Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
டிசம்பர் 2006

முல்லைப் பெரியாறு... இறுதி முடிவு!
- பழ.நெடுமாறன்

தமிழகம் ஏமாந்த வரலாற்றுக்காதை மீண்டும் ஒருமுறை அரங்கேறியிருக்கிறது. இது முல்லைப் பெரியாறு படலம். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து, புதிய சட்டம் இயற்றிய கேரள அரசு, பேச்சுவார்த்தை நாடகத்தை மீண்டும் நடத்தியிருக்கிறது. ‘பெருந்தன்மை’ மிக்க தமிழகத்தின் கைகுலுக்கலை அங்கீகரிக்கவில்லை கேரளம். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வரா, வாட்டாள் நாகராஜின் கேரளத்துச் சகோதரனா என்று இனம் பிரித்துக் காண முடியாத அளவுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அச்சுதானந்தன்.

இனியும் இழக்கத்தயாராக இல்லை எனப் பொங்கியெழுந்துள்ள முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளும், தமிழர் அமைப்புகளும் சாலை மறியலில் ஈடுபட்டு, கேரளாவுக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்துத் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளன. தண்ணீர் தர மறுத்தால், கேரளாவின் அன்றாட வாழ்க்கையையே முடக்கும் சக்தி எம்மிடம் உள்ளது என்று எச்சரித்திருக்கிறது தமிழகம். டிசம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற தமிழரின் உணர்ச்சி மிக்க போராட்டத்துக்குத் தலைமையேற்ற தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ‘மக்கள்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியினை இங்கே வெளியிடுகிறோம்... ...

கேரள அரசு, மத்திய அரசையும் இந்திய அரசியல் சட்டத்தையும் மதிக்கவில்லை என்பது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது. கேரள மாநிலத்தை மாறி மாறி ஆள்பவை மாநிலக் கட்சிகளல்ல. இந்திய தேசியம் பற்றி வாய் கிழியப் பேசுகிற காங்கிரஸ் கூட்டணியும், கம்யூனிஸ்ட் கூட்டணியும்தான் மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றன. அவர்கள்தான் இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தண்ணீர் தர மறுக்கிறார்கள். நதிநீர் பிரச்சனையைப் பொறுத்த வரை கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, கர்நாடகமாக இருந்தாலும் கேரளாவாக இருந்தாலும் எதிரெதிர் அரசியல் நடத்தும் கட்சியினர்கூட நதிநீர்ப் பிரச்சனையில் ஒன்றுபட்டே நிற்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காகக் கேரளாவின் இன்றைய முதல்வர் அச்சுதானந்தனும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் ஒன்றாக டெல்லிக்குச் செல்கிறார்கள். நம்மிடம் அந்த ஒற்றுமை இல்லை. இரண்டாவது காரணம், நாம் ஒற்றுமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மத்திய அரசு நம்மை மதிக்க மறுக்கிறது. நம்மிடம் ஒற்றுமை உருவாகாவிட்டால் இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது.

நதிநீர் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்ற கருத்து வைக்கப்படுகிறது. அப்படி அமைக்கப்படுகிற ஆணையத்தில் இடம்பெறக்கூடியவர்கள் அகில இந்திய அடிப்படையில் சிந்தித்து நியாயத்தின் அடிப்படையில் முடிவெடுக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?

