Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
ஜனவரி 2007

சொல்லத்துடிக்குது மனசு
- மதுரா பாலன்

அவர்களை நாம் வேண்டத்தகாத பிறவிகளைப் போலத்தான் தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் உயிர் இருக்கிறது, உணர்வுகள் இருக்கின்றன, அவர்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதையே நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். மனித சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களாக, இழிவு படுத்தப்படுபவர்களாக இருக்கும் அந்த வேதனைக்குரிய பிறவிகள்தான்... அரவாணிகள். இதற்கான சூழலைச் சில நேரங்களில் அரவானிகளே உருவாக்கிவிடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

திடீரென வர்த்தக நிலையங்களுக்கு வருவது, வாசலில் நின்று பாட்டுப் படிப்பது, கொஞ்சம் அராஜகமாகவே கதவைத் திறந்து உள்ளே நுழைவது, வணிக நிறுவனத்தில் நடைபெறும் முக்கிய பணிகளை இடையூறு செய்து காசு கேட்பது, வர்த்தக நிலையத்தார் இவர்களைத் திட்டுவது, இவர்களும் பதிலுக்கு ஏசுவது என்ற நிலைமை இன்றளவும் உள்ளது. அதே நேரத்தில், அரவாணிகள் என்றால் அவர்களுக்கு யாரும் ஆதரவில்லை என்ற துணிச்சலில் சிலர் அக்கிரமமாக நடந்துகொள்வதையும் நாம் பார்க்கிறோம். வேண்டத்தகாத குணங்களை மட்டுமே கொண்ட மனிதர்களாகத் தெருவில் திரிந்துகொண்டும், மற்றவர்களை மிரட்டிக் கொண்டும் வாழ்க்கை நடத்தும் மனிதமிருகங்கள் சிலர், அரவாணிகளைப் பார்த்தாலே ஒரு நோக்கத்துடன் கிள்ளுவது, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது, அங்கே போகலாமா... இங்கே போகலாமா எனக் கேட்டு அவர்களைப் பாலியல் தொழிலாளர்களாகவே பாவிப்பது என்ற நிலைமை மாறாமல் இருக்கிறது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வாழ்க்கை நடத்தும் இந்த அரவாணிகள் பாலத்திற்கு அடியிலும், சேரிப் பகுதிகளிலும் பாலியல் தொழிலை மேற்கொள்ளக்கூடிய பரிதாபத்திற்குரியவர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த வாழ்க்கையிலிருந்து மீண்டு சராசரி மனிதர்களைப் போல வாழவேண்டும் என அவர்கள் நினைத்தாலும் அவர்களுக்கு வீடு கொடுக்க யாரும் இல்லை. அவர்கள் ஆணா, பெண்ணா என்ற பாலியல் அங்கீகாரத்தை மக்களும் தரவில்லை, அரசும் முழுமையாகத் தரவில்லை. கடவுச்சீட்டு வாங்குவதிலிருந்து கழிவறைக்குச் செல்வது வரைக்கும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஏதேனும் குற்றத்திற்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டாலும்கூட, சிறையில் எந்தப் பிரிவில் அடைப்பது என்ற பிரச்சினை நிலவுகிறது என்பதே உண்மை.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய அரசனாக இருந்த மாலிக் கபூர் அடிப்படையில் ஓர் அரவாணி என்பது பள்ளியில் வரலாற்றுப் பாடம் படித்தவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கடவுள் கிருஷ்ணர், அரவாணியாக அவதாரம் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரவாணிகளின் கோயில்களில் இது திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. அரச குடும்பங்களில் கூட அரவாணிகள் பலர் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். தமிழகத்தில் அரவாணிகளை இழிவாகப் பார்க்கிறோம். வட நாடோ அவர்களையும் தங்களைப் போன்ற சக மனிதர்களாக மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக நடமாடும் தெய்வங்களாகவே பார்க்கிறது. அவர்கள் தங்கள் கடைக்கு வரமாட்டார்களா, கால் வைக்க மாட்டார்களா, தங்கள் நெற்றியில் பொட்டுவைக்க மாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் வர்த்தகர்கள் அங்கே ஏராளம்.

