Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
அன்பான தோழிக்கு ...
வைகை

தமிழினிய வாழ்த்தும், வணக்கமும். உன் நலம் கூறும் மடல் கிடைக்கப்பெற்றுச் செய்திகள் அறிந்தேன். இங்குக் கோடையைவிட வாட்டும் அரசியல், சமுதாயச் சூழலில் உன் மடற் செய்திகள் மனதுக்கு மகிழ்வும், நம்பிக்கையும் ஊட்டுவனவாக உள்ளன. குறிப்பாகத் தங்கை முல்லை, விண்வெளிப் பயிற்சி நிறுவனத்தில் சிறப்புத் தகுதி பெற்றுக் கூடிய விரைவில் விண்கலத்தில் இடம்பெறும் வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பது கண்டு பேருவகை கொண்டேன். புலம் பெயர்ந்த இந்தியக் குடிகளின் வழித்தோன்றல்களான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போல் இன்றி இந்தியப் பெண். அதிலும், தமிழகப் பெண்ணுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தால் அது எத்தகைய பெருமை! அது இருக்கட்டும்.

கடந்த வாரம், உன் ஊருக்குச் சென்று வந்தேன். தாத்தா, பாட்டி என்னால் நீயும், நம்மால், தங்கையர் முல்லையும், குறிஞ்சியும் கல்யாணம், காட்சி, கடவுள் பற்று என எவையும் இன்றிப் பாலையாகி விட்டதாக மறைமுகமாகச் சுட்டிக் காட்டினர். முல்லை, நிலவு இருக்கும் விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் இருக்க, இவர்கள், அவளுக்குத் திருமணம் செய்வதற்காக வியாழன் பார்வை கிட்டவேண்டும் என முழுநிலவு நாளன்று பூசனைகள் செய்து, காலை முதல், தண்ணீர்கூடக் குடிக்காமல், மாலையில் நோன்பு முடித்து, உணவு உண்டனர். சும்மா சொல்லக்கூடாதுதான்! உணவில், அத்தனை வகைகள்! விதவிதமான சுவைகள்! தனியே சமைத்து உண்ணும் எனக்கு, நாவுக்குச் சுவையான உணவு நீண்ட நாள்களுக்குப் பின் கிடைத்தது. அதற்காகவேனும் பாட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நீ அயலகத்தில் வாழ்ந்தாலும், தமிழகச் சமையலை மறக்காமல் மேற்கொண்டுள்ளாய் என்பது அறிவேன். இதிலாவது பாட்டியைப் பின்பற்றுகிறாயே என அவர் மகிழலாம். விண்வெளியில் செல்ல இருக்கும் முல்லையை, அப்படியே வியாழன் அருகில் சென்று, அதன் பார்வையைப் பெற்று வருமாறு கூறு. வியாழன் பார்வை கிடைத்துவிட்டால், முல்லையே வேண்டாம் என்றாலும் அவளறியாமல், அவளுக்குள், திருமண விருப்பம் ஏற்பட்டுப் பாட்டியின் கனவு நிறைவேறலாம்! அல்லவா? போகட்டும்!