இந்தியா முழுமைக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்க வேண்டிய ஏ.கே.அந்தோணி தன்னை மலையாளியாக மட்டுமே கருதிக்கொண்டு இந்தியாவின் கப்பற்படையைப் பெரியாறு அணையை பரிசோதிக்க அனுப்புகிறார். இதன் மூலம் தவறான உதாரணத்தை அந்தோணி உருவாக்கியிருக்கிறார். நாளை, பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக வந்தால் அரியாணா மாநிலத்துடனான நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இந்திய ராணுவத்தைப் பயன்படுத்துவார். எதிரி நாடுகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக உள்ள கடற்படையை நம் நாட்டுக்குள்ளேயே உள்ள மாநிலத்தின் நலனுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்றால் அது எங்கே கொண்டு போய் முடியும்? சிங்கள கடற்படை இதுவரை தமிழக மீனவர்கள் 300 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ஒரு விரலைக் கூட அசைக்க முடியாத நமது கடற்படை, ஒரு மாநிலத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்றால் இதன் விளைவுகளைப் பிரதமர் சந்திக்க நேரிடும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 1979இல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்படுவது தவறான செய்தி. என்ன நடந்ததென்றால், அணை நீரில் மீன் பிடிக்கின்ற உரிமையையும், அணை நீரில் படகுகளை விட்டு அதனைச் சுற்றுலாத்தலமாக்கும் உரிமையையும் நாம் விட்டுக் கொடுத்தோம். அவற்றால் நமக்குப் பயனில்லை என்று விட்டுக் கொடுத்ததன் விளைவாக, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கேரள அரசுக்குக் கிடைத்து வருகிறது.

இந்த அணையை நமது செலவில் கட்டியிருக்கிறோம். அணை நீர் தேங்குகிற 8000 ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுதோறும் குத்தகைப் பணம் செலுத்துகிறோம். குத்தகைதாரர் என்ற முறையில் என்னென்ன உரிமைகள் உண்டோ அவையெல்லாம் சட்டத்திலும் அதனடிப்படையிலான ஒப்பந்தத்திலும் இருக்கிறது. அணையும், அது அமைந்துள்ள இடமும், அதிலுள்ள நீரும் நமக்குச் சொந்தம். கேரள அரசோ உரிமைகளை மீறிச் செயல்படுகிறது. தனது மாநிலப் போலீசைக் கொண்டு வந்து அங்கே நிறுத்துகிறது. கேரள மாநில எல்லை யோரத்தில் வாழும் தமிழர்கள், தமிழக வியாபாரிகள், தமிழ் மாணவர்கள் இவர்களையெல்லாம் மிரட்டி, அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என அஞ்சலட்டையில் எழுதி வாங்கி அதனை மத்திய அரசுக்கு அனுப்புகிறது.
சர்வதேசியம் பேசுகிற கம்யூனிஸ்ட்டுகள் எந்தளவுக்கு இந்திய தேசியத்தை மதிக்காமல் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.
இன்றைக்கு முதல்வராக இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதானந்தன், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே மதுரையில் பேட்டி கொடுத்தார். இனி ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தால்தான் தமிழகத்திற்குப் பெரியாறு அணை நீரைக் கொடுப்போம், இல்லையென்றால் கொடுக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, உள்ளூரிலே அவருக்குக் கட்சி செல்வாக்கு கிடையாது. அதனால், மக்களை இனரீதியாகத் தூண்டி விட்டு தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அச்சுதானந்தன் முயற்சி செய்கிறார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அடவிநயினார் கோயில் என்ற இடத்தில் தமிழக அரசு ஓர் அணையைக் கட்டிக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னால், அங்கே வந்த அச்சுதானந்தன், அணை கட்டும் வேலையில் இருந்த தமிழக உயரதிகாரிகளைப் பார்த்து, எதற்காக இவ்வளவு பெரிய அணை கட்டுகிறீர்கள், எங்கள் தண்ணீரைத் திருடுகிறீர்களா? என்று எச்சரிக்கை குரலில் பேசிவிட்டுப் போனார்.

தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழர்களை, தமிழக அதிகாரிகளை மிரட்டுவது இவரது வழக்கம். ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக கேரள மக்களை இனவெறியுடன் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அச்சுதானந்தன்.

