Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
புதுவைச் சிவம் நூற்றாண்டுவிழா

தோப்பூர் திருவேங்கடம்

அன்றொரு நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். இன்று புரட்சிக் கவிஞரின் மாணவராகிய புதுவைச் சிவத்தின் உருவப் படத்தை அண்ணாவின் மாணவன் என்ற முறையில் நான் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், கட்டற்ற களிப்பும் கொள்கிறேன்.

சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களின் அடிப்படையில் பிரான்சு நாட்டில் புரட்சியைத் தோற்றுவித்தார்கள். இந்தத் தத்துவங்கள்தான் பிரெஞ்சு நாட்டு மக்களை அடிமைத் தனத்திலிருந்து விடுதலைப் பாதைக்கு அழைத்துச் சென்றன. பிரான்சு நாட்டு ஆளுகைக்குட்பட்டிருந்த இந்தப் புதுவைக்கும் அந்தத் தத்துவங்களே நம் கவிஞர்களுக்கு அடிப்படையாகவும் உந்து சக்தியாகவும் இருந்து ஊக்குவித்தன.
மண்ணின் வளத்தைப் பொருத்தே விளைபொருள்களை விளைவிப்பார்கள் உழவர் பெருமக்கள். அவ்வாறே இப்புதுவையின் வளமான மண் வளமேதான் பாரதியாரையும், பாரதி தாசனையும், புதுவைச் சிவத்தையும் மக்கள் முன்னேற்றம் கருதி புரட்சிக் கருத்துகளையும், பொதுவுடைமைக் கருத்துகளையும் படைக்கத் தூண்டுதலாக இருந்தது!

பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவும் புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு விழாவும் முடிவுற்றன. புதுவைச் சிவத்தின் நூற்றாண்டு விழாவினை இன்று பெருமிதத்துடன் கொண்டாடி பெருமையடைகிறோம். அக்கவிஞர் பெருமக்களால் இன்று நூற்றுக்கணக்கான தமிழறிஞர்களும், தமிழ்க்கவிஞர்களும் தோன்றி தமிழையும், தமிழ்நாட்டையும் முன்னேற்றமடையச் செய்ய அடிப்படையாக விளங்கி வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது!

பல்கலைக்கழகத்தின் இவ்விழாவில் பங்குகொள்ளுகின்ற ஓர் அரிய வாய்ப்பினை உருவாக்கித் தந்த புதுவை பல்கலைக் கழக தமிழியற் புலத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர் அறிவுநம்பி அவர்களுக்கும், கருத்தரங்க அமைப்பாளர்கள் முனைவர் மு. கருணாநிதி, முனைவர். சிவ. இளங்கோ ஆகியோருக்கும் என் அகங்கனிந்த நன்றியை உரித்தாக்கு கின்றேன். ஆராய்ச்சி மாணவர்கள் புதுவைச் சிவத்தின் குடும்பத்தினர் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவைச் சிவத்தின் சமதர்மக் கொள்கை, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரின் புது உலகம் என்ற ஏட்டில் கவிதை ஒன்று மூலம் வெளியாகியுள்ளது. அதில் தம்முடைய உள்ளக் கிடக்கையைத் தெளிவாக்கியுள்ளார். சிவத்தின் சமதர்மக் கொள்கை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

பணக்கார கொடும்பூதம் ஒழியவேண்டும்
பாட்டாளி மக்களொன்று சேரவேண்டும்
தனிவாழ்வு, தனிச்சொத்து, சொல்வதெல்லாம்
சகமக்கள் துயரத்தை வளர்ப்பதாகும்.
இனியாவும் பொதுச் சொத்தாய் விளங்கச் செய்வோம்
எழுச்சியுடன் சமதர்மம் தோற்றுவீரே!

என்று பாடியுள்ளார். இதிலிருந்து புதுவைச் சிவத்தின் பொதுவுடைமைத் தத்துவம் என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. சகமக்களின் துயரத்தைத் தனிச் சொத்துடைமை போக்காது என்று இயம்புகிறார்.
இக் கவிதையிலிருந்து அவர் உண்மையான புரட்சிக் கவிஞரின் மாணவர் என்பதையும், உண்மையான பகுத்தறிவாளர் என்பதையும் உலகுக்கு உணர்த்தி விட்டார்.

