Keetru Thaagam
Thaagam Logo
ஜனவரி 2007

உங்கள் குழந்தை உயிரோடு இருக்க வேண்டுமா ? பவர் ரேஞ்சரைக் கொளுத்துங்கள்
- கோவி.லெனின்

இந்த எச்சரிக்கை கொஞ்சம் கடுமையானதாகக்கூட இருக்கலாம். இருந்தாலும், எச்சரிக்க வேண்டிய கடமை இருக்கிறது. "பெற்றோரே.... உங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாகக் கூறிக் கொண்டு பிஞ்சு மனதைக் கொடூரத் தன்மைக்கு மாற்றும் சேனல்களைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்.

ஏனெனில், உங்கள் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும்." -இந்த எச்சரிக்கையை விடுக்கக் காரணம், தொலைக்காட்சிப் பயங்கரத்தால் இரண்டாவது உயிரும் பறிபோயிருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த தியாகேஷ் என்ற மாணவன், ஜெடிக்ஸ் என்கிற குழந்தைகளுக்கான தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர் தொடரைப் பார்த்துவிட்டு, அதில் வரும் கற்பனையான வரைகலைப் பாத்திரங்களைப் போலச் சாகசம் செய்ய நினைத்தான்.

வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத வேளையில், தீயைக் கொளுத்தி அதனைத் தாண்ட முயன்று, அதே தீயில் தவறி விழுந்து இறந்துபோனான்.

மதுரையில் கிளம்பிய தீ, இதோ இப்போது சென்னையிலும் பற்றியிருக்கிறது.

சென்னை வியாசர்பாடி தேசிகாபுரத்தைச் சேர்ந்த சிறுவன் பிரேமானந்த்துக்கு 8 வயதுதான்.

நான்காம் வகுப்பில் படித்து வருகிறான்.

தாயை இழந்த இந்தச் சிறுவனின் தந்தையும் இவனைப் பராமரிக்கவில்லை.

அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, புது மனைவியோடு தனியே போய்விட்டார்.

பாட்டி வீட்டில்தான் வளர்ந்து வந்தான் பிரேமானந்த்.

அதே வீட்டில் அவனது பெரியம்மாவும் அவரது மகன் ஈஸ்வரும் வசித்து வருகின்றனர்.

ஜனவரி 4-ஆம் தேதியன்று பிரேமானந்த்தும் ஈஸ்வரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இருவருக்கும் ஜெடிக்ஸ் சேனல் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.

அதிலும் பவர்ரேஞ்சர் தொடர் என்றால் பசிகூட மறந்துபோய்விடும்.

கணினி வரைகலை தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பவர் ரேஞ்சர் செய்யும் சாகசங்களைப் பார்த்த பிரேமானந்த், தன்னையே ஒரு பவர்ரேஞ்சராக நினைத்துக் கொண்டான்.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஈஸ்வரை வெளியே போகச் செய்துவிட்டு, பிரேமானந்த் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக்கொண்டான்.

தொலைக்காட்சியில் வரும் பவர்ரேஞ்சரைப் போலத் தீயில் சாகசம் செய்ய நினைத்தவனுக்கு உடலெங்கும் நெருப்புப் பிடித்தபோதுதான், காட்சி வேறு, உண்மை வேறு என்பது புரியத்தொடங்கியது.

என்ன பயன்? அய்யோ.. அம்மா... என அலறியபடியே கருகி விழுந்தான். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தபோதும், அவனை உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை.

இரண்டு சிறுவர்களின் உயிர் பறிபோயிருக்கிறது.

இந்தத் தொடரின் அபாயம் குறித்து செப்டம்பர் 2006 தாகம் இதழிலேயே விரிவாக எழுதியிருந்தோம். என்ன பயன்? இன்னொரு உயிர் பறிபோகாமல் தடுக்க முடியவில்லையே! பவர்ரேஞ்சர் பயங்கரத்தைத் தடுக்க இன்னும் பல தீவிர முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்திய அளவிலான தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான சேனல்கள் என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான்.