வீட்டில் குழந்தைகள் பிறந்தால் கூட, அதனைத் தொட்டிலில் இடுவதற்கு அரவாணிகள் வரமாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு அங்கே அரவாணிகளுக்குக் கௌரவம் கிடைக்கிறது. தெய்வத்திற்குக் காணிக்கை செலுத்தும் பக்தனைப் போலத் தங்களைத் தேடி வரும் அரவாணிகளுக்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள். தமிழகத்தின் நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. அரவாணிகளை மதிக்கின்ற பண்பு இங்கே இல்லையா, அல்லது விழிப்புணர்வு ஏற்படவில்லையா என்பது கேள்விக்குரியது.

அரவாணிகள் என்பவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களல்லர். எந்தக் குடும்பத்திலும் அரவானிகள் பிறக்கலாம். எங்கள் குடும்பப் பாரம்பரியத்தில் அரவாணிகள் பிறக்க மாட்டார்கள் என யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. மனித இனத்தில் ஆண் ஜாதி, பெண் ஜாதி போல அரவானிகளும் ஒரு ஜாதிதான். இப்படியான பிறப்புகள் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறது. அரவாணிகள் என்கிற இந்த மூன்றாவது பிரிவைத்தவிர, நான்காவதாக ஒரு பிரிவும் இருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

ஹேர்மாஃப்ரோடைட்ஸ் என்கிற இருபாலினத்தவர்கள்தான் அவர்கள். ஆண் என்பதையும் பெண் என்பதையும் அவரவர் பிறப்புறுப்புகளை வைத்து அடையாளம் காண்கிறோம். கருத்தரிப்பவர் பெண்ணாகவும், கருத்தரிக்கச் செய்கிறவர் ஆணாகவும் இருப்பதுதான் மனித உடலியல் கூறு. அரவாணி இனத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதுதான் ஆண்- பெண்ணிலிருந்து அரவாணிகளுக்குள்ள வேறுபாடு. ஆனால், நான்காவது இனமான இருபாலினத்தவர்களுக்குப் பிறக்கும்போதே ஆணுக்குரிய உறுப்பும் பெண்ணுக்குரிய உறுப்பும் ஒரே உடலில் இருக்கும். இவர்கள் பருவம் எய்திய பிறகு, அனைத்து விதத்திலும் ஆணாகவும் இவர்களால் செயல்பட முடியும். பெண்ணாகவும் செயல்படமுடியும் என்பதுதான் இயற்கையின் அற்புதம்.

பெண்ணாகத் தங்களை நினைத்துக்கொண்டு ஓர் ஆணுடன் இணைந்து தங்களை இவர்கள் கருத்தரித்துக் கொள்ளவும் முடியும். ஆணாகத் தங்களை நினைத்துக்கொண்டு ஒரு பெண்ணுடன் இணைந்து அவளைக் கருத்தரிக்கச் செய்யவும் முடியும். இவையெல்லாம் காலங்காலமாக இருந்து வரும் இனங்கள்தான். ஆனால், ஆணாதிக்கம் மேலோங்கிய சமூகத்தில் இவர்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, மக்கள் தொகை அடிப்படையில் ஆணுக்கு இணையாகப் பெண்களின் எண்ணிக்கையும் இருப்பதனால் அரவாணிகளும் இருபாலினத்தவரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். மக்கள் தொகையில் அரவாணிகள் நூற்றில் ஒருவர். ஆண்கள் நூற்றுக்கு 51. பெண்கள் நூற்றுக்கு 48 என இருக்கிறார்கள். ஒருவேளை, அரவானிகள் 51 விழுக்காடாகவும் ஆணும் பெண்ணும் முறையே 25 மற்றும் 24 விழுக்காட்டினராக இருந்தால் என்ன நிலைமை? அரவாணிகளின் வாழ்க்கை நிலை எல்லா வகையிலும் உயர்ந்திருக்கும். அனைத்துப் பிரதிநிதித்துவமும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

எதிர்காலத்தையும், சமூக நன்மையையும் கருதி இவர்களை அங்கீகரிக்க வேண்டிய கடமை இந்தச் சமூகத்திற்கும் அரசுக்கும் இருக்கிறது. எப்படி அங்கீகரிப்பது எனக் கேட்கலாம்? ஒரு மனிதனுக்குரிய முதல் அங்கீகாரம் என்பது அவன் செய்யும் தொழில்தான். அவன் பார்க்கும் வேலைதான். அதுதான் அவனது சுவாசம், விலாசம், வாழ்க்கை. எனவே, அரவாணிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலே அந்த வருமானம் இவர்களுக்குப் புதிய கௌரவத்தைக் கொடுக்கும்.