நாட்டிலே மலிந்துள்ள மூடச் செய்கை
நனிபேத வழக்கங்கள் சாத்திரங்கள்
வாட்டுகின்ற பெண்ணடிமை யாவும் வீழ்த்தி;
வளமுற்ற சமவாழ்வைச் சமுதாயத்தில்
நாட்டிடவே வேண்டுமென்னும் கொள்கையோடு
நானுள்ளேன்

என்று தம்மைப்பற்றி புதுவைச் சிவம் அறிவித்துள்ளார். இதிலிருந்து புதுவைச் சிவம் மூடப் பழக்கவழக்கங்களைச் சாடியும் பகுத்தறிவுப் பாதையில் மக்களை வழிநடத்திச் சென்று அவர்களை பெரியாரின் புரட்சிப் பாதையில் வீறுநடை போடவைக்க வேண்டுமென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தன்மான வீரர் என்று தரணியோர் பரணி பாடிடும் மாவீரராக வாழ்ந்தவர் என்பதை நன்கு உணரமுடிகின்றது!

புதுவைச் சிவத்தின் பன்முக ஆற்றல்!

அவர் கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பள்ளி ஆசிரியர், புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்கைக்காக வாழ்ந்த பதிப்பாளர், நிர்வாகத் திறமைமிக்க நிர்வாகி, நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்த செயல் மறவர், கட்டுரையாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், உள்ளாட்சித் துறையில் ஈடுபட்ட தொண்டர், அரசியல் நாகரிகத்தைக் கட்டிக் காத்த அரசியல்வாதி. இவ்வாறு அவரது ஆற்றல் நீள்கிறது! இத்தகைய பன்முக ஆற்றலாளரை நாம் ஏன் புதுவைப் பெரியார் என்றழைக்கக் கூடாது?

புதுவைச் சிவம் பெரியாருடன் கொண்ட தொடர்பு:

விழாவும், நாமும் என்ற தலைப்பில் புதுவைச் சிவம், பெரியார் ஆற்றிய சொற்பொழிவை நூலாக வெளியிட பெரியாரின் அனுமதியைப் பெற்று, வெளியிட்டுள்ளார். அந்நூல் குறித்து பெரியார் கூறுவதாவது, நான் விழாவும் நாமும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் முக்கியத்துவமெல்லாம் விழாக்கள், பண்டிகைகள் என்பவை மக்களின் முன்னேற்றத் திற்கும், அறிவு, ஆற்றல் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமே யொழிய மூட நம்பிக்கைக்குப் பயன்படக்கூடாது என்ற கருத்தைக் கொண்டே பேசி இருக்கின்றேன். எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக் கிடையில் அச்சொற்பொழிவுப் புத்தகமாக உருவாக ஆக்கித் தந்த எனது நண்பர் சிவம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு, நன்றி உடையவராவார் என்று சிவத்தைப் பாராட்டியுள்ளார்.

பெரியார் பெருந்தொண்டு (குறுங்காவியம்):

புதுவைச் சிவத்தின் "பெரியார் பெருந்தொண்டு' என்ற குறுங்காவியத்தைப் படித்துப் பார்த்து பாராட்டினார் புரட்சிக் கவிஞர். அப்போது அருகில் ஒருவர் பெரியார் ஒரு தலைவர் தானே! அவர் செய்தது தொண்டு என்றால் தொண்டர் ஆகி விடுகிறாரே என்றார். அதற்கு பாரதிதாசன் அவர்கள் தலைவ ரானாலும், தொண்டரானாலும் அவர் நாட்டுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், செய்வது தொண்டுதான், அதனால் பெரியார் செய்றதுதான் பெருந்தொண்டு என்று விளக்கமளித்தார். அந்த அன்பர் அப்போது சிவப்பிரகாசம் செய்றது சிறிய தொண்டுதானே என்றார்.