மாநில மொழிச் சேனல்களில் அரை மணி நேர அளவுக்குத்தான் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. மற்ற நேரத்தையெல்லாம் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளும், அரைத்த மாவை மசிய அரைக்கும் நெடுந் தொடர்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இந்த நிலையில்தான், குழந்தைகளுக் கென்றே கார்ட்டூன் நெட்வொர்க், போகோ போன்ற சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கின. இவற்றில் வரும் நிகழ்ச்சிகளில் கேளிக்கை, பொழுதுபோக்கு ஆகியவை இருக்குமே தவிர, பயங்கரம் இருப்பதில்லை.

ஆனால், இவை ஆங்கிலத்திலும் சில பகுதிகளில் இந்தியிலும் ஒளிபரப்பாகின்றன.

இந்தச் சூழலில்தான் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் டூன் டிஸ்னி சேனல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியிலேயே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது.

டூன் டிஸ்னி சார்பில் ஒளிபரப்பாகும் ஜெடிக்ஸ் சேனலில் பவர் ரேஞ்சர் தொடர் வெளி வருகிறது.

அந்தப் பவர் ரேஞ்சர் உருவங்கள் செந்தமிழிலும் பிற மாநில மொழிகளிலும் பேசுவதால் அந்தந்த மாநிலக் குழந்தைகளையும் தம்பக்கம் ஈர்த்துவிட்டன. தாய்மொழியில் வசனங்களைக் கேட்கும் குழந்தைகளால், அந்தப் பவர் ரேஞ்சர்கள் என்னவகையான சாகசங்களைச் செய்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்தச் சாகசங்களை ஒரு மனிதனால் செய்ய முடியுமா என்பது புரிவதில்லை. அதன் தாக்கத்தின் வேகத்திலும் தீயைத் தாண்டுவது, எண்ணெயை உடம்பில் ஊற்றித் தீ வைத்துக் கொள்வது என விபரீதமான செயல்களைச் செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன.

தியாகேஷ், பிரேமானந்த் இவர்களைத் தொடர்ந்து இன்னும் எங்கே எந்தக் குழந்தை உயிரை மாய்த்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு பெற்றோரும் பதறுகின்றனர். குழந்தைகளுக்குத் தாய்மொழியில் பாடம் சொல்லிக் கொடுத்தால்தான் மனத்தில் நன்கு பதியும் என்று உளவியலாளர்கள் சொல்வதை எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை.

தங்கள் குழந்தை தமிழில் பேசினால் அதனை அருவருப்பாகப் பார்க்கின்றனர். கேவலமாக நினைக்கின்றனர்.

ஆனால், குழந்தைகளின் உளவியலை அறிந்த வியாபாரிகளாக இருக்கும் ஜெடிக்ஸ் சேனல்காரர்கள், தங்கள் நிகழ்ச்சிகளை அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியில் கொடுத்து மற்ற குழந்தைகள் சேனல்களைவிட அதிக அளவில் குழந்தைகளை ஈர்த்துவிட்டனர். நல்ல கல்வியையும் திறமையான கலைகளையும் தாய்மொழியில் கற்றுக்கொடுங்கள் என்று சொன்னபோது மறுத்து வந்த பெற்றோர், அதே தாய்மொழியில் பயங்கரமான ஒரு தொடரைத் தங்கள் குழந்தைகள் பார்க்க அனுமதித்துவிட்டு இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

பவர்ரேஞ்சரை வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஜெடிக்ஸ் சேனல் வியாபாரம் செய்தது போதாதென்று, அதே வடிவிலான பொம்மைகள், முகமூடிகள், கைப்பட்டைகள், ஆடைகள் என ஆளாளுக்கு வியாபாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து உட லைக் கெடுக்கும் நொறுக்குத் தீனிகள் கூட பவர்ரேஞ்சர் என்ற பெயரில் வியாபார மாகின்றன.

குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தினால் தண்டனை வழங்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை வைத்து வியாபாரத்தைப் பெருக்கி, விபரீதத்தை உண்டாக்குவோரைத் தண்டிக்கப் புதிய சட்டங்கள் கடுமையான விதிகளுடன் அமல்படுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாக அறிவுப்பூர்வமான பல செய்திகளைத் தர முடியும். அவற்றை விறு விறுப்பாகவும் சுவையாகவும் ஒளிபரப்ப முடியும்.