அவர் இப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 மாதங்களாகிவிட்டன. 2006 பிப்ரவரி மாதத்திலேயே தீர்ப்பு வந்துவிட்டது. தீர்ப்பு கிடைத்தபின், உடனடியாக மதகுகளை இறக்கி விட்டு நீர் மட்டத்தை உயர்த்தியிருக்க வேண்டும். அக்டோபர்-நவம்பரில் பருவமழை பெய்யும். தண்ணீர் வரும், மதகுகளை இறக்குவதற்கு அவர்கள் தகராறு செய்வார்கள் என்பதை உணர்ந்து, மின்தேவைக்கான தண்ணீர் வரும் 4 பெரிய குழாய்கள் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வரும் குகைப்பாதை ஆகியவற்றைச் சரிசெய்து வைத்திருந்து வைகை அணையை நிரப்பியிருக்க வேண்டும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் இந்த 5 மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் இவற்றை ஆழப்படுத்தி இந்தத் தண்ணீரை அங்கே நிரப்பியிருக்க வேண்டும். 9 மாதகால அவகாசத்தை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் பெரிய தவறு நடந்திருக்கிறது.

அடுத்ததாக, நாம் 142 அடிக்குத் தண்ணீர் தேக்குவதற்காக மதகுகளை இறக்கிவிட்டிருந்தால் அவர்கள் தரப்பிலிருந்து தகராறு செய்ய வந்திருப்பார்கள். எனவே நாம் உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கவேண்டும். அதையும் அன்றைய தமிழக அரசும் இன்றைய தமிழக அரசும் செய்யத் தவறி விட்டன. இப்போதுகூட, உச்சநீதிமன்றம் இரு மாநிலங்களும் பேசவேண்டும் என்று உத்தரவிடவில்லை. ஓர் ஆலோசனையாகத்தான் சொல்லியிருக்கிறது. நம்மிடம் சரியான அணுகுமுறை இல்லாததால்தான் இந்தளவு இந்த விவகாரம் நீடித்துக்கொண்டிருக்கிறது. இது அரசியல் கட்சிகளின் பிரச்சனையல்ல. பிரச்சனை இரு மாநில அரசுகளுக்கிடையிலானது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனை மத்திய அரசு அமல்படுத்தச் செய்ய வேண்டும்.

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்ட கடைகளை சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், டெல்லி மாநில போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவத்தைக் கொண்டு அந்தப் பணி மேற்கொள்ளப் பட்டது. அதுபோல, முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதைத்தான் நாம் வலியுறுத்தவேண்டும்.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவைக்காகத் தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோருகிறோம் என்று கேரளா சொல்வது அப்பட்டமான பொய். உண்மையில் அவர்களுக்குத்தான் தேவை இருக்கிறது. பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணை என ஒன்றைக் கட்டிக்கொண்டு, நம்மை 136 அடிக்கு மேல் தேக்க விடாமல் செய்து, மீதி தண்ணீரை இடுக்கி அணையில் அவர்கள் தேக்கிக்கொண்டு மின்சார உற்பத்தியைச் செய்கிறார்கள். நாம் வேளாண் தேவைக்காகத்தான் நீரைக் கோருகிறோம்.

முல்லைப் பெரியாறு பாசனத்தினால் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. 136 அடியாக அணையின் உயரத்தைக் குறைத்ததால், எதுவும் பயிரிட முடியாமல் தரிசான நிலம் 36ஆயிரம் ஏக்கர். இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போகமாக மாறிய நிலம் 86ஆயிரம் ஏக்கர். ஆற்றுப் பாசனமாக இருந்து வேறு வகையான பாசனத்திற்கு மாறிய நிலம் 53 ஆயிரம் ஏக்கர். இதனால் ஏற்படுகிற விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் ஓராண்டுக்கு ஏற்படுகிற இழப்பின் மதிப்பு 55.80 கோடி ரூபாய். மின்சார உற்பத்தி பாதிப்பால் ஏற்படும் இழப்பு 75 கோடி ரூபாய். இந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த இழப்பு 3631 கோடி ரூபாய். பாதிப்பு நமக்கு. ஆனால்,அவர்கள் மாற்றிச் சொல்கிறார்கள். நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

மத்திய அரசில் தமிழகக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்ற காலகட்டம் இது. இந்த நிலையிலும் நம்மால் இந்த உரிமையைப் பெறமுடியவில்லை என்றால், மத்தியஅரசில் பங்கேற்றிருக்கின்ற நமது மாநில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அந்தக் கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் என்றுதான் நான் நினைக்கிறேன். மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாம் அந்த அரசில் பங்கேற்றுப் பயனில்லை.

