Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
பிப்ரவரி 2006
கட்டுரை

தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்
சாமி சிதம்பரனார்

ஒரே ஒரு ஒன்றரைப் பவுன் மோதிரத்தை மட்டும் இடுப்பில் நூல் அரைஞாண் கயிற்றில் கட்டிவைத்துக் கொண்டார் ஈ.வெ.ரா. ஆனால், அதுவரையில் தான் யாரென்றோ, தன்னுடைய ஊரைப் பற்றியோ உண்மையை ஈ.வெ.ரா. எவரிடமும் சொல்லவே இல்லை. கேட்டவர்கட்கு தான் ஒரு குமாஸ்தாவின் மகன் என்று சொல்லி வந்தார்.

Periyar E.V.Ramasamy மூவரும் புறப்பட்டார்கள். அவர்களது நண்பர்கள் ஆளுக்கொரு கம்பளி வாங்கிக் கொடுத்தார்கள். கல்கத்தாவுக்குப் போகவேண்டுமென்று சொன்னபடியால் அவ்வூருக்கு ஆளுக்கொரு ‘டிக்கெட்’'டும் வாங்கிக் கொடுத்தார்கள். கையிலும் 100 ரூபாய் வரையிலும் பணமிருந்தது. கல்கத்தாவில் 15 நாட்கள் தள்ளினர். கையிலிருந்த பணம் முழுவதும் தாராளமாய்ச் செலவழிந்தது. உடனே அதைவிட்டுக் காசிக்குப் புறப்பட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தனர். அங்கிருந்த நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் கொடுத்த பணத்தின் உதவியால் கல்கத்தாவை விட்டுக் காசியை அடைந்தனர்.

காசிக்குச் சென்ற அன்றே அவருடைய கூட்டாளிகளான இரு பார்ப்பனர்களும் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டனர். அங்கு அவர்களுக்கு எளிதில் சோறு கிடைத்தபடியால், அவரோடு சேர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாததே அதற்குக் காரணம்.

"காசியில் அன்னசத்திரங்கள் ஏராளம்; போகின்றவர், வருகின்றவர்களுக்கெல்லாம் தாராளமாகச் சோறு; அங்கே சோற்றுப் பஞ்சமே இல்லை'' என்று ஈ.வெ.ரா. அதற்குமுன் காசியைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தார். காசியை அடைந்த போது அவர் கையில் ஒரு நாட்செலவுக்கு போதுமான பணந்தான் இருந்தது. அதுவும் முதல் நாளே செலவழிந்துவிட்டது. சத்திரங்கள் உள்ள இடங்களை எல்லாம் தேடிச்சென்றார். ஓரிடத்திலும் சோறு கிடைக்கவில்லை. எங்கும் பார்ப்பனர்களுக்குத்தான் சோறு. அவரை யாரும் கவனிக்கவேயில்லை. அடுத்த நாள் முழுவதும் பட்டினி. இவர் கையிலோ காசும் இல்லை. பசியோ தாங்கமுடியவில்லை. அந்நிலையில் ஒரு சத்திரத்தின் வாயிலில் நுழைந்தார். இவர் பார்ப்பனர் அல்ல என்று கண்டு வாயில்காப்போன் வெளியே தள்ளினான். இவருக்குக் கோபம் வந்துவிட்டது. அப்பொழுது உள்ளேயிருந்து எச்சில் இலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பார்த்தார் ராமசாமி. கோபம் ஒருபுறம்; பசிக்கொடுமை ஒருபுறம். இரண்டும் சேர்ந்து அவ்விலைகளிடம் பிடித்துத்தள்ளின. ஒடினார் கோபத்தோடு - இலைகளிடம்; உட்கார்ந்தார் சட்டமாக. கையைப் போட்டுச் சோற்றை வழித்தார். வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார். இலையில் இருந்த பண்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன; அவர் பசிப்பிணியும் தணிந்தது. அந்தோ! செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப்பிணி அறியாமலிருந்த நமது ராமசாமியார் எச்சிலைக்கு ஏமாந்து நின்றதை நினைக்க இன்னும் நமது நெஞ்சம் கலங்குகின்றதன்றோ? ஒருபுறம் எவ்வளவு நெஞ்சத் துணிவிருந்தால், கையில் ஒன்றரைப் பவுன் மோதிரம் இருக்க, இச்செயலில் புகுந்திருக்க வேண்டும் என்ற வியப்பும் உண்டாகின்றது! சிரிப்பும் வருகிறது மற்றொருபுறம்!

