாசங்கள் பார்க்கின்றன. பெண்ணும், மாடும், பறையும் அடிக்கத்தக்கவை என்று சொல்கிறது.

9 வகை தானங்களைப் பற்றி பேசும்போது மண், பொன், தேர், ஆட்சி, பெண், வேலையாள் என்று வரும். அதாவது, பெண் என்பதை ஒரு அஃறிணையாகப் பார்க்கும் பார்வை இந்து மதத்தில் இருக்கிறது.

இஸ்லாமிய, கிறித்துவ மதங்களில் பெண் என்பவள் பாவம் செய்யக்கூடிய உடலைக் கொண்டவள் எனச் சித்திரிக்கப்படுகிறது. சபலபுத்தி உடையவள் என்று குறிப்பிடுகிறது. உலகில் உள்ள எல்லா மதங்களும், பெண்களை பசாசின் வடிவமாகத்தான் பார்க்கின்றன. அதற்கெல்லாம் உதாரணமும் உண்டு.

பைபளில் பார்த்தீர்களென்றால் உலகின் முதல் பாவம், பெண் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆதாமும், ஏவாளும் சுதந்திரமாகச் சொர்க்கத்தில் ஒரு பழத்தோட்டத்தில் சுற்றி வருகிறார்கள். ஒரு மரத்தின் ஆம்பளை மட்டும் சாப்பிட வேண்டாமென்று சொல்கிறார்கள். அந்த மரத்தின் ஆப்பிளை ஏவாள்தான் முதலில் கடித்துவிட்டு ஆதாமிடம் கொடுக்கிறாள். ஆக, உலகத்தின் முதல் பாவத்தைப் பெண் செய்வதாகச் சித்திரிக்கப்படுகிறது. இந்தக் கதைப் புனைவு உலகத்திலுள்ள பெண்களுக்கே சாவு மணி அடித்துள்ளது. எல்லா மதங்களும் இப்படித்தான்.

இன்றைக்கு உள்ள புதிய காலச் சட்டம் ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டு வருகிறது. ஆனாலும், மதங்கள் மேலும் மேலும் பெண்களின் கழுத்தில் நுகத்தடியை அழுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

மதங்களற்ற சமுதாயத்தைக் கற்பனையே செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது, இருக்கிற நிலைமைகளிலிருந்து எப்படி விடுபடுவது?

அறிவுக்கு எட்டிய விஷயங்களைப் பெரியார் சொன்னதுபோல எப்படிப் பெண்கள் சமுதாயத்திற்குக் கொண்டு வருவது? சபரிமலைக் கோவில் சிலையை ஜெயமாலா தொட்ட விஷயத்தை எடுத்துக் கொண்டால், அந்தக் கடவுள் பெண்கள் வருவதை விரும்பவில்லை என்று சொல்கிறார்கள், அப்படியென்றால், அந்தக் கடவுள் என்பவரே இயற்கையின் விதிகளின்படி ஒரு பெண் இல்லாமல் பிறந்திருக்க முடியாது.

கையில் பிடித்த மரப்பொம்மையிருந்து வந்தார் என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாக இருக்கும். கடவுள் இருக்கிறாரா, இல்லையான்னு கேட்டால், இருக்காரா இல்லையான்னு சொல்லாமல் நம்பிக்கை இருக்கிறது என்று மட்டும் சொல்லுவாங்க. ஆகவே, இது நம்புகிற விஷயம்தானே தவிர, உண்மை என்று அவர்களே சொல்வதில்லை.

அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில் ஜெயமாலா என்பவர் தொட்டிருந்தார் என்றால் மிகவும் மகிழ்ச்சியுடன் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், அவர் தொட்டதனால் மற்ற பெண்களையும் அந்தக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். 20 வருடமா அந்தக் கோயிலுக்கும் மக்களுக்கும் எந்த ஆபத்தும் வந்து விடவில்லை. ஜெயமாலாவே சொன்னதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிந்திருக்கு.