இந்தப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிலை முக்கியமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்காக மதுரையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இரண்டுங் கெட்டானாக இருக்கிறது. கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் அந்த மாநில நலனைக் கருத்திற்கொண்டு செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட்டுகளிடம் அந்தப் போக்கு இல்லை. தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இங்குள்ள பிரச்சனையாக இருந்தாலும் ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையாக இருந்தாலும் மார்க்சிஸ்ட்டுகளின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருக்கும். ஒரே வரியில் சொல்வதென்றால், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு கொடுப்பது என ஒத்துக் கொண்டாலும் இங்குள்ள மார்க்சிஸ்ட்டுகள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

இதில் தமிழக அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதும் முக்கியமானது. தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று என்னிடம் சிலர் கோருகிறார்கள். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு என்னைப் போன்றவர்களுக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை. அதற்கான காரணத்தை நான் ஆராய விரும்பவில்லை. முந்தைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்குமிடையே அணுகுமுறையில் நிறைய மாறுதல். பெரியார், காமராஜர், அண்ணா, ஜீவானந்தம், ராஜாஜி போன்ற தலைவர்களிடம் கொள்கை மாறுபாடு இருந்தாலும் பொதுப் பிரச்சனையில் அவர்கள் ஒன்றாகத்தான் இருந்தார்கள். மொழிவாரி மாநிலங்களை அமைப்பதற்குப் பதில் தட்சணப்பிரதேசம் என்ற திட்டத்தை உருவாக்க அன்றைய மத்திய அரசு முயன்றபோது பெரியார், காமராஜர் ,அண்ணா, ம.பொ.சி. உள்பட எல்லாத் தலைவர்களும் ஒன்றாக நின்று அதை முறியடித்தார்கள். அதுபோல, மதராஸ் மனதே என்று ஆந்திரர்கள் கோரிக்கை வைக்க, பிரதமர் நேருவும் சென்னையை இருமாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். அதனை ஏற்கமுடியாது என்று உறுதியாகச் சொன்னவர் அன்றைய சென்னை மாநிலத்தின் முதல்வர் (பிரதமர்) ராஜாஜி. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எனது கோரிக்கையை நீங்கள் ஏற்காவிட்டால் இதையே எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றார். ராஜாஜியின் இந்த முடிவை ஆதரித்து உடனே அறிக்கை விட்டார் பெரியார். அவர்கள் பிரச்சனைகளைப் பார்த்து முடிவெடுத்தார்களே தவிர, ஆட்களைப் பார்த்து முடிவெடுக்கவில்லை.

இன்று, பிரச்சனைகளைப் பார்ப்பதில்லை. நபர்களைப் பார்க்கிறார்கள். அதனால் தான் அண்டை மாநிலங்களும் மத்திய அரசும் நமது பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன.
தமிழகத்தின் முதல்வரான கலைஞர் அவர்கள் இந்திய முதல்வர்களிலேயே வயதாலும் அனுபவத்தாலும் மூத்த முதலமைச்சர். அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கேரள முதல்வர் கொடுக்கத் தவறியதும், மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டுக் கேரள முதல்வரைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்குத் தெரியாமலேயே இந்தியக் கடற்படை முல்லைப் பெரியாறு அணைக்கு வருகிறதென்றால் இந்திய அரசின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் என்பது 6 கோடித் தமிழர்களுக்கும் ஏற்பட்ட அவமானம்.