அதன்பின் ஏதாவது வேலைதேடிப் பிழைக்கலாம் என்று கருதிப் புறப்பட்டார். எங்கும் வேலை கிடைக்கவில்லை. முகத்தில் மீசையும் தலையில் மயிரும் இருப்பதால்தான் தன்னை யாரும் துறவியாகக் கருதவில்லையென்று நினைத்து உடனே மொட்டையடித்துக்கொண்டார். மீசையையும் எடுத்துவிட்டார். கூடவந்த பார்ப்பனரைக் கண்டு பிடித்து, அவர்களிடமிருந்து வாங்கிய ஒரு செம்பைக் கம்பளியில் சுற்றி அக்குளில் வைத்துக் கொண்டார். செல்வப்பிள்ளை ராமசாமி துறவி ராமசாமியாகிவிட்டார். ஒருநாள் ஒரு மடத்தண்டை வந்தார். அதில் சில சாமியார்கள் வசித்தனர். அது கங்கைக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. அவர்களிடம் சென்று, "ஏதாவது வேலை கிடைக்குமா?'' என்று கேட்டார். அவர்கள், "இப்பொழுது வேலையில்லை; பூஜைக்கு வில்வம் பறித்துக்கொடு; விளக்குப்போடு; தினம் ஒரு வேளைச் சோறு போடுகிறோம்'' என்றனர். விடியற் காலையில் எழுந்திருக்க வேண்டும்; பல்விளக்கிக் குளித்தபின் திருநீறணிந்து வில்வம் பறிக்கவேண்டும்; மாலையில் குளிக்கவேண்டும்; விளக்குத் துடைத்துப்போடவேண்டும். இவை நிபந்தனை.

ஈ.வெ.ரா.வுக்கோ குளிப்பது என்றால் பெரிய சங்கடம். வேர்க்கிறது, உடம்பு எரிகிறது என்று உணர்ந்தால்தான் குளிக்க நினைப்பார். மற்ற நாட்களில் நாகம்மையார்தான் அவரைத் துரத்திக் கொண்டு போய் குளிக்கும் அறையில் தள்ள வேண்டும்; குளிப்பாட்டிவிடவேண்டும். இந்த நிலையில் உள்ளவர் குளிர்மிகுந்த காசியில் விடியற்காலத்திலும் கங்கையில் குளிக்கவேண்டுமென்றால், அவரால் முடியக்கூடிய செயலா? சாமியார் விழித்துக் கொள்வதற்குமுன் ஈ.வெ.ரா. எழுந்துவிடுவார்; குளித்ததுபோல் பட்டை பட்டையாகத் திருநீறு பூசிக்கொள்வார்; ஒற்றைத் துணியுடன் குளிரில் நடுநடுங்கிக்கொண்டு வில்வம் பறித்துக்கொடுப்பார். அவரைப் பார்க்கும் சாமியார்கள் குளித்திருப்பார் என்றே நினைத்துக் கொள்ளுவார்கள். ஆனால் அவர் பல்கூட விளக்கியிருக்கமாட்டார். இவர் குளிக்காமல், பல் விளக்காமல் வில்வம் பறிக்கும் செய்தி சாமியாருக்கு தெரிந்து விட்டது. ஒரு நாள் சாமியார் பார்த்துவிட்டார். அவர் ஏதோ கேட்க, இவர் எதோ சொல்ல, இருவருக்கும் வார்த்தை முற்றிச் சண்டையில் முடிந்தது. ஈ.வெ. ரா.வை மடத்தைவிட்டுப் போகும்படி சொல்லிவிட்டார்கள்.

