Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
அமெரிக்கப் பொறியில் சிக்கிய இந்திய அணு ஒப்பந்தம்
க. முகிலன்

அணு ஆற்றலுக்கான மூலப் பொருள்களை வழங்கும் நாடுகளின் கூட்டம் வியன்னாவில், 2008 செப்டம்பர், 4 முதல் 6 வரை நடைபெற்றது. இக் கூட்டத்தில், இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிப்பதற்காக அமெரிக்கா முன்மொழிந்த திருத்தப்பட்ட வரைவுக்கு எதிர்ப்பின்றி (ஒருமனமாக) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1978 முதல் பிற நாடுகளிடமிருந்து அணு ஆற்றல் மூலப் பொருள்களை இந்தியா பெறவிடாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை இந்த விதிவிலக்கு மூலம் நீங்கிவிட்டது. உலக அரங்கில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது என்று காங்கிரசுக் கட்சியும், மன்மோகன் சிங் அரசும் கொண்டாடுகின்றன. மன்மோகன்சிங், வகிக்கும் பிரதமர் பதவியைப் பணயம் வைத்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். இதனால் காங்கிரசுக் கட்சியில் மன்மோகன் சிங்கின் செல்வாக்கும் புகழும் மேலோங்கியுள்ளன.

மன்மோகன் சிங்கைப் போன்ற பலவீனமான பிரதமரை இந்தியா கண்டதில்லை என்று பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கண்டனம் செய்து கொண்டிருந்தார். பாரதிய சனதாக் கட்சியின் தலைவர்கள், காங்கிரசுக் கட்சியை நோக்கி, 2009இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்டு (சவால்) அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார். அணு ஆற்றல் ஒப்பந்த வெற்றியால், காங்கிரசுக் கட்சி மன்மோகன் சிங் எமது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. இந்த விதிவிலக்கின் தேவை ஏன்? அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இடும் நாடுகள் மட்டுமே அணு ஆற்றலுக்கான மூலப் பொருள்களைப் பிற நாடுகளிலிருந்து பெற உரிமை உண்டு. இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இன்னும் கையொப்பம் இடவில்லை. இந்தியா இரண்டு தடவைகள் அணு வெடிப்புச் சோதனை நடத்தியபோதிலும், அணு ஆயுதங்களை வைத்துள்ள போதிலும், அணுஆற்றல் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நம்பிக்கையான - நாணயமான நாடு என்று அமெரிக்கா அளித்த நற்சான்றின் பேரில் மூலப் பொருள்களை வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விதிவிலக்கு அளித்தது. முழுக்க முழுக்க அமெரிக்கா தனக்குள்ள செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த விதிவிலக்கை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது.

இதேபோன்று பன்னாட்டு அணு ஆற்றல் முகாமை விதிக்கின்ற பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு எரிபொருளையும், அணு உலைகளையும் பயன்படுத்தவேண்டும். 140 நாடுகளைக் கொண்ட பன்னாட்டு அணு ஆற்றல் முகமையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் 35 நாடுகளைக் கொண்ட ஆட்சிக் குழுமத்திடம் உள்ளது. 1.8.2008 அன்று இந்தியாவின் அணு ஆற்றல் செயல்பாடுகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கு ஆட்சிக் குழுமம் ஒப்புதல் அளித்தது.

அணு ஆற்றல் மூலப் பொருள்கள் வழங்கும் நாடுகள் 45 உள்ளன. இவற்றுள் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அமெரிக்காவிடமிருந்து மூலப் பொருள்களைப் பெற அமெரிக்காவுடன் தனியாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்த ஒப்பந்தம், அமெரிக்க நாடாளு மன்றத்தின் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு 23 நாடுகள் அமெரிக்காவுடன் தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மூலப் பொருள் வழங்கும் வேறு எந்தவொரு நாட்டுடனும் இதுபோன்ற ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதில்லை. அமெரிக்கா உலகின் தனிக்காட்டு இராசா என்பதற்கு இது ஒரு சான்று.
2005 சூலை 18 அன்று வாஷிங்டனில் புஷ்ஷிம் மன்மோகன் சிங்கும் அமெரிக்காவும் - இந்தியாவும் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதாக அறிவித்தனர். இதுவே 123 ஒப்பந்தம் எனப்படுகிறது. பன்னாட்டு அணு ஆற்றல் முகமையிலும், மூலப் பொருள்கள் வழங்கும் நாடுகளின் அமைப்பிலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தரும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு வழிவகை செய்வதான ஒரு சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது ஹைடு சட்டம் எனப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இதை முன் மொழிந்தவரின் பெயரால் இவ்வாறு இது குறிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் 2008 நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது. எனவே அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டம் செப்டம்பர் 8 முதல் 26 வரை நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடர் முடிவதற்குள் பன்னாட்டு அணு ஆற்றல் முகமை, மூலப் பொருள்கள் வழங்கும் நாடுகள் ஆகியவை அளித்த ஒப்புதல்களை நாடாளுமன்றத்தில் வைத்து 123 ஒப்பந்தத்திற்கு இறுதியான ஒப்புதலைப் பெற வேண்டும். 25.9.2008 அன்று வாஷிங்டனில் புஷ்ஷிம் மன்மோகன் சிங்கும் இறுதியாகக் கையொப்பம் இடுவார்கள் என்று கூறப்படுகிறது.