இந்த நிலையில், கட்சி வேறுபாடின்றி 6 கோடி தமிழர்களும் முதலமைச்சர் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். முதல்வரும் அனைத்துக் கட்சியையும் அரவணைத்துச் செல்லவேண்டும். பேச்சுவார்த்தையால் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தபிறகு, பேச்சுவார்த்தைக்குப் போவ தென்பது தேவையற்ற காலதாமதத்தைத் தான் ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பேச்சுவார்த்தை என்று எதற்கும் கேரளா கட்டுப்படவில்லை என்ற நிலைமை வரும்போது, நாம் அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுப்பதைவிட, மக்கள் மூலமாகப் பதிலடி கொடுக்கலாம். கேரளாவுக்கு நாளொன்றுக்கு 200 டன் அரிசி முறையான வழியில் போகிறது. இதுதவிர, திருட்டுத்தனமாக எவ்வளவோ போகிறது. 1 கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2000 லிட்டர் தண்ணீர் தேவை. 200 டன் அரிசிக்கு 511 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவை. பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு 82 மில்லியன் கன மீட்டர்தான். இதுதவிர, காய்கறிகள், பழங்கள், மற்ற உணவு தானியங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் அனுப்புகிறோம். இவற்றை உற்பத்தி செய்ய நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். அவ்வளவையும் சேர்த்துதானே கேரளம் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.

தமிழகத்தில் 30 லட்சம் மலையாளிகள் வசிக்கிறார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஒரு மனிதனுக்கு ஆண்டொன்றுக்கு 1200 கனமீட்டர் நீர் தேவை. அதன்படி பார்த்தால் இங்கே பிழைப்பு நடத்தும் 30 லட்சம் மலையாளிகளுக்கு 5500 மில்லியன் கனமீட்டர் நீர் தேவை. இங்கிருக்கிற மலையாளிகள் குடிப்பதற்காகவாவது கேரள அரசு நீர் தரலாமே... இதை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று சொன்னால் ஒரே வழிதான் இருக்கிறது. நாம் இனி அவர்களுக்கு அரிசி உள்பட எந்த உணவுப்பொருளையும் அனுப்புவதில்லை, உங்கள் உறவே வேண்டாம், நீங்கள் எங்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று நிறுத்தினால் 10 நாட்கள்கூடக் கேரள மக்கள் தாக்குப் பிடிக்க முடியாது.

நான் சொல்லும் இந்த உண்மைகளைக் கேரளப் பத்திரிகையில் பெரிதாகப் போட்டு விட்டார்கள். அதனைப் படித்துவிட்டு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த தாமஸ் என்ற பொறியாளர் உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் சொல்வதுதான் உண்மை, இங்குள்ள காங்கிரசாரும், கம்யூனிஸ்ட்டுகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாறு அணை இடியப்போகிறது என்று ஏமாற்றுகிறார்கள். அணையை ஆய்வு செய்த பொறியாளர்களில் நானும் ஒருவன். எனக்கு உண்மை தெரியும். அந்தக்காலத்தில் சுண்ணாம்பு, சர்க்கரைப் பாகு, மற்றப் பொருட்களையெல்லாம் சேர்த்து, சாந்து செய்து, அதை வைத்துதான் அணையைக் கட்டியிருக்கிறார்கள். அதனுடைய குணாம்சம் என்னவென்றால் நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே இருக்கும். அப்படி அது இறுகி, உடைக்க முடியாத கற்பாறை போல அந்த அணை இருக்கிறது. இந்த உண்மையை மறைத்துவிட்டு, அணை இடியுமென்றும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அரசியல்வாதிகள் பொய்யைப் பரப்புகிறார்கள்’ என்றார். அது மட்டுமல்ல, இந்த உண்மையை எங்கள் மக்களுக்கு விளக்கும் வகையில் நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நானும் வருகிறேன் என்றும் அந்த மலையாளப் பொறியாளர் சொல்கிறார்.

ஆக, அப்பாவி மலையாளி மக்களை இரண்டு தேசிய கட்சிகளும் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. அதை அந்த மக்கள் உணர வேண்டுமானால் கேரளாவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் புறக்கணிப்பை மக்களே செய்யட்டும் என அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள். இல்லையென்றால் ஒரு போதும் வரமாட்டார்கள். தமிழக மக்களும் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடினால்தான் முல்லை பெரியாறு அணையில் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். இதனை இந்த முறை செய்யாவிட்டால் வேறு எந்தக் காலத்திலும் செய்ய முடியாது.
தொகுப்பு: தமிழ்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com