Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
விநாயகனே வினை விதைப்பவனே!
வேழ முகத்தோனே வீண் வம்பனே!
வே. மதிமாறன்

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது. மதவாதிகள், சாதிய உணர்வாளர்கள் தங்கள் மதத்தை, சாதியை, கடவுளை மிகப் பழமையானது - என்று சொல்லிக்கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.

அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும், இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேயே வந்துவிட்டார் என்றும் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். (கடவுள் கொண்டுவரப்பட்டவர் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்).
சைவ சமயத்தின் கட்டுக் கதையான பெரிய புராணத்தை சேக்கிழார் எழுதுவதற்குக் காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லுப் பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக விட்டலாச்சாரியார் போல விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மகாவீரரின் சமணமும், அதன்பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் சாதிய கண்ணோட்டத்தைப் பொத்தல் ஆக்கியது, பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்று இந்துமத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறுகொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்குப் பிறகும் அவரது சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக்கொண்டே இருந்தது. அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்''.

என்று வேத மதத்தினைக் காறி உமிழ்ந்தார். பவுத்தத்தின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலைகுலைய வைத்தது. பார்ப்பனியத்தைக் காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப்போகும்.

அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர்கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய தன்மையிலான கடவுள் தேவைப்படுகிறார். அதன் பொருட்டு பவுத்தத்திடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்துப் புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.

அதனால்தான் விநாயகர் அரச மரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதிமரம். போதி மரத்தில் புத்தர் அறிவுபெற்றதாக கூறியதால் அரசமரத்தடியில் இருந்த புத்தர் சிலைகளையயல்லாம் அகற்றிவிட்டு விநாயகர் சிலைகளை வைத்துவிட்டனர் சூழ்ச்சிமிக்கப் பார்ப்பனர்கள்.

சைவர்களும், வைணவர்களும் தம்முள் வேறுபாடு கொண்டிருந்தாலும், அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். புத்தரை - புத்தத்தை அழித்தொழிக்கவேண்டும் என்பதில் இருவரும் ஒன்றுபட்டு சதிவேலை செய்வதுதான் இதற்குக் காரணம் என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் நன்கு விளங்கும்.
இவ்வாறு, சைவ-வைணவ பார்ப்பனர்களால் எதற்காக விநாயகர் உண்டாக்கப்பட்டாரோ அந்த வேலையை சிறப்பாக அவரும் நடத்தி முடித்தார். அதன்பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய ஒடுக்குமுறையைக் கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குக் குறிப்பாக இசுலாமிய மதத்திற்கு மாறுகிறார்களோ அப்போதெல்லாம் விநாயகர்தான் அவர்களைப் போய் தடுத்தாட்கொள்வார்.

அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இசுலாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச்சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாகச் செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இசுலாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தலங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்து வெறியர்கள் அடம்பிடிப்பதன் உள்நோக்கம் கலவரத்தை மனத்தில் கொண்டே, விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக தோழமையோடு எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.

விநாயகன் வினை தீர்ப்பவனல்ல.
வினை விதைப்பவன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com