Keetru Thaagam
Thaagam Logo
ஜனவரி 2007

தமிழ் ஈழம் இந்தியப் பிரதமரின் நிலை!
திருப்புமுனை தில்லிப் பயணம் குறித்து சுப.வீயுடன் நேர்காணல்

அன்பு தென்னரசன்

தமிழுணர்வாளர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடையக்கூடிய ஒரு சந்திப்பு அண்மையில் இந்தியத் தலைநகரில் நடைபெற்றது. ஆம்! இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதிகள் ஐவரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். தமிழீழ மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அவர்கள் படும் இன்னல்கள் குறித்துத் தமிழீழப் பிரதிநிதிகள் விளக்கினர்.

பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னதாகத் தமிழக முதல்வரை அவர்கள் சந்தித்தனர். இந்த இரு சந்திப்புகளின் போதும் அவர்களுடன் இருந்தவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தடைபல கடந்து, இந்தியத் தலைநகரில் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதைத் தாகம் வாசகர்களுக்கு விரிவாக விளக்குகிறார் சுப.வீ.

தாகம்: ஈழத்தமிழர் பிரதிநிதிகளை இந்தியப் பிரதமர் மிக நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கான பணிகள் எப்படி நடைபெற்றன? எப்படி இது நிறைவேறிற்று?

சுப.வீ- இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற முறை வந்திருந்தபோதே தமிழக முதல்வரையும் இந்தியாவின் தலைமை அமைச்சரையும் சந்திக்க முயற்சி செய்தார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன். அப்போது ஏதோ சில காரணங்களால் அந்தச் சந்திப்பு நடைபெறாமல் போய்விட்டது. இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும் என்று ஏனைய தமிழுணர்வாளர்களைப் போல நானும் விரும்பினேன்.

பின்னர், முதல்வரை நான் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தபோது, இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற தயக்கத்துடனும் குழப்பத்துடனும் இருந்தேன்.

அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில், அவர்களைச் சந்திப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார்.

முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதன் மூலம் சிங்கள அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க முடியும் என்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் முயற்சியினால் நான் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து கடிதம் பெற்று முதல்வரிடம் சேர்ப்பித்தேன்.

அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 20ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவர்கள் சந்தித்து 1 மணி நேரம் உரையாடினார்கள். முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பின் காரணமாக டிசம்பர் 22ஆம் நாளன்று டெல்லியில் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். இரண்டு சந்திப்புகளும் பயனுள்ளதாக அமைந்தன.

தாகம்- பிரதமரிடம் நாம் கேட்டது என்ன? அவர் எதைச் செய்வதாகச் சொன்னார்? எதை மறுத்தார்?

சுப.வீ- பொதுவாக ஒரு நாட்டின் தலைமையமைச்சர்; அப்படியெல்லாம் ஒரு பேச்சுவார்த்தையில் உறுதி மொழிகளை வழங்க முடியாது என்பதை நாம் அறிவோம். இலங்கைநாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதைச் சொன்னார்கள். இந்திய அரசு, சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குண்டுகள் போட்டுத் தமிழர்களைக் கொல்வதை நிறுத்தச் செய்யவேண்டும். ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்கச் செய்யவேண்டும்.

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இவர்களின் குமுறல்களையும் கோரிக்கைகளையும் பிரதமர் பரிவோடு கேட்டுக்கொண்டார். இதன்பின் சில செய்திகளைச் சொன்னார். வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை.

அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலேயே கூறப்பட்டிருக்கிறது என்றார். பிறகு, இலங்கையினுடைய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கா வண்ணம் தமிழ் மக்களுடைய கண்ணியம், சுய மரியாதை, பாதுகாப்பு ஆகியவை போற்றிப் பாதுகாக்கப்படும் என்பதில் இந்திய அரசு கவனமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இப்படித்தான் அவர்கள் செய்திகளைச் சொல்ல முடியும் என்பதை நாமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் அவர்கள் இந்தச் சந்திப்பு முடிந்து எங்களிடம் பேசுகிற போது, விடுதலைப்புலிகளுக்கும் இந்தியஅரசுக்கும் தமிழக அரசின் ஊடாக நீங்கள் ஒரு பாலமாகச் செயல்படுங்கள் என்றார்.

எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரிக்காமல் இப்படிச் சொல்வதே நல்ல அறிகுறிதான். இந்த சிறு அசைவு மேலும் மேலும் பெருகி, பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னைப் போன்ற தமிழர்களின் விருப்பம்.

தாகம்- உங்கள் மூலமாக இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கச் செய்ய முதல்வர் செய்த ஏற்பாடு என்பது, வைகோவையும் பழ.நெடுமாறன் அவர்களையும் இந்தப் பிரச்சினையிலிருந்து புறந்தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே?

சுப.வீ- அடிப்படையற்ற தகவல்களுக்கு நம் நாட்டில் எப்போதும் பஞ்சமிருக்காது. முதல்வர் சொல்லி நான் இந்தச் செயலில் ஈடுபட்டேன் என்பது அடிப்படையில் உண்மையில்லை. நவம்பர் 13-இல் முதல்வரைச் சந்தித்தபோது நான்தான் இந்தக் கோரிக்கையை முதலில் வைத்தேன்.

அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வளவுதான். ஆனால், எல்லாவற்றுக்கும் கலைஞர்தான் பின்னணியில் இருக்கிறார் என்பது போன்ற ஒரு மாயை பல நண்பர்களிடம் இருப்பதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இதைச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

அய்யா நெடுமாறன் அவர்கள்தான் எனக்குள் ஈழ உணர்வை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகள் ஆதரவு எண்ணத்தை என்னுள் செதுக்கியவரும் அவர்தான். அதனால், நெடுமாறன் அய்யா அவர்களை முந்திக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்று நான் எண்ணியது கிடையாது. அய்யா அவர்கள் செய்திருந்தால் இன்னும் இதற்கு வரலாற்றுச் சிறப்புக் கிடைத்திருக்கும் என்றே கருதுகிறேன்.

அவர்களுக்குள்ள அரசியல் காரணங்களால் அவர்களால் நேரடியாக முதல்வரைச் சந்திக்கின்ற வாய்ப்பு அமையாமல் போய்விட்டது என்றே நான் நினைக்கிறேன். எனக்கு அந்த வாய்ப்பு இருந்ததால், அதனைத் தமிழீழ மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஜெயலலிதாவை ஆதரிக்கிற வைகோவின் இன்றைய அரசியல் நிலைப்பாட்டில் நான் முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறேன் என்றாலும் அவருடைய ஈழ ஆதரவு நிலையை எப்போதும் நான் சந்தேகித்ததும் இல்லை. குறை சொன்னதுமில்லை.

யார் மூலமாக நடந்தாலும் நல்லது நடந்திருக்கிறது என்று நினைக்கவேண்டும். தொடர்பே இல்லாமல் கலைஞர் மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் சரியானதாக இருக்காது.