Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
டிசம்பர் 2006

இனி, பேசிப் பயனில்லை... எழுகிறது ஈழம்!

இதை அக்கிரமம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. மதுரை மேலூர் அருகே ஒரு சரக்கு லாரியைச் சோதனைச்சாவடி அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் வெடிப் பொருட்கள் இருந்தன. எங்கிருந்து எங்கே செல்கிறது? என அது தொடர்பான ஆவணங்களைப் அவர்கள் வாங்கிப் பார்த்தபோது, அது மராட்டிய மாநிலம் நாக்பூரிலிருந்து இலங்கைக் கடற்படையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

யாருடைய உத்தரவின் பேரில் இந்த வெடிப்பொருட்கள் இலங்கைக் கடற்படைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து மழுப்பலான பதில்களே வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொதித்துப் போய்க் குரல் கொடுத்தார். டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக முதல்வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரிடம் இது குறித்து விளக்கம் கேட்டார். மத்திய அரசிடமிருந்து நேரடியான பதிலும் இல்லை. அதனை நேரடியாகச் சொல்லவுமில்லை. தயாநிதி மாறன் மூலமாகத் தமிழக முதல்வருக்குத் தகவல் தெரிவிக்கப் படுகிறது. என்னவென்றால், அரசின் சார்பில் இலங்கைக் கடற்படைக்கு எந்த வெடிப்பொருளும் அனுப்பவில்லை. அதே நேரத்தில், தனியார் நிறுவனம் ஏதாவது வணிக ரீதியாக இதை அனுப்பியிருக்கலாம். அதைப் பற்றி விசாரிக்கிறோம் என்பதுதான் மத்திய அமைச்சர்கள் தந்திருக்கும் முதல்கட்ட பதில்.

அதாவது, அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அனுப்ப வில்லை. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது லாபநோக்கத்திற்காக அனுப்பியிருக்கலாம் என்பது தான் இந்திய அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது. நாக்பூரிலுள்ள சோலார் எக்ஸ்ப்ளோசிவ் பிரைவேட் லிமிடெட் என்ற வெடிமருந்து நிறுவனம் இலங்கைக் கடற்படைக்கு வெடிமருந்துகளை அனுப்பியுள்ளது.

தமிழகக் கடல்வழியாக விடுதலைப் புலிகளுக்கு டீசல் கடத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நாட்டில்தான், அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக் கடற்படையினருக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதாவது, லாப நோக்கம் என்ற பெயரில் இலங்கைக்கு வெடிமருந்துகளைக் கடத்தியுள்ளனர். அதுவும் எந்த இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமா? கடல் எல்லைத் தாண்டி வந்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களை நோக்கித் துப்பாக்கியைக் குறி வைக்கிறதே அந்த இலங்கைக் கடற்படைக்குத்தான் வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்கள் சுமார் 300பேரை இதுவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதற்காக அந்தக் கடற்படையை நோக்கி இந்திய ராணுவத்தின் ஒரு விரல் கூட அசையவில்லை. ஆனால், தமிழனை இன்னும் நன்றாகக் சுடு என்பதுபோல வெடி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் அனுமதியின்றி இன்னொரு நாட்டின் படைக்கு வணிகரீதியாக வெடிமருந்து அனுப்பமுடியுமா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

சில மாதங்களுக்கு முன் லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, லெபனான் நாட்டில் இருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பிஜித் தீவில் புரட்சி என்றதும் அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் கவலைப் படுகிறது. இவையெல்லாம் நியாயமானவை தான். ஆனால், தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் மட்டும் இந்திய அரசு ஏன் அநியாயமாக நடந்து கொள்கிறது? என்பதுதான் விடை தெரியாத கேள்வி. லெபனான் இந்தியர்களையும், பிஜித் தீவின் இந்திய வம்சாவளியினரையும் காக்கத் துடிக்கும் அதே அரசு, ஈழத்தமிழர்களை, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படைக்கு வெடி மருந்துகளை அனுப்ப அனுமதிப்பது ஏன்? தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக இந்திய அரசு நினைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரம் என்பது இந்தியாவுக்குட்பட்ட தமிழகம் -கேரளம் என்ற இரு மாநிலங்களின் பிரச்சனை. ஆனால், இந்தியக் கடற்படையோ கேரளத்திற்கு மட்டும் சாதகமான நிலையை எடுத்து, கேரள அரசு கூப்பிட்டவுடன் அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கேரளா வைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியக் கடற் படையே கேரளாவுக்கு சொந்தமாகிவிட்டது. அதுபோலத்தான், இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளரான சிவசங்கரமேனனும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணனும் மலையாளிகள்.

