Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
கொடூரமான தீர்ப்புகள் - முதுகெலும்பற்ற அரசியல்வாதிகள்
இராமியா

"பிராமணன் இழிதொழிலினனாகவே இருக்கட்டும்; அப்போதும் அவன் வழிபடத்தக்கவன். சூத்திரன் உயர் நற்குணங்களே உருவெடுத்தவனாயினும் சரி; அவனை வழிபட லாகாது. கன்று போட்ட பசுவொன்று துஷ்டத்தனம் பண்ணுகிறது; குட்டிபோட்ட கழுதையொன்று சாதுவாக வீட்டிலிருக்கிறது. இவ்விரண்டில் அறிஞர்கள் பசுவை விட்டுவிட்டுக் கழுதையைக் கறந்து பாலைக் கிரஹிப்பார்களா?' என்று பராசர ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை, இந்திய ஆளும் வர்க்கம் இன்றளவும் விடாப்பிடியாகக் கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் எங்கெல்லாம் இடஒதுக்கீடுமுறை கண்டிப்பாக அமல் செய்யப்பட்டதோ அங்கெல்லாம், பொதுப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்று அதிகத் திறமையுடையவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர்களை, செயல்பாடு நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக எளிதாகப் புறந்தள்ளி ஒடுக்கப்பட்ட மக்களே உயர்சாதிக் கும்பலினரைவிடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்து இருக்கிறார்கள். காலப்போக்கில் தகுதிக்கும், திறமைக்கும் உரிமை கொண்டாடும் உயர்சாதிக் கும்பல் தங்களுடைய வலிமையான பின்னணியில் பொதுப் போட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களோடு போட்டிபோட முடியாமல் திணறும் நிலை உருவாகி இருக்கிறது.
.
இதைக்கண்டு உயர்சாதிக் கும்பல் அலறிக்கொண்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் உயர்சாதிக் கும்பலினர் திறமை யற்றவர்கள் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்கள்தான் உண்மை யிலேயே திறமைசாலிகள் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிடுமோ என்று அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆகவே ஏதாவது செய்தும் (அது அயோக்கியத்தனம் என்று வெட்ட வெளிச்சமாகவே தெரிந்தாலும்) ஒடுக்கப்பட்டோர் வாய்ப்பு பெறுவதைத் தடுத்தே ஆகவேண்டும் என்று திரிவிக்கிரம அவதாரம் எடுத்து மண்ணுக்கும் விண்ணுக்கும் குதிக்கிறார்கள்.

மய்ய அரசுக் கல்வி நிலையமான அய்.அய்.டி.யில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள 432 இடங்களை நிரப்ப முடியவில்லையாம். ஏனெனில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லையாம். ஆகவே அவற்றைப் பொதுப் பிரிவிற்கு மாற்றி உயர்சாதிக் கும்பலினருக்கு அளித்துவிடவேண்டும் என்று பி.வி. இந்திரேசன் என்ற சென்னை அய்.அய்.டி.யின் முன்னாள் இயக்குநர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். உடனே துடிதுடித்துப் போன உச்சநீதிமன்றம் 15.9.2008 அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரிய எண்ணிக்கையில் மாணவர்கள் கிடைக்கவில்லையென்றால் (அதாவது அப்படிப்பட்ட பிரமையைத் தோற்றுவிக்க முடிந்தால்) உடனே (திறமையற்ற) உயர்சாதிக் கும்பலினரைக் கொண்டு நிரப்பலாம் என்று ஏற்கெனவே ஆணை கொடுக்கப்பட்டு உள்ளதே! அப்படியிருக்க பி.வி. இந்திரேசன் வழக்கு போடும் அளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்தது யார்? என்று கோபக் கனலைக் கக்கி இருக்கிறது.

