Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
சாதி / வருணமும் வர்க்கமும்

இராமியா

“சாதிக் கலப்பல்ல; வருண ஒழிப்பே தீர்வு'' என்பதன் மீது விமர்சனம் செய்திருக்கும் தோழர் ஜோசப், சமூக அநீதியின் மீது கொண்டிருக்கும் கோபம் மிகவும் நியாயமானது. சமூகத்தில் உள்ள மனித விரோத சித்தாந்தம் அனைத்திற்கும் மூன்று விழுக்காடு உள்ள பார்ப்பனக் கும்பல் மட்டும் என்று சொல்வது முழு உண்மையல்ல. பார்ப்பனர்கள், மற்ற உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், மதப் பெரும்பான்மையினர், மதச் சிறுபான்மையினர் அனைவருமே காரணம். ஒடுக்கப்பட்ட மக்களிலும் சமூக மாற்றம் ஏற்பட்டு, தாங்கள் நலன்பெற வேண்டும் என்பதைவிட இந்த அமைப்பிலேயே தான் உயர்நிலை எய்தி நாட்டாமை செய்ய வேண்டும் என்ற ஆசையுடையவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களும் சமூக விரோத சக்திகளே.

ஆனால் இவ்வளவு மனித விரோத சக்திகளிடையே முதலில் ஒழிக்கப்பட வேண்டியது எது? பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பணியின் காரணமாக உயர்நிலையைப் பெற்று இப்பொழுது தாங்கள் பிறந்த சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டு வாழ்பவர்களை முதலில் ஒழிப்பதா? அல்லது திறமையில்லாவிட்டாலும் உயர்நிலையிலேயே இருப்போம் என்று பகவத்கீதையைப் பின்பற்றி வேர்விட்டிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை முதலில் ஒழிப்பதா? நம்மிலிருந்து உயர்ந்து நம்மைவிட்டு விலகி நிற்பவர்களை ஒழிப்பதன்மூலம் நாம் மீண்டும் பின்னோக்கிச் செல்கிறோம். மாறாக பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பைத் தளர்த்தி ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலையைக் கைப்பற்றச் செய்வதன்மூலம் மேலும் முன்னேறியே செல்கிறோம்.

அப்படி உயர்நிலைக்குச் செல்பவர்கள் துரோகிகளாகவே மாறினாலும் சரி; இப்பாதையில் பார்ப்பனர்கள் உயர்நிலையில் இருந்து கீழே தள்ளப்படும்வரை சென்றால் அது முன்னேற்றமே. விகிதாச்சார ஒதுக்கீடு அதன் முழுவீச்சில் அமல்படுத்தப் பட்டால், உயர்நிலைகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இருப்பார்கள். அதேபோல் கீழ்நிலைகளிலும் அனைத்துப் பிரிவினரும் இருப்பார்கள். அப்பொழுது பிறவியின் அடிப்படையில் உயர்நிலை அல்லது தாழ்நிலை என்ற நிலைமை மாறிவிடும். அது மிகப்பெரிய புரட்சியே. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மக்களிடையே சாதி உணர்வு மழுங்கி வர்க்க உணர்வு மேலோங்கும். சமதர்மப் புரட்சிக்கான நுழைவாயில் தெரியும். இதைத்தான் மேதை அம்பேத்கர் புரட்சியைச் சந்திக்கும் முன் சாதியைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

மக்கள் சாதிப் பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக உயர்சாதிக் கும்பல் பல தகிடு தத்தங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. அது நம் ஆயுதத்தையே கொண்டு நம்மைத் தாக்க முனையும்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தோழர் ஜோசப் கூறுவதுபோல படித்த கூட்டத்திடையேதான் கலப்புத் திருமணம் நடைபெறுகிறது என்பது உண்மைதான். விவரம் அறிந்த கூட்டத்தைத் திசை திருப்பி விடுவது அவாளுக்கு மிகப்பெரிய ஆதாயம். (பார்ப்பனர்கள் கலப்புத் திருமணத்தை ஊக்குவிப்பது பற்றி தோழர் ஜோசப் அய்யப்படுகிறார். பார்ப்பனர்ச் சுரண்டலைப் பற்றி தெரியாதவரைப் போல் வெளிப்படுத்திக் கொண்டு ஒரு பார்ப்பன சோதிடரிடம் அவர் ஆலோசனை கேட்டுப் பார்க்கட்டும்).

தோழர் ஜோசப் கலப்புத் திருமணம் கூடாது என்ற கருத்தை முன் வைத்திருப்பதாக நினைக்கிறார். அப்படி எதுவும் கூறப்படவில்லை. கலப்புத் திருமணத்தில் நம்முடைய ஆற்றலை வீணடிக்கத் தேவையில்லை என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. பெரியார், அம்பேத்கர் ஆகியேரின் பணியால் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலர் உயர்நிலைகளை எய்தியுள்ளனர். ஆனால் பார்ப்பனர்களில் திறமையில்லாதோர் இருப்பார்களே! அவர்கள் இன்னும் உயர்நிலையைத் தக்கவைத்துக்கொண்டே உள்ளனர். அதற்கெதிரான போராட்டத்தில்தான் நாம் ஆற்றலைச் செலவழிக்க வேண்டும்; என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் வலியுறுத்தவும் படுகிறது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி கூறுவது போல் விகிதாசார ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட்டால் அனைத்து நிலைகளிலும் அனைத்துப் பிரிவினரும் பிரதிநிதித்துவப்படுத்தமுடியும். இது மநுநீதி, பகவத் கீதை முதலிய சனாதன நூல்களில் கூறப்பட்டுள்ள சமூக அநீதிக்கு நேர் எதிரான நிலையாகும். அந்நிலையில் சாதியம் , வருணம் வேர்ப்பிடிப்பு இன்றி விழுந்துவிடும். ஆகவே விகிதாச்சார ஒதுக்கீடு என்பது முதலில் செய்யப்படவேண்டிய பணியாகும். அதன் பின்னும் ஏராளமான பணிகள் உள்ளன. ஆனால் முதலில் அண்ணல் அம்பேத்கர் கூறியதுபோல சாதியைச் சந்திக்கவேண்டும்.
- இராமியா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.