தமிழர் நலன் குறித்த அக்கறையற்றவர்கள். தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படத் தயங்காதவர்கள். அதனால் தான், ஈழத்தமிழருக்கு இந்தியத் தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைத்து விடக்கூடாது என்று வரிந்துகட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அதிகாரவர்க்கத்தின் ஆலோசனையைத்தான் தமிழகக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் மன்மோகன்சிங் அரசு ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஈழப்பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.அந்தத் தீர்மானம் எழுதப்பட்டமையின் ஈரம் காய்வதற்கு முன்பாக, இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவிலிருந்து வெடி பொருட்கள் அனுப்பப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வரும் தமிழகத்தின் மற்ற தலைவர்களும் விடுத்த வேண்டுகோளுக்காக இந்திய அரசின் சார்பில் அனுப்புவதாகச் சொல்லப்பட்ட உணவுப் பொருட்கள் இதுவரை ஈழத்துக்குப் போய்ச் சேர்ந்ததாகத் தகவல் இல்லை. இலங்கைக்கு அது கொண்டு செல்லப்பட்டாலும், தமிழர் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வழியில்லாமல், ஏ-9 நெடுஞ் சாலை மூடப்பட்டுக் கிடக்கிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவில் 4 நாட்கள் சுற்றினார். பிரதமரைச் சந்தித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்தார். மனிதாபிமான அடிப்படையிலாவது ஏ-9 நெடுஞ்சாலையைத் திறந்துவிடுங்கள் என இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதைக் காதில் வாங்காமல் அலட்சியம் செய்துவிட்டார் ராஜபக்சே. அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என இந்திய அரசு வலியுறுத்தியதையும் ராஜபக்சே காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்திய அரசின் எந்த ஒரு சொல்லுக்கும் இலங்கை அதிபர் மதிப்பு கொடுப்பதில்லை. ஆனால், இந்திய நிறுவனமோ இலங்கை அரசாங்கத்துக்கு வெடிமருந்துகளை அனுப்புகிறது. இலங்கை விமானப்படையினருக்கு இந்திய அரசே இங்கே பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. இலங்கைப் போலீசாருக்குப் பயிற்சி தருகிறது. தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையும் இந்திய அரசிடம் இல்லை. ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழர் நலம் என்றால் இந்தியத் தாய், மாற்றாந்தாய் ஆகிவிடுகிறாள். ராணுவத்தில் இஸ்லாமியர்களையும், உளவுப்பிரிவில் சீக்கியர் களையும் உயர்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வருவதில்லை என இந்திய அரசாங்கத்தில் எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல, தமிழர் நலம் என்பது இந்திய அரசுகளால் புறக்கணிக்கப்படுவதும் அறிவிக்கப்படாத திட்டமாக இருந்து வருகிறது.

இந்திய அரசின் உயர்பொறுப்புகளில் உள்ள பார்ப்பன, மலையாள, போலித் தேசியம் பேசும் அதிகாரிகள், தமிழர்களுக்கு எந்த நலனும் விளைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். இதனைத் தமிழக எம்.பிக்களின் தயவில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு உணர்ந்திருக்கிறதோ இல்லையோ ராஜபக்சே அரசு நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்தியாவிலிருந்து அதனால் வெடிமருந்துகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், தமிழர் நலன் குறித்து உதட்டளவில் இந்திய அரசு சொல்லும் யோசனைகளைக் கூட நிராகரித்து விடுகிறது. இந்திய அரசின் பேச்சுக்கே மதிப்பளிக்காத ராஜபக்சே அரசிடம், நார்வே தூதுவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?

அமைதி ஒப்பந்தம் அமலில் இருக்கும் நேரத்திலேதான் மாவிலாறு அணை மீது சிங்களப்படைகள் தாக்குதல் நடத்தின. நார்வே தூதுவர், ஐ.நா. கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்டோர் அந்த தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்ததே பெரும்பாடு. அதே அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த நேரத்தில்தான் செஞ்சோலைச் சிறார்கள் மீது தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்ட இளந்தளிர்களைச் சிங்கள விமானப்படை கொன்று குவித்தது. விமானத் தாக்குதல் என்பது அடுத்த நாட்டின் மீது நடத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால், ஒன்றுபட்ட இலங்கை என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசோ அங்குள்ள தமிழர்கள் மீது அன்னியர்களைப் போல் விமானத் தாக்குதல் நடத்துகிறது. இலங்கை ஒரே நாடாக இல்லை என்பதை இலங்கை அரசே தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கும்போது இனி அதனுடன் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது விடுதலைப் புலிகள் இயக்கம்.

நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் தினத்தில் உரையாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இதனைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தனி ஈழம் ஒன்றே தீர்வு என்கிற தங்களின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருப்பதுடன், தங்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழக மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் நலனுக்காகத் தாய்தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மாவீரர் தினத்தில் பிரபாகரனின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதையும் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் முன்கூட்டியே உணர்ந்த இலங்கையின் முக்கியத் தலைவர்களும் அதிகாரிகளும் அன்றைய தினம் அவர்கள் நாட்டிலேயே இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே, முன்னாள் அதிபர் சந்திரிகா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மூவரும் இந்தியாவில் முகாமிட்டிருந்தார்கள். இலங்கையின் பிரதமரோ அமெரிக்காவுக்குப் பறந்து விட்டார். ராணுவத் தளபதியோ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு சென்றுவிட்டார். தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்று இலங்கை மக்களை நிர்கதியாய் விட்டுவிட்டு ஓடியவர்கள்தான் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள். பிரபாகரனோ இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க தாய்த் தமிழகத்தின் ஆதரவை நாடுகிறார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றாலே ஆயுதக் கலாச்சாரம் பரவுகிறது என ஒப்பாரி வைக்கும் போலி தேசியவாதிகள் இங்கே இந்திய அளவிலும் தமிழக அளவிலும் உண்டு. ஈழத்தில் 25 ஆண்டுகாலமாக ஆயுதப் போராட்டம் நடை பெற்றுவருகிறது. அன்று முதல் இன்றுவரை தமிழக மக்கள் தார்மீக ஆதரவைத்தான் அளித்து வருகிறார்களே தவிர, ஆயுத உதவி செய்யவில்லை. ஆனால், போலி தேசியம் பேசும் அதிகாரிகள் தயவில்தான் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே இலங்கைக்கு வெடி மருந்துகளை அனுப்புகிறார்கள். இதன் மூலம், ஆயுதக் கலாச்சாரத்தை வளர்த்து வருபவர்கள் தமிழுணர்வாளர்களா போலி தேசியவாதிகளா என்பதை புரிந்துகொள்ள முடியும். நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவை ஆள்ப வர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com