123 ஒப்பந்தத்திற்கு இந்தியாவில் அணு ஆற்றல் பெருக்கத் திற்காக அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை நல்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் யுரேனியத்தை மின்சாரம் ஆக்கப் பயன்படுத்திய பின், அந்த யுரேனியக் கழிவை மறுசுழற்சி செய்யவும் செறிவூட்டவும் இந்தியாவுக்கு உரிமை உண்டு. அமெரிக்காவிடமிருந்து பெறும் அணு உலைகளின் ஆயுள்காலம் (30 - 40 ஆண்டுகள்) முழுவதற்கும் தேவையான யுரேனியத்தை அமெரிக்கா வழங்கக் கடமைப்பட்டுள்ளது. பூகோள - அரசியல் நிலைகளில் ஏற்படக்கூடிய மாற்றத்தின் தேவைக்கு ஏற்ப இந்தியா அணு வெடிப்புச் சோதனையில் ஈடுபடுவதை 123 ஒப்பந்தம் தடுக்கவில்லை என்றெல்லாம் மன்மோகன்சிங்கும், அமைச்சர்களும், இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவர் அனில் கடோட்கரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வந்துள்ளனர்.

ஆனால் மன்மோகன் சிங் அரசு 123 ஒப்பந்தம் குறித்து இதுவரை சொல்லிவந்த விளக்கங்களில் பெரும்பகுதி உண்மையல்ல என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின அயலுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் 123 அணு ஒப்பந்தம் குறித்து இரண்டு ஆண்டுகள் விவாதிக்கப்பட்டது. இக்குழுவிலும் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்ட அய்யங்களையும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு 45 வினாக்களை இக்குழு உருவாக்கியது. இவ்வினாக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு கோரி, இவ்வினாப் பட்டியலை இக் குழுவின் தலைவர் 2007 அக்டோபர் 5 அன்று அரசுக்கு அனுப்பினார்.

இவ்வினாக்களுக்கான விடைகளைக் கொண்ட அறிக்கையை 2008 சனவரி 16 அன்று இக் குழுவின் தலைவருக்கு அரசு அனுப்பியது. ஆனால் இது வெளியிடப்படாமல் கமுக்கமாக (இரகசியமாக) வைக்கப்பட்டது. திடீரென்று இந்த வினா - விடை அறிக்கையை இக்குழுவின் தவைர் 2008 செப்டம்பர் 2 அன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார். இது அமெரிக்க நிருவாகத்தின் மேலிடத்து ஆணையின்பேரில் வெளியிடப்படுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் 2008 ஆகஸ்டு 21, 22 ஆகிய நாள்களில் வியன்னாவில் நடைபெற்ற அணு ஆற்றல் மூலப் பொருள் வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தைப் பல நாடுகள் எதிர்த்தன. குறிப்பாக, இந்தியா அணுவெடிப்புச் சோதனை செய்தால் இந்தியாவுக்கு எந்தவொரு நாடும் மூலப் பொருள்களை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தின.

இத்தீர்மானத்திற்கு 50 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. ஆகவே இக்கூட்டம் 2008 செப்டம்பர் 4 - 6 ஆகிய நாள்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் 123 அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா எத்தன்மையில் செயல்படுத்த உள்ளது என்பதை மூலப் பொருள் வழங்கும் நாடுகள் அறிந்துகொண்டால் எதிர்க்க மாட்டார்கள் என்ற கருத்தில்தான் வினா - விடை அறிக்கை 2.9.2008 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அமெரிக்கா முதலில் கொண்டுவந்த தீர்மானத்தில் மூலப்பொருள் வழங்கும் நாடுகளை நிறைவு செய்யும் வகையில் சில சொற்கள் மாற்றப்பட்டன.

