சிறுமதி தமிழா கேள்!
- க.பிரகதீசுவரன்
சிலை சேதம் செய்திட்ட
சிறுமதி தமிழா கேள்;
நிலையுயர்ந்து நீ வாழ உழைத்தமைக்குப் பரிசா; இல்லை
நிரம்ப உன் தலைக்குள் இருப்பதெல்லாம் தரிசா?
இனமானம் காட்டி
இறைமாயை நீக்கி;
உனக்கான உரிமைகளை மீட்டார்; சிலை
உடைப்பதையா கைம்மாறாய்க் கேட்டார்
ஆரிய சூழ்ச்சிக்குள்
அகப்பட்ட தமிழனை
வேரோடு வெளியெடுத்தார் தந்தை; மீண்டும்
வீழ்வேனென நீயுரைத்தல் விந்தை!
குறுக்கே நூல்போட்டார்
சுருக்கு முடி போட்டு
இறுக்க கட்டிவைத்தார் தமிழனை; மதத்தால்
இருளில் மூழ்கியது உன்மனை!
ஏவல் புரிவதற்கே
ஏற்பட்ட இனமாகக்
கேவலத்தைச் சுமந்திருக்கும் மடைமை; தமிழன்
கேட்டு வாங்கிச் சூட்டிக்கொண்ட பெருமை!
இக்கேட்டினை ஒழித்திட
இனி எம் நாட்டின்
திக்கெட்டும் புரட்சித் தீ பரவட்டும்; அதில்
திரும்பவும் பெரியார் முகம் தெரியட்டும்!
நரைக்கு நரைக்கும் வரை
நடமாடிய சிங்கத்தின்
படைவந்து பணிமுடிக்க வேண்டும்; அல்லால்
பாழ்நிலைதான் தமிழனுக்கு மீண்டும்!ேஷன்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|