வெளியே விரட்டப்பட்ட பின் ஈ.வெ.ரா. சும்மா இருக்கவில்லை. கங்கைக்கரையில் சிரார்த்தம் செய்பவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்களல்லவா? அங்குப் பிண்டம் போடும் அரிசி, பழம் முதலியவை விநியோகிக்கப்படுவதை வாங்கி உண்பதற்காகப் பல பிச்சைக்காரர்கள் நிற்பார்கள். அந்தக் கோஷ்டியில் ஈ.வெ.ரா.வும் சேர்ந்து விட்டார். இந்த முறையில் 30, 40 நாள் வரையில் காலங்கழித்தார். காசியில் வாழ்க்கை செம்மையாகவும், தூய்மையாகவும் இருக்குமென ஈ.வெ.ரா. நம்பியிருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, ஓழுக்க ஈனமும், விபசாரமும் மலிந்து கிடப்பதைக் கண்டார். தம்முடன் கூடப் பிச்சை எடுக்கும் ஆண், பெண் பிச்சைக்காரர்கள் பார்ப்பனப் பெண்கள் உள்பட மதுவருந்துவதும், மாமிசம் வாங்கிச் சுட்டுத் தின்பதும், வெளிப்படையாய் விபசாரஞ் செய்வதும் பார்க்கச் சகிக்காததாய் இருந்தது. அதனால் அவருக்கு அவ்வூரில் ஒருவித வெறுப்புத் தோன்றி விட்டது. உடனே அதை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துவிட்டார்.

Periyar's father Venkata Naicker கையில் ஒரு செப்புக்காசேனும் இல்லை. இந்த மாதிரி அவசரத்திற்கு அதாவது ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜுக்கு வேண்டுமென்பதற்காகவே காஞ்சீபுரம் முதலியாரின் சொற்படி தான் மறைவாக வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க மோதிரத்தை 19 ரூபாய்க்கு விற்றார். காசியை விட்டுப் புறப்பட்டு அஸ்ஸன்சால், பூரி ஆகிய இரண்டு இடங்களிலும் சில நாட்கள் தங்கிவிட்டு எல்லூருக்குச் சென்றார்.

எல்லூரில் தமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியும். அவர் பெயர் டி.என். சுப்பிரமணிய பிள்ளை. மராமத்து இலாகாவில் சூபர்வைசர் வேலையில் இருந்தார். ஏற்கனவே ஈரோட்டில் வேலை பார்த்தவர். ஈ.வெ.ரா. ஸ்டேஷனிலிருந்து இறங்கியதும் அவருடைய வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து நேரே அங்குச் சென்றார். அப்போது நள்ளிரவு. கதவைத் தட்டினார். பிள்ளைக்கு ஈ.வெ.ரா.வை அடையாளம் தெரியவில்லை. பிறகு வெளிச்சத்தில் பார்த்தும் குரலைக் கொண்டும் கண்டுபிடித்தார். உள்ளே அழைத்துச் சென்று, சாமியாரைப் தம் மனைவிக்குக் காட்டி, இருவரும், ஈ.வெ.ரா.வின் வேடத்தைப் பார்த்துச் சிரித்தார்கள். மறுநாள் பிள்ளை ஒரு ‘ஷர்ட்டும்', ‘துண்டும்' கொடுத்து உடுத்தச் செய்தார். ஈ.வெ.ரா. ஒருமாத காலம் அங்கேயே தங்கியிருந்தார்.

இதற்குள் ஈரோட்டில் என்ன நடந்தது? வெங்கட்ட நாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வெ.கிருஷ்ண சாமியும், ஈ.வெ.ரா.வின் நண்பரான பா.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமாக் கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார்; தந்திகள் கொடுத்தனர். எதுவும் பயனில்லாது போயிற்று. சுமார் 2,000 ரூபாய் வரையில் செலவழிந்தது. பெற்றோரும் அலுத்துப்போய்விட்டனர். ‘ஒரு பிள்ளையை இழந்தோம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com