45 வினாக்களுக்கு அமெரிக்க அரசு அளித்த விடைகள், இந்திய அரசும், காங்கிரசுக் கட்சியும் 123 அணு ஒப்பந்தம் குறித்து இதுவரை பல பொய்யான தகவல்களைத் தந்து நாட்டையும், மக்களை யும் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை எண்பிக்கின்றன.

ஹைடு சட்டம்

அமெரிக்காவின் ஹைடு சட்டம் 123 அணு ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்சியும் இடைவிடாது கூறிவந்தனர். 2008 சூலை 2 அன்றுகூட பிரதமர் அலுவலகம் ஹைடு சட்டம், 123 ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்று அறிக்கை வெளியிட்டது. வினா - விடை அறிக்கையில், 123 அணு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படக்கூடிய சிக்கல், குறைபாடு, முரண்பாடு ஆகியவை ஹைடு சட்டத்தின்படி தீர்க்கப்படுமா? என்பது 3ஆவது வினா! 123 ஒப்பந்தமானது, ஹைடு சட்டம் மற்றும் 1954ஆம் ஆண்டைய அமெரிக்க அணு ஆற்றல் சட்டம் ஆகியவற்றின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்படும் என்பது இதற்கான விடை!

முழு ஒத்துழைப்பு

ஆகஸ்டு 17 அன்று பிரதமர் மன்மோகன் சிங், நாடாளு மன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆக்கப் பணிகளுக்கான அணு ஆற்றல் முழு ஒத்துழைப்பு (000) என்று 123 அணு ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருப்பதால் பொருள், செறிவூட்டல், மறு சுழற்சி, கனநீர் தொழில்நுட்பம் (000) உள்பட எல்லா தொழில் நுட்பங்களையும் அமெரிக்கா இந்தியவுக்கு வழங்கும் என்பதாகும் என்று கூறினார். வினா 5க்கான விடையில், அமெரிக்கா நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவரும் கொள்கையின்படி வடிவமைத்தல், கட்டியமைத்தல், இயக்குதல் ஆகியவற்றிற்கான அதிநுட்பம் வாய்ந்த அணு ஆற்றல் தொழில்நுட்பங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையை மாற்றுவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான பேச்சில் அமெரிக்கா ஈடுபடாது என்று 6ஆவது வினாவுக்கான விடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவெடிப்புச் சோதனை உரிமை

2008 சூலை 22 அன்று நாடாளுமன்றத்தின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது பிரதமர் மன்மோகன்சிங் உரை யாற்றியபோது, நம்நாட்டின் பாதுகாப்புக்காகக் கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்படும்போது, நாம் மேலும் அணு வெடிப்புச் சோதனை நடத்துவதை இந்த அணு ஒப்பந்தத்தின் எந்தவொரு விதியும் தடுக்கவில்லை என்று உறுதிபடக் கூறுகிறேன் என்றார். இது தொடர்பான 35 ஆம் வினாவிற்கான விடையில், ஒப்பந்தத் தின் விதி 14இன்படி, இந்தியா அணுவெடிப்புச் சோதனை நடத்தினால், எல்லாவகையான அணு ஆற்றல் ஒத்துழைப்பையும் உடனடியாக நீக்கிவிடும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. மேலும் இந்தியாவுக்கு அளித்த எல்லாப் பொருள்களையும் திருப்பித் தருமாறு கேட்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. மேலும் இது அமெரிக்காவின் அணு ஆற்றல் சட்டத்தின்படி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி உரிமை

2007 ஆகஸ்டு 13 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவிடமிருந்து பெறுகின்ற யுரேனியத்தை மின்சாரம் உண்டாக்கப் பயன்படுத்தியபிறகு, அக் கழிவை மறு சுழற்சி செய்துகொள்ளும் உரிமைக்கான நிலையான ஒப்புதலை அமெரிக்காவிடம் இந்தியா பெற்றுள்ளது. இது இந்த ஒப்பந்தத்தின் சிறப்பான கூறாகும் என்று தெரிவித்தார். இது தொடர்பான வினா 30க்கான விடையில், அமெரிக்காவும் இந்தியாவும் கலந்துரையாடி இதற்கான ஏற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இருதரப்பும் ஒத்துக்கொண்ட பிறகே இந்தியா மறு சுழற்சியை மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வினா 44க்கான விடையில், மறு சுழற்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் நிலையானவை அல்ல. ஒப்பந்தத்தின் விதி 14(9)இல் மறு சுழற்சிக்கான அமெரிக்காவின் ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மறு சுழற்சிக்கு நிலையான ஒப்புதலைப் பெற்றிருப்பதாகப் பிரதமர் கூறுவது பொய்!

