Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
பிப்ரவரி 2006
கட்டுரை

இராம இராஜ்ஜியமும் இராவணப் பேரரசும்...

கோவி. லெனின்

Ravana இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம். தந்தை பெரியாரின் ஆதரவோடு படைக்கப்பட்ட இந்த இலக்கியத்திற்குக் காங்கிரஸ் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை, கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் நீக்கப்பட்டது.

தடை நீக்கப்பட்டாலும், இராவண காவியத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பணி, கம்பராமாயணத்திற்கு ஈடாக நடைபெறவில்லை. புலவர் குழந்தையின் நூற்றாண்டான இவ்வாண்டில் (2005-2006) அப்பணியைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது சென்னைச் சிந்தனையாளர் மன்றம். சங்கொலிப் பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, பாவலர் பல்லவன் போன்றோர்களின் பெருமுயற்சியால் மாதந்தோறும் இராவண காவியம் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி சனிக்கிழமையன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

Speeches on Ravana இலக்கணம் பிறழாமல் இயற்றப்பட்டிருக்கும் இராவண காவியத்தை இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்கி வருகிறார் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார். இப்பொழிவுகளைக் கேட்கும் போது, பெயரில்தான் புலவர் குழந்தையே தவிர, படைப்பாற்றலில் கம்பனுக்கு சவால்விடும் கொம்பனாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலவர் குழந்தையின் நூற்றாண்டையொட்டி சாரதா பதிப்பகத்தார் இராவண காவியம் நூலை வெளியிட்டுள்ளனர். அதனை வாங்கி வைத்துக்கொண்டால், சொற்பொழிவு கேட்டுத் திரும்பியபின் எளிதாகப் படித்து, இலக்கியச் சுவையை உணர முடியும். வெறும் பாடல்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் நூலை உரையுடன் வெளியிட்டால் சொற் பொழிவுக்கு வர இயலாத வெளியூர்க்காரர்களும் எளிதாக படித்தறிய முடியும்.

வெளியூர்க்காரர்களால் வரமுடியவில்லை என்றால் சென்னைக்காரர்கள் மட்டும் சொற்பொழிவு அரங்கில் முண்டியடித்து நிற்கிறார்களா என்ன? அரங்கின் முன் வரிசைகளில் மூத்த குடிமக்கள், நீண்ட காலமாகக் கருஞ் சட்டையை கழற்றாத கொள்கையாளர்களைக் காணமுடிகிறது. அதன்பிறகு, சங்கொலிப் பொறுப்பாசிரியரின் அழைப்பினை மதித்து கரைவேட்டியுடன் வந்திருக்கும் ம.தி.மு.க.வினர் சிலரைக் காணமுடிகிறது. அந்த அரங்கில் எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வலர்கள் சிலரையும் காணமுடிகிறது. ஆனால், புலவர் குழந்தையின் தமிழ் இன மீட்சிக் காப்பியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வலிமைமிக்க திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களைக் காண முடியவில்லை. அதிமுகவை திராவிட இயக்கம் என்றால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். ஒரு கணக்கிற்காகச் சேர்த்தாலும், அதிமுகவினருக்கோ அம்மா ஆட்சி மட்டும்தான் தெரியும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றின் மாணவர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர், பெரியார் இயக்கத்தினர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், படைப்பாளிகள் ஆகியோர் என் திரளுவதில்லை என்பது புரியவில்லை. சென்னைச் சிந்தனையாளர் மன்றம் இப்படி ஒரு தொடர் சொற்பொழிவை நடத்துவது அவர்களுக்குத் தெரியவில்லையா? கட்சிக் கரையில் உள்ள நிற வேறுபாடுகளால் வர இயலவில்லையா?

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இராவண காவியத்தின் இலக்கியச் சுவையை உணரும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. இதே போன்ற நிகழ்ச்சிகளைத் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடத்த எற்பாடு செய்யவும் திராவிடலிதமிழ்த் தேசிய இயக்கங்கள் முன்வர வேண்டும். அப்படிச் செய்தால், இராமராஜ்ஜியம் அமைப்போம் என்ற மாயை விலகி.... இராவணப் பேரரசு அமைவதே நாட்டுக்கு நல்லது என்பதைத் தமிழகம் உணரும். தமிழகத்தில் தமிழ் இன ஆட்சி என்பது பற்றித் தமிழர்கள் சிந்திக்கவாவது ஒரு வாய்ப்பு அமையும்.

- கோவி. லெனின் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com