வான்வெளி ரகசியங்கள், நிலவுக்கு மனிதன் மேற்கொண்ட பயணம், கடலுக்கடியில் உள்ள அற்புதங்கள், எரிமலைச் சீற்றம், பறவைகள்- விலங்குகளின் வாழ்க்கை, அறிவியல் பூர்வமான விளையாட்டுகள், திறனை வெளிப்படுத்தும் கலைகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல்கள் இவற்றை முன்னிலைப்படுத்துவதைவிட, நம்ப முடியாத அதிபயங்கர சாகசங்களையே முதன்மைப்படுத்துகின்றன.

சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிப் பறந்ததாகவும், கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் குடைபோல உயர்த்திப் பிடித்ததாகவும், தூணைப் பிளந்துகொண்டு நரசிம்ம அவதாரம் வெளிப்பட்டதாகவும், துச்சாதனன் உருவ உருவப் பல கிலோமீட்டர் நீளத்திற்குக் கிருஷ்ணன் கையிலிருந்து புடவை வந்து கொண்டே இருந்ததாகவும் நம்ப முடியாத சாகசங்களைக் காலங்காலமாய்ச் சொல்லியும் கேட்டும் வளர்ந்திருக்கிறது இந்திய சமூகம். அத்தகைய கதைகளின் இன்றைய புதிய வடிவமாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன சக்திமான், பவர்ரேஞ்சர் உள்ளிட்ட பயங்கர சாகசத் தொடர்கள்.

குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளில் எவற்றை ஒளிபரப்ப வேண்டும் என்கிற விதி முறைகளை வகுக்கும்படி அரசை வலியுறுத்த வேண்டும். (எல்லா தொலைக்காட்சிச் சேனல்களுக்குமே இத்தகைய விதிமுறைகள் அவசியப்படுகின்றன).

அறிவையும் திறனையும் வளர்க்கும் நிகழ்ச்சிகளுக்காக அரசாங்கத் தொலைக்காட்சி நிலையமே குழந்தைகளுக்கெனத் தனி ஒளிபரப்பைத் தொடங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

ஏட்டுக் கல்வியைவிடவும் பயனுள்ளவையாகவும் சுவையுடையதாகவும் இருக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுக்க வேண்டும். இத்தகைய தரமான நிகழ்ச்சிகள் எனும் பயிர் வளரவேண்டுமானால், களைகளை முதலில் அகற்றியாக வேண்டும்.

அதற்கான முதல் முயற்சியாக, குழந்தைகளைப் பாதிக்கும்வகையில் ஜெடிக்ஸ் சேனலிலும் பிற சேனல்களிலும் ஒளிபரப்பாகும் விபரீத நிகழ்ச்சிகளை நிறுத்தக் கோரிப் போராட வேண்டும். இதற்கான இயக்கம் வலுப்பெற வேண்டும்.

பத்திரிகைகளில் எழுதுவது, பேட்டி கொடுப்பது, ஒரு சில அமைப்புகள் பார்த்துக் கொள்ளும் என்று அலட்சியமாக விட்டுவிடுவது என்றில்லாமல் பெற்றோரையும் குழந்தைகளையும் அணி திரட்ட வேண்டும். கையெழுத்து இயக்கம் நடத்தலாம்.

எஸ்.எம்.எஸ். எனும் குறுஞ்செய்திச் சேவை மூலம் விழிப்புணர்வை உண்டாக்கலாம். விபரீத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையத்தாருக்குக் கண்டனக் கடிதங்களைத் தொடர்ச்சியாக அனுப்பலாம்.

குழந்தைகள் நலத்துறை, தகவல் ஒளிபரப்புத்துறை ஆகிய அமைச்சகங்களுக்கு இது பற்றித் தெரிவிக்கலாம். முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் என உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு மனு அனுப்பலாம்.

குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்களால் எந்த வழியில் இந்த விபரீதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமோ, அத்தகைய வழிகளை எல்லாம் கையாளலாம். இதன்பிறகும் விபரீதத்தை விளைவிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் நீடித்தால் நீதிமன்றப் படிக்கட்டுகளிலோ, தெருக்களிலோ தான் கால் வைத்து, குரலுயர்த்த வேண்டும்.

சட்டப் போராட்டமும் மக்கள் போராட்டமும் தான் மாற்றங்களைக் கொண்டு வரும்.