இந்த நோன்புகள், விழாக்கள், கோயில் வழிபாடுகள் எல்லாமே, விதவிதமான, சுவையான, உண்பொருள்களைக் கொண்டதாகவே இருப்பதைப் பார்க்கும்போது, இவற்றுக்காகவே அவை என்பதும், இவை பெரும்பாலும் அவர்கள் மரபுகள் என்பதும் ஓர் உண்மையைப் புலப்படுத்துகின்றன. சுவையான, சத்தான உணவுப் பண்டங்கள், விழாக்களிலும், கோயில்களிலும் இடம்பெறுவது அவர்களின் உழைக்காமல் உண்ணும் உத்தியைத் தவிர வேறென்னவாக இருக்க இயலும்? ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு வகையான, கடவுளை நம்பிக் கோயிலுக்குச் செல்லும் ஏழை எளியவர், ஏன், கோயில் வாசலிலேயே அமர்ந்திருக்கும் இரவலர்கள் கனவிலும் கண்டு அறியாத தின்பண்டங்கள், அக் கோயில்களின் சிறப்புக் கூறாகவே பாராட்டப்படுகின்றன. விலை உயர்ந்த வெண்ணெயும், நெய்யும், முந்திரியும் என அப்பொருள்களுக்கான பணம் கோயிலுக் குரியதுதானே! இவற்றையயல்லாம், இறைவன் பெயரால் உண்டு கொழுப்பதும், விற்றுச் செழிப்பதும் யார்? திருப்பதியை விடவும், திருப்பதி லட்டுதானே கடவுளன்பர்களின் பாவக் கடல் நீக்குகின்றது!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர் எனத் தோழர் மாயாவதி முதல் பலர் அவர்கள் பற்றிக் கவலைபட்டுக் கண்ணீரில் கரைந்து மேலேற்றத் துடிக்கின்றனர். அவர்களில், எந்த ஆணாவது, பெண்ணாவது, சித்தாள் வேலையோ, குப்பை அள்ளும் பணியோ, கை வண்டி இழுத்தலோ செய்கின்றார்களா? சமையல் பணியில்கூட அவர்களின் ஆதிக்கம் ஏன்? நம்மவர், நமது வீட்டு விழாக்களில், அவர்களது சமையல் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். நாள் முழுவதும் வெயிலிலும், மழையிலும் மட்டுமின்றி மண்ணிலும், சிமெண்டிலும், சுண்ணாம்பிலும் உழன்று சுமை சுமந்து சாரத்தில் நின்று நம்மவர் வீடுகட்ட, புதுமனை புகுவிழா என்று அவர்கள், முதல் மரியாதையுடன் தம் வீட்டுக்கு வேண்டிய பொருள்கள் உடை, பணம் எனப் பெற்றுச் செல்கின்றனர். அவர்கள் ஓர் இரண்டுமணி நேரம் ஓதிய மந்திரத்துக்கு என்ன பொருள்? யாருக்குத் தெரியும்?

நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரிசி, பருப்பு, முதல் ஒரு வாரத்துக்கேனும் பயன்படும் அளவுக்குக் காய்கள், கனிகள், உண்டபின் செறிக்க வெற்றிலை என அனைத்தும் பெற்றுக் கொள்கின்றனர். நீ கூறுவதுபோல், கணினியில் அங்கும் கருமாதிச் சடங்குகளும், காயத்திரி மந்திரமும், பிற கண்ணராவி களும் என அவர்கள் தம் பிழைப்பை விடாமல், ஒற்றுமையுடன் செயலாற்றி, மற்றவர் மனதைக் கரைக்கும் அளவில் உரையாடித் தமக்கு வேண்டியதைப் பிறரிடமிருந்து பெற முயலுகின்றனர். ஆனால், நம்மவரோ தமக்குள் வேறுபட்டு நின்று, ஒருவருக் கொருவர் சேற்றை அள்ளி வீசிக் கொண்டுள்ளனர். அவர்களிடம் பணிந்து நடக்கின்றனர்.

கடவுளின் பெயரால் கண்மூடி மரபுகள் மறைந்து விடாமல் காத்துவரும் அவர்களின் முயற்சியை நம் இளந் தலைமுறை யினர் எவ்வாறு அறிவர்? பெரியாரை அறிந்தவர்களே மாறாத நிலையில், அவரை அறியாதவர் இவற்றைப் பின்பற்றுவதில் என்ன தடை உள்ளது? இசைக்கும், கடவுள் தன்மை ஏற்றித் தமிழ்நாட்டில், புரியாத மொழியில் இசை பாடி, அதற்கெனச் சபாக்கள் வைத்துக் குளிர்காலப் பருவத்தில்; இசை விழாக்கள் என்ற பெயரில் சபாக்களின் பின்னால் உள்ள சிற்றுண்டி வகைகளைச் சுவைத்துக்கொண்டு, பாடகரின் குரலையும், பாட்டையும் பாராட்டும் செயல்களில் அவர்களின் ஒற்றுமையும், உணவுத் தேடலும் அறிகின்றோம். ஆனால் நாம்!