எவ்வாறான வேலைகள் இவர்களுக்குப் பொருந்தும் என்பது அடுத்த கேள்வி. யார் தருவது என்பது இன்னொரு கேள்வி. அரவாணிகளுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் அரசும் முன்வரலாம். தனியாரும் முன்வரலாம். காவல்துறையில் அரசு பல பிரிவுகளை வைத்துள்ளது. ராணுவத்தில் பல பிரிவுகளை வைத்துள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இருக்கின்றன. அதுபோல, அரவாணிகளை மட்டுமே கொண்டு ஒரு புதிய பிரிவைப் பாதுகாப்புப் பணிக்காக உருவாக்கலாம். அவர்களுக்கு உரிய பயிற்சியும், சீருடையும் கொடுத்துப் பாதுகாப்புக் காவலர்களாகப் பயன்படுத்தலாம். அரவாணிகளும் காக்கி உடை அணிந்து பயிற்சி எடுத்து, சமூகத்தில் அங்கீகாரமும், போதிய வருமானமும் உடையவர்களாக இருந்தால் இவர்களை வெறுத்து ஒதுக்கிய தாய்தந்தையர்கூட இவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.

நான் இந்த அரவாணிகளின் உணர்வுகளைப் புரிந்தவன். அவர்களோடு சக மனிதனாகப் பழகுபவன். ஆடிப்பாடி அலங்கோலமாக இருப்பவர்களை எனது அலுவலகத்துக்கு அழைத்து, அவர்களோடு உணவருந்தி, பேசி மகிழ்ந்து வாழ்பவன். அதன் அடிப்படையில் நம்பிக்கையோடு ஒரு வார்த்தை சொல்கிறேன். இந்தச் சமூகத்தில் இருக்கும் சராசரி ஆண்களையும் பெண்களையும் விட அவர்கள் பண்பு மிக்கவர்கள். பொறுப்பு மிக்கவர்கள். தங்கள் மீது அன்பும் பாசமும் காட்டுகிறவர்களை மிக உயர்ந்த மனிதர்களாக நினைக்கும் நன்றி உணர்ச்சி உடையவர்கள்.

இன்று பாதுகாப்புப் பணியில் இருக்கும் பலரையும் விட இவர்கள் பலசாலிகளாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தனியார் நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. தொலைபேசிச் சேவை, மாதத் தவணை, கடன் அட்டை எனப் பலவற்றுக்கும் தகவல்களைச் சேர்க்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் விளம்பரம் கொடுத்து ஆயிரக்கணக்கான ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்து, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் இந்த நிறுவனங்கள், மூன்றாம் பாலினமான அரவாணிகளைத் தங்கள் வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டால் வசூல் பெருகும். எல்லாப் பாக்கிகளையும் முனைந்து வசூல் செய்வதனால் நிறுவனத்திற்கான லாபம் ஒரு பக்கம், இவர்களுக்கான ஊக்கத்தொகை ஒரு பக்கம் எனப் பொருளாதார ரீதியாக உயர்வதற்கும் வழி கிடைக்கும்.

சமூகத்தில் எந்த இனமும் பிற இனங்களால் தாழ்த்தப்படக்கூடாது. எவரும் எவரையும்விட உயர்ந்தவருமில்லை தாழ்ந்தவருமில்லை. சமமான ஒரு சமூக ஓட்டம்தான் மனிதகுலத்திற்கு நன்மை செய்யும். இவர்களையும் பிறருக்குச் சமமான நிலைக்குக் கொண்டு வருவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை சொல்லத் துடிக்குது மனசு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com