இப்படிக் கோபக் கனலைக் கக்கும் உச்ச நீதிமன்றத்தில், இக்கல்வி நிலையங்களில் மாணவர்களை முழுமையாக நிரப்பாததன்மூலம் அதற்காக அமைக்கப்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள் வீணாகிப் போகின்றன என்றும், இது நாட்டிற்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் பி.வி. இந்திரேசன் அழுது புலம்பி இருக்கிறார். இவருடைய அழுகையைக் கண்டு நெஞ்சு பொறுக்காத உச்சநீதிமன்றம், அனைத்து இடங்களையும் (திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரைக் கொண்டு) உடனே நிரப்பும்படி மய்ய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
சரி! உயர்சாதிக் கும்பலினர் திறமையற்றவர்கள் என்பது வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது மட்டுமே சரியான வழி என்பதைக் கச்சிதமாகப் புரிந்துகொண்ட உயர்சாதிக் கும்பலினர் தங்களுடைய வேலையை அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும் என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் தங்கபாலு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியைத் தருவதாகவும், அது தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 16.9.2008 அன்று கேட்டுக்கொண்டுள்ளார். ஓர் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால், அதை அடுத்த ஆண்டில் கூடுதலாக நிரப்ப வேண்டும் என்றும், அல்லது வேறு ஏதாவது சிறப்பு ஏற்பாடுகள் செய்து அவ்வாண்டே நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் இதைப்பற்றி இந்தியப் பிரதமருக்கு 17.9.2008 அன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். உச்சநீதி மன்றம் திணித்துள்ள உயர்ந்த பிரிவினர் கொள்கையால்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி நிலையங்களில் வாய்ப்புப் பெறுவது தடுக்கப் படுகிறது என்று விளக்கியுள்ள முதல்வர் அதை மாற்றுவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

மண்டல் குழுப் பரிந்துரையின் மீதான தீர்ப்பு வெளிவந்த உடனேயே இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு விதிக்கப்பட்டு இருப்பதையும், வளர்ந்த பிரிவினர் என்ற கருத்துத் திணிக்கப்பட்டு இருப்பதையும், செல்லாததாக்கும்விதமாக உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவோ, சட்டத்திருத்தம் செய்யவோ வேண்டும் என்று மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மட்டுமே கூறியது.

அப்படிச் செய்தால் உயர்சாதிக் கும்பலின் சினத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றும், தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சுக வாழ்விற்கு உயர்சாதிக் கும்பலினர் உலை வைத்து விடுவார்களோ என்றும் அஞ்சிய ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டனர். பிற்படுத்தப்பட்ட மக்களைத் திசை திருப்ப என்னென்னவோ செய்தனர். கடைசியில் செயல்பாடு என்று வரும்பொழுது மா.பெ.பொ.க. எச்சரித்தது சரிதான் என்று தெரிய இப்பொழுது வழி தெரியாமல் திணறுகிறார்கள்.

அப்படித் திணறினாலும் சரியான வழியில் செல்லும் துணிவு நம் அரசியல் அறிஞர்களுக்கு ஏனோ வரவில்லை. நிகழும் நிகழ்வுகளுக்கு எதிராக அறிக்கை விடுவதிலும், வேண்டுகோள் வைப்பதிலும், கடிதம் எழுதுவதிலும் முடித்துக் கொள்கிறார்களே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இழைத்திருக்கும் கொடுமைகளைக் களையும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கோ, சட்டத் திருத்தம் செய்வதற்கோ நடவடிக்கைகளை எடுக்கத் துணிவதில்லை. முதுகெலும்பற்ற இந்த அரசியல்வாதிகள் நமது பிரதிநிதிகளாக இருக்கும்வரையில் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினர் தங்களுடைய அயோக்கியத் தனத்திற்குத் தகுதி, திறமை என்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். உண்மையான திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் அமுங்கியே போய்விடுவார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களே! முதுகெலும்பில்லாத அரசியல் வாதிகளை அரசியல் களத்தைவிட்டே விரட்டி விடுங்கள். உயர்சாதிக் கும்பலிடம் சோரம் போகாத, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுத்தரும் அரசியல்வாதிகளை மட்டுமே அரசியல் களத்தில் அனுமதியுங்கள். நமக்காக இல்லையயன்றாலும் நம் குழந்தைகளுக்காகவாவது நாம் இதைச் செய்தே ஆகவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com