இதைக் கேட்ட பாரதிதாசனுக்கு கோபம் பிறந்தது, கவிஞனுக்குக் கோபம் பிறந்தால், கவிதைப் பிறக்கும், அப்படி பிரசவித்ததுதான் ஒரு பாயிரம், அந்தப் பாயிரம்தான் பெரியார் பெருந்தொண்டுக்கு முன்னுரையானது.
பெரியார் பெருந்தொண்டுப் பற்றிச் சிவப்பிரகாசம் ஆற்றியது சிறிய தொண்டு என்று கருதலாம். ஆனால் அது கற்றோர்க்கே சுலபமில்லாத அரிய தொண்டு என்பது எனக்குத் தெரியும் என்று புரட்சிக் கவிஞர் மேலும் சிவத்தைப் பாராட்டினாராம்.

புதுவையில் 22.7.45இல் பிரெஞ்சு அரசாங்க அனுமதியைப் பெற்று திராவிடர் கழகத் திறப்பு விழாவினை தந்தை பெரியார், அண்ணா, அழகிரிசாமி போன்ற முக்கிய தலைவர்களையும் அழைத்துப் பெரிய விழாவாக நடத்திக் காட்டியவர் புதுவைச் சிவம். 9.9.34 அன்று சென்னை விக்டோரியா மன்றத்தில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு பெரியார் கூறிய அறிவுரையாவது, ஏன் புராண நாடகங்கள் வழியாகத்தான் சீர்திருத்தக் கருத்துகளை சொல்லவேண்டுமா? என்று பெரியார் கேட்டுவிட்டு, சிவப்பிரகாசம் சீர்திருத்த நாடகமாகப் போடு அதிலே நம்ம கருத்து எல்லாம் வர்ற மாதிரி போடு என்றார்.

அவ்வாறே சிவம் அவர்கள் பின்னர் நாடகங்கள் எழுதி நடத்தியுள்ளார் என்பதை நாடே நன்கறியும். 1930களின் இறுதியில் எழுதப்பட்ட கோகிலாராணி என்னும் நாடகம் புதுவையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், மலேசியாவின் ஈப்போவிலும் நடத்தப்பெற்றது. வடஆர்க்காடு மாவட்டத்தில் வில்வாரணியில் போளூர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. அமுதவள்ளி அல்லது அடிமையின் வீழ்ச்சி, சமூக சேவை, ரஞ்சித சுந்தரா அல்லது இரகசிய சுரங்கம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கதாகும். அவை யாவும், சமூக சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை.

தந்தை பெரியார் அவர்களின் அறிவுக்கூர்மை வெளியாகும் விதத்தில் 1933ஆம் ஆண்டில் வேலைத் திட்டத்திற்காக, 1932ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் 28, 29 நாள்களில் தமிழகமெங்கிலும் உள்ள தோழர்களை ஈரோட்டிற்கு வந்து ஆலோசனை நல்குமாறு கேட்டு மடல் எழுதியுள்ளார். அதில் புதுவையில் புதுவைச் சிவாவுக்கும் அழைப்பு அனுப்பி, வருமாறு கூறியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தந்தை பெரியார் அரசியல் கட்சிகளை நடத்துபவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக விளங்கியுள்ளார். எப்படி அரசாங்கம் தன்னுடைய அடுத்த ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை முன்கூட்டியே தயாரிக்கிறதோ, அவ்வாறே பெரியார் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவதற்கு முன்னதாகவேத் தன் தோழர்களிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரில் அழைத்துக் கேட்டறிந்துள்ளார் என்பது சிவாவுக்கு எழுதியுள்ள மடல் மூலம் தெளிவாகிறது!

தந்தைபெரியாரும், புரட்சிக் கவிஞரும், அறிஞர் அண்ணாவும் ஒருங்கிணைந்த ஓர் ஒப்பற்ற உருவம்தான் புதுவைச் சிவம் என்றால் அது ஒருபோதும் மிகையாகாது. இம்முப்பெரும் தலைவர்களின் அரவணைப்புதனைப் பெற்றவர் இவர் ஒருவரே என்று அறுதியிட்டுக் கூறலாம். புதுவைச் சிவத்தின் புகழ் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் பரவும்வகையில் ஆவன செய்வோம்! ஓங்குக பெரியார் புகழ்! வெல்க பாரதிதாசன் புகழ்! பரவுக அண்ணாவின் புகழ்! ஓங்குக புதுவைச் சிவம் புகழ்! (புதுவைச் சிவம் நூற்றாண்டு விழாவில் தோப்பூர் திருவேங்கடம் ஆற்றிய உரை)