நாம் கற்றுக் கொடுத்தால் நம் வீட்டு இளந் தலைமுறையினர், மூட மரபுகளிலிருந்து, திருமணம்தான் பெண்ணுக்கு வாழ்க்கை என்ற ஆணாதிக்கப் பொய்ம்மையி லிருந்தும் விடுபட்டுத் தம் சிந்தனை வளத்தையும், செயலாற்றலையும் உரிய வழியில் செலுத்துகின்றனர். இதுபோல் ஒவ்வோர் இல்லமும் உயர்வடைந்தால் அல்லவா, பெரியாரின் முயற்சிகளுக்குப் பயன் கிட்டும். நாளைய சமுதாயமாகிய இன்றைய இளந் தலைமுறை யினருக்கு விழிப்பூட்டும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாமையை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும் அல்லவா?

இன்றைய அரசின் இலவசத் தொலைக்காட்சியை யார், அதன் ஆக்கப் பணியை உணர்ந்து பயன்படுத்துகின்றனர்? படுக்கையறைக் காட்சிகளும், பெண்ணைப் பாலியல் பொருளாக்கும் பாடல்களும், தலைபோகும் சிக்கல் பல இருக்க, தலைமுடி பற்றிய ஆயிரக்கணக்கான பணச் செலவிலான, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வீணடிக்கும், விளம்பரங்களும், செல்லரித்துப் போன மரபுகளை மீட்டெடுக்கும் நாடகங் களும், மூடநம்பிக்கை கடவுள் வழிபாடுகளும், சமையல் கல்வியும், வன்முறையும், மூளையைச் செயலிழக்கச் செய்யும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும், இன்றைய நாளும், கோளும் எப்படி எனச் சோதிடங்களும், கற்காலத்தையும் விஞ்சும் வகை யிலான அரைகுறை ஆடைப் பேயாட்டங்களும், தமிழ் தெரியாத தொகுப்பாளர்களின் கொலைத் தமிழும் என எந்த வகையிலும் இணையற்ற மின் அணுக் கருவியின், அரிய பயன்கள் இடம் பெறாத வகையில் இருப்பதை அரசியல், சமுதாயப் பெரியார்கள் எங்ஙனம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பதில் வியப்பில்லை. இவை யாவும் அவர்களின் பங்களிப்புகள்தானே?

அரசியல் கட்சிகளோ, சமுதாய அமைப்புகளோ நாளைய உலகு பற்றியும், அதன் நலம் பற்றியும் கவலைகொள்ளாத நிலையில் சமுதாயக் கவலையும், பொறுப்பும் உள்ளவர்கள், தமக்குள் ஒன்றுபட்டு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டால் ஒழிய, நாளைய சமுதாயம் வளமாக இருக்கப் போவதில்லை என்பது உறுதி. வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படாமல், நாட்டில் மாற்றம் உருவாக்குவது பற்றி மேடையில் பேசுவதாலும், இதழ்களில் எழுதுவதாலும் எந்தப் பயனும் விளைந்துவிடாது என்பதற்கு இன்றைய உலகின் நிலையே சான்று!

தம் வீட்டு அளவில், எந்த ஒரு மாற்றத்தையும், தம் இழப்புகளை மீறிப் பின்பற்றாமல், ஊருக்குச் சொல்வதாலேயே தலைவர்கள் மீதுள்ள, நம்பிக்கையும் மதிப்பும், மக்களுக்குக் குறைந்து போயுள்ளன என்பதைக் கூறவா வேண்டும்? நம், வீட்டவருக்கு அவர்கள் விருப்பம்போல் செயல்படும் உரிமை இருப்பதுபோலவே, ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமை உண்டுஅல்லவா? இதுவே, இன்றைய சமுதாய மாற்றத்துக்குரிய சிக்கல் நூற்கண்டின் சிக்கலை நீக்காமல், நூலால், ஆடையின் கிழிசலைக் கூடத் தைக்க இயலாது!
மடல் நீண்டுவிட்டது. அடுத்த மடலில் தொடர்வோம். உன், தமிழ் மற்றும் சமுதாயப் பணிகள், தொய்வின்றித் தொடர்வது பற்றி மனம் நிறைவாக உள்ளது.
அன்புடன்
வைகை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com