தடையற்ற எரிபொருள் வழங்கல்

2007 ஆகஸ்டு 13 அன்று நடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில், 2006 மார்ச்சு மாதம் குடிமைத்தேவை இராணுவத் தேவைக்கு என அணு ஆற்றல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன. இத்திட்டப்படி பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பு விதிகளின்படி இயங்கும் குடிமைத் தேவைகளுக்காக இயங்கும் உலைகளுக்குத் தொடர்ந்து எரிபொருள் வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. மேலும் எரிபொருள் வழங்கலில் ஏற்படக் கூடிய தடைக் காலத்திலும் உலைகள் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான எரிபொருளை இந்தியா சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளது. அதாவது உலைகளின் வாழ்நாள்காலம் முழுமைக்கும் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

வினா 15க்கான விடையில், தடை ஏற்படும் நிலையிலும் எரிபொருள் வழங்கப்படும் என்று அமெரிக்கா உறுதி அளித்ததன் பொருள், இயற்கையின் இடையூறு, சந்தையில் ஏற்படும் சிக்கல், ஆகிய சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்துவதாகும். இந்தியா அணு வெடிப்புச் சோதனைச் செய்வதால் ஏற்படும் தடைக்கு இந்த உறுதிமொழி பொருந்தாது. இந்திய அரசு இந்த உறுதிமொழி குறித்த எங்கள் கருத்தைப் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வினா 19க்கான விடையில், இந்தியா எந்த அளவுக்குச் எரிபொருளைப் பெறுவது, எந்த அளவுக்குச் சேமித்து வைத்துக் கொள்வது என்பதுபற்றி இனிமேல் பேசி முடிவு செய்யப்படும். எப்படியிருப்பினும் இந்த அளவுகோல் என்பது ஹைடு சட்டத்திற்கு இயைந்ததாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

123 அணு ஒப்பந்தம் தொடர்பாக வெளியான 45 வினாக்களுக்கான விடைகளைக் கொண்ட அறிக்கை, இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசு விளக்கத்திற்கும் இந்திய அரசு இதுவரை சொல்லிவந்த விளக்கத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் முழு அதிகாரம் அமெரிக்கா விடமே இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் அறிக்கையை மறுத்து மன்மோகன்சிங் அரசு கடுமையான மறுப்பு அறிக்கையை வெளியிடவில்லை. அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவர் சுனில் கடோட்கர், வெளியாகியுள்ள அறிக்கையில் புதியதாக ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால், அமெரிக்காவின் வினா - விடை அறிக்கையில் கூறப் பட்டுள்ளவை உண்மை என்பதற்குச் சான்றளிக்கிறார்.

இதன் உச்சநிலையாக, 10.9.2008 அன்று அமெரிக்காவின் குடியரசு தலைவர் ஜார்ஜ் டபிள்யு. புஷ், 123 ஒப்பந்தத்தில் விதி 5(6)இல் எரிபொருள் வழங்குவது குறித்து அமெரிக்கா அளித்துள்ள உறுதிமொழி சட்டப்படிக் கட்டுபடுத்தக்கூடியதன்று என்று அறிவித்துள்ளார். ஆசைகாட்டி மோசம் செய்வது என்பார்களே அதுபோன்றதுதான் அமெரிக்க - இந்திய அணு ஒப்பந்தம். அமெரிக்கா விரித்த வஞ்சக வலையில், விரும்பிச் சென்று இந்திய அரசு அதில் விழுந்திருக்கிறது. அமெரிக்கா பன்னாட்டு ஒப்பந்தங்களையோ, மற்ற நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ மதித்து நடப்பதில்லை என்பதை அதன் கடந்த கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பின் விதிவிலக்கைப் பெற்றுவிட்டதால், பிரான்சு, இரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருள், உலைகள் முதலானவற்றை இந்தியா வாங்கலாம். பிரான்சு நாட்டின் மின்சாரத் தேவையில் 80% 58 அணு மின் நிலையங்கள் மூலம் கிடைக்கிறது. அணு ஆற்றல் வணிகத்தில் 35 தனியார் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள் முதன்மையானது அரேவா என்ற நிறுவனம். இதேபோன்று அமெரிக்காவின் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகள் அமைத்து எரிபொருள் வழங்கக் காத்துக் கிடக்கின்றன.