கடவுள் பெரியவர், எல்லாம் வல்லவர் என்றால் யார் மீதாவது உதித்தாவது, என்னை இந்தப் பெண் தொட்டுவிட்டார், அதனால் இப்படிப் பரிகாரம் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கணும். சினிமாவில் வர மாதிரி மலை உருண்டிருக்க வேண்டும், பூகம்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லாமல், அந்தம்மா தொட்ட பிறகும் எல்லா விஷயங்களும் இயல்பாகவே நடந்திருப்பதால் மற்ற பெண்களையும் அனுமதிக்கவேண்டும்.

இந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவது மிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். வசூல் அதிகமாகி இருக்கிறது. இவையெல்லாம் ஜெயமாலா தொட்டபிறகுதான் நடந்திருக்கிறது என்றும் நம்பலாமே! ஜெயமாலாவுக்கு முன், ஜெயமாலாவுக்கு பின் என்று கூட கணக்கிடலாம்.

ஒருவேளை, அவர்கள் தொடவில்லை என்று சொன்னால், இனிமேலும் இத்தகைய தீண்டாமையை அனுமதிக்கக்கூடாது என்ற கேள்வியை நாம் வைக்க வேண்டும். அந்த மலை இருக்கிற பகுதிக்கு கலெக்டராக பெண்கள் இருந்திருக்கலாம். அந்த மலைக்கோயில், தேவசம் போர்டுக்கு சொந்தமாக இருந்தாலும் அங்கு நிர்வாக கட்டமைப்பு, சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்த பெண் கலெக்டர்கள் செய்து கொடுத்திருப்பார்கள்.

அப்படி இருக்கும்போது அந்தக் கோயிலுக்கு எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடவில்லை.

பல்வேறு கொடுமைகள் போராட்டங்களுக்குப் பிறகுதான் மாறும். இது எதிர்ப்புணர்வுக்கான ஒரு சிறு பொறி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். அந்தக் கடவுளை நம்புகிறவர்கள் கூட, அவர்கள் வீட்டு பெண்மணிகள் செய்யும் காரியங்களின் அடிப்படையில்தான் கோயிலுக்கே வருகிறார்கள்.

பெண்களுக்கு 5 நாட்கள் தீட்டு இருக்கிறது என்று சொன்னால், மிச்ச காலம் அதை உள்ளடக்கி இருக்கிற உடம்பு அது. அது வெளிப்படும் போதுதான் சுத்தமாக ஆகிறார்கள். விஞ்ஞானத்துக்கு பொருத்தமில்லாத வாதங்களைச் சொன்னால், அத்தகைய வாதங்களை வைக்கும் பணிக்கர் கூட வீட்டில் பெண்கள் சமைத்துக் கொடுத்ததைச் சாப்பிட்டு விட்டுத்தான் கோவிலுக்கு வருகிறார்.

5 நாட்கள் தீட்டு வெளிப்படுகிறது என்றால், மீதி 25 நாட்களும் அந்த தீட்டின் மொத்த உருவமாகத்தான் இருக்கிறார்கள். அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் இந்த விவகாரம் ஒரு கவர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. இதுவே, 60 வயது பாட்டி ஒருவர், "நான் 20 வருஷத்துக்கு முன்னாடி தொட்டேன் என்று சொல்யிருந்தால் அவருடைய 40 வயது படத்தைதான் போட்டிருப்பார்கள். இப்போதைய படத்தை போட்டிருக்க மாட்டார்கள்.

ஜெயமாலா, இப்போது கொடிகட்டிப் பறக்கும் மீரா ஜாஸ்மின் ஆகியோரது படங்களை வெளியிட்டு ஊடகங்கள் இதை கவர்ச்சிகரமாக்குகின்றன. இந்தக் கோயில்களெல்லாம், ஜெர்மன் நாட்டவர் உள்ளிட்ட பிற நாட்டவர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கின்றன. ஆக, வெள்ளையர்களுக்கு தீட்டு இல்லை, ஒழுக்கமில்லை, ஆச்சாரமில்லை. அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்ளும் போது, அந்த மக்கள் ஏற்புடையவர்கள் இல்லை என்று சொல்ல முடியாது.

அதுபோலத்தான் பெண்களும், அவர்கள் இல்லாமல் இந்த கோயிலை நிர்வகிப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் இல்லை. பெண்களை ஒதுக்குவது என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com