எனவே அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 26க்குள் 123 ஒப்பந்தத்திற்கு இறுதியான ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பாக மற்ற நாடுகளுடன் இந்திய அணு ஆற்றல் வணிக முயற்சியில் ஈடுபடக்கூடாது. அப்படிச் செய்வது அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று எச்சரித்துள்ளார். எனவே, இரஷ்யாவோ, பிரான்சோ வேறு எந்தவொரு நாடோ அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டு அணு ஆற்றல் வணிகத்தில் ஈடுபட முன்வர மாட்டா. இந்த அணு ஒப்பந்தத்தை உள்ளூர சீனா எதிர்த்த போதிலும் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தட்டிக் கேட்பாரற்று, உலகின் பேட்டை ரவுடியாக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணம்.

அமெரிக்காவுக்கு, 123 ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கம் இந்தியா அணு ஆற்றல் மூலம் மின்சாரத்தைப் பெருக்க வேண்டும் என்பதன்று. எலிப் பொறியில் வைத்த கருவாட்டுத் துண்டு இது! இந்தியாவின் போர்ப்படை, பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றை தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்பத் தன் கட்டுப்பாட்டில் இயங்கச் செய்வதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கம். 2005 சூலை 18 அணு ஒப்பந்த அறிவிப்புக்குமுன், 2005 சூன் மாதம் பிரணாப் முகர்சி வாஷிங்டனில் பல போர்ப்படை ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டார். 2008 அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி அமெரிக்கா செல்கிறார். அப்போது மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இட உள்ளார்.

2006 மார்ச்சு மாதம் புஷ் இந்தியாவுக்குவந்தபோது அணு ஒப்பந்தம் மட்டுமின்றி, வேளாண்மை, கல்வி, முதலானவற்றிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவின் எல்லா நிலைகளிலும், துறைகளிலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் இருக்குமாறு செய்வதே முதன்மையான நோக்கம். இந்திய அரசும், மாநில அரசுகளும், இந்தியப் பெரு முதலாளியர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். 22.7.2008 அன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பில் பா.ச.க. மாயாவதி கட்சி உள்படப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமுதலாளிகளின் பெருந் தொகையைப் பெற்றுக்கொண்டு 123 ஒப்பந்தத்தைக் காப்பாற்றுவதற்காக தம் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே எந்த ஒப்பந்தமானாலும் இந்நாட்டின் பெருமுதலாளிகளும், இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் மட்டுமே பயன்பெறுகின்றனர்.

செப்டம்பர் முதல் கிழமையில் தமிழகத்திற்கு வந்த சோனியாகாந்தி, அனு ஒப்பந்தத்தால் வீடுகளில் தெருக்களில் விளக்குகள் எரியும். வேளாண்மைக்கும், தொழில்களுக்கும் தேவையான மின்சாரம் கிடைக்கும். நாடு அதிவேகமான வளர்ச்சியை எட்டும் என்றெல்லாம் கூறினார். இந்தியாவில் 20 கோடிக் குடும்பங்கள் உள்ளன. இவற்றுள் 8 கோடிக் குடும்பங்களுக்குச் சுதந்தரம் பெற்று 60 ஆண்டு களான பின்னும் மின்சாரம் இல்லை. அணு மின்சாரம் வீடுகளுக்கோ, வேளாண்மைக்கோ கிடைக்காது. பெரு முதலாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஏனெனில் அதன் விலை மிக அதிகம்.

அணு ஒப்பந்தம் இந்தியாவை மேலும் அமெரிக்க ஆதிக்கத் தின்கீழ் அமுக்குவதற்கான ஓர் எலிப்பொறி! பறந்துபட்ட மக்களுக்கு எல்லா வகையிலும் எதிரான இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எதிர்ப்பதே சனநாயக சக்திகளின் தலையாய கடமையாகும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான தரவுகள் 15.9.2008க்கு முந்தைய நாள்களில் திரட்டப்பட